பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

நவம்பர் 02, 2011

என் தறுதலை புத்தி..........

இது கதை என்று நான் முன்னெச்சரிக்கையாக சொல்கிறேன். படித்து முடித்ததும் முதல் வாக்கியத்தின் சத்தியமின்னையை நீங்கள் கண்டுக்கொள்வீர்கள். ஏனெனில் நீங்கள் பாதிக்கப்பட்டவரில் ஒருவர் அல்லது பாதிப்பை கொடுப்பதில் ஒருவர்.
இதனை எழுதுவதால் எனக்கு ஏற்படப்போகும் பிரச்சனைக்கு நான் மட்டும் பொறுபல்ல. என்னுடன் சுந்தர ராமசாமியும்தான் பொறுப்பு. அவரின் கட்டுரை ஒன்றில் புதுமை பித்தனை இப்படி குறிப்பிடுகின்றார்;
“சுற்றிவரக் காணக்கிடைத்த சகல கோலங்களிலும் ஒளிந்துக் கொண்டிருக்கும் ஊனங்களை அவர் அம்பலப்படுத்திக் கொண்டே வந்திருந்தார். லௌகீகத்தின் தளத்தில் இதுதான் கடைந்தெடுத்த தறுதலை புத்தி. இலக்கியத் தளத்தில் இதுதான் ஆகப்பெரிய பண்பாடு. உண்மையை அறிந்த நிமிஷத்தில் போட்டு உடைப்பது. அக்கம் பக்கம் பார்க்காமலும், அனுசரணையான காலத்திற்காகக் காத்துக்கொண்டிருக்காமலும் உடைப்பது.” - அதைத்தான் செய்யப்போகிறேன்.
படிப்பதும் எழுதுவதும் எனக்குப் பிடித்தவை. என் 13வது வயதில் பத்திரிக்கையில் பிரசுரமான மூன்று வரிகளில் என் எழுத்துப் பயணம் தொடர்ந்தது. இன்று உள்ளூர் இசையமைப்பாளர் ஆர்.லாரன்ஸ் இசையில் மூன்று பாடல்களை எழுதும் அளவிற்கு வந்திருக்கிறது.
எழுதுவதன் மூல எப்போதாவது சிறிய தொகை கிடைக்கும். அதனுடன் என் சொந்த பணத்தையும் சேர்த்தே புத்தகங்களை வாங்கிவிடுவேன். முடிந்த தீபாவளிக்கு அப்படி ஒரு வாய்ப்பு வந்தது. நிகழ்ச்சி ஒன்றிர்க்கு “ஸ்க்ரிப்ட்” எழுத வேண்டும். ஒரு ஆண் ஒரு பெண் சேர்ந்து அறுவிப்பு செய்யும் நிகழ்ச்சி அது. அந்த ஆண் என் நெருங்கிய நண்பன். அந்த பொண் நான் கேள்விபட்ட திறமைசாலி பெண்.
முதலில் ‘ஸ்க்ரிப்ட்’ எழுதுவதற்கு சம்பளம் எவ்வளவு என்று சரியாக தெரியாத நிலையில் நானும் அந்த பெண்ணும் ஆளுக்கு 200 ரிங்கிட் அல்லது 250 ரிங்கிட் சேர்த்து 500 ரிங்கிட்டை கொடுப்பதாக நெருங்கிய நண்பர் சொன்னார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே போல நிகழ்ச்சி ஒன்றில் ‘ஸ்கிரிப்ட்’ எழுதியதற்காக எனக்கு 750 ரிங்கிட் கொடுத்ததாக நான் குறிப்பொட்டேன். உடனே பதிலாய் வந்த வார்த்தை இது “தெரிலடா... இருக்கும்னு நினைக்கறேன். எதுக்கும் உன்னோட bank number கொடு , நான் மொதல்ல 500 ரிங்கிட் போடறேன் அப்பறம் செக் கொடுத்தோன்ன எவ்வளவுன்னு பார்த்துட்டு, மீதியைக் கைல கொடுத்திடறேன்.” உடனே நான் “பரவாலைடா.. தீபாவளிக்கு வீட்டுக்கு போறேன், எப்படியும் காசை செலவாக்கிடுவேன். லீவு முடிஞ்சி வந்ததும் வாங்கிக்கறேன்”
மறுநாள் அந்த நண்பன் “டேய், கேட்டுட்டேன் 500 ரிங்கிட் கொடுக்கறாங்களாம். என்னோட பேங்கல போடுவாங்களாம். நான் உன்கிட்ட கொடுத்தடறேன்.”
இந்த உரையாடல்களுக்கு பிறகு நடந்தவற்றை சொல்வதற்கு முன் ஸ்க்ரிப்ட் எழுதியதை நான் சொல்லியாகவேண்டும்.
இரண்டு நாள்கள் சரியான தூக்கம் இன்றி, எழுதினேன். அதில் திருத்தம் செய்யவேண்டும் என்றார்கள். இரவு வேலையை முடித்து அவர்கள் இருக்கும் இட்த்திற்குச் சென்று அங்கேயே ஒரு மணிநேரம் திருத்தி இன்னும் சொல்லப்போனால் முற்றிலும் புதிய ஸ்கிரிப்ட் ஒன்றை எழுதினேன். ஒவ்வொரு வாக்கியத்தையும் எழுதும் போது ஆண் பெண் இருவரிடம் சொல்லிக்காட்டி அவர்களுக்கு பிடித்த ஒன்றையே எழுதினேன். இருவரும் திருப்தி அடைந்தார்கள். எழுதி முடித்த்தும் அந்த பெண் “தயா, இதை 100% நாங்க பயன் படுத்தமாட்டோம். ஏன்னா இது நேரடி நிகழ்ச்சி பாருங்க, கடைசி நேரத்தில ஏதும் சொன்னாங்கன்னா நாங்க சேர்த்துக்கறொம் சரியா..” அதற்கு நான் “அது வழக்கமா நடக்கறதுதானே இதைன் நீங்க வழிகாட்டியா வச்சிக்கலாம்.. உங்க பாணியிலேயே இதை பேசலாம்..”
எழுதிக் கொடுத்த ஸ்க்ரிப்ட்டைப் பற்றி மறுநாள் நண்பனிடம் கேட்டேன். “நல்லா இருக்காம்டா.. கேட்டு எல்லாம் சிரிக்கிறாங்க, நீதான் எழுதினேன்னு சொன்னேன்..ஓகேதான்னு சொன்னாங்க”. நிகழ்ச்சி தயாரிப்பாளர் மலாய் பெண்மணி என்பதால்; என் ஸ்கிரிப்டை அப்படியே மலாய் மொழியில் எழுதி கேட்டார்கள். அப்போதுதான் எனக்கு செக் கொடுக்க வசதிப்படும் என்றார்கள். அதைனையும் இரவு தூங்காமல் செய்தேன். அனுப்பினேன்.
அந்நிகழ்ச்சிக்கு 2 நாள்கள் முன்பு பிறந்தகம் புறப்பட்டேன். எந்த நேரத்திலும் ஸ்கிரிப்ட் சம்பந்தமாக என்னை கூப்பிடலாம் என சொல்லியே சென்றேன்.
இன்னும் சிறிது நேரத்தில் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்; முகநூலில் அந்நிகழ்ச்சி குறித்தும் என் ஸ்கிரிப்ட் குறித்தும் எழுதினேன். நண்பர்கள் வாழ்த்தினார்கள்.
நிகழ்ச்சி தொடங்கியது. நான் எழுதியதை பேசினார்கள். எனது நான்கு ஐந்து வாக்கியங்களை சுருக்கி 2 வாக்கியங்களாகப் பேசினார்கள். என் ஸ்கிரிப்ட்டில் 30% நான் எழுதாத அறிவிப்பாளர்களே பேசிய வசனமும் இருந்தன. நிகழ்ச்சி முடிந்தது.
4 நாள்கள் விடுமுறை கழித்து அலுவலகம் வந்தேன். அன்றும் இரவு வேலை. நண்பனைச் சந்தித்தேன். “நிகழ்ச்சி நல்லா இருந்திச்சிடா... என்ன டெக்னிக்கல்தான் கொஞ்சம் சரியா அமையலை...” என்றேன். “என்னடா செய்றது கேமரா மேன்க்கு தமிழ் தெரியலை அதான் இப்படியாச்சி, ஆங் உனக்கு 500 ரிங்கிட்-டா... பேங்க்ல போட்டுட்டாங்களாம் நாளைக்கு எடுத்துக் கொடுத்தடறேன்..”. “ஓ, அவ்வளோதான் கொடுத்தாங்களா...?” என்றேன். “ஆமாண்டா” என்றான்.
