பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 12, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் 12/20 -

 


பெருமாள்முருகன் சிறுகதை ‘ஆடு’ 12/20

முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.


********************************************************************************************************

ஏன் போட்டி போடுகின்றோம். வெற்றி பெறுவதற்கும் சாதித்து முன்னணியில் இருப்பதற்கும். அப்படித்தானே சொல்லிக் கொடுத்தார்கள். நாம் அப்படித்தானே நம்பிக் கொண்டிருக்கின்றோம். இந்தப் போட்டி போடும் பழக்கம் ஒரு கட்டத்தில் பொறாமையாக மாறிவிடுவதை நாமும் அனுபவத்திருப்போம்.

உன்னை நான் வென்று காட்டுவேன் என்பதற்கும் என்னுடன் போட்டி போட நீ உயிரோடு இருக்க மாட்டாய் என்பதற்கும் சின்ன வித்தியாசம்தான். அது அவரவர் மனநிலைக்கு ஏற்றார் போல மாறிவிடுகின்றது. அதற்கு அடிப்படையில் இருப்பது  போட்டி போடும் குணத்தை எப்படி அவரவர் கையாளுகிறார்கள் என்பதைப் பொறுத்தது.

நாம் நேரடியாக போட்டியில் ஈடுபடாமல் நமக்கு விருப்பம் உள்ளவர்கள் போட்டி போடுவதையும் நாம், எவ்வளவு முடியுமோ அவ்வளவு இரசிக்கின்றோம். உலகமே போட்டிவிளையாட்டுகளை அதற்குத்தான் நடத்துகிறதோ என்னமோ.

இந்தப் போட்டிபோடும் குணம் இன்றைக