- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 17/20
மலேசியா வருகிறார் பெருமாள்முருகன்
பெருமாள்முருகன் சிறுகதை ‘கடைக்குட்டி’ 17/20
முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.
***************************************
வழக்கமாக சிறுகதையை எழுதுகிறவர்களிடம் கதையின் முடிவில் திருப்பம் இருக்க வேண்டும் அல்லது கதை முடிவு திருப்பத்தைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் சொல்வார்கள். பலரும் அதனை மட்டுமே கருத்தில் கொண்டு முடிவில் ஒரு வெடிகுண்டை வைத்திருப்பார்கள். துரதிஷ்டவசமாக அது வெடிக்கவும் வெடிக்காது.
கதையில் எங்குமே அந்த வெடிகுண்டிற்கான திரியைப் பற்ற வைத்திருக்க மாட்டார்கள். அல்லது நமத்து போன திரியை நம்பி, வெடிகுண்டை வைத்திருப்பார்கள். அது ஒன்றுக்கும் உதவாமல் போயிருக்கும். இன்னும் சொல்லப்போனால்; அந்தக் கதைக்கு வெடிகுண்டே தேவையிருக்காது. அல்லது அந்த வெடிகுண்டுதான் முழு கதையாகவே வந்திருக்க வேண்டியது. தவறவிட்டிருப்பார்கள். இன்னும் சிலர் கதையை முடிக்கிறேன் என நினைத்து அந்த வெடிகுண்டின் மீது தண்ணீரை ஊற்றிவிடுவார்கள்.
கதையின் முடிவில் தேவைப்படும் திருப்பம் என்றால் என்ன? கதையின் முதல் பத்தியிலேயே அதற்கான திரி தயாராய் இருக்க வேண்டும் என்றால் கதையை எங்கிருந்து தொடங்குவது? போன்ற கேள்விகளுக்கு இந்தச் சிறுகதை நமக்கு பதில்களைக் கொடுக்கும்.
பெருமாள்முருகன் சிறுகதை; ‘கடைக்குட்டி; 17/20
இந்தக் கதையின் முடிவு கொடுக்கும் அதிர்ச்சியைப் பல இடங்களில் நாம் சர்வ சாதாரணமாக சந்தித்திருப்போம். அப்போதெல்லாம் நமக்கு என்ன வந்தது என கடந்து சென்றிருப்போம். அல்லது அப்படி சொல்கிறவர்களைப் புறக்கணிப்போம். ஆனால் இந்தக் கதையை வாசித்துக் முடிக்கும் போது எதிர்க்கொள்ளும் அதே அதிர்ச்சியை எளிதாக கடக்க முடியாது. ஏனெனில் இந்த வெடிகுண்டிற்கான திரியை சிறுகதையில் மிகவும் சரியாக எழுத்தாளர் பற்ற வைத்திருக்கிறார். அது மெல்ல மெல்ல கதையின் முடிவிற்கு நம்முடனே வந்து
படாரென வெடித்து நமக்கும் பாதிப்பைக் கொடுக்கின்றது.
வீட்டில் ஒருவருக்கு ஏற்பட்ட குடிப்பழக்கத்தால் வீட்டில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்தான் கதை. ஆனால் அதை கதையாக சொல்லும் முறையில் எழுத்தாளர் தனித்து நிற்கிறார். கதைப்பின்னல் என்பதற்கு உதாரணமாக இந்தச் சிறுகதையைச் சொல்லலாம். நிதானம் இல்லாத மனிதர்கள் தங்களின் இயலாமைக்கும் தோல்விக்கும் ரொம்பவும் மோசமான எதிர்வினையைக் கொடுக்கவும் தயங்கமாட்டார்கள் என்பதை ஒரு பாடம்போல இந்தக் கதை நம் கண்முன் நடத்திக்காட்டுகிறது.
இப்போது நான் அந்தக் கதையை உங்களிடம் சொல்வதற்கு முன்பாக நீங்களே அந்தக் கதையை வாசிக்கும் போது உங்களால் அந்த திரியுடன் நேரடியாகப் பயணிக்க முடியும். உங்கள் மனதிலும் அந்த வெடிகுண்டு வெடிக்கட்டும் என நானும் கேட்டுக்கொள்கிறேன்.
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக