பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 16, 2023

பொம்மியின் ஆசிர்வாதம்



பொம்மியின் ஆசீர்வாதம்

பொம்மி பிறந்து முதன் முறையாக கோவிலுக்குச் சென்றோம். ஒவ்வொருமுறையும் எங்கள் குடும்பத்தில் குழந்தை பிறந்தால் கட்டாயம் செய்ய வேண்டிய குடும்ப வழக்கங்களில் இதுவும் ஒன்று. எங்கள் குலம் காக்கும் தெய்வத்தின் காலடியில் குழந்தையை வைத்து அந்த மூத்த மூதாதைக்கு நன்றி செலுத்த வேண்டும். குலம் வளர கிடைத்த பொம்மிகளை குல தெய்வத்திடம் காட்டி; ஆசீர்வாதம் வாங்குவதுதான் இதில் இருக்கும் வழிபாட்டு முறை. 

எனக்கு என் சகோதரன் மீதுள்ள அன்பைவிட என் சகோதரியின் மீதுள்ள அன்பின் சதவிதம் சற்றே அதிகம். எனக்கு விபரங்கள் கொஞ்சம் தெரியத்தொடங்கிய வயதில் அம்மா மூன்றாவது கருவை  வயிற்றில் சுமக்க ஆரம்பித்தார். அப்போதெல்லாம் வயிற்றில் இருப்பது ஆணா பெண்ணா என அறிந்து கொள்வது அத்துணை எளிதல்ல. அரசாங்க மருத்துவமனையில் சொல்லவும் மாட்டார்கள்.

குழந்தை பிறப்பதற்கு முன்பாக எங்கள் யு.பி தோட்ட அங்காலம்மன் ஆலயத்திற்கு சென்றோம்.  அங்குதான் குழந்தைகளைக் காக்கும் குல தெய்வம் இருக்கிறது.  நூற்றாண்டு கண்ட ஆலயம் அது; இப்போது அரசியல் காரணங்களால் வேறிடத்திற்கு மாற்றிவிட்டார்கள். கட்டிடம் இடம் மாறினால் கடவுளும் அதனுடன் மாறுமா என தெரியவில்லை. 

அந்த அங்காலம்மன் ஆலயத்தில் பெண் பூசாரி இருப்பார். பாட்டி வயது. தலை முழுக்க வெள்ளை மயிர். ஓரளவு கூன் விழுந்த முதுகு. சரியாகத் தெரியாதப் பார்வை. கணீர் குரல். இதுதான் அவரின் அடையாளம். கோவிலுக்கு வருகின்றவர்களிடம் ஏதேதோ பேசுவார். வாய்க்கு வந்ததை மந்திரமாகச் சொல்லுவார். என்ன சாப்பிடுகிறார். எங்கே குளிக்கிறார். எங்கிருந்து தண்ணீர் குடிக்கிறார் என யாருக்கு தெரியவில்லை. எப்படியே இந்த கோவிலில் சம்பளம் வாங்காத பூசாரியாக மாறிவிட்டதால் கோவில் நிர்வாகம் பெரிதாக அவரைக் கண்டுகொள்ளவில்லை. ஓரளவிற்கு அவரை கவனிக்கவும் செய்தனர். அதோடு அதிகமானவர் அந்தக் கோவிலுக்கு வரவும் மாட்டார்கள். நடக்கும் தூரத்தில் தாய்க்கோவில் இருப்பதால் அங்குதான் கூட்டமும் கோஷமும் அதிகம்.

இங்கு குழந்தைகளுக்காகவும் குழந்தைகளுடனும்தான் ஒரு சிலர் அவ்வப்போது வருவார்கள் போவார்கள். நாங்கள் அங்கு நல்லபடியாக அம்மாவிற்கு பிரசவம் ஆகவேண்டும் என்ற வேண்டுதலுக்காக சென்றோம். அந்தப் பாட்டி எங்களுக்காக குலதெய்வத்திடம் வேண்டிக்கொண்டார். அவர் வேண்டிக்கொள்வது எனக்கு சிரிப்பை வரவைத்தது. சிரித்தும் விட்டேன். அவர் என்னைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அப்பா என்னை அதட்டினார்.

