பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 31, 2020

#கதைவாசிப்பு_2020_9 'தவளைகள்'


#கதைவாசிப்பு_2020_9
கதை  தவளைகள்
எழுத்துப.சிங்காரம்
புத்தகம்காலச்சுவடு ஜனவரி 2020 இதழ்


       சொல்லப்போனால் உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு. இதழைப் பிடித்திருந்தக் கைகள் மெல்லிய தாளம் போடவும் செய்தன. இம்மாத இதழில் ப.சிங்காரத்தின் ‘தவளைகள்’ கதை பிரசுரமாகியுள்ளது. அதோடு இம்மாதம் முதல் சிறப்பு பகுதியாக ‘கதைத்தடம்’ எனும் பகுதியை ஆரம்பித்துள்ளார்கள். முன்னோடி எழுத்தாளர்களின் புத்தகங்களின் வெளிவராத கதைகளை இடம்பெறப்போகின்றன. இது பற்றி முந்தைய பதில் எழுதியிருப்பேன்.

    ப.சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’ மற்றும் ‘புயலிலே ஒரு தோணி’ போன்ற இரு நாவல்களுக்கு பிறகு எந்த ஆக்கமும் படிக்கக் கிடைக்கவில்லை. அவர் பற்றி மிகச்சரியான தகவல்களும் தேடுகையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்லிவிடுகிறார்கள். அவரின் மறைவுக்கு பிறக்குதான் இலக்கிய உலகம் அவரைக் கண்டுக்கொண்டது என்பது வேதனையான ஒன்று.

   இரண்டு நாவல்களுக்குப் பிறகு, மூன்றாவதாக அவர் ஒரு நாவலை எழுத முயற்சித்தார் . ஆனால் அது குறித்த விபரங்கள் தெரியவில்லை என்கிறார்கள். அவரின் இரு நாவல்களும் அக்கால மலேசியச் சூழலை கண்முன்னே காட்டியது.  நாவலின் மொழியைக் கண்டு இதனை எழுதியது மலேசியர் எனவும் ஒரு நம்பிக்கை இருந்தது. நாவலின் மொழி அந்த அளவிற்கு மலேசியாச்சூழலையும் இங்குள்ள மக்களையும் காட்டியது.

     பல நாட்களாக அவரது இதர படைப்புகளைத் தேடி கிடைக்கவில்லை. ஜனவரி காலச்சுவடு இதழில் ப.சிங்காரத்தின் ‘தவளைகள்’ கதை வந்துள்ளது.

தவளைகள்.

      ஊரைவிட்டு வெளியேறும் கணவன் மனைவி. யார் அவர்கள். என்ன சிக்கல் என கதை  விவரித்துக் கொண்டே செல்கிறது. இருள் சூழ்ந்த வழி. தண்ணீர் கரையோறமாக இருவரும் ஒருவர் பின் ஒருவராக எந்தவித சலனமும் ஏற்படாதவாறு நடந்துச் செல்கிறார்கள். அவர்களின் பயணத்தின் ஊடே ஆற்றில் தவளைகள் ‘கிரக் கிரக் கிராக்..!’ என தொடர்ந்துக் கத்திக்கொண்டே இருக்கின்றன. இந்த கத்தலுக்கான காரணம் கதையின் முடிவில் நமக்கு திகிலை ஏற்படுத்திவிடுகிறது.

    எப்படியும் பிழைக்கலாம் என யோசிக்கும் கணவன். இனி எப்படி பிழைப்பது என  நிலமையை முழுதும் அறிந்துப்புரிந்து யோசிக்கிறார் மனைவி. கணவனை நன்கு அறிந்திருக்கிறவள். இனி என்ன சொன்னாலும் அவர் கேட்கப்போவதில்லை என தெரிகிறது. எல்லாம் இழந்துவிட்ட பொழுதில் வாழ்ந்து வந்த ஊரை விட்டுச்செல்வது மனைவிக்கு சரியாகப் படவுமில்லை.

     சட்டென தண்ணீரில் ஏதோ பெரிதாக விழுந்துவிட அது தன் மனைவி என கணவர் அதிர்கிறார். அவளைக் காப்பாற்ற அவரும் ஆற்றில் குதிக்கிறார். தண்ணீரில் மனைவிக்கு அருகில் நீந்திச் செல்கிறார்.  ஏதோ கைகள் அவரது கழுத்தை பூட்டுகின்றன. மனைவியின் பெயர் சொல்லி அழைக்கிறார். அந்த பிடி விடுபடவில்லை. கழுத்தைப்பிடித்திருப்பதை பலமாக அறைகிறார். முடியவில்லை. அதன் கன்னத்தைக் கடித்துக் குதறி வெளியேற முயல்கிறார். முடியவில்லை. கொஞ்ச நேரத்தில் தண்ணீர்ல் ஏற்பட்ட சலனம் ஒரு முடிவிற்கு வந்தது.

     கதையின் முடிவை என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. நிச்சயம் அந்த முடிவை நான் எதிர்ப்பார்க்காததும் அதற்கான காரணமாக இருக்கலாம். கணவனின் கழுத்தைப் பிடித்த அந்த கரங்கள் யாருடையது என தெரிந்துக் கொண்டதும் புத்தகத்தை அப்படியே மூடி வைத்துவிட்டேன். சமீக கால பத்திரிகை செய்திகள் கண்முன் வந்து வந்துப் போயின.
     கணவனின் எல்லா கொடுமைகளையும் மனைவி தாங்கிக்கொள்கிறாள். எப்போதாவது அவள் பங்கிற்கு அடிக்கவும் செய்கிறாள். பின்னர் அவளின் வாழ்வு எப்போதும் போல தொடர்கிறது. ஆனால் கணவன் மீது முற்றிலும் நம்பிக்கையற்ற மனைவியில் அடுத்த செயல் என்பது யாராலும் யூகிக்க முடியாத ஒன்றாக இருக்கும். அதற்கு அவள் மனதில் அந்த மனிதன் 'கணவனாக' இருக்க வேணடும்.

- தயாஜி

மைக்ரோ கதையின் பரிசு


       சமீபத்தில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரன் அவர்கள் சிறுபோட்டி ஒன்றை வைத்திருந்தார். ‘மைக்ரோ கதை’ எழுதும் போட்டி. http://tayagvellairoja.blogspot.com/2020/01/blog-post_11.html அதனைப்பற்றி இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.
       அதில் நானும் வெற்றி பெற்றிருந்தேன். அதற்குரிய பரிசு இன்று கிடைத்தது. புத்தகத்துடன் கையொப்பமும் சேர்ந்தே வந்துச் சேர்ந்தது. பல போராட்டங்களுக்கும் படிப்பினைகளுக்கும் பிறகு இவ்வாண்டில் தொடர்ந்து பல நல்ல விடயங்களை சந்திக்கின்றேன். சந்திக்கும் ஒவ்வொன்றும் ஆசீர்வாதங்களாக மாறி என்னை வழிநடத்துகின்றன.
  எனது மகிழ்ச்சியினை உங்களுடனும் பகிர்ந்துக் கொள்கிறேன்; அது உங்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் என நம்புகிறேன்.
அனைவருக்கும் எப்போதும் என் அன்பு.
- தயாஜி
-         

ஜனவரி 29, 2020

சைக்கோ- உன்னை நினைச்சி நினைச்சி



     சில நாட்களாக தொடர்ந்துக் கேட்டுக்கொண்டிருக்கும் பாடல். இதன் பின்னனியில் இருக்கும்  ஆழமான காரணத்தை தேடுவதற்கு மனதில் தைரியம் இல்லை. இசை, பாடல் வரி, குரல், காட்சி என எதைச்  சொல்லி மனதிடம் இருந்து தப்பிக்கலாம் என்றாலும் பயனில்லை. இசை ராசரின் பக்தனென்றால் அவர்தான் காரணம் என்றிருப்பேன். பாடலின் வரிகளை தேடுபவனென்றால் கவிஞர் கபிலனைச் சொல்லியிருப்பேன், பாடகரின் விரும்பியென்றால் சிட் ஶ்ரீராம் என நினைத்திருப்பேன், காட்சிக்கும் கதைக்கும் ரசிகனென்றால் இயக்குனர் மிஷ்கினை சொல்லியிருப்பேன். ஆனால் எதுவும் முடியவில்லை. எந்த காரணத்திற்கும் அடங்கிவிடாத ஏதோ ஒன்று மேற்சொன்ன எல்லாவற்றிலும் இருந்துக் கொண்டு என்னுள் ஏதோ செய்கிறது.

      பார்வையற்ற ஒருவன் தன் காதலிக்குப் பாடும் பாடலாக இதனைப் படமாக்கியிருப்பார்கள். பார்வையற்ற காதலனுக்கு மட்டுமல்ல தன்னால் எதுவும் இயலாத எந்த ஒரு ஆணுக்கும் இப்பாடல் பொருந்திவிடுகிறது.

‘பார்வை போனாலும் பாதை நீதானே
காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை’


     இவ்வரிகள் அப்படியே என்னை ஸ்தம்பிக்க வைத்துவிட்டன. மீண்டும் மீண்டும் இவ்வரிகளை சொல்லிப்பார்க்கிறேன். பார்வையில்லாதவனுக்கு பாதையா இருப்பவள்; எப்படியானவளாக இருக்க வேண்டும். அப்படி ஒருத்திக்கு தன்னிடம் கொடுக்க இருப்பது காதல் மட்டுமே என ஆண் நினைக்கிறான். அது அவனது வாழ்வில்  வரமா சாபமா என எனக்கு பிடிபடவில்லை.

     தன்  இயலாமையை முழுவதும் ஆண் ஒப்புக்கொள்கிறான். அவனிடம் மேல் பூச்சுக்கான எந்த பொய்மைகளும் இல்லை. இப்படியானவர்களின் காதல் நம்பிக்கையைக் கொடுக்குமா? ஆனால் அவன் தான் நம்பும் ஒற்றைக்காதலை பற்றி படர்கிறான்.

     காதலில் தோல்விகளையும் ஏமாற்றங்களையும் கடந்துவிட்டவன் என்பதாலோ என்னமோ; ஆழ்மனம் மூடிவைத்திருக்கும் எதையும் திறந்துப்பார்க்க தைரியம் அற்றவனாய் இரவுகள் முழுதும் இதனை திரும்ப திரும்பக் கேட்கிறேன். எந்த முகமும் என்னிடம் தங்களின் முகவரி காட்டிவிடாதபடி கண்கள் கலங்கி நிற்கிறேன்.

     அழுவதற்கு காரணமும் காயமும் தேவையா என்ன? நம்மை நாமே அழவைக்க நினைவுகளின் சிறு அதிர்வு போதாதா?


பாடல்-



 உன்ன நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா
நெஞ்ச உதெச்சி உதெச்சி பறந்து போனா அழகா
உன்ன நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா
நெஞ்ச உதெச்சி உதெச்சி பறந்து போனா அழகா
உன்ன நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா
நெஞ்ச உதெச்சி உதெச்சி பறந்து போனா அழகா
யாரோ அவளோ எனை தீண்டும் காற்றின் விரலோ
யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ
உன்ன நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா
நெஞ்ச உதெச்சி உதெச்சி பறந்து போனா அழகா
வாசம் ஓசை இவைதானே எந்தன் உறவே ஓ..
உலகின் நீண்ட இரவென்றால் எந்தன் இரவே
கண்ணே உன்னால் என்னை கண்டேன்
கண்ணை மூடி காதல் கொண்டேன்
பார்வை போனாலும் பாதை நீதானே
காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை
உன்ன நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா
நெஞ்ச உதெச்சி உதெச்சி பறந்து போனா அழகா
ஏழு வண்ணம் அறியாத ஏழை இவனோ
உள்ளம் திறந்து போசாத ஊமை இவனோ
காதில் கேட்ட வேதம் நீயே
தெய்வம் தந்த தீபம் நீயே
கையில் நான் ஏந்தும் காதல் நீதானே
நீயில்லாமல் கண்ணீருக்குள் மூழ்கி போவேன்
உன்ன நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா
நெஞ்ச உதெச்சி உதெச்சி பறந்து போனா அழகா
யாரோ அவளோ எனை தீண்டும் காற்றின் விரலோ
யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ
உன்ன நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா
நெஞ்ச உதெச்சி உதெச்சி பறந்து போனா அழகா







ஜனவரி 27, 2020

பூங்குழலியின் கவிதைகள்


     முதலில் கவிதையை நான் எவ்வாறு புரிந்து கொள்கிறேன் என்பதைச் சொல்லிவிடுகிறேன். அறிவிற்கும் மனதிற்குமான இடைவெளியை வார்த்தைகள் மூலம் நிரப்புவது கவிதை. உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு பாதிப்பில் உழன்று கொண்டிருக்கும் மனிதனின் வாழ்வில் விடுபட்ட பக்கங்களை நினைக்க வைப்பதும், அவன் விட்டுவிட்ட இடங்களை நிரப்ப வைப்பதும் கவிதையின் செயல்பாடாகப் பார்க்கிறேன். இன்னொன்றையும் இங்கு சொல்லிவிட நினைக்கிறேன். அறிவார்ந்த கவிதைகளையோ தத்தம் தமிழ்ப் புலமையைப் பறைசாற்ற நினைக்கும் கவிதைகளோ என் வாழ்வின் விடுபட்ட இடத்தை நிரப்பவோ மீண்டும் நினைவுகூரவோ உதவவில்லை. அதன் சொல்லாடல்களை கொஞ்சநேரம் ரசிக்கலாம். இன்னும் போனால் ‘அட’ என பிரமிக்கலாம். வெறுமனே அத்தகைய பிரமிப்புகளைச் சிலாகித்து ஏமாற்றமடையும் வாசகன் மீது பாவப்படாமல் இருக்க முடியவில்லை.
           
    இப்போது பூங்குழலியின் கவிதைத் தொகுப்பிற்கு வருகிறேன்.‘நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்’ என்பது தலைப்பு. நடந்துக் கொண்டிருக்கும் ஒன்றிற்கும் அதற்கான காரணங்களும் என இதனை புரிந்து கொள்ளலாம். பெரும்பாலானவை நிகழ்காலத்தையே மையமிட்டுள்ளன.

    பூங்குழலியின் கவிதையுலகை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். (‘உயிர் வேட்டை’ என்கிற கவிதைத் தொகுப்பில் ஈழப்போர் குறித்து இவர் எழுதியிருப்பதை நான் இன்னும் படிக்காததால், இத்தொகுப்பின் கவிதைகள் மற்றும் அவரது இன்னபிற கவிதைகளை வைத்துச் சொல்கிறேன்.) ஒன்று குழந்தைகளால் சூழ்ந்திருப்பது இன்னொன்று காதலில் தொடங்கி எல்லாவற்றிலும் ஏமாந்து நிற்பது. ஒன்று அக உலகம் இன்னொன்று புற உலகம். அக உலகம் குழந்தைகள் காதல் சார்ந்தும். புற உலகம் போர் சார்ந்தும் இருக்கிறது.

    ஒருபக்கம் குழந்தைகளின் குதூகலம் இன்னொரு பக்கம் விரக்தி ஏமாற்றம் என இருக்கிறது. இரண்டுக்குமான இடைவெளியை எப்படி புரிந்து கொள்வது. அந்த இடைவெளியை குழலி எதனைக் கொண்டு நிரப்பிக்கொள்கிறார் என யோசிக்கவிடாமல் இரு பக்கங்களிலும் கவிதைகள் அடர்த்தியாக வளர்ந்து நிற்கின்றன.

     ’மிகப்பிடித்த ஒருவனின் புகைப்படம்’ என்ற கவிதை. அண்ணனின் புகைப்படம் குறித்து சொல்கிறார். பின்னர் நாமும் நமது புகைப்படமாக அதனை நினைத்துக் கொள்கிறோம். அதனையொட்டி அவர் எழுதியிருப்பதெல்லாம் நம்மையும் புகைப்படத்தில் ஒரு பகுதியாக ஆக்கிவிடுகிறது. நிறைவாக, ‘அவன் இறந்து  போன அன்றும்’ என்ற வரிகளுக்கு பின் சட்டென நம்மை அந்த புகைப்படத்தில் இருந்து அந்நியப்படுத்திக் கொள்ள வைக்கிறார். இதுவரையும் குழந்தைபோல கொண்டாட்டம் கொண்ட மனது பாரமாகிறது. இறந்து போய் புகைப்படங்களாக இருப்பவர்கள் வளர்வதை நிறுத்திவிட்ட செய்தி எத்தனை துக்ககரமானது.

     அடுத்த இரண்டு கவிதைகளில் ஜென் பாணி இருப்பதைப் பார்க்கிறேன். குழலிக்குத் தத்துவம் கைகூடியுள்ளது. அதற்கு அவர் விரும்பும் குழந்தைகள் உதவியிருக்கிறார்கள். ‘நாயொன்று இறந்தது குறித்த கதை’ எனும் கவிதைதான் அது. இறந்துவிடுவதை அல்லது மரணத்தைக் கொஞ்சமும் புரிந்துக்கொள்ளாத குழந்தை இறந்த நாய் குறித்து சொல்கிறது. குழந்தைகள் நம்பும் பொய்யான உலகத்தை நாம் நம்புவது அத்தனை சாதாரணமல்ல அதற்கு குழந்தைக்கு இணையான மனம் வாய்க்க வேண்டும். அந்த மனம் கள்ளம் கபடமின்றிச் சிரித்திட வேண்டும். இல்லாத நாய் குறித்தும் அதன் இறப்பு குறித்தும் சொல்லிய குழந்தை தூங்கிவிட்டது. ஆனால், இருக்கும் வேலைகளை விட்டுவிட்டு அந்த நாயைத் தேடி அலைவதென்பது ஜென் நிலையாக அல்லாமல் என்னவாக இருக்க முடியும்.

     இன்னொன்று, ‘எறும்பு’ என்னும் கவிதை. அன்றாட வாழ்வில் பட்டும்படாமலும் இருக்க நினைக்கும் மனிதன்தான் தன் மீது அனைத்து ஆசாபாசங்களையும் போட்டுக்கொண்டு புலம்பிக்கொண்டிருக்கிறான். இக்கவிதையில் சொல்லப்படும் எறும்பைப் போல நிகழ்காலத்தில் வாழ்வை ரசிக்கும் மனம் கொண்டவர்களைச் சந்திப்பது அத்தனை சாதாரணமல்ல

    ‘அது ஒரு தற்கொலை’ என்னும் கவிதை, வாழ்வு குறித்த அர்த்தங்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது. குழந்தைகளை ரசித்த பின்பு இவ்வாறான கவிதைகளைப் படிக்கையில் பதட்டமும் பயமுமே மனதில் தேங்கி நிற்கிறது.

    மரணம் மீது குழலிக்கு இருக்கும் ஈடுபாடு வியப்பைக் கொடுக்கிறது. ‘மரணத்தின் கோப்பை’ என்பதில் இரு மரணித்தவர்கள் குறித்துப் பதிவு செய்கிறார். மரணத்துக்குப் பின்பான வாழ்வு இறந்தவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ அவர்களை இழந்த நமக்கு அவர்களுக்கு பின்பான வாழ்வு இருப்பதைக் காட்டுகிறது.

