பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 26, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘மாறிலிகள்’

புத்தகவாசிப்பு_2021 ‘மாறிலிகள்’

தலைப்பு –‘மாறிலிகள்’

வகை – சிறுகதை தொகுப்பு

எழுத்து – சித்துராஜ் பொன்ராஜ்

வெளியீடு – அகநாழிகை

புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)

 

‘மாறிலிகள்’. சிங்கை எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு. இச்சிறுகதை நூல், 2016-ம் ஆண்டின் சிங்கப்பூர் இலக்கிய விருதினைப் பெற்றது. இந்நூலுக்கு 2017-ம் ஆண்டின் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ‘கரிகாற்சோழன்’ விருதும் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சித்துராஜ் பொன்ராஜ் தன் இளவயது முதல் தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருகிறவர். மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றி வருகிரார். தமிழில் இருந்து சிறுகதை, கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். பிரெஞ்சு, ஸ்பானிய மொழிகளில் இருந்து சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழ்மொழியில் பெயர்த்திருக்கிறார். கன்னடத்தை வீட்டின் மொழியாகக் கொண்ட இவர், சமஸ்கிருதம், ஹீப்ரூ, பிரெஞ்சு, ஸ்பானிய மொழிகளிலும் தேர்ச்சிக் கண்டவர்.

இச்சிறுகதை தொகுப்பிற்கு ஆசான் ஜெயமோகன் முன்னுரை கொடுத்திருக்கின்றார்.

சென்ற இருபதாண்டுகளில் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த சிறுகதைத் தொகுதி என்று சித்துராஜ் பொன்ராஜின் மாறிலிகளைச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தமிழில் சில சிறுகதைத் தொகுதிகள் முதன்மையான படைப்பாளிகளின் வரவை அறிவித்ததனால் இன்றும் நினைக்கப்படுபவையாக உள்ளன. சுந்தர ராமசாமியின் அக்கரைச்சீமையிலே அசோகமித்திரனின் வாழ்விலே ஒருமுறை வண்ணத்தாசனின் தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் போன்றவை. அவ்வரிசையில் வைக்கத்தகுந்த தொகுப்பு மாறிலிகள். சிங்கப்பூரின் அரை நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட எழுத்து அதன் இயல்பான முதிர்ச்சியை இத்தொகுதியில் அடைந்திருக்கிறது. இது ஒரு தொடக்கப்புள்ளியாக அமையுமென்றால் தமிழ் இலக்கியத்தின் ஒளி மிக்க ஒரு பகுதியாக சிங்கப்பூர் இலக்கியம் வளரும் என்று எண்ணுகிறேன்.’ என ஜெயமோகன் சொல்லியிருப்பது இச்சிறுகதைகள் மீதான ஆர்வத்தைக் கூடுகின்றது.

இத்தொகுப்பில் மொத்தம் 15 சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும் முந்தைய கதைகளை நினைவுப்படுத்தாமல் நகர்ந்துச் செல்கிறது. ஒரு சிறுகதை எப்படி சொல்லப்பட வேண்டும் என பாடம் எடுப்பவர்களுக்கு மத்தியில் அப்படியான கதைகளை எழுதி வாசிப்பவர்கள் தாங்களே அதனை கண்டுக்கொள்ள செய்திருக்கின்றார் ஆசிரியர்.

ஒவ்வொரு கதையும் உண்மையில் ஒவ்வொரு கதைகளாக விரிகின்றன. அறம், காதல், காழ்ப்புணர்ச்சி, ஏமாற்றம் , இயலாமை, இழப்பு, நகைச்சுவை, ஆணவம்  என கதைகள் தனியாகத் தெரிகின்றன. நாம் எங்கிருந்து எழுதுகின்றோம் என்பதை விட எந்த பார்வையில் எழுதுகின்றோம் என்பது எழுதுவதற்கு முக்கியம் என நம்புகின்றேன். மலேசியாவில் எழுதப்படும் பல கதைகளை தமிழ்நாட்டு கதைகள் போல பல இடங்களில் பாசாங்கு மொழியில் (அம்மொழி தமிழக எழுத்தாளர்களைப் போல அமைந்திருக்கும்) இருந்துவிடுவதை கவனித்துள்ளேன். அதில் அசல் தன்மை இருக்காது அல்லது குறைவாக இருக்கும். ஒரு சிலரே தங்களின் மண்ணிற்கான மொழியை எழுத்தாக்கம் செய்து தனிந்து தெரிவார்கள். அவ்வகையில் சிங்கை எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் அவர்கள், அம்மண்ணிற்கு (தார்ச்சாலைக்கு) உண்டான மொழியில் கதைகளை எழுதியுள்ளார். இருப்பினும் வாசிக்கையில் எவ்வகையிலும் வாசகர்களுக்கு குழப்பத்தைக் கொடுக்காதவாறு அது அமைந்துள்ளது.

ஒவ்வொருவருக்குள்ளும் ‘அறம்’ என்ற ஒன்று எப்போது இருப்பதாக நினைக்கிறேன். அது மனசாட்சியின் குரலா? கர்மாவின் காரணமா என பிரித்துப் பார்க்க முடியவில்லை. ஒரு காலக்கட்டத்தில் ஆடிவிட்ட ஆட்டங்களுக்கு காலம் சரியான நேரத்தில்  அறம் கொண்டு பேசவும் பதில் கொடுக்கவும் செய்கிறது. இதனாலேயே நம் வாழ்வில் நாம் பல துரோகிகளை மன்னிக்கும்படியும் ஆகின்றது. எழுத்தாளர்கள் இதனடிப்படையில் எப்படியும் ஒரு கதையை எழுதியிருப்பார்கள் அல்லது எழுத தயாராய் இருப்பார்கள்.

இத்தொகுப்பில் ‘அறம்’ என்கிற அடிப்படையைக் கொண்டு ‘தர்ம ரதம்’ என்கிற கதையை எழுதியிருப்பார். சிங்கப்பூர் பின்னணியில் சில வரலாறுகளை சொல்லிச் செல்லும் கதையில் சரியான நேரத்தில் பேசத்தவறிய மனிதன் அவனது அறத்தின் குரலைக்கு எப்படி பயந்திருக்கிறான் என சொல்லும் கதை. தனக்கு நன்மை செய்த ஒருவரை நண்பர் ஏமாற்றும் போது தடுக்காமல் உண்மையைச் சொல்லாமல் சின்ன சபலத்தில் அமைதி காக்கிறார் பழனியப்பன். ஏமாற்றி வாங்கிய பணத்தை மேஜை டிராவருக்குள் வைக்கிறார். பத்து ஆண்டுகளாக அந்த பணம் மீண்டும் எடுக்கப்படாமல் கட்டும் பிரிக்கப்படாமல் அப்படியே வைக்கப்பட்டிருக்கிறது. அவர் விபத்தில் இறந்த பின் அவரது மகன் அதனை கண்டு நம்மிடம் சொல்லுவதாக கதை முடிகிறது. அப்பணக்கட்டில் யாரின் பணம் என்கிற குறிப்பையும் பழனியப்பா எழுதியிருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக பழனியப்பா எப்படியெல்லாம் மன வேதனைக்கும் குற்றவுணர்ச்சிக்கும் ஆளாகியிருப்பார் என நினைக்கையில் நம்மையும் சுயபரிசோதனை செய்யத் தோன்றுகிறது. ஒரு சின்ன சபலம் எத்தனை ஆண்டுகளாக பின் தொடர்ந்துவிடுகிறது. அவர் இருக்கும் வரை மட்டுமல்ல இறப்பு வரையும் தொடர்வே செய்கிறது. இறந்த பிறகாவது ஆத்மா சாந்தியடைந்திருக்குமா என தெரியவில்லை.

இரண்டாவது கதை ‘கர்ண யட்சிணி’. எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிவதாக கதை தோன்றினாலும், முடிவில் தன் பலவீனங்களை மறைக்க சிலவற்றை செய்யத்தான் வேண்டியுள்ளதை காட்டுகிறது. தன் மீது விழுந்துவிட்ட அடையாளத்தை மாற்ற முயற்சிக்கும் போது கூட நம்மை மீறியும் நாம் யாரென்று வெளிகாட்டிக் கொள்கிறோம். இக்கதையின் நாயகிக்கு அதுதான் நடந்துள்ளதாக தெர்கிறது.

மூன்றாவது கதை ‘விடியல் தவம்’ ஆசான் ஜெயமோகன் இக்கதை குறித்து முன்னுரையிலேயே ஆழமாக கூறியுள்ளார். சீன சமையல் கலையில் சாதனை படைக்க நினைக்கும் தமிழ் இளைஞனின் கதை. சமையில் போட்டியில் தொடங்கி இரண்டாம் நிலை வெற்றியில் கதை முடிகிறது. அதற்குள் நாயகன் மீது நமக்கு ஒருவித அன்பையும் அவர் ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணத்தையும் கொடுத்துவிடுகிறார்.  

‘முடிவொழுக்கம்’ நான்காவது கதை. ஆண் பெண் பாலியல் தேவைகள் குறித்து பேசுவதற்கும் எழுதுவதற்கும் மாய தடையொன்று நம் சமூகத்தில் இருக்கவே செய்கிறது. ஏன் எழுதப்பட்டது என கொஞ்சமும் யோசிக்காமல் பிறரையும் யோசிக்க விடாமல் சில வார்த்தைகளிலே முழு கவனத்தை வைத்து முழு படைப்பையும் புறக்கணித்துவிடுகிறார்கள். பாலியல் கல்வி/தேவை பற்றிய பிரக்ஞை இல்லாதது பல குற்றங்களுக்கும் குற்றவாளிகளுக்கு காரணமாகிறது. தன்னால் மனைவியை திருப்தி படுத்த முடியாததை மறைக்க தினமும் குடித்து விட்டு மனைவியை அடித்து துன்புருத்தி தன் ஆண்மையை நிலைக்காட்டும் ஆண்கள் உண்டு. தன் தேவைகளை பூரித்தி செய்யாத கணவனை வார்த்தைகளாலும் செயல்களாலும் சிதைக்கும் பெண்களும் உண்டு. ‘முடிவொழுக்கம்’ கதையில் தன் உடல் தேவைக்கு கணவரின் நண்பனை நாடும் மனைவில், அவரும் சரியவரவில்லை என அவரையும் ஒதுக்குகிறார். கதையை முழுமையாக வாசிக்க பல கேள்விகளைக் கொடுக்கும்.

‘மூன்று சந்திப்புகள்’ ஐந்தாவது சிறுகதை. வயதான கணேசன், குடும்ப தேவைக் கருதி வேலை தேடுகின்றார். முதல் சந்திப்பில் வேலை கிடைக்கவில்லை. இரண்டாவது சந்திப்பில் தன் பழைய நண்பரையும் அவரது மகளையும் சந்திக்கின்றார். மூன்றாவது சந்திப்பில் நண்பரின் மகளை சந்திக்கின்றார். மகளின் மூலம் இவருக்கு வேலை கிடைக்கிறது. இக்கதையில் இன்றைய இளைஞர்களின் வாழ்வியலை தொட்டு எழுதியுள்ளார். ஒரு காலத்தில் மறைந்திருந்து  மது குடித்து பழகியவர்களுக்கு, இன்றைய தலைமுறை மது ஊற்றிக் கொடுப்பதை தொழிலாகவே செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாமையைக் கோடிட்டுள்ளார்.

ஆறாவது கதை, ‘இரண்டாம் வாய்ப்பாடு’. மனித மனம் எத்தனை விசித்திரமானது. எப்போது ஒருவரை தனக்கு கீழாகவே வைத்திருக்க நினைக்கிறது. மாறான தனக்கு இணையாக வாழ்வதை விரும்புவதில்லை போலும் என யோசிக்க வைக்கும் கதை. பிலிப்பீன்ஸ்க்கார பெண்னை காதலிக்கும் முரளி. அதனை தன் வீட்டில் சொல்ல தயங்குகிறான். பல வீடுகளில் வேலைக்கார பெண்களாகப் பார்த்து பழகி பிலிப்பீன்ஸ்க்கார பெண்ணை தன் மனவியாக ஆக்கிக் கொள்வதில் மனத்தயக்கம் கொள்கிறார் முரளி. இத்தனைக்கும் இருவரும் வேதியியல் ஆராய்ச்சியாளர்களாக ஒன்றாக பணியாற்றுகின்றார்கள். இன்றைய உரையாடலில் முரளியை நன்கு அறிந்துக்கொண்ட அந்த பெண் எடுக்கும் முடிவு பாராட்டத்தக்கது. எழுத்தாளருக்கும் பெண்கள் மீதான கவனிப்பும் அக்கறையும் இருப்பதை கதைகளில் தொடர்ந்து வாசிக்க முடிகின்றது.

ஏழாவது கதை ‘முல்லை வனம்’. ஒருவருக்கு தேவையான ஒன்று அதனை கொஞ்சமும் பயன்படுத்தாத அதன் அருமை தெரியாதவர்களிடம் இருப்பதென்பது எத்தனை வேதனை. இக்கதையில் அதனை உணரலாம்.

எட்டாவது கதை,  ‘அறம் கூத்தாகும்’. இக்கதையின் வடிவம் எனக்கு பிடித்திருந்தது. மகிழ்ச்சியின் எல்லைவரை நம்மை அழைத்துச் சென்று, இதுவரை அழைத்துச் சென்றதெல்லாம் அடுத்து வரவிருக்கும் வேதனைக்கும் வலு சேர்க்கத்தான் என சொல்லி தூக்கி வீசுவது போன்றதொரு கதை. குழந்தைக்கு காது குத்துவதற்கு வீடே விழாக்கோலம் கொண்டிருக்கிறது. நம்மையும் அதில் ஒருவராக இணைத்துக் கொள்ள செய்கிறோம். ஆனால் அவ்வீட்டில் தனி அறையொன்றில் இருக்கும் பெண் மிகுந்த வேதனையில் இருக்கிறாள். அவரை சந்தித்து நடக்கும் உரையாடலில் ‘‘எனக்கு வந்த குட்டிக் கிருஷ்ணனையே நான் வேண்டாம்னு தூக்கி எறிஞ்சவோ. பாவி’’ என சொல்லி விம்மி விம்மி அழுகிறாள். தனக்கு வராத குழந்தையை நினைத்து அப்பெண் அழவில்லை, தான் வேண்டாமென தூக்கி எறிஞ்ச குழந்தையை நினைத்து அழுகிறாள். தான் செய்துவிட்ட செயலுக்கும் காலம் கொடுத்திருக்கும் தண்டனை எத்தனை கொடுமையானது.

ஒன்பதாவது கதை.  ‘தேவேந்திரன் பன்ணிய டிராமா’ தலைப்பிலிருந்தே கதை ஆரம்பித்துவிடுகிறது. வயிற்றுப் பிழைப்பிற்கு எப்படியெல்லாம் நாடகம் ஆடவேண்டியுள்ளது. கீழிடத்தில் இருந்து மேலிடம் வரை அத்தகைய நாடகங்கள் அரங்கேறிக்கொண்டே இருப்பதை சிரிக்கும்படி சொல்லும் கதை.

 ‘மாறிலிகள்.’ பத்தாவது கதை. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என சொல்வதற்கு தகுந்த மனிதர்கள் ஒரு சிலர்தான் இருக்கிறார்கள். பலரால் தங்களின் வெண்மைகளைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களின் அனுபவங்கள் விடுவதில்லை. மாறிலிகள் கதையில் வரும் நாயகி வாழ்வில் நடந்த ஏமாற்றத்தை ஒரு முறையேனும் நான் கேள்விப்பட்டிருப்போம். உண்மையும் செய்தியாக சொல்லுவதற்கும் புனைவாக்கி சொல்வதற்கும் உள்ள வித்தியாசங்கள் அதிகம். உண்மையைக் கூட கடந்துவிடலாம். ஆனால் புனைவின் உள்ளே நாமும் நுழைந்துவிடுவதால் நமக்கும் வலிக்கச் செய்கிறது. திருமணத்தில் ஏமாறும் பெண்கள் என்கிற வகைமாதிரி பல கதைகளை நாம் வாசித்திருப்போம். ஆனால் இக்கதை தனித்து தெரிகிறது. அதற்கு ஆசிரியர் எடுத்துக் கொண்ட கதை சொல்லும் முறையைச் சொல்லலாம்.

‘வெட்சிப் பூக்கள்’ பதினோறாவது கதை. கண்முன்னே மெல்ல மெல்ல நிகழ்ந்துக் கொண்டிருக்கும் அப்பாவின் மரணத்தை எதிர்க்கொள்ளும் மகன்.

பனிரெண்டாவது கதை. ‘துளசி மாடம்’. இக்கதை போல நிஜத்தில் நடந்த இரண்டு மூன்று கதைகள் எனக்கு தெரியும். அலுவலகத்தில் சூழ்ச்சி செய்யும் தோழி. அது அலுவலகத்தில் மட்டும் நடக்கவில்லை. யாரும் எப்படி வேண்டுமானாலும் நம்மை இயக்கி அவர்களின் காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள் என்கிற எச்சரிக்கையைக் கொடுக்கும் கதை. முடிவு நெருங்கும் போது நம் யூகங்களைவிடவும் பெரிய அதிர்ச்சியைக் கொடுக்கிறது.