பாட்டி; எங்களுக்கான வேண்டுதலை வேண்டி முடித்த பின் என்னையும் அண்ணனையும் சிலையின் முன் வந்து அமரச்சொன்னார். அப்போதுதான் எனக்கு பயமே வந்தது. சிரித்ததற்கான தண்டனையாக இருக்குமோ என பயந்துகொண்டே முழங்காலிட்டு அமர்ந்தேன். அண்ணனும் என்னுடன் முழங்காலிட்டான். நான் சிரித்ததற்கு அவனும் மாட்டிக்கொண்டான். பாவம். பரவாயில்லை மாட்டட்டும்; மாட்டட்டும் பலமுறை அவன் செய்ததற்கெல்லாம் நான் தானே அடி வாங்கினேன். இன்றொரு நாள் எனக்காக அவனும் என்னுடன் சேர்ந்து அடி வாங்கட்டும். பாட்டி எங்கள் முன் மீண்டும் சூடத்தை ஏற்றினார். எங்கள் கண்களை மூடிக்கொண்டு தம்பி பாப்பா வேண்டுமா தங்கச்சி பாப்பா வேண்டுமா என கேட்டு; தெய்வத்திடம் வேண்ட சொன்னார்.

அண்ணன் அவனுக்கு தம்பி பாப்பா வேண்டுமென்று கேட்டான். நான் ஒருவன் அவனுக்கு தம்பியாக இருந்து படும்பாடு போதாதாம்!

நான் தங்கச்சி பாப்பா வேண்டும் என்றேன். சிலையில் இருந்து ஒரு பூ விழுந்தது. அந்த பாட்டியின் அரைகுறை பார்வையில் அது தெரிந்ததா இல்லையா என எனக்கு தெரியவில்லை. பாட்டி என் தலையில் கைவைத்து; “உனக்குத்தான் உங்காத்தா செவி கொடுத்திருக்கா…. நீதான் அவ செல்ல பிள்ளையாமே…?” என்றார். அந்த வார்த்தையின் அர்த்தம் அப்போது என பிடிபடவில்லை. ஆனால் என் வாழ்நாள் முழுக்க  நான் அதனை பல இடங்களில் அனுபவித்துவருகிறேன்.

வாக்கு கிடைத்தது போலவே எங்கள் குடும்பத்தின் மூன்றாம் வாரிசாக எங்களுக்கு தங்கை பிறந்தநாள். 

சில வாரங்களுக்கு பிறகு அதே கோவிலில் குழந்தை பிறந்ததற்கான படையல் போட சென்றோம். இப்போது பாட்டிக்கு கண்பார்வை முற்றாக இருளடைந்துவிட்டது. ஆனாலும் அவரின் செயல்களில் எந்த தடுமாற்றமும் இல்லை பழைய வேகம் இல்லையென்றாலும் பழைய நிதானம் அப்படியே இருந்தது.

அந்த நிலமையிலும் அங்குள்ள சிலைக்கு தினமும் புடவையை மாற்றிக்கொண்டே இருந்தார். பேச்சுவாக்கில் யாரோ அதுபற்றி கேள்வி கேட்டார்கள். அதற்கு அந்த பாட்டி சொன்ன பதில் எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

“நானா செய்யறேன். அவளுக்கு என்ன புடவை வேணுமோ அதை அவதான் எடுத்து கொடுக்கறா. அதோ அந்த அலமாரிலதான் எல்லா புடவையையும் துவைச்சி வப்பேன். தினமும் அலமாரியைத் திறக்கும் போது அதிலிருந்து ஒரு புடவை தானாவே கீழ விழும். அதை எடுத்து அவளுக்கு கட்டிவிடுவேன். என்ன… புடவை கட்டும்போது அவளுக்கும் வெட்கம் வந்துடும்.. அப்படியும் இப்படியும் நெழிவா…. அதையெல்லாம் பார்த்தா புடவை கட்டிவிட முடியுமா…?”

அதைக் கேட்டுகொண்டிருந்தவர்கள் எல்லோரும் அந்த அம்மனை ஒருசேர பார்க்க, எங்கிருந்தோ வந்த காற்று அன்று அம்மன் கட்டியிருந்த புடவையை அசைத்துச் சென்றது.