   ‘பயணிக்கிறேன்’ என்ற கவிதையை வைத்து நல்லதொரு சிறுகதையை எழுதிவிடலாம். ஆனால் ஏனோ கவிஞர் இன்னும் சிறுகதை எழுதவில்லையென்றே நினைக்கிறேன். நமது அனைத்துவிதமான ரகசியங்களையும் நம்மைவிட அதிகம் தெரிந்திருப்பது நமது அறைதான். அப்படியான அறைக்குள்ளே நாம் வர பயப்படுகிறோமெனில் ஆகக் கடைசியாக நமக்கே நாம் துரோகம் செய்துவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

    ‘அவனைச் சுற்றி யாருமில்லை’ என்ற கவிதையில் தன்னையே கவிஞர் வரைந்திருப்பதாக நினைக்கிறேன். ஒருபக்கம் பொருளாதாரம் இன்னொரு பக்கம் அதற்கான ஓட்டம் என இருந்தும் தன் வாழ்வின் பக்கங்களைக் கவிதைகளாக குழலியால் எப்படி நிரப்ப முடிகிறது என இக்கவிதையில் சொல்லப்பட்டிருக்கும் புகைப்படக்காரன் காட்டிவிடுகிறான். காரணங்கள் எத்தனை சொன்னாலும் நாம் விரும்பினால் எத்தகையக் காரியங்களைச் செய்துவிட முடியும் என்பதை நினைவூட்டும் கவிதை இது.


    குழலி சொல்லி வரும் கவிதைகளில் இருக்கும் காதலில் ஏக்கமும் ஏமாற்றமும் தெரிகிறது. ஒருபோதும் வெற்றியடைந்த மகிழ்ச்சியை, அவரது காதலைச் சொல்லும் கவிதைகளில் காண முடிவதில்லை. இது பலவீனமா என்றால் அப்படியும் இருக்கலாம். ஆனால் அந்த நிலையைக் கவிதைகளாக்குவது அவரது பலமே.

 குழந்தைகளுக்கான கவிதைகள் கடினமின்றி எழுதிவிடலாம். அதனை குழந்தைகள் வாசிக்க இலகுவாக எழுதுவது அத்தனை சிரமமான காரியமல்ல. ஆனால் கவிதைகளில் குழந்தைகளை எழுதுவது சுலபமல்ல. மனதில் எப்போதும் வாழும் குழந்தை இருந்தால் மட்டுமே அப்படியான கவிதைகள் சாத்தியம். பலர் பல காரணங்களைச் சொல்லித் தங்களுக்குள்ளே கொன்றுவிட்ட குழந்தை, குழலியின் மனதில் குழந்தையாகவே இருப்பது வாசகனாக எனக்கு மகிழ்ச்சிதான். நானும் எனது குழந்தைப் பருவத்திற்கு அவரின் உதவியுடன் சென்று வருவேன். சொல்லப்போனால் குழந்தைகளுடன் எப்படி பேச வேண்டுமெனவும் தொடர்ந்து கற்றுக்கொள்வேன்.

   இவ்வாறு பல கவிதைகள் கொண்ட தொகுப்புதான் ‘நிகழ்தலும் நிகழ்தலின் நிமித்தமும்’
நிறைவாக சொல்வது என்னவெனில்;

    கவிதையுலகில் பூங்குழலிக்கும் ஓரிடம் கிடைக்க அதிக நாட்கள் ஆகப்போவதில்லை என்று நம்புகிறேன் அதற்கான உழைப்பை கொடுத்துக்கொண்டிருக்கும் அதே வேளையில், காதலிக்க வேறு குறுக்கு வழி இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.

- தயாஜி

மருந்தென்னும் மாயப்புள்ளி



மனப்பிணிக்கு மருந்துகொடுக்கக் கூடியவரிடம்
வாங்கிவந்த மருந்துச்சீட்டுகள் அவை
நோய்க்கூறுகளை துல்லியமாக
உடல்புள்ளிகளில் கண்டறிந்தார்

ஒவ்வொரு புள்ளிகளிலும்
ஒரு கதையை செருகச்சொல்லி
தீவிரமாக வேறெதையோ தேடலானார்

உடன்பாடில்லையென்றாலும்
கதைகளை கண்டறிந்துக்கொண்டிருந்தேன்

முதல்புள்ளி என் நெற்றிப்பொட்டில் இருப்பதாக
எழுதிக்கொடுத்தார்
சின்ன வயதில் யாரையோ
கல்லெறிந்துவிட்டு ஓடிய கதையை
அங்குச் செருகினேன்
நெற்றிப் பொட்டு வலித்தது

இரண்டாவது புள்ளி என் கண்களில் இருப்பதாக
எழுதிக் கொடுத்தார்
ஒரு முறை தோழி தன் காதலனுக்கு
முத்தம் கொடுத்தகதையை அங்குச் செருகினேன்
என் இதழ் எச்சிலானது

மூன்றாவது புள்ளி என் கட்டை விரலில் இருப்பதாக
எழுதிக் கொடுத்தார்
அப்பாவின் கையெழுத்தை ஏமாற்றி போட்டுவிட்ட
கதையை அங்குச் செருகினேன்
நகத்தின் முனை உடைந்தது

நான்காவது புள்ளி என் நாவின் நுனியில் இருப்பதாக
எழுதிக் கொடுத்தார்
இதுதான் முதல் முறையென
சொல்லி அணைத்தக் காதலியின்
கதையை அங்குச் செருகினேன்
நாவு கடிபட்டது

இப்படியாகப் பல புள்ளிகளைக் கண்டறிந்து
அதற்கான கதைகளை செருகியும்
நிம்மதியை முழுமையாக அடைய முடியாதபடி

மனைவியை வன்கலவி செய்த கனவினை
செருகிவைக்கவேண்டிய புள்ளியை மட்டும்
கண்டுபிடிக்கவே முடியாதபடி கண்கலங்கி தோல்வி கண்டார்...

- தயாஜி

(நன்றி வல்லினம்)

ஆணொருவன் அழுகிறான்

அலாவுதின் விளக்கில் அடைபட்டிருக்கும்
பூதமொன்று
அவனது அழுகை துளியின்
சிறு துகள் பட்டு தூக்கம் கலைந்தது
இது சாத்தியமே ஆகக்கூடாதென
அசரீகள் முழுக்க
பெண் குரல்களால் ஒலிக்கத்தொடங்கின

ஆயிரத்து இரண்டாவது நாளுக்கான
கதையை அரேபியர்கள் தேடிப்போகலானார்கள்
அதிலவன் தனது மார்புக்கூண்டிலிருந்து
இதயத்தை கழற்றி அதற்கு
தங்க முலாம் பூசியதன்
தகுதியை உயர்த்திக்கொண்டிருந்தான்
விபரம் தெரிந்தவிட்ட ஊர் பெண்கள்
ஒவ்வொருவராக சாலை மின்சாரத்தை
துண்டிக்கத் தொடங்கினர்

நெற்றிக்கண்ணில் பிறந்துவிட்ட முருகனை
வேறெப்படியெல்லாம் கொன்றுவிடலாம் என
யோசனை கூட்டத்தின்
முதல் தீர்மானமாக
நெற்றிகண்களையெல்லாம்
தோண்டியெடுத்து தீயிட்டு கொளுத்தலாம்
என்ற சாசனத்தில் சக்திகள் கையொப்பமிட
வரிசைக்கு வரலானார்கள்

கன்னங்கள் வழி இறங்கி வந்துக் கொண்டிருந்த
நீர்த்துளிகளுக்கு
பனித்துளிகளென பெயரிட்டு ஊர் முழுக்க
தண்டோரா போட ஆளுக்கொரு திசையாக
புறப்படுகிறார்கள்

ஆணொருவன் அழுத கதை தெரியாததால்
அதன் விளைவுகள் ஏதும்
இன்னும் முகங்காட்டாமலேயே
முடங்கிவிட்டிருக்கிறது….

தயாஜி

ஜனவரி 25, 2020

'அகிலம் நீ' அகன்ற பார்வை


‘அகிலம் நீ’ – நூல் அறிமுகம்



         நாம் எல்லோர் மனதிலும் ஒரு நாவல் இருப்பதாக சொல்லுவார்கள். அதனால்தான் என்னவோ முதல் நாவலில் வெற்றி கண்டவர்கள் இரண்டாம் நாவலில் தடுமாறிவிடுகிறார்கள். அதே போலதான் நாம்  ஒவ்வொருவரிடமும் பல கதைகள் இருக்கின்றன. நமக்கு தெரிந்த கதைகள், நமக்கு தெரியாத கதைகள், சொல்லக்கூடிய கதைகள், சொல்லக்கூடாத கதைகள், சொல்லியும் சொல்லாமலும் விட்டுவிடக்கூடிய கதைகள் என ஏராளம். இன்னும் சொல்லப்போனால் ஒருவரின் டைரி குறிப்புகள் இன்னொருவருக்கு மிகப்பெரிய கதையாடலுக்கு வழிவகுக்கும்.

       இதில் ஏதோ ஒரு வகையில் தன் சக மனிதர்களுக்கு பகிர வேண்டியவற்றை எழுத்தின் மூலம் சொல்ல முயன்றிருக்கிறார்  பொன் கோகிலம். நம் நாட்டை பொறுத்தவரை, சிலருக்கு அறிமுகங்கள் அவசியமில்லை. இவரும் அதில் ஒருவர் என்பதில் மிகையில்லை. ‘அகிலம் நீ’ நூல் வெளியீட்டிற்கு பிறகு அவரின் இன்னொரு பரிணாமத்தை நாம் பார்த்து வாழ்த்தி மகிழலாம்.

     ‘அகிலம் நீ’ நூல், பிப்ரவரி இரண்டில் வெளியீட்டு காணவுள்ளது.  நூல் வெளியீடு என்பது நம் நாட்டில் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது. இது ஆரோக்கியமான ஒன்று. அந்த ஆரோக்கியம் தரத்தைச் சொல்கிறதா இல்லையா என்பது கேள்விக்குறிதான்.
   
அகிலம் நீ – க்கு வரலாம்’.

         இந்நூலில் இருந்து எனக்கு வாசிக்கக்கிடைத்த சில கதைகளின் ஊடே உங்களோடு உரையாட விரும்புகிறேன். இந்த ஒற்றை உரையாடல், எழுத்துகள் மூலம் தொடங்கி உரையாடல்கள் வழி பயணமாகும் என நம்புகிறேன். கதைகளுக்குச் செல்வோம்.


வாத்து - கனடாவின் தேசியப் பறவை 



      முதலில் என்னை யோசிக்க வைத்தது இதன் தலைப்புதான். பிடித்தும் இருந்தது. வாழ்வில் எப்படியாவது முன்னேறிவிடுவோம். நாமும் நான்கு பேர் மெச்சும்படி வாழ்வோம் என்ற சராசரி ஆசைகளைக் கொண்டிருக்கிறாள் நாயகி. கனடா செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. மலேசியாவில் கனடா தூதகரம் இல்லை என்பதால் அவளுக்கு அலைச்சல்கள் ஏற்படுகிறது.

      இருந்தும் தன் வருங்கால கணவன் தன் மீது கொண்ட அன்பும் அக்கறையும் அவளைத் தொடர்ந்து முன்னேற்றம் காண ஊக்கம் கொடுக்கிறது. கடப்பிதழ் எடுக்க முற்படும் போது இணையம் வழி பணம் செலுத்த வேண்டும் என்பதைக் கூட நாயகி அறிந்திருக்கவில்லை. கையில் பணத்தை வைத்துக்கொண்டு அவனை அழைத்து விபரம் சொல்கிறாள். உடனுக்குடன் குறிப்பிட்ட எண்களுக்கு அவன் பணம் செலுத்துகிறான். அவளின் ஒவ்வொரு சிக்கலிலும் அவன் உடன் இருப்பது அவன் மீதான காதலை அதிகப்படுத்துகிறது.

      இரவு இருவரும் சந்திக்கின்றார்கள்.  அவன் வங்கியில்  செலுத்திய பணத்தை நாயகி கொடுத்தும் அதனை பெற்றுக்கொள்ள அவன் விரும்பவில்லை. அன்பு, கொடுக்கல் வாங்களை கவனித்து எதனையும் செய்வதில்லை என அவன் நம்புகிறான். இருந்தும் கட்டாயத்தின் பெயரில் பெற்றுக்கொள்கிறான்.

      இன்னும் இரண்டு ஆண்டுகளில் திருமணம் என அம்மா சொல்லியிருந்தாலும். தங்களுக்காக  அழகிய வீடு வாங்கிவிட்டுதான் நாயகியை மணம் முடிப்பதான அவனது சபதம் அவனையும் உழைக்க வைக்கிறது.
       கனடாவில் நடக்கும் ‘அனைத்துல இந்திய அழகி போட்டி’யில் நிச்சயம் வெற்றி பெறுவாள் என அவர்கள் இருவரும் நம்புகிறார்கள்.