விடிந்ததும் அலுவலகம் சென்றேன். நிகழ்ச்சி முடிந்ததும் என் நண்பன் பேசிய வசனம் வாய்கள் மாறி என் காதில் விழுந்தது, “1300 ரிங்கிட் கொடுத்தாங்க..ம்... அந்த அண்ணன் ஸ்கிரிப்டை திருத்தினாரு, அவருக்கு கொஞ்சம் கொடுக்கனும், இவன்கிட்ட 500 வெள்ளிதனே பேசினேன். அவ்வளோ கொடுத்திடுவேன்.”
எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை; நிகழ்ச்சியை நான் முழுமையாகக் கேட்டேன், எழுதியதில் குறித்து பேசினார்களே தவிர சிறப்பாக எதனையும் எழுதியிருக்கவில்லை. பின் எப்படி காசு கைமாறும் என்ற குழப்பம் மேலோங்கியது.
மறுநாள் நண்பனிடன் காலையிலேயே கேட்டேன். தெரியலையே என்று பதில் சொன்னவன். தொடர்ந்தான் “தெரியலடா..இன்னும் சொல்லலை; அந்த பொண்ணு பேங்க்ல போட்டுட்டாங்களாம். அதைத்தான் கேட்கனும்.”. நான் “சரி நீ போன் நம்பர் கொடு நான் கேட்டுக்கறேன்”.
தொலைபேசி எண் கிடைத்தது; பேசினேன். அந்த பெண் சொன்ன பதில் “தயா, ஸ்கிரிப்ட்டுக்கு 1300 ரிங்கிட் கொடுத்தாங்க.. (நண்பனை பெயரைச் சொல்லி ஏதும் சொன்னாரா.. சொல்லலையா. ஓ, என்கிட்ட சொன்னாரு தயாக்கு 500 ரிங்கிட் போது அப்பறம் (பாடகர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு) அவரு ஸ்கிரிப்டை கொஞ்சம் மாத்தினாராம் அவருக்கு கொஞ்சம் பணம் கொடுக்கனுமாம்.”
உடன் நான் “அப்படி எதும் மாத்தின மாதிரி தெரியலையே” என்றேன். அவள் “எனக்கு தெரியலை தயா, (நண்பனின் பெயர் சொல்லி) அவர்தான் சொன்னாரு. (பாடகர் பெயரைச் சொல்லி) அவரு இப்படி காசை கேட்கமாட்டாரு. ஆனா எப்படி கேட்டாருன்னு தெரியலை.. ”
சரியென்று விடைகொடுத்து; நண்பனிடம் சொன்னேன். எனக்கு 1300 ரிங்கிட் கொடுத்தாங்களாம், நாளைக்கு பேங்கல போடறாங்களா, பேங்க நம்பர் கேட்டாங்க கொடுத்துட்டு வந்தேன் என சொல்லி அலுவலகம் கிளம்பினேன்.
கடுப்பான முகத்துடன் நண்பன் தனியே அழைத்தான்.
“1300 ரிங்கிட்தான். ஆனா அவரு கொஞ்சம் திருத்தினாரு அவருக்கு கொஞ்சம் கொடுக்கனும்”
“அவரு கேட்டாரா..?”
“அப்பறம் காலையிலேயே எப்போ காசு போடுவிங்கன்னு கேட்டாரு. நாளிக்குன்னு சொல்லியிருக்கேன்”
“ஸ்கிரிப்ட்டை எழுதினது நான் தானே..”
“ஆமா ஆனா நிகழ்ச்சி அப்போ நீ வீட்டுக்கு போய்ட்ட.. அவர்தான் கொஞ்சம் ஐடியா கொடுத்தாரு.. அதன் காசு கேட்டாரு.”
“ஓ அப்படியே.. சரி நீ அவரோடா போன் நம்பர் கொடு”
“எதுக்கு..”
“இல்ல நான் கேக்கறேன். எதுக்கு அவருக்கு காசுன்னு”
“இது தேவையில்லாத பிரச்சனை தயா”
“எது தேவையில்லாத பிரச்சனை..?”
“அப்பறம் உனக்கு நான் 500 ரிங்கிட் தானே பேசினேன்..”
“ஆமா பேசினே... எவ்வளவுன்னு தெரியாதப்போ 500ன்னு சொன்னே.. இப்பதான் எனக்கு 1300 ரிங்கிட்டுன்னு கொடுத்திருக்காங்களே கொடுக்கவேண்டிதானே..”
“உனக்கு புரியல தயா..”