பதிமூன்றாவது கதை, ‘தாளோர நாரைகள்’. எதிர்ப்பார்ப்புகள் நம்மை இயல்பாக சிந்திக்கவிடுவதில்லை. அது நமக்கு சாதகமாகவே சிந்திக்க வைக்கிறது. எதார்த்தம் என்பது கசப்பானது ஆனால் நம்மை நம்ம வைத்து ஏமாற்றாது. அதனை ஏற்றுக் கொள்ள மட்டும் மன தைரியம் வேண்டும். தொகுப்பில் எனக்கு பிடித்த கதை. கடலால் தன் குடும்பத்தை ஊரை தன் மக்களை இழந்த ஜப்பானியப் பெண். கடலையே தன் தாயாக பாவித்து விலாங்கு மீன்களை காப்பாற்றுகிறாள். அவளால் வெங்கட் கொண்ட காதலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனும் அவளுக்காக அவளுடன் சேர்ந்து செயலாற்ற முடியும் என சொன்னாலும் அவள் சம்மதிக்கவில்லை. ஒருவர் ஆத்மார்த்தமாக செய்ய நினைக்கும் கடமையை அவ்வாறே இன்னொருவராலும் செய்ய முடியுமா என்கிற கேள்வியை நாம் செய்திருக்கிறோமா என கேட்க வைக்கும் கதை,

பதினான்காவது கதை, ‘களங்கம்’. போலி எழுத்தாளர்களை பகடி செய்யும் கதை. சிரிக்க வைக்கிறது.

கடைசி கதை, ‘மோகவல்லி’ திருநங்கையின் மனநிலையைச் சொல்லும் கதை. ஏதோ ஒன்று அவர்கள் மனதில் குறையாக இருந்துக் கொண்டெ இருப்பதை காட்டுகிறார் ஆசிரியர்.

நிறைவாக, ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுக்குறது. இத்தொகுப்பு நம்மைச் சுற்றி கதைகளுக்கு எப்போதும் பஞ்சமில்லை என காட்டுகிறது. கதை எவ்வளவு முக்கியமோ கதை சொல்லும் முறையும் முக்கியம் என காட்டும் தொகுப்பு. வழக்கமாக நாம வாசிக்கும் கதை பாணியில் இருந்து மாறுபட்ட கதையமைப்பு கொண்ட கதைகள். சிறுகதை எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு புதிய பாணியைக் கற்றுக் கொடுப்பதோடு நில்லாமல் வாசிக்க வாசிக்க நமக்குள் அகம் சார்ந்த கேள்விகளை தூண்டுகிறது.

 

#தயாஜி

 

மே 24, 2021

#கதைவாசிப்பு_2021 ‘தேவகியின் தேர்’

#கதைவாசிப்பு_2021 ‘தேவகியின் தேர்’

தலைப்பு – தேவகியின் தேர்

எழுத்து-  எஸ்.ராமகிருஷ்ணன்

வகை – சிறுகதை

பிரசுரம் – மே 22 (எஸ்.ராமகிருஷ்ணன் வலைத்தளம்)

சிறுகதையில் ஒன்றை சொல்லியும் சொல்லாமலும் வாசகர்களிடம் அதன் முடிவை கொடுப்பது ஒரு கலை. எஸ்.ரா அவர்களுக்கு அது கை வந்த கலை. அதற்கு சான்றாக இக்கதையைச் சொல்லலாம்.

‘தேவகியின் தேர்’ என்பது தலைப்பாக இருந்தாலும், இறுதியில் தேவகியும் தேரும் ஒரே பொருளாக மாறிவிடுவதில் சிறுகதை தனித்து நிற்கிறது. ஆணாதிக்க குடும்பம் என்பதை நாயகியின் அப்பாவின் அறிமுக காட்சியிலேயே நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது.

அவ்வூரில் இருக்கும் நூறு வருடங்களுக்கும் பழமையான தேரை பார்க்க வெளியூரில் இருந்து லியோன் என்கிற இளைஞன் வருகிறார். அப்பாவின் கட்டளையின் படி லியோனை ஹரி அழைத்துச் செல்கிறார்.

தொடர்ந்து அந்த தேர் பற்றியும் ஆண்டுதோறும் நடக்கும் பங்குனிப் பெருவிழாவை பற்றி ஆசிரியர் சொல்லிச் செல்வது நாமும் அவ்விழாவில் கலந்து கொண்ட உனர்வை தருகிறது. எங்கிருந்தோ வந்த வெள்ளைக்கார லியோனுக்கு அவ்வூர் தேரை பற்றி பல விபரங்கள் தெரிகின்றது. அதன் சிற்பங்கள். அதன் நேர்த்தி. அதன் பின்னனி காரணங்கள் என ஹரிக்கு தெரியாததையெல்லாம் பேசி ஆச்சர்யப்படுத்துகிறார். இதுவரை யாரும் கண்டிராதபடி தேரின் அழகை படம் பிடிக்கின்றார்.

அடுத்ததாக ஆசிரியர், ஹரியின் அக்கா தேவகியை அறிமுகம் செய்கின்றார்.

தேவகியின் அறிமுகம் கிடைத்த பிறகு, தேர் குறித்த விபரங்கள் வரும் பொழுது தேவகியையும் அதனுடன் இணைத்துப் பார்க்க தோன்றியது. இந்த இணைப்பில் ஏதோ இருப்பதாக உணர்ந்தேன்.

அதன் பிறகு கதை அதன் விளையாட்டை தொடங்கியது.  

அதிக நாட்கள் லியோன் அவ்வூரில் தங்கும்படி ஆகிறது. பலருடன் நெருக்கம் கிடைக்கிறது. இதற்கிடையில் ஒரு நாள் தேவகி தானும் லியோனும் காதலிப்பதாக அம்மாவிடன் சொல்கிறார். அதற்கு சான்றாக தேருக்கு அருகில் தேவகியை அழகாய் படம் எடுத்திருந்ததைக் காட்டுகிறாள். அடிக்கடி சந்தித்து பேசியுள்ளதையும் சொல்கிறாள். அம்மா அப்பாவை நினைத்து பயப்படுகின்றார். அதற்கு ஏற்றார் போலவே அப்பாவும் தேவகியை அடித்து அம்மாவை திட்ட தொடங்குகின்றார்.

அதன் பிறகு ஹரி லியோனை பார்க்க செல்கிறார். லியோன் அங்கில்லை. புறப்பட்டுவிட்டார். தேவகிதான் அந்த மனிதன் மீது காதல் கொண்டிருக்கிறாள். லியோனுக்கும் இதற்கும் சம்பத்தம் இல்லையென அப்பா திட்டுகிறார். ஆறு மாதங்களில் தேவகிக்கு திருமணத்தை நடத்துகின்றார் அப்பா. வெளியூர் மாப்பிள்ளை.

‘அக்கா எப்போது லியோனை சந்தித்தாள். எப்படி அவள் காதலித்தாள். எதுவும் ஹரிக்குப் புரியவில்லை. லியோன் ஏன் இதை வெளிப்படுத்தவேயில்லை. எப்படி ரகசியத்தை மறைத்துக் கொள்ள முடிந்தது. அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்த தேரையும் தனக்குத் தெரியவில்லை. வீட்டிலிருந்த அக்காவையும் தெரியவில்லை. நிழல் போல இருந்த பெண் இப்படி நடந்து கொண்டுவிட்டாளே என்று வியப்பாகவே இருந்தது.

என ஹரி யோசிகின்றார். உண்மையில் இங்குதான் தேருக்கும் தேவகிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என சொல்லாமல் சொல்கிறார் ஆசிரியர்.

தேர் இருப்பது பிரம்மாண்டம். திருவிழாக்களுக்கு பயன்படும். ஆனால் அதிலிருக்கும் ஒரு சிற்பத்தைக் கூட அங்குள்ளவர்கள் முழுமையாக கண்டிருக்க மாட்டார்கள் என்பதை கதையின் ஊடே ஆசிரியர் காட்டுகின்றார். நம் வீட்டிலும் இப்படித்தான் பெண்களை அவர்களுக்கு உரிய இடத்தை கொடுப்பதாகச் சொல்லி, மரியாதை கொடுப்பதாகச் சொல்லி அவர்களின் ஆசைகளைப் புறக்கணிக்கின்றோம். திருவிழாக்களுக்கு தேர் அழகை கொடுத்து மற்ற நேரங்களில் ஏதோ ஓர் மூலையில் தனித்து கவனம் பெறாது இருப்பது போலவே பல பெண்களின் நிலை இன்றும் இருப்பதை இச்சிறுகதை காட்டுகிறது.

திருமணத்திற்கு பின் தேவகி ஒரு நாளும் பிறந்தகத்திற்கு திரும்பவில்லை. யார் அழைத்தும் வாருவதற்கு தயாராய் இல்லை.

“நான் செத்தாலும் ஊருக்கு வரமாட்டேன்.  அந்தத் தேரை பார்க்கமாட்டேன் பாத்துக்கோ“

“தேர் என்னடி பண்ணுச்சி“ என்றாள் அம்மா

“என்ன பண்ணலே“ என்று கேட்டு அழுதாள் தேவகிஅக்கா

அம்மாவிற்கு அப்படித் தேவகி அழுவதைக் கேட்கும் போது கண்கள் கலங்கவே செய்தன.

என சிறுகதையை முடிக்கையில் நம் மனமும் கலங்கத்தான் செய்கிறது. தேவகியின் தேர் சிறுகதை முழுமையாக வாசிப்பதன் மூலம் நாம் அதனை உணரலாம்.

(இங்கு சுட்டி சிறுகதையை வாசிக்கலாம்)

https://www.sramakrishnan.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d/

 

#தயாஜி

 

மே 21, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘ஜார் ஒழிக’

 

புத்தகவாசிப்பு_2021 ‘ஜார் ஒழிக’

தலைப்பு –‘ஜார் ஒழிக’

வகை – சிறுகதை தொகுப்பு

எழுத்து – சாம்ராஜ்

வெளியீடு – நற்றிணை பதிப்பகம்

புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)

‘ஜார் ஒழிக’ கவிஞர் சாம்ராஜின் இரண்டாவது  சிறுகதை தொகுப்பு. மொத்தம் பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.

வாசிக்க ஆரம்பித்ததும் சின்னதாய் ஓர் ஏமாற்றம். ஒருவேளை பெரிய எதிர்ப்பார்ப்புடன் புத்தகத்தை கையில் எடுத்தது ஒரு காரணமாக இருக்கும். அதுவுமில்லாமல் கவிஞர் சாம்ராஜை குறித்து நான் கேள்விபட்டதும், அவ்வபோது அவரது பேச்சுகளை யூடியூப்பில் கேட்டு மனதில் ஏற்றி வைத்த பிம்பமாகவும் இருக்கலாம். அவரின் பேச்சில் இருக்கும் எள்ளல் தொணி எனக்கு பிடித்த ஒன்று. இப்படி பலவற்றை மனதில் வைத்துக் கொண்டு வாசித்ததில் அந்த ஏமாற்றம் வந்திருக்க வேண்டும்.

வாசிப்பு என்பதை ஒரு பயிற்சியாக நான் அணுகுகிறேன். அதன் பொருட்டே தொடர்ந்து வாசிக்கவும் அதுபற்றி எழுதவும் செய்கிறேன். அதன் வழி செய்யும் உரையாடல் வழி சக ஜீவராசிகளை புரிந்துக் கொள்ள வழி அமைவதாகவும் நம்புகிறேன்.

முழுமையாக வாசித்து முடித்ததும் என் ஏமாற்றத்திற்கான காரணம் புரிந்தது. அலங்கார வார்த்தைகள் இல்லாமல் கதைகள் நகர்த்தப்பட்டிருப்பதும், வாசகர்களின் முன் முடிவுகளை ஏமாற்றும் போக்கும் ஒருவகையில் காரணம் என தோன்றுகிறது. ஒவ்வொரு கதையையும் இரண்டு முறை வாசிக்கும்படி ஆனது.

வாசித்ததை எழுதுவதன் வழி நாம் வாசித்ததை எவ்வாறு புரிந்துக் கொண்டோம் என்பதை நமக்கே காட்டும் கண்ணாடி.

முதல் கதை ‘குள்ளன் பினு’. உயரத்தை வைத்தே புகழப்படும் குடும்பத்தில் குள்ளமாக பிறக்கிறான் பினு. அதனாலேயே அவனை குள்ளன் பினு என அழைக்கப்படுகின்றான். குடும்பத்திலும் சமூகத்திலும் குள்ளன் என்பதால் கேலிக்கு ஆளாகிறான். ஒரு சமயம் அவனது அக்காள் மகளை கேலி செய்யும் இளைஞர்களுடன் சண்டை செய்யும்படி ஆகிறது. அவனது உயரமே அவனுக்கு சாதகமாகிறது. இளைஞர்களின் கால்களுக்குன் புகுந்து வெளி வந்து சண்டை செய்து எல்லோரையும் பிரமிப்பில் ஆழ்ந்துகின்றான். அதன் பின் பினுவின் அன்றாட வாழ்க்கை மாறுகிறது. அவ்விடம் கதையில் எதார்த்தமாக சொல்லப்படுகின்றது. தனது பலவீனமே தனது பலமாகிவிட்டதை உணரும் தருணம் அது.

இரண்டாவது கதை,  ‘செவ்வாக்கியம்’ ஒரு பெண் அவளது கோவத்தை எதுவரை கொண்டுச் செல்லக்கூடியவள் என சொல்லும் கதை. தன் கணவனை அவனது தவறான செயலுக்கும் அதற்கான முயற்சிக்கும், மனைவி எடுத்திருக்கும் முடிவு வாசிக்கையில் நம்மையும் பயம் காட்டுகின்றது. இக்கதை  ப.சிங்காரம் எழுதிய ‘தவளைகள்’ என்னும் சிறுகதையை நினைவுப்படுத்தியது. இரண்டு கதைகளிலுமே பெண்கள் குறிப்பாக மனைவிகள் எடுக்கும் முடிவுகள்தான் மையம். ஜீரணிக்க சிரமத்தைக் கொடுக்கும் முடிவுகளும் கூட.

மூன்றாவது ‘கதை தொழில் – புரட்சி.’ இக்கதையில் இருக்கும் பகடி ரசிக்கும்படியும் யோசிக்கும்படியும் அமைந்திருக்கி றது. இன்னும் சொல்வதென்றால், கவிஞர் சாம்ராஜின் குரலில் இருக்கும் எள்ளல் தொணியை இதில் காணலாம்.

நான்காவது ‘பரமேஸ்வரி’. தனது மாமனாரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பரமேஸ்வரி அதற்கு ஒரு முடிவு கட்டும் கதை. பாவம் புண்ணியம் பார்த்துக் கொண்டிருந்தால் சிவற்றில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பதை நினைக்க வைக்கும் கதை.

ஐந்தாவது ‘கப்பல்’. முதல் வாசிப்பில் இச்சிறுகதை எனக்கு பிடிபடவில்லை. மீண்டும் வாசித்தேன், ஒவ்வொரு பத்தியையும் ஆழ்ந்து வாசிக்கலானேன். மனிதன் எப்போதும் இன்னொரு மனிதனை தனக்கு கீழாக வைக்க நினைக்கிறான். அல்லது தன்னை எப்போதும் மேலானவனாக வைத்துக் கொள்ளவே விரும்புகிறான். கப்பலில் பல ஆண்டுகளாக வேலை செய்தவர், பல முறை காப்டன்களான் புறக்கணிக்கப்பட்டவர் பின்னர் கப்பல் போலவே வீடு கட்டுகின்றார் இக்கதையின் முடிவு பலவாறாக நம்மை யோசிக்க வைக்கிறது.  நாய் தண்ணீரில் தெரியும் கப்பல் வீட்டின் தலைகீழ் பிம்பத்தையே பார்த்துக் கொண்டிருந்ததுதிடீரென ஆவேசமாய் குலைத்ததுபிறகு ஆச்சரியத்துடன் நிமிர்ந்து வீட்டைப் பார்க்ககப்பல் வீடு தண்ணீரில் கடல் இருக்கும் திசை நோக்கி மெதுவாய் மிதந்து போய்க் கொண்டிருந்தது. இம்முடிவை நாம் எப்படி அணுகுவது. அது அந்த நாயின் பார்வையா. அல்லது அந்த கப்பல் வீடு கட்டிய அச்சுதனின் எதிர்ப்பார்ப்பா. அல்லது இதற்கு அங்கிருந்து விரட்டப்பட்ட மனிதர்களின் சாபமா.

ஆறாவது கதை சன்னதம். ஒரு நாள் கணவனாக வந்திருந்தவன் படுக்கையில் இறந்துவிடுகிறான். அவனுக்காக லஷ்மியக்கா மொட்டையடிக்கிறாள். யாரவள் மிச்ச வாழ்க்கையை எப்படி கடக்கிறாள் என்பது கதை.

ஏழாவது ‘மருள்’. ஒரே இடத்தில் தொடர்ந்து வேலை செய்யாத அருளை பற்றிய கதை. சுவாரஸ்யமாக நகரும் கதை, நாமும் எப்போது இம்மாதிரி மனிதனை சந்தித்த நியாபகத்தை வரவைக்கிறது.

 எட்டாவது கதை ‘மூவிலெண்ட்’. தொகுப்பில் எனக்கு பிடித்த கதைகளில் ஒன்று. காதல் தோல்வி பற்றிய கதைதான். ஆனால் அதனை எழுத்தாளர் அணுகிய விதமும், கதாப்பாத்திர படைப்பும் நன்றாக அமைந்திருக்கிறது. நிறைமாத கர்ப்பிணி திரையரங்குக்கு செல்வதில் இருந்து கதை ஆரம்பிகின்றது. சினிமாவில் அப்படி என்னதான் இருக்கிறது ஏன் அவள் இந்த நிலையிலும் சினிமா பார்க்க செல்கிறாள் பின்னர் ஏன் அவள் சினிமா பார்ப்பதையே தவிர்க்கின்றாள் என வாசிக்கையில் அந்த பெண்ணில் மீது கரிசனம் வர செய்கிறது. கதையில் சொல்லப்படும் ஒவ்வொன்றும் கதையோட்டத்திற்கு எத்தனை அவசியம் என சொல்லத்தக்க கதை.

ஒன்பதாவது கதை, ‘ஜார் ஒழிக’. சிரிக்கலாம். வாயில் ஒட்டிக் கொண்ட வார்த்தையால் ஏற்படும் சங்கடங்களை சொல்லும்  கதை. அதிலிருந்து நாயகன் மீண்டானா இல்லையா என்பதை பகடியுடன் வாசிக்கலாம்.

பத்தாவது கதை மரியபுஷ்பம் இல்லம். தொகுப்பில் எனக்கு பிடித்த இரண்டாவது கதை. இக்கதையின் கட்டமைப்பு அழகாக அமைந்துள்ளது. வாசிக்கும் நம்மையும் உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளும் கதை. கதையின் முடிவு முழு கதையையும் மாற்றிவிடுகிறது. முடிவை நெருங்க நெருங்க ஏதோ நடக்கவுள்ளதை கணிக்க முடிந்த நமக்கு அதன் முடிவை யூகிக்க முடியவில்லை. ஒரு சிறுகதையில் என்ன விடயங்களை எப்படி கையாளலாம் என சொல்லிச்செல்லும் கதை. கதையை நகர்த்த உதவும் எதும் கதைக்கு முக்கியமே.

நிறைவாக, வாசிக்க எடுக்கும் புத்தகங்கள் சமயங்களில் நம்மிடம் ஒரு விளையாட்டை காட்டும். அதற்கு இணையாக இன்னொரு விளையாட்டை வாசிப்பின் மூலம் நாமும் நடத்திக் காட்ட வேண்டியுள்ளது. முதல் கதையை வாசித்து  விட்டு இத்தொகுப்பை மூடி வைத்திருந்தால் எனக்கு பிடித்தமான இரண்டு கதைகளை வாசித்திருக்க முடியாது. மற்ற கதைகள் பிடிக்கவில்லை என்பதற்கில்லை மற்ற கதைகளைக் காட்டிலும் ‘மரியபுஷ்பம் இல்லம்’, ‘மூவிலேண்ட்’ என்ற இரண்டு கதைகளும் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதற்கு அக்கதையும் கதை சொல்லப்பட்ட விதமும் காரணம். அதனைக் காட்டிலும் எழுதிவிடாத ஏதொ ஒன்றை வாசகரிடம் அக்கதைகள் கொடுத்துவிடுவதாகவும் இருக்கலாம்.

 

#தயாஜி

மே 14, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘இரண்டாம் லெப்ரினன்ட்’

 

புத்தகவாசிப்பு_2021 ‘இரண்டாம் லெப்ரினன்ட்’

தலைப்பு –‘இரண்டாம் லெப்ரினன்ட்’

வகை – சிறுகதை தொகுப்பு

எழுத்து – அகரமுதல்வன்

வெளியீடு – நூல் வனம்

புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)

இதுவரை படித்திருந்த ஈழத்துச் சிறுகதைகளில் என்னை பெரிதும் பாதித்த சிறுகதை தொகுப்பு. மிகுந்த மன உளைச்சலிலேயே ஒவ்வொரு கதையையும் வாசிக்கலானேன். சொல்லப்போனால் ஒவ்வொரு கதையை வாசித்து முடித்ததும் நீண்ட மௌனமானேன். தொகுப்பு கையில் இருந்த நாட்களில் கவனம் வேறெங்கும் செல்லவில்லை. வீட்டில் கூட அந்த வித்தியாசத்தை உணர்ந்திருந்தார்கள். ஏதோ ஆகிவிட்டது என ஆளுக்கு ஆள் அக்கறை காட்டினார்கள். வாசிக்கையில் என் காதுகளுக்கு மிக அருகில் துப்பாக்கிச் சூடு கேட்டது. ஆயுதம் ஏந்தியவன் போல கைகள் வலித்தன. கண்முன்னே சாவை பார்த்துவிட்டவன் போல பீதிக்குள்ளானேன்.

புத்தக வாசிப்பிற்கு செல்வதற்கு முன்பாக சிலவற்றை நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு பதின்ம வயது இருக்கும். நாங்கள் வாழ்ந்த தோட்டத்தில் எங்கள் வீடு உட்பட சில வீடுகளுக்கே வீடியோ கேசட் வசதி இருக்கும். யாரிடமாவது சினிமா பட வீடியோ கேசட் இருந்தால் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். எல்லோரும் பார்ப்போம்.

அப்போது, அப்பாவின் நண்பர் ஒருவர் அப்பாவுடன் வங்திருந்தார். அவர் கையில் சில கேசட்டுகள் இருந்தன. கறுப்பு பையில் அவற்றை மறைத்திருந்தார். எங்களுக்கு ஒரு கேசட்டைக் கொடுத்துவிட்டு அப்பாவிடம் கொஞ்ச நேரம் பேசினார். பின் இன்ன பிறருக்கு வீடியோ கேசட்டுகளைக் கொடுக்க சென்றார்.

கேசட்டை வாங்கிய அப்பா ஏதோ கையில் கொலை செய்து கொடுத்த துப்பாக்கியை மறைப்பது போல பதற்ற முகத்துடன் வீட்டிற்கு வந்தார். அவர் வந்தவுடன் எங்கள் வீட்டு வரிசையில் உள்ள சிலரும் வீட்டிற்கு வந்தார்கள். அப்பா கதவை மூடினார். நானும் என் நண்பனும் அருகில் அமர்ந்துக் கொண்டோம். எங்களுக்கு நடப்பது புரியவில்லை. பெரியவர்கள் ஏதேதோ பேசிக்கொண்டார்கள்.

வீடியோ கேசட்டை போட்டார். தொலைக்காட்சியில் ஒலி அளவை குறைத்து வைத்தார். அழுகுரலோடு யாரோ பாடலானார்கள். ஆங்காங்கே குண்டுகள் வெடிக்கின்றன. துப்பாக்கியால் ஒருத்தரை ஒருத்தர் சுடுகிறார்கள். பெண்கள் கதறியபடி எங்கோ ஓடுகிறார்கள். கையில் உயிரிழந்த பிள்ளையை சுமந்தபடி ஒரு மனிதர் கீழே விழுகிறார். எனக்கும் நண்பனுக்கும் ஒன்னும் புரியவில்லை.

அப்பாவும் வங்திருந்த அவரது நண்பர்களும் கண்கள் சுருங்கிட பார்த்துக் கொண்டிருந்தார்கள். கோவப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அம்மாவும் அவரது தோழிகளும் அழுகிறார்கள். தன் முன்னே தங்கள் பிள்ளைகள் இறந்த துக்கம் போல ஒருவர் வாயை பொத்திக்கொண்டு தேம்ப ஆரம்பித்துவிட்டார். அரைமணி நேரம் கூட அந்த வீடியோயை யாராலும் பார்க்க முடியவில்லை. தொலைக்காட்சியை மூடிவிட்டோம்.

அழுபவர்கள் அழுதுக் கொண்டிருந்தார்கள். சிலர் கோவத்தில் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் கதவு தட்டும் ஓசை கேட்டது அப்பா ஜன்னலின் வழியே பார்த்தார்.

வீட்டில் உள்ளவர்களிடம் கையில் இருக்கும் பணத்தை வாங்கிக் கொண்டார். கேசட்டை எடுத்துக் கொண்டு வெளியில் காத்திருப்பவரிடம் கொடுத்தார். கேசட்டையும் பணத்தை பெற்றுக்கொண்டவர் அப்பாவிடமும் அவரது நண்பர்களிடம் எதையோ தீவிரமாக பேசலானார்.

வீட்டில் இருக்கும் பெண்கள் யாரும் இன்னும் அழுகையை நிறுத்தவில்லை.

மூளையில் ஏதோ ஒரு மூலையில் இருந்த பழைய நினைவுகளை ‘இரண்டாம் லெப்ரினன்ட்’ புத்தகம் கிளறிவிட்டது. அன்று அம்மா அழுவதை புரியாமல் பார்த்தவன் இன்று அவரின் மனநிலையில் அழுகிறேன். அவர் அழுததின் காரணம் புரிந்தது.

இதுவரை வாசித்த ஈழத்துச் சிறுகதைகளில் கதைகள் இருந்தன. அகரமுதல்வனின் கதையில் உயிர் இருக்கின்றது என எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். இது சரியா தவறா என கேட்பதற்கு நேரமில்லாதபடி அந்த மனதர்களின் அழுகை என் காதில் கேட்கின்றன.

கதைகள் என்ன செய்யும் என்கிற கேள்விக்கு ; அவை உன் நிம்மதியை கெடுக்கும் என சொல்லத் தோன்றுகிறது. இதுவரையில் எழுத்தாளர் அகரமுதல்வனை கேள்விபட்டதோடு சரி, அவரது படைப்புகளை வாசித்திருக்கவில்லை. முதல் வாசிப்பிலேயே மனதை கலங்கடித்துவிட்டார்.

தொகுப்பில் மொத்தம் 12 சிறுகதைகள். பல கதைகள் பெண்களே மையமாக இருக்கிறார்கள். கதைச்சொல்லி கதையை சொல்லும் விதம் நம்மையும் கதைக்குள் இழுத்துவிடுகிறார்.

இலங்கை யுத்தம் மட்டுமல்ல, உலகில் நடக்கும் எந்த போரையும் ஊடகம் வழி (திருட்டுத்தனமாகவும்)நாம் செய்திகளாக தகவல்களாக அறிந்துக் கொள்கிறோம். ஆனால் புனைவாக வாசிக்கும் பொழுது நம்மால் அத்தனை எளிதாக எடுத்துக் கொள்ள முடிவதில்லை அதற்கு இச்சிறுகதைகள் உதாரணம்.

யுத்த காலத்தையும் யுத்த காலத்திற்கு பிறகான காலத்தையும் கண்முன்னே கதைகளாக்கி புனைந்திருக்கிறார் ஆசிரியர். சொல்லப்போனால் யுத்த காலத்தைவிடவும் யுத்தத்திற்கு பிறகான காலமே கொடுங்காலமாக சாத்தான்களில் கைப்பிடியில் இருக்கிறது.

‘கரும்புலி’ என்னும் கதை. நம்மால் கற்பனையும் செய்துவிட முடியாத கொடுமையை அனுபவிக்கிறார் முன்னால் பெண் போராளி. அவர் மட்டுமல்ல அப்பாவி மக்களும் சிக்கியப்பின் விதிவிலக்கல்ல என காட்டுகிறது கதை. ‘இரும்புக் கதவு திறக்கும் சத்தம் கேட்டால், ஏதோவொரு மூலையில் எனது பிறப்புறுப்பை கைகளால் மூடிக்கொண்டு இருப்பேன்’ என சொல்லும் பெண் போராளி சாதக் ஹசன் மாண்டோவின் ‘திற’ சிறுகதையை நினைக்க வைக்கிறார். அக்கதையைக் காட்டிலும் ‘கரும்புலி’ அதிக வலியைக் கொடுக்கச் செய்கிறது. ரகசிய அறையில் அடைக்கப்பட்ட இரண்டு பெண்களுக்கு மத்தியில் நம்மையும் வைத்துவிடுகிறார். ரத்த வாடை இல்லாமல் இக்கதையை வாசித்து முடிக்க முடியவில்லை.

‘சாம்பவிகளுக்கான விடுதலை’ என்னும் கதை, மழையை ஆராதிக்கும் சாம்பவியிடம் இருந்து தொடங்குகிறது. யுத்தம் குழந்தைகளையும் விட்டுவைப்பதில்லை என சொல்லும் கதை. அது குழந்தைகளை விகாரமாக்குவதோடு இல்லாமலாக்குவதையும் சொல்கிறது. இது ஒரு சிறுமியின் கதை மட்டுமல்ல. இராணுவத்தில் சிக்கிய ஒவ்வொரு சிறுவர்களின் நிலை. அவர்களின் மரணம் மட்டுமே எல்லாவற்றிலிருந்தும் அவர்களுக்கு விடுதலை கொடுக்கிறது.

‘மோன்’ என்னும் மூன்றாவது கதை. ஒரு படைப்பாளி தன் படைப்பை எவ்வாறு அணுக வேண்டும் என காட்ட தவறவில்லை. போராளிகளின் பாடுகளை சொல்லும் அதே வேலையில் இயக்கத்தின் மீதான விமர்சனத்தை வைக்கிறது. ஆசிரியர் அதனை தவிர்த்திருக்கலாம். அப்படியும் பலர் ஒரு தரப்பில் இருந்து எழுதியிருக்கிறார்கள். ஆனால் அகரமுதல்வனின் கதையில் அவர் காட்டும் உண்மை புனைவுகளை கவனிக்க வைக்கிறது. தன் மகனை இயக்கத்தார்தான் துரோகி என மரத்தில் கட்டு, சுடப்பட்டு விறகால் எரிக்கப்பட்டபின்னரும் கூட இயக்கதினருக்கு உணவு போடும் அம்மா. இந்த மனிதர்களை எப்படி புரிந்துக் கொள்வது.

‘எனக்கு ஒன்றுமட்டும் தெரியுது தம்பி உண்மையா சண்டை இன்னும் முடியேல்லை, அது எங்கட உடம்புகளில் நடந்து கொண்டிருக்கு….’ என சொல்லும் ‘குணமகள்’ தொகுப்பில் நான்காவது சிறுகதை.

யுத்தங்கள் சாகடிப்பதுமட்டுமல்ல, உயிரை வைத்துக் கொண்டே இருக்கும். அதற்கு பதில் சாகடித்திருக்கலாம் என காலில் விழுந்து கதறச்செய்யும். ‘நாவல்மரம்’ தொகுப்பில் ஐந்தாவது கதை. காதல் கதை. ஆனால் காதலை கொன்று காதலை உயிருடன் கொல்லும் கதை. எப்படியாவது சேர்ந்திட வேண்டும் என நம்மையும் பிரார்த்திக்க வைத்து; உடைந்து அழ வைக்கிறது. தடுப்பு முகாமில் காவலில் இருக்கும் இராணுவத்தின் கைபேசியில் தினம் தினம் ஒலிக்கும் தமிழ்ப்பெண்களில் கதறலில் ஒரு நாள் தான் தேடி அழைந்த காதலியின் கடைசி குரல் கேட்பது எவ்வளவு பெரிய சாபம். இந்த பாவங்கள் யாரைப் போய் சேரும்.

ஆறாவது கதை; ‘இரண்டாம் லெப்ரினன்ட்’. விரும்பியும் கட்டாயத்தின் பேரிலும் இயக்கத்தில் ஆள் சேர்க்கிறார்கள். அப்படி சென்றவன் பிணமாய் வருகிறான். அந்த சூழலை கண்முன்னே காட்டும் கதை.

ஏழாவது கதை, ‘பைத்தியத்தின் தம்பி’, என்னை இப்போது வரை அழ வைத்திருக்கும் கதை. பைத்தியம் என்கிற பெயரை சுமந்துக் கொண்டு எல்லாவித வன்முறையையும் உடலில் சுமக்கிறார் வான்மகள். கதைச்சொல்லியிடம் வான்மகள் ஒரேயொரு முறைதான் பேசுகிறார். ஆனால் நம்மை அழ வைப்பதும் அங்குதான்.

எட்டாவது கதை கானகி. தன் நிலத்திற்காக ஏங்கும் மனிதர்கள்.

ஒன்பதாவது கதை, ‘விசாரணை’. கைது செய்யப்பட்ட போராளிகளுக்கும் சரணடைந்த போராளிகளுக்கும் விசாரணை, புனர்வாழ்வு, விடுதலை என்பதற்குள் பாலாத்காரமும் உண்டு என சொல்லும் கதை. தொகுப்பில் ஆணை மையப்படுத்திய கதை இது. அந்த போராளி சந்திக்கும் விசாரணை நம்மையும் பதைபதைக்க வைக்கிறது.

பத்தாவது சிறுகதை ‘சாகாள்’. அகப்பட்டம் பெண் போராளிகளுக்கு ஏற்படும் கொடுமையை ஆவணம் செய்திருக்கும் கதை. தொகுப்பில் சற்றே நீண்ட கதை. பெண் போராளிகளுக்கான வதை முகாமின் மனித மிருகங்கள் தங்களை முழுமையாக மிருகங்கள் என காட்டுகின்றன. ‘யுத்தத்தை வென்ற அதிகாரம் தனது மமதையை தோல்யுற்ற யோனிகளிலேயே நிகழ்த்தும்’ என சொல்கிறார். அதற்கான காரணம்தான் கதை. எளிதல் வாசித்து கடக்க முடியாத கதையும்.

‘பரணி’,’அம்மாவும் அமெரிக்காவும்’ தொகுப்பின் கடைசி இரண்டு கதைகள்.

போர் குறித்து ஓரளவேனும் அறிந்த நமக்கு, போருக்கு பின்னரான சூழலை காட்டும் கதைகள் இவை. எங்கே மனிதன் மண்ணுக்காக சாகிறானோ அங்கேதான் மனிதான் பிறந்த மிருகங்களும் நடமாடுகின்றன. பிடிபட்ட போராளிகளை புனர்வாழ்வுக்கு அனுப்புவதற்கு முன் என்ன நடக்கின்றது என்பதனை கண்கள் கலங்க மனம் வருந்த எழுதியிருகின்றார் எழுத்தாளர். இது சிறுகதையா, அதன் கட்டமைப்பு உள்ளதா, இல்லை வெறும் சம்பவங்களா என்கிற எந்த கேள்விக்கும் இடம் கொடுக்காத கொடுக்கவும் முடியாத எழுத்தாக்கம் இது. எத்தனை பேரால் அழாமல் இக்கதைகளை வாசிக்க முடியுமோ தெரியவில்லை. ஆனால் அழுதாலும் சரி, ஒரு முறையேனும் இக்கதைகளை வாசித்துவிடுங்கள். இனி அகரமுதல்வனின் எந்த கதையையும் தவறவிடக்கூடாது என்பதே அவருக்கு நான் சொல்லும் நன்றி.

 

#தயாஜி

#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மே 10, 2021

#கதைவாசிப்பு_2021 ‘கைதட்டுகள் போதும்’

 

#கதைவாசிப்பு_2021 ‘கைதட்டுகள் போதும்’

தலைப்பு – கைதட்டுகள் போதும்

எழுத்து-  எஸ்.ராமகிருஷ்ணன்

வகை – சிறுகதை

பிரசுரம் – மே 4 (எஸ்.ராமகிருஷ்ணன் வலைத்தளம்)


கதை தொடங்கிய இடத்திலேயே முடிகிறது. அதற்குள் ஒரு கலைஞனின் இழப்புகளை பதிவு செய்துள்ளார் எஸ்.ரா. ‘கைதட்டுகள் போதும்’ என்று தலைப்பை வாசித்து கதைக்குள் நுழைந்தேன். ஆனால், ‘கைதட்டல் போதுமா?’ என்கிற கேள்வியோடு சிறுகதையை வாசித்து  முடித்தேன்.

கலை மீதான ஆர்வம் ஏதோ ஒரு வயதில் எவருக்கும் ஏற்படக்கூடியதுதான். சிலர் அதற்காகவே பிறந்தவர்கள் போலவும் பிரகாசிப்பார்கள். சிலர் துரதிஷ்டவசமாக காணாமல் போய்விடுவார்கள்.  இப்படி பிரகாசிப்பவர்களும்  காணாமல்  போகிறவர்களும்  சரி, தத்தம் குடும்ப வாழ்வில் எத்தனையோ இழப்புகளை சந்திக்கும்படி ஆகிறது.  கலையின் வெற்றி பலரையும் அனாதையாக்கியிருக்கிறது.  நாம் நேசிக்கும், நாம் நம்பும் கலை உலகில் ஏதோ ஒரு மூலையில் இருந்து யாரோ ஒருவரை நமக்கருகில் அழைத்து வருகிறது. ஆனால் நம் பக்கத்தில் இருக்கும் பலரையும் தொலைத்து விடுகிறது.

இக்கதை அப்படியான கலையில் ஈடுபாடு காட்டி கைதட்டலில் கிரங்கிய மனிதனை பேசுகிறது. அவனை கிரங்கடித்த கைதட்டல்களால் அவன் இழந்தது அவனது வாழ்க்கையை.

ரங்கசாமி வீட்டில் கதவுகள் இல்லை என்றும் அதற்கான அவசியம் இல்லை என்றும் கதை தொடங்குகின்றது. யார் இந்த ரங்கசாமி என்கிற கேள்விக்கு அடுத்தடுத்து பதில்களைக் கொடுத்து கதையை நகர்த்துகின்றார்.

சர்க்கஸில் வேலை செய்த ரங்கசாமியிடம் இப்போது ஒற்றைச் சக்கரம் கொண்ட சைக்கிள் மட்டுமே இருக்கிறது. இந்த ஒற்றை சக்கர சைக்கிள் ரங்கசாமியின் வாழ்க்கையை பிரதிபலிப்பும் குறியீடாகவே பார்க்கிறேன். சர்க்கஸில் இருக்கும்   வரைதான் அந்த  சைக்கிளுக்கு பாராட்டுகள், பார்ப்பவருக்கு பரவசங்கள் எல்லாம். ஆனால் அதுவே வீட்டு வாசலில் சாய்ந்துக் கிடந்தால் யாருக்குத்தான் பரவசத்தைக் கொடுக்கும், யார்தான் வந்து பாராட்டிவிட்டுப் போவார்கள். யோசிக்கையில் சர்க்கஸில் கூட இதைவிட சாகசம் காட்டும் வேறொரு சைக்கிள் வந்துவிட்டால் இந்த ஒற்றை    சக்கர சைக்கிளுக்கு மதிப்பேது. அதன் எல்லை அதை விட அதிகம் பரவசமூட்டும் வேறொரு சைக்கிள் வருவரைதானே.

ஊரில் வேலை இல்லாமல் வெளியேறிய ரங்கசாமி சர்க்கஸில் சேர்கிறார். அங்கு ரங்கா என்ற பெயரில் பல சாகசங்களைச் செய்கிறார். தனித்து அறியப்படுகின்றார். அவரை மையப்படுத்தியே விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. பதினெட்டு வயதிலேயே திருமணம் ஆகியிருந்தது. குழந்தையும் பிறந்தது. தன் அம்மாவின் பெயரையே குழந்தைக்கும் வைத்து மகிழ்கிறார். இருந்தும் வேலை ஏதுமில்லாமல்     அங்கு இருக்கு முடியாமல்தான் யாருக்கும் தெரியாமல் வெளியேறினார். சர்க்கஸில் அவருக்கான முக்கியத்துவமும் அவருக்கு கிடைத்த  கைதட்டல்களும் அவரை அதில் முழுமையாக ஈடுபட வைக்கிறது. ஆண்டுகள் கடக்கின்றன.

அதற்கிடையில் ரங்காவை ஒரு மருத்துவர் சந்தித்து விருந்துக்கு அழைக்கின்றார். அங்கு மருத்துவரின் மகள் ரங்காவைப் பார்த்து உற்சாகமாகிறார். அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார். அங்கு நடந்தது ரங்காவிற்கு அவரின் மனைவி பிள்ளையை நினைவுப்படுத்துகிறது.

இருந்தும் சந்தர்ப்ப சூழலால் ஒரு மாதம் கழித்தே சொந்த ஊர் செல்கிறார். அங்கே மனைவியும் மகளும் இல்லை. அவர்கள் ஊருக்கு சென்று மூன்றாண்டுகளுக்கு மேலாகிறது என தெரிந்துக் கொள்கிறார். அவர்கள் சென்றிருக்கும் ஊருக்கு ரங்காவும் செல்கிறார். இவரைப் பார்த்ததும் யாரும் மகிழ்ச்சியடையவில்லை. வெறுப்பையே காட்டுகிறார்கள். மனைவி மட்டுமல்ல மகளும்தான். அவருக்கு  அவர்களுடன் வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கவில்லை. மன கவலையுடன் மீண்டும் சர்க்கஸ்க்கு செல்கிறார். அவரால் பழையபடி எந்த சாகசத்திலும் ஈடுபாடு காட்ட முடியவில்லை. மனைவியும் மகளும் தன்னை வெறுத்து ஒதுக்கியதையே மீண்டும் மீண்டும் நினைக்கிறார். அவரை இதுநாள் வரை அங்கு நிறுத்தி வைத்த கைதட்டல்களும் பாராட்டுகளும்  அவருக்கு  வெறுமையைக்  கொடுக்கின்றன. சர்க்கஸ்க்கு விடைகொடுத்து  அந்த  ஒற்றை சக்கர சைக்களுடன்  ஊர் திரும்புகிறார்.

தினமும்  மனைவி மகள் கண்ணில் படும்படி ஏதேதோ செய்கிறார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இனியும் அவர்களை தொல்லை செய்ய கூடாது என முடிவெடுக்கின்றார்.

எதனால் தன் மனைவியும் மகளும் தன்னை வெறுக்கிறார்கள் என முழுமையாக உணர்ந்து வருந்துகின்றார். என்றாவது அவர்கள் மனம் மாறும் எனவும் ஒரு நாள் அவர்கள் தன்னைத் தேடி வருவார்கள் எனவும் நம்புகிறார். அவர்கள் வரும் போது கதவு மூடியிருக்கக்கூடாது என்றே கதவை பிடுங்கியும் வைக்கிறார்.

காத்திருப்பு மட்டுமே காயங்களை மறக்கச்செய்யும் , உறவுகளை சேர்த்து வைக்கும் என்கிற நம்பி நாட்களை கடக்கிறார்.

நாம் எதை நம்புகிறோம். எதில் மயங்குகிறோம். எதையெல்லாம் இழக்கிறோம் என்கிற கேள்விகளை வாசகர்களுக்கு ஏற்படுத்துகிறது. அதையொட்டிய ஒரு எச்சரிக்கையையும் இக்கதை கொடுக்கின்றது.

நண்பர்கள் இச்சிறுகதையை, இங்கு சுட்டி வாசிக்கலாம்.

https://www.sramakrishnan.com/%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/

 

#தயாஜி

#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 

மே 09, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘இடைவெளி’

புத்தகவாசிப்பு_2021 ‘இடைவெளி’

தலைப்பு –‘இடைவெளி’

வகை – நாவல்

எழுத்து – எஸ்.சம்பத்

வெளியீடு – டிஸ்கவரி புக் பேலஸ்

புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)

மரணத்தை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம், என்கிற கேள்விக்கு பல பதில்கள் உண்டு. தத்துவ பார்வையில், ஆன்மிக பார்வையில், என அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் ஒரு  சாமானியன் அதனை எப்படி எதிர்க்கொள்கிறான் என்பதுதான் ‘இடைவெளி’

            எஸ்.சம்பத் அதிகம் எழுதிடவில்லை. சொல்லப்போனால் ‘இடைவெளி’ நாவலாக வெளி வந்ததைக்கூட அவர் பார்க்கவில்லை. எழுத்தாளர் சி.மோகன் மூலம் கவனம் பெற பெற்றவர்களின் எஸ்.சம்பத்தும் ஒருவர். நன்றிக்குரிய செயல். இல்லையென்றால் எஸ்.சம்பத் போன்ற படைப்பாளர்களை பலரும் காணாமல் இருந்திருப்பார்கள்.