     பயணத்திற்கான ‘விசா’ தயார் என மின்னஞ்சல் வருகிறது. அப்போதே அவள் வென்றுவிட்டதாக உணர்கிறாள். மறுநாள் தன் வேண்டுதலை நிறைவேற்றிய பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து விசாவை பெற்றுக்கொள்ள செல்கிறாள்.

      கையில் கிடைத்துவிட்ட கடப்பதிழை திறந்து தனது விசாவை பார்க்கிறாள். அதிலுள்ள புகைப்படத்தில் அவள் தலையில் வெற்றி கிடீடம் இருப்பது அவளது மனக்கண்களுக்கு தெரிகிறது. உடனே நன் வாழ்நாள் காதலனுக்கு படமெடுத்து அனுப்புகிறாள். ஆச்சர்யம் அவனது கண்களுக்கு அந்த கிரீடம் தெரிகிறது. அதுவும் தங்க கிரீடமாக தெரிகிறது. காதலியின் கனவு, வருங்கால மனைவியின் கனவு அவளது கணவனுக்கும் காதலனுக்கும் இப்படியாக தெரிந்துவிடுவது யார் செய்த புண்ணியமாக இருக்கும் என வாசிக்கின்றவர்களை யோசிக்க வைக்கிறார் கதாசிரியர்.

       எல்லா ஏ ற்பாடுகளையும் மிகவும் சிரத்தையுடன் ஏற்பாடு செய்கிறான் காதலன். கனடாவில் கூட இவளை பார்த்துக்கொள்ள நண்பனை  தயார் செய்திருந்தான். வீட்டில் இருந்து அம்மாவிற்கு விடைகொடுத்த நாயகியின் கண்கள் அழுவதை காண விரும்பாது வாகனத்தற்கு செல்கிறான் நாயகன்.

      விமான நிலையத்தில் இருவரும் சுயமி எடுத்துக் கொள்கிறார்கள். விடைபெறுகிறாள் நாயகி. அந்த சுயமி-யை காதலுக்கு அனுப்பி பதிலுக்கு காத்திருக்க ஏனோ பதில் வரவில்லை. இணைய வசதி கோளாறாக இருக்கும் என விமானத்திற்கு செல்கிறாள்.

       விமானத்தில் ‘அமண்டா’ என்பவள் தெய்வம் போல வருகிறாள் என கதாசிரியர் குறிப்பிடுவதற்கான காரணம் மிக முக்கியமாக இருக்கிறது. அதுவும் அதையொட்டிதான் கதையும் அடுத்த கட்டம் செல்கிறது.

     விமானத்தைவிட்டு இறங்கியவளுக்கு பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. வாசிக்கின்றவர்களுக்கு நிச்சயம் அடுத்தடுத்து அதிர்ச்சியும் படபடப்பும் உண்டு. கதை நெடுக்க ஆங்காங்கு கொடுக்கப்பட்டிருக்கும் மறைமுக விபரங்களுக்கு மொத்தமாய் ஒரு பதிலை சொல்லியுள்ளார் கதாசிரியர்.

     தலைப்பை மீண்டும் வாசிக்கிறேன். வாத்து – கனடாவின் தேசிய பறவை. என்னதான் நாட்டின் தேசிய பறவையாக இருந்தாலும் பல இடங்களில் அது இறைச்சிக்காகத்தானே வளர்க்கப்படுகிறது என்பது புலப்படுகிறது.

வாசகர் மனதில் முன்முடிவை கொடுத்து ஆனால் அதுவல்ல என கதையை முடித்திருப்பது கதாசிரியரில்  முதல் தொகுப்பு கதையா என யோசிக்க வைக்கிறது.

ஃபினிக்ஸ் பறவை



      நாயகி எழுகிறாள். அங்கிருந்து கதையும் எழுகிறது. இதிலென்ன இருக்கிறது என யோசிக்கையில் அவள் எழுந்தது மதியம் மணி 12 என தெரிகிறது. கைபேசியில் பல ‘தவறிய அழைப்புகள்’. அவள் பதட்டமாகிறாள். மீண்டும் அழைப்பு வருகிறது. எந்த வகையிலும் இடைவேளி இல்லாமல் வெறும் திட்டுகளாகவே வந்து விழுகிறது. சின்ன இடைவேளியை கண்டறிந்து தன்நிலை விளக்கம் கொடுக்கிறாள் நாயகி. ஆனால் கைபேசி துண்டிக்கப்பட்டு பத்து நிமிடங்கள் ஆகிவிட்டன.

     இவற்றை சரிசெய்யும் முறை அறிந்தவள்தான். ஆனாலும் அதன் ஆரம்பம் எப்போதுபோல அவளை மன உளைச்சலுக்கு ஆளாக்கும்தானே. இப்போது எதுவும் பேச வேண்டாம் என நினைக்கிறாள். தனக்கு பிடித்த முட்டை ரொட்டியை, தானே கலக்கிய தேநீரில் முக்கி எடுக்கிறாள். ருசித்து சாப்பிடுகிறாள். மீண்டும் அழைப்பு வருகிறது. இப்போதைக்கு சாப்பிடும் முட்டை ரொட்டியும் தேநீரும்தான் முக்கியம் என முடிவு எடுக்கிறாள்.

      இன்று அவளுக்கு வயலின் வகுப்பு. தாமதமாக சென்று அங்கும் திட்டு வாங்க விரும்பவில்லை. வகுப்பிற்கு செல்ல இருபது நிமிடங்கள் வரை ஆகும். அந்நேரத்தை பயன்படுத்தி அவருக்கு அழைத்து பேசி, சமாதானம் செய்துவிடலாமென நினைத்து முடிக்கவுமில்லை. அவரிடமிருந்து 20 புலனச்செய்திகள் வந்துவிட்டன. அதில் நான்கைந்து ஸ்கிரீன் ஷோர்ட்கள். பல காட்டமான செய்திகளும் இருந்தன.

     மீண்டும் அழைப்பு வருகிறது. ‘நானா வயலின் வகுப்பா ? ’ என்ற வாதத்தில் அவர் தோல்வியை ஒப்புக்கொண்டு அவளை திட்டிவிட்டு கைபேசியை முடக்குகிறார். இன்றைய நாள் இப்படியாக தொடங்கியுள்ளது அவளுக்கு புதில்லை போலும். இத்தனை நடந்தும், காரை விட்டு இறங்குவதற்கு முன் கண் மையை சரி செய்துக் கொள்கிறாள். அவளுக்கு இதுவெல்லாம் எப்படி சாத்தியமாகிறது. எல்லா திட்டுகளையும் வாங்கிக்கொண்டு முட்டை ரொட்டியையும் தேநீரிலும் லயிக்கிறாள். எல்லாம் முடிந்ததாக மறைமுக செய்தி வந்தாலும் கண்களின் மையை சரிசெய்கிறாள். அழக்கூட தோன்றாதவளா? இல்லை அழுது அழுது கண்ணீர் வற்றிப்போனவளா? என யோசிக்க வைக்கிறது.

       அவரிடம் இருந்து அந்நேரம் இன்னொரு புலனச்செய்தி வருகிறது. இச்செய்தி அவளைவிட வாசிக்கின்றவர்களைப் பதட்டமடைய வைக்கிறது. நம்மில் பலரின் செயலைத்தான் அச்செய்தி தாங்கியுள்ளது. நிச்சயம் எது மன்னிப்பு அல்ல. எத்தனை பேர் மன்னிப்பு கேட்க தயாராய் இருக்கிறோம்?. பிறகு என்னதான் செய்தி அது? புத்தகத்தில் தெரிந்துக்கொள்ளுங்கள்.

      இதில் யார் ஃபீனிக்ஸ் பறவை. நாயகியா அல்லது நாயகனா ? கிரேக்க புராணத்தில் ஃபீனிக்ஸ் பறவையின் தன்மை குறித்துச் சொல்லப்படுவதை கண்டுபிடித்தால் இதற்கான பதிலையும் கண்டுபிடித்துவிடலாம். அது கதைக்கான பதிலாக மட்டும் இருக்காது.

வெள்ளைக்கழுகு


      நகைச்சுவை வசனம். நாம் அனைவரும் கைத்தட்டி ரசிக்கிறோம். கண்களில் நீர் வரவும் சிரிக்கிறோம். ஆனால் நம்பிடையே இருக்கும் ஒருவரால் இதற்கு சிரிக்க முடியாததை நாம் அறிந்திருப்போமா? சிரித்து வந்த கண்ணீருக்கும் ரணத்தின் உந்துதலால் வந்திருக்கும் கண்ணீருக்கும் வித்தியாசத்தை நாம்  அறிந்திருப்போமா?

    நகைச்சுவைகள் நான்கு வகையாக இருக்கின்றன என நம்புகிறேன்.  தன்னைத் தாழ்த்தி மற்றவரை உயர்த்துவது, தன்னை உயர்த்தி மற்றவரை தாழ்த்துவது, தன்னையும் தாழ்த்தி மற்றவரையும் தாழ்த்துவது, இன்னொன்று தன்னையும் உயர்த்தி மற்றவரையும் உயர்த்துவது. ஊடகங்கள் எந்த வகையை பின்பற்றுகின்றன என கவனித்தால் தெரிந்துவிடும்.

    சமீபத்தில் திரைகண்டது ‘96’ என்னும் திரைப்படம். பலருக்கும் பிடித்த படங்களின் ஒன்று. பழைய நினைவுகள் பழைய பள்ளிக்கூடங்கள் என எண்ணங்களை எங்கேங்கோ அழைத்துச் சென்ற திரைப்படம்.

    பலரும் சிலாகித்துப் பேசிய திரைப்படம்தான் ஆனால் அதில் வரும் ஒரு வசனம் நாயகியை பலமாகவே காயப்படுத்திவிடுகிறது. தன் பலவீனத்தை தன் கண்ணீரை தான் கண்டுவரும் அவமானகளை எல்லாம் மீண்டும் அவளை நினைக்க வைக்கிறது. அவளால் அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை.

   அழகி. நடிகை. ஆனால் எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டவள் என அவள் குறித்துச் சொல்ல ஆரம்பிக்கிறார் கதைச்சொல்லி.  தன் திருமண தடைக்கு ஏதோ தோஷம்தான் காரணம் என  சொல்லி, தன்னைத்தானே சமாதானம் செய்துக்கொள்கிறாள். வாசிக்கையில் நம் மனம் சமாதானம் ஆகாதபடி கதை நகர்த்தப்பட்டிருக்கிறது.

       ஆமாம் ஏன் அந்த வெள்ளைக்கழுகு? கதையின் தொடக்கத்தையே அங்குதான் வைத்திருக்கிறார் கதாசிரியர்.


கிவி


     இன்றைய சூழலில் குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதை ஆங்காங்கு காண்கின்றோம். இது எங்கிருந்து தொடங்குகின்றது என்கிற கேள்வி நாம் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டிய ஒன்று.

    “பெண்கள் ஆடைகளில் கவனம் வைங்க” என ஒரு பக்கம் “ஆண்கள் அவர்கள் கண்களை சரி செய்யுங்கள் ” என  இன்னொரு பக்கம் போட்டிக்கு போட்டியாக ஏதேதோ செய்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இந்த ஆணும் பெண்ணும் சந்திரனில் இருந்தா குதித்துவிட்டார்கள். நம் வீட்டில்தானே இருக்கிறார்கள். அப்படியிருக்க நாம் யாரை ஒழுங்கு செய்ய கூப்பாடு போடுகிறோம்?. முகநூலில் புரட்சி செய்கிறோம்?. யாரிடம் கோவத்தைக் காட்டுகிறோம்? என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.

     பாலியல் கல்வி பள்ளிக்கூடங்களுக்கு தேவையா? இல்லையா? என்கின்ற பட்டிமன்றங்கள் ஒரு பக்கம் . பாலியல் கொடுமைகளுக்கு இரையாகிறவர்கள் இன்னொரு பக்கம்.

     கதையில் ஒரு சிறுமி வருகிறாள். கதாசிரியரின் வருணனைகள் அவள் சிறுமியா குழந்தையா என நம்மை சிந்திக்க வைக்கிறது. அவள் ஒரு நடமாடும் ‘டெடி பேர்’ போலவே தெரிகிறாள்.

      பள்ளிக்கூடங்களில் ‘குட் டச், பேட் டச்’ குறிந்து தெரிந்துக்கொண்ட சிறுமி. எதார்த்தமாக தனக்கு தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கும் சம்பவத்தை வீட்டில் சொல்கிறாள். வாசிக்கையில் அந்த அதிர்ச்சியை நாம் எதிர்க்கொள்வது மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. கதையில் சொல்லப்படும் சம்பவம் அவ்வாறான இடங்களில் மட்டும்தான் நடக்கின்றனவா? ‘கிவி’ போன்ற அப்பாவி குழந்தைகளை எப்படி கழுகுகள் வாழும் சமூகத்தில் இருந்து காப்பாற்றுவது? என்ற கேள்வி நம்மிடம் எழுகிறது.