இன்னும் அன்றைய தினங்களில் நடந்தவற்றைப் பற்றி பேசிக்கொண்டே போகலாம். பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்தக் கொவிலும் அங்கில்லை. அந்தப் பாட்டியும் இறந்துவிட்டார்.

இளமையின் நினைவுகளை நிகழ்காலத்தில் ஏதோ  ஒன்று தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறது. அப்படியான தூண்டுதல்தான் இன்று இந்தக் கோவிலில் நடந்தது.

பொம்மி, இல்லாள், நான், மாமனார் என நால்வரும் கோவிலுக்கு சென்றோம். பொம்மி பிறந்த பின் முதன் முறையாக கோவிலுக்கு செல்கிறோம். அங்குள்ள எங்கள் குல தெய்வத்திற்கு நன்றி சொல்லி சீர் தட்டு கொடுத்தோம்.

பூசாரி எங்களின் பெயர் ராசி நட்ச்சத்திரங்களை கேட்டு அவருக்குள்ளாகவே மந்திரத்துடன் சேர்த்து சொல்லிக்கொண்டே உள்ளே சென்றார். பொம்மியை தரையில் படுக்க வைத்தோம். மற்ற குழந்தைகள் போல அவள் அழாமல் சிரிக்கலானாள். பாட்டியின் அரவணைப்பில் பேத்திகள் சிரிக்கத்தானே செய்வார்கள். பூஜை முடிந்ததும் பொம்மி கழுத்தில் மாலையை அணித்து கையில் தாமரைப்பூவை கொடுத்தார்கள்.

அங்கிருந்து நடந்து கோவிலை சுற்றலானோம். திடீரென யாரோ பின்னால் நிற்பது போல் தோன்ற நாங்களும் நின்றோம். திரும்பினோம். யாரும் இல்லை. எங்கள் முன்னே அவர் இருந்தார். மஞ்சள் புடவை, நீண்ட முடி. மூக்கின் இரு பக்கத்திலும் மூக்குத்தி. கருத்த தேகம். வாயில் சில பற்களே இருந்தன. தாங்கி தாங்கி நடந்தார். எங்கள் முன் சில அடிகளில் நடந்து வந்தவர் எங்களிடம் “குழந்தையைக் காட்டுமா கொஞ்சிக்கறேன்..” என்றார் நானும் இல்லாளும் அப்படியே நின்றுவிட்டோம். உடல் சிலிர்த்துவிட்டது. அவர் இல்லாளின் கையிலிருந்த பொம்மியின் கன்னத்தைத் தொட்டு, கொஞ்சி, தலையில் கைவைத்து ஆசீர்வதித்து என்னைய்ம் ஒரு முறை பார்த்து சிரித்துவிட்டு புறப்பட்டார். எனக்கும் என் இல்லாளுக்கும் என்ன நடந்தது என்றே முழுமையாக தெரியவில்லை. 

கோவில் தூணின் அருகில் அமர்ந்துவிட்டோம். நடந்ததைப் பற்றி மீண்டும் பேசினோம். வந்தவரின் முகம் இருவருக்குமே பழக்கம் போலவும் புதிராகவும் இருந்தது. கொஞ்சம் தெளிவான பின் கோவில் முழுக்க அவரை தெடினேன். கிடைக்கவில்லை.

யாரோ ஒருவர் சட்டென தோன்றி பொம்மியை ஆசீர்வதித்தது எங்களுக்கும் மகிழ்ச்சிதான். நம் குலம் காக்கும் தெய்வங்களுக்கு வேறென்ன வேலை இருக்கிறது.

காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போதுதான் எனக்கு மின்னல் வெட்டாய் இன்னொன்று தோன்றியது. பல ஆண்டுகளுக்கு முன்பாக எனக்கு தங்கச்சி பாப்பா வேண்டும் என கேட்ட கோவிலில் இருந்த அந்தப் பாட்டியின் முகமும் இன்று என் மகளான பொம்மியை ஆசீர்வத்து என்னையும் பார்த்து சிரித்த அந்த முகமும் ஒரே முகம்தான்.

அது எங்கள் குலத்தின் மூத்த மூதாதைத்தாயின் முகம். 


#தயாஜி

#பொம்மி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்