“என்ன புரியல..நீ அவரோட நம்பர் கொடு ?”
“இப்போ எதுக்கு டா.... உன்கிட்ட சொன்ன 500 ரிங்கிட்தான் கொடுக்கறேன்னு சொல்றேன்ல... நீ அவர்கிட்ட பேசினா பிரச்சனைதான்”
“நான் ஒன்னும் பிரச்சனை பண்ணலையே.. போன் பண்ணி கேட்கறேன். என்னோட ஸ்கிரிப்ட்டுல என்ன அவரு திருத்தினாருன்னு நானும் தெரிஞ்சிக்களாம்தானே..”
“இப்போ நீ கேட்டா எனக்குதான் பிரச்சனை; அப்பறம் அடுத்த நிகழ்ச்சிக்கேல்லாம் என்னை கைகழுவிடுவாங்க..”
“உனக்கென்ன பிரச்சனை..”
“இந்தா நம்பரு. பேசு. அப்பறம் TV-ல எனக்கு எந்த வாய்ப்பும் இல்லாம போகும், அப்பறம் அவ்வளோதான்..”
“சரிடா நான் பேசல... போதுமா... எனக்கு 500 ரிங்கிட்தானே கொடுக்கபோற.. கொடு”
வந்துவிட்டேன். அவனுக்கான பணம் முழுவதும் அவனது வங்கியில் சேர்ந்துவிட்டது.
என் நண்பனுக்கு என் நிலை நன்றாக தெரியும். பெரும்பாலும் நான் வெளிநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதை விரும்புவதில்லை. அதிலும் இம்மாத இறுதியில் எனக்கு திருமணம். இதுவரையிலான என் சேமிப்புதான் கல்யாணத்திற்கு கொடுத்து வருகிறேன். அப்பாவும் அம்மாவும் குறைந்த வட்டிக்கு வேறு பணம் வாங்கியிருக்கிறார்கள். தீபாவளிக்கு வீட்டிற்கு சென்றதால் இதனை தெரிந்துக் கொண்டேன்.
என் குடும்ப சூழல் முதல், பணப்பிரச்சனை வரை நான் பகிருந்துக் கொண்ட நண்பன் ஒருவனே இப்படி செய்ததை என்னால் ஜீரணிக்க முடியவைல்லை. இதனை எழுதும் போது பின்னிரவு மணி 3.10. இன்னும் நான் தூங்கவில்லை. அவனது செயல் என் நெஞ்சை ஏதோ செய்கிறது. ஆளுக்கு பாதி பாதி என சொல்லியிருந்தால் நானே கொடுத்திருப்பேன்.இத்தனைக்கும் அவன் பணக்காரன்தான். பணத்திற்காக ஒரு நண்பனையே இப்படி புலம்ப வைக்கலாமா...?
அவனைபோல நான் வெளி நிகழ்ச்சிகள் செய்து சம்பாதிப்பவன் இல்லை.
நான் விழுந்தால் நானேதான் எழவேண்டும். அவனுக்கு ஒரு பட்டாளமே இருக்கிறது.
கடன் வாங்கக்கூடாது என்ற உறுதியால் பல தடவை சாப்பிடாமல் இருந்திருக்கிறேன்.
இதையெல்லாம் எழுதக் காரணம் உங்களிடம் இருந்து அனுதாபமோ பண உதவியோ பெறுவதற்கு அல்ல.
நாட்டை திருத்த; மாநிலம் திருந்த வேண்டும்; மாநிலத்தை திருத்த; வட்டாரம் திருந்த வேண்டும்; வட்டாரத்தை திருத்த ஊர் திருந்த வேண்டும்; ஊர் திருந்த; உறவுகளை திருந்த வேண்டும்;உறவுகள் திருந்த குடும்பத்தை திருந்த வேண்டும்; குடும்பம் திருந்த நான் என்ற ஒருமை திருந்த வேண்டும்.......... அதற்கு சுந்தர ராமசாமி சொல்லியது போல இப்படி கடைந்தெடுத்த தறுதலைத் தனங்களை செய்து..... நம்மை சுற்றியிருக்கும் ஊனங்களை அம்பலப்படுத்த வேண்டும்.

எனக்கு நாட்டை திருத்த நாளாகளாம்; இதனை எழுதுவதால், நான் விழிப்படைந்திருக்கிறேன் என பிரக்ஞை பிறக்கிறது புதிய உதயமாய்......................

இப்படிக்கு தயாஜி..............
(2.11.2011)

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்