அன்றில்



          நமது அன்றாட சம்பவங்களில் இக்கதை தொடங்குகின்றது. சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் மகிழ்வான தருணங்கள் பார்ப்பவர்களுக்கு மன நெருக்கடியை கொடுப்பது தவிர்க்க முடியாத ஒன்று. உதாரணமாக கல்யாண ஜோடிகளின் புகைப்படங்கள், இன்னமும் கல்யாணம் செய்யாதவர்களுக்கு பெரிய அழுத்ததைக் கொடுக்கும். குழந்தைகளின் புகைப்படங்கள், புதிய வாகனங்கள், வீட்டு கிரகபிரவேஷங்கள்.. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

      அடுத்தவர்கள் சங்கடப்படுவார்கள் என்பதற்காக நாம் எதனையும் பகிராமல் இருக்கலாமா?. சமூக ஊடகங்களே இதற்குத்தானே இருக்கின்றன. என நமக்கான சமாதானங்கள் இருக்கவே செய்கின்றன.

      இப்படி பகிரப்படும் புகைப்படங்களுக்கு பல விருப்பக்குறிகள் வந்தாலும், வராத வெறுப்புக்குறிகளும் உண்டு என்பதை மறுக்க இயலாது.

     இப்படியாக அதிஷ்டம் நம் வாழ்வில் இல்லையே என நாயகி வருந்துகிறாள். கல்யாணத்திற்கு செல்வதற்குக்கூட கணவனிடம் கெஞ்சி கூத்தாட வேண்டிய சூழலில் அவளால் வேறு என்ன செய்ய முடியும்.

     சில நாட்கள் கழித்து முன்னால் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடக்கிறது. அதற்கென புலனக்குழு ஒன்று தொடங்கபடுகிறது. வழக்கம் போலவே பல தகவல்கள் அதில் வருகின்றன. கூட்டத்திற்கு செல்லும் போது அதிலுள்ள செய்தியை நாயகி கவனிக்கின்றாள்.

      பதிவிரக்கம் செய்கிறாள். தங்கம் கடத்திய குற்றத்திற்காக ஒரு தம்பதி இலண்டனில் கைதி செய்யப்படுகிறார்கள். நாடு நாடாக பயணம் செய்ததெல்லாம் தங்கங்களை கடத்துவதற்காகத்தான் என தெரிந்துக் கொள்கிறார்கள். அவர்களின் முகம் அவளுக்கு நன்கு பரிட்சையமாக இருந்தது. அந்த தம்பதியின் கணவன் நிரபராதியாகிறார். மனைவி கைதாகிறாள்.

     என்ன நடந்திருக்கும். இருவரில், கணவன் மட்டும் எப்படி தப்பித்தார் என்ற கேள்வியை விடவும் மனைவி எப்படி கைதாகிறாள் என்று சொல்லப்படும் காரணம்தான் இந்த ‘அன்றில்’ பறவையின் காரணம்.

நிறைவாக,

     அகிலம் நீ – சிறுகதை தொகுப்பில் எனக்கு கிடைத்த ஐந்து கதைகளை வாசகர்களுக்கு இதன் வழி அறிமுகம் செய்திருக்கிறேன்.

      படித்தவரை, இதில் எந்த கதைகளிலும் பெண் பாத்திரங்களுக்கு பெயர் இல்லை? ஐந்து கதைகளுக்கும் வைக்கப்பட்டிருக்கும் தலைப்புகள் எல்லாம் பறவைகளையே சொல்லுகின்றன. ஒவ்வொரு பறவைகளின் தன்மைகளுக்கு ஏற்றார் போல மனிதர்கள் கதையில் முக்கிய பாத்திரங்களாக வந்துப்போகிறார்கள். மீதமிருக்கும் கதைகளிலும் இந்த யுக்தி தொடர்கிறதா என புத்தகம் கைக்கு வந்தப்பின் தெரிந்துக்கொல்ளலாம். இதற்கெல்லாம் கதாசிரியர் ஏதாவது சூட்சுமம் வைத்திருக்க வேண்டும் என நம்புகிறேன்.

      இவை வெறும் கதைகளா என்பதுதான் வாசகர்கள் மத்தியில் கதாசிரியர் விட்டுவைக்கப்போகும் கேள்வி.  நம் நாட்டில் எழுதப்பட்டிருக்கும் சிறுகதைகளில் ஒவ்வொருவரும் ஒரு வகை பாணியை பின்பற்றுகிறார்கள். சில கதைகள் யோசிக்க வைக்கின்றன. சில கதைகள் ஏன் வாசித்தோம் என நினைக்க வைத்துவிடுகின்றன. எழுதியவர்களே இது உங்களுக்கான கதை அல்ல எனவும் கூட சொல்லக்கேட்டிருகிறோம்.

         சிறுகதை ஆசிரியராக தனது முதல் புத்தகத்தில் அடிவைக்கும் பொன் கோகிலம் அதற்கான உழைப்பை செய்திருக்கிறார். அவரின் மொழியும் நம்ம மொழி என சொல்லும் அளவிற்கு அமைந்திருக்கிறது.

     இயல்பாகவே தனது முதல் சிறுகதை தொகுப்பில் பலர் வெற்றியடைந்துவிடுவார்கள். அடுத்தடுத்த கதைகளில்தான் உண்மையில் அவர்களுக்கு சிக்கல் ஏற்படும். உதாரணமாக பந்து விளையாட்டு திடலில் அதன் சட்டத்திட்டங்கள் தெரிந்தவர்களைவிட தெரியாத புதியவர்கள்தான் அதிக உற்சாகத்துடன் மிகவும் பரவசமாக விளையடுவர்கள். அப்படியே அவர்கள் ‘கோல்’ அடித்துவிடுவதும் உண்டு. அகிலம் நீ-யின் கதாசிரியர் இத்துறையில் கற்றுத்தேர்ந்து மேலும் பல கோல்களை அடிப்பார் என எதிர்ப்பார்க்கலாம்.

       நிச்சயம் இத்தொகுப்பு இங்கு பெரிய கவனத்தை ஈர்க்கும் என்பதனை வாசகனாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நன்றி.

- தயாஜி




இதனை பிரசுரம் செய்த மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பு ஆசிரியர்க்கும், தமிழ் மலர் ஞாயிறு பதிப்பு ஆசிரியர்க்கும் நமது நன்றி.


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்