சிறுகதை ஒரு பார்வை - பள்ளிக்கூட நிகழ்ச்சி
ஹோப்புள் தோட்டத்தமிழ்ப்பள்ளியில் கோலாசிலாங்கூர் மாவட்ட தமிழ்மொழி பாடாட் குழுவின் ஏற்பாட்டில் ‘சிறுகதை ஒரு பார்வை’ என்னும் சிறுகதை பட்டறையை (கலந்துரையாடலை) ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் பட்டறையை வழி நடத்தினேன்.
ஆசிரியர் ரூபன் நிகழ்ச்சி அறிவிப்பாளராக இருந்தார். ஹோப்புள் தோட்டத்தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை திருமதி மகேஸ்வரி இந்நிகழ்ச்சி குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் தான் என்ன எதிர்ப்பார்க்கிறேன் என்பதையும் கூறி என்னை அறிமுகம் செய்துவைத்தார்.
ஒருசில ஆசிரியர்களுக்கு எனது பெயர் முன்னமே பரிட்ச்சயம் ஆகியிருந்தது. அதோடு ஏற்கனவே எனக்கு அறிமுகமான இளம் எழுத்தாளர்களும் நண்பர்களுமான டர்வின், கலைமதி, உகனேஸ்வரி ஆகியோரை சந்தித்தேன்.
இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கிய மாவட்டம், மாநிலம் மற்றும் மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத் தலைவர் திரு பாண்டியன் அவர்களும் சிறப்பான முறையில் அவரது உரையை வழங்கினார். அவரது உரையில் எழுத்தாளர் சிவசங்கரியின் புத்தகத்தில் இருந்த கதையொன்றின் ஒரு பகுதியை எடுத்துக்கூறி நாம் இருக்கும் இடம் நம்மை எப்படியெல்லாம் மோசமான நிலைக்கு தள்ளும் என விளக்கி நாம் நம்மை புரிந்து கொள்வதற்கும் வாழ்வின் வெல்வதற்கும் நம் சுற்றம் எப்படி காரணமாக அமைகிறது என்றும் கூறினார்.
‘சிறுகதை ஒரு பார்வை’ என்ற இந்தக் கலந்துரையாடலுக்கு கம்போங் பாரு தோட்டத்தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர் ரிவர் தோட்டத்தமிழ்ப்பள்ளி, இராஜாமூசா தோட்டத்தமிழ்ப்பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் வந்திருந்தார்கள்.
எனது இன்றைய உரையாடலில் மாணவர்களை கதைகள் வாசிக்க வைப்பதிலும் கதைகளை எழுத வைப்பதிலும் ஆசிரியர்களின் பங்கு என்னவாக அமைந்துள்ளது என்பதற்கு கூடுதல் கவனம் கொடுத்தேன். ஏனெனில் எங்களைப் போன்ற எழுத்தாளர்களை வாசகர்கள்தான் வாசிக்கின்றார்கள். ஆனால், அடுத்த தலைமுறை எழுத்தாளர்களும் வாசகர்களும் பள்ளிகளில் இருந்து வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. பள்ளிக்கூடத்திலேயே வாசிப்பை நேசிக்க வைப்பது மிகவும் முக்கியம்.
சிறுகதைகளை வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் நாம் நம்மை எப்படி தயார் செய்வது என்பதைச் சொல்லும் போது நான் வாசித்த சிறுகதைகளைச் சொல்லி அதையொட்டி பேசினேன். கதைகளுக்கும் சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் முதற்கொண்டு, திருப்பம் என்பதின் அவசியத்தையும் அது எப்படி கதையை மாற்றிவிடுகிறது என்பதையும் பேசினேன்.
எதிர்ப்பாத்தது போல அதிக கேள்விகள் எழாவிட்டாலும், எழுந்த சில கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்து மேலும் சில உதாரணங்களைக் கொடுத்தேன்.
வழக்கம் போல, ஹோப்புள் தோட்டத்தமிழ்ப்பள்ளி நூல்நிலையத்திற்கு எனது 'அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல' , 'குறுங்கதை எழுதுவது எப்படி' என்ற இரு குறுங்கதைத் தொகுப்புகளையும் நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை சார்பாக கவிஞர் பூங்குழலி வீரன் எழுதிய பொம்மைகள்கூட பேசிக்கொண்டிருக்கலாம் என்ற கவிதை தொகுப்பினையும் கொடுத்தேன்.
இன்றைய கலந்துரையாடலில் பங்கெடுத்த ஆசிரியர்களுக்கும் அவர்கள் வழி அவர்களில் மாணவர்களுக்கும் பயனாக அமையும் என நம்புகிறேன். அதையே எதிர்ப்பார்க்கிறேன்.