            இடைவெளி நாவலில் வரும் நாயகன், தினகரன் உண்மையில் எஸ்.சம்பத்தின் இன்னொரு உருவகம் எனவும் சொல்கிறார்கள்.

            நாவல் முழுக்க தினகரனின் மன ஓட்டமே முதன்மையாக இருக்கிறது. சொல்லப்போனால் கதைச்சொல்லியையும் தினகரனையும் நம்மால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. இரண்டும் பல இடங்களில் ஒரே குரலாக ஒலிக்கவும் செய்கிறது.

            எல்லோரும் சாகத்தான் போகிறோம். ஆனால் ஏன் சாவை கண்டு அஞ்சுகின்றோம். ஏன் எதையெதையோ சேர்த்து வைத்துக் கொண்டே இருக்கின்றோம். எத்தனை முரண்களுடன் நாம்  வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்கிற கேள்வியை எழ வைக்கும் நாவல்

            சமீபத்தில் எம்.ஏ.சுசிலா அவர்கள் மொழிபெயர்ந்த ‘தாஸ்தயொவஸ்கி கதைகள்’ புத்தகத்தை வாசித்தேன். அதில் ‘ஒரு மெல்லிய ஜீவன்’ கதையில் வரும் நாயகனை ‘இடைவெளி’ நாவலில் வரும் தினகரன் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கின்றார்.

            சாவுடன் உரையாடல் நடத்தும் தினகரன் போன்றே பலரும் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் அதனை புரிந்துக் கொள்ளாது தற்கொலை செய்துவிடுகிறார்கள். தினகரன் போன்றோரே சாவுடன் நடத்தும் உரையாடலை வாழ்வில் விளையாட்டாய் எதிர்க்கொள்கிறார்கள்.

            நம்முடன் பயணிக்கும் ஒரு மனிதன் அவனது மனஓட்டங்களை நம்முடம் பகிர்ந்துக் கொண்டு நமக்கும் அத்தகைய கேள்விகளைக் கொடுத்து செல்வதாகவே இந்நாவல் அமைந்திருக்கிறது.

            யோசிக்கையில் எஸ்.சம்பத் இருந்திருந்தால் இன்றைய இக்கட்டான காலகட்டத்திற்கு ஏற்ற படைப்பாளியாக இருந்திருப்பார். அவருக்கென்று ஒரு வாசக படையே உருவாகியிருக்கும். 116 பக்கங்கள் கொண்ட நாவல்தான். சீக்கிரத்தில் வாசித்து விடலாம். கண்டிப்பாக வாசிக்கவும் வேண்டும். நிச்சயம் வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும். தத்துவங்களின் அடிப்படையில் கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகாமல், வாழ்வை அதன் போக்கில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் தினகரன், குழம்பிய மனதுடன் மரணத்தை புரிந்துக் கொள்ள முயல்வதும் அதற்கான அவரது முன்னெடுப்புகளும் அதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

            நாவலை வாசித்து முடித்துவிட்ட திருப்தியை என்னால் உணர முடியவில்லை. எங்கோ எதையோ தவற விட்டதாக மீண்டும் மீண்டும் பக்கங்களை வாசிக்கின்றேன். ஆனால் நான் தவற விட்டது நாவலில் இல்லை நடைமுறை வாழ்க்கையில் இருப்பதாக உணர்கிறேன்.

           

#தயாஜி

#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


மே 08, 2021

#கதைவாசிப்பு_2021 வாழ்வின் தேவை

 

#கதைவாசிப்பு_2021 வாழ்வின் தேவை

 

தலைப்பு – வாழ்வின் தேவை

எழுத்து-  எஸ்.ராமகிருஷ்ணன்

வகை – சிறுகதை

பிரசுரம் – மே 6 (எஸ்.ராமகிருஷ்ணன் வலைத்தளம்)

அம்மாவிற்கு குடும்பத்தில் என்ன மாதிரியான இடத்தை கொடுக்கின்றோம் என்கிற அடிப்படை கேள்வியை முன் வைக்கும் கதை. யோசிக்கையில் இதுவெல்லாம் ஒரு கேள்வியா என்றும் தோன்றலாம். ஆனால், அந்த யோசனையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறது ‘வாழ்வி தேவை’.

அப்பா இறந்துவிட்டார். அவர் இருக்கும் வரையில் அம்மாவை அவர்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார். வெளியூரில் வசிக்கும் மகளுக்கு இரண்டாம் பிரசவத்திற்கு பின் அம்மா அங்கு செல்ல வேண்டி வருகிறது. கொஞ்ச நாட்களாக அம்மா அங்கு இருக்கும்படியும் ஆகின்றது. வழக்கம் போல பேரன்களுக்கு பாட்டியாக, மகளுக்கு தாயாக, மருமகனுக்கு மாமியாராக இருந்துக் கொண்டிருக்கின்றார். அவர்களின் ஒரு கார் இருக்கிறது. எப்போதாவது அதனை பயன்படுத்தவும் செய்கிறார்கள். அவ்வபோது அம்மா காரை துடைத்து வைக்கிறார். ஒரு நாள் அம்மா, மகளிடம் கார் ஓட்ட கற்றுக்கொள்ளவா என கேட்கிறார். மகள் யோசிக்கின்றார். அதற்கு தடை போடவில்லை. ஏற்பாடு செய்கின்றார். மருமகனுக்கும் பெரிய விருப்பம் இல்லை. அம்மா டிரைவிங் ஸ்கூலில் சேர்கிறார். காரோட்ட கற்றுக்கொள்கிறார். அம்மாவிடம் மாற்றம் தெரிகிறது. உற்சாகமாக பொழுதுகளை ஆரம்பிக்கின்றார்.  மகள் மருமகள் பேரன்களை காரில் ஏற்றிக்கொண்டும் செல்கிறார். மீண்டும் சொந்த ஊர்க்கு செல்லும் போது பேருந்து நிறுத்துமிடத்தில் அடுத்த  முறை அம்மா காரிலேயே ஊருக்கு செல்லலாம், அதற்கு ஏற்பாடு செய்யவுள்ளதாக மருமகன் வாக்களிக்கின்றார். அம்மா உற்சாகமாக சம்மதிக்கின்றார்.

“நீ கார் ஒட்டுறதை பார்க்க அப்பா இருந்திருக்கணும். “

“அவர் இருந்திருந்தா என்னாலே கார் ஒட்ட கத்துகிட்டு இருந்திருக்க முடியாதுடீ“ என்றாள்

என்ற உரையாடலில் முழு கதையில் சொல்லப்படாத கதையை எஸ்.ரா சொல்லிவிடுகின்றார். குடும்பத்தில் அப்பாவிற்கு கொடுக்கும்  மரியாதையை  அப்பாவிற்கு கொடுக்கும்  கவனத்தை  பலரும் அம்மாவிற்கு கொடுப்பதில்லை. அதிகாரமே குடும்பத்தை தன் வசம் வைத்திருக்கிறது. மகனால் மகளால் அந்த அதிகாரத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட வயதில் வெளியேறிவிட முடிகிறது. ஆனால் அம்மாக்கு  அந்த வாய்ப்பு வருவதே இல்லை.

கதையில்  அம்மாவிற்கு  கார்  ஓட்டுவதில் ஏற்படும் ஆசையை  எளிதில்  கடந்துவிட முடியாது. தன் வாழ்க்கை தன் கட்டுப்பாட்டில்  வருவதாக அம்மா நினைக்கின்றார். ஒருவருக்கு அப்படியான வாய்ப்பு கிடைப்பது எவ்வளவு அரிதாகிக் கொண்டே போகிறது. தன் கையில் தான் ஓட்டும் காரின்  ஸ்டேரிங் கிடைத்துவிடுவது அம்மா இனிதான் தனக்கான வாழ்வை வாழப்போகின்றார் என்கிற உற்சாகத்தை கொடுக்கிறது.

நம்முடன் இருக்கின்றவர்களின், நமக்காக வாழ்கின்றவர்களின் கனவுகளை ஆசைகளை சின்ன சின்ன விரும்பங்களை நாம் தெரிந்து வைத்திருக்கின்றோமா? அவற்றை ஏன் தவற விடுகின்றோம் என்கிற ஆதார கேள்வியை கதையை வாசித்ததும், கேட்டுக் கொள்ள செய்கிறோம்.

கதையை இந்த லிங்கில் முழுமையாக வாசிக்கலாம். 

https://www.sramakrishnan.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88/

-       #தயாஜி

 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்