பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 29, 2021

- கோடிட்ட இடத்தை நிரப்புக -



"உங்களுக்காக எப்போதும் நாங்கள் இருக்கிறோம். கவலை வேண்டாம் எங்கள் மக்களே. உங்கள் ஒவ்வொருவர் ஓட்டுமே எங்களை உயர்த்தியுள்ளன. உங்கள் பிரதிநிதிகள் நாங்களே. "

"உண்மையில் இது மோசமான வெள்ளப்பேரிடர்தான். மறுக்கவே முடியாது. உங்களில் பலரும் கையறு நிலையில் இருப்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். நாங்கள் உங்கள் சேவகர்கள் அல்லவா. வேறு யாரால் இதனை அறிய முடியும் சொல்லுங்கள்."

"எதற்கும் கவலை வேண்டாம். இழந்தவை பற்றி கவலை வேண்டாம். எல்லாவற்றுக்கும் மாற்று ஏற்பாடுகள், அவசரகால உதவிகள் , உணவுகள், உடைகள் என எல்லாமே தயார் நிலையில் உள்ளன. சிறு சிக்கல்."

"அந்தப் பாழாய்ப்போன பிரிண்டிங் கடைகள் எல்லாவற்றையும் மூடி வைத்திருக்கிறார்கள். அக்கடைகள் திறந்ததும் தயாராய் இருக்கும் உணவு பொட்டலத்தில் நம்ம கட்சி சின்னமும் ஒவ்வொரு பொருளிலும் நம்ம கட்சி ஸ்டீக்கரையும் மின்னல் வேகத்தில் ஒட்டி உங்களைச் சந்திக்க வருகிறோம். வந்துவிடுவோம். அதுவரை நீங்கள் எங்களுக்காகச் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்."

"நாங்கள் எப்படி, எங்கள் நிலையை உங்களிடம் பேசிப் புரிய வைக்கின்றோமோ அதே போல நீங்களும் நாங்கள் வரும்வரை அந்த வெள்ளத்திடம் பேசி புரிய வைப்பீர்கள் என பெரிதும் நம்பிக்கையோடு இருக்கிறோம். என்ன அவசரம் அந்த வெள்ளத்திற்கு. ஸ்டிக்கர் முக்கியமில்லையா..."

டிசம்பர் 28, 2021

- விடியும் எப்படியும் விடியும் -


எதிர்ப்பாராத இரவு வெள்ளத்தில் எல்லாம் அடித்துக் கொண்டு போனது. மிச்சமிருப்பது உயிர்தான் என்றான நிலையில் வட்டார மக்கள் கதறிக்கொண்டிருக்கிறார்கள். 

இக்கட்டான நிலை. ஆடம்பர வீடுகளை விழுங்கிய வெள்ளம் வீட்டுக்கூரைகளை விழுங்க முயல்கின்றன. அக்கம்பக்க மலிவு விலை வீடுகள் எல்லாம் வெள்ளத்தின் வயிற்றில் புகுந்தே விட்டன. கூரை முழுக்க மனிதர்களாக அமர்ந்தும் நின்றும் மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். பயத்தில் நடுங்கி கொண்டிருக்கிறார்கள்

விடிந்தும் கூட வற்றிடாத வெள்ளத்தை கேள்விபட்ட மந்திரிகள் அவசர கூட்டம் போட்டார்கள். வெள்ளம் நெருங்க முடியாத இடம் கண்டறியப்பட்டது. பிரியாணிக்கு ஆடர் கொடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் கூடினார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு உதவுவதற்கு புதிய திட்டத்தையும்  குழுவையும் உருவாக்கி அதற்காக கேக் வெட்டி திறப்பு விழா செய்தார்கள். 

அங்கிருந்து புறப்பட்டவர்கள் உடனடியாக மக்களுக்கு உதவும்படிக்கு சில படகுகளை ஏற்பாடு செய்யலானார்கள். படகுகளின் நான்கு பக்கங்களிலும் கட்சி கொடியை ஏற்றிவிட்டார்கள். கட்சி வண்ணத்தை படகுகள் முழுக்க பூசி, அதனை நன்றாக காய வைக்க படாத பாடு பட்டார்கள்.

படகுகள் எப்படி தனியாகப்போகும். அதற்காக ஒவ்வொரு படகிலும், அந்த படகின் தலைவர், அவரின் துணைத்தலைவர், யாருக்கு என்ன உதவி தேவை என கண்டறிந்து குறிப்பு எழுத இரண்டு செயலாளர்கள், இரண்டு கேமரா மேன்கள், துடுப்பு போடுவதற்கு நான்கு பேர், இவர்களின் பாதுகாப்பு கருதி நான்கு பேர், இவர்களுக்கு குடை பிடித்தவாறே நான்கு பேர் இருந்தார்கள்.

அப்படகில் மொத்தமே இருபது பேர்வரைதான் அமர முடியும் என்பதை அறிந்துகொண்டவர்கள், காலியாக இருக்கும் இடத்தில் எந்த பாதிக்கப்பட்டவர்களை ஏற்றலாம் என கண்டறிய மேலும் இரண்டு உதவியாளர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்படியும் போய் சேர்ந்து, உதவி செய்துவிடுவார்கள்.

டிசம்பர் 27, 2021

- உயர்திணையும் அஃறிணையும் -

   "நாய்ங்களுக்கு இடமில்ல......" என சொல்லிவிட்டார்கள். குமாருக்கும் அவனது அம்மாவிற்குமே இடம் போதுமானதாக இருப்பதாக சொன்னார்கள். அந்த நாயை தான் கையிலேயே பிடித்துக் கொள்வதாக குமார் கேட்டாலும்,  சொன்னாலும், கெஞ்சினாலும், கண்ணீர் மல்கினாலும் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை.

    தன் வீட்டு நாயைத்தான் காப்பாற்ற முடியவில்லை. இந்த நாயையாவது காப்பாற்றலாம் என்கிற முயற்சியும் வீண். இந்த திடீர் வெள்ளம் பல எதிர்ப்பாராதவற்றை ஏற்படுத்திவிட்டது. எதை இழந்தோம் எதை மறந்தோம் என்கிற பிரக்ஞை இன்றியே உயிர் பயத்தில் பலரும் பலவாறு ஆகிப்போனார்கள். 


    வரலாறு காணாத வெள்ளம், வீட்டுக்கூரை வறை உயர்ந்து கொண்டுக்கிறது. அவசரகால உதவிகளை அரசாங்கத்தை எதிர்ப்பார்க்காமல் அரசியல்வாதிகள் தூங்கி விழிப்பதற்கு முன்னமே மக்கள் தாங்களாகவே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். 


       இரண்டாவது முறையாக வந்த படகில் சென்றுக்கொண்டிருக்கும் போதுதான் குமாருக்கு அந்த நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.  அது ஒரு பாவப்பட்ட குரலாக இனி என்னால் முடியவே முடியாது என்கிற ஒலியாக அது கேட்பதை குமார் மட்டுமே உணர்ந்தான்.


     உடல் முழுக்க வெள்ளத்தில் நனைந்த மனிதர்களின் வெறும் கைகளின் தங்களின் உயிரை பிடித்துக் கொண்ட இந்தப் பயணத்தில் அஃறிணைகளுக்கு இடமிருக்கவில்லை.


     தூரத்தில் அந்நாய் மெல்ல மெல்ல மூழ்கத்தொடங்குகிறது, அதன் அருகில் குழந்தையொன்று மெத்தையோடு மிதந்தவண்ணம் மெல்லியக்குரலில் கத்திக்கொண்டிருக்கிறது.


     எப்படியாவது அந்த உயர்திணையை  இந்த அஃறிணை காப்பாற்றியப் பிறகே  முழுவதுமாக மூழ்கும்; அதுவரை அது குரைத்துக்கொண்டுதானே இருக்கும். 

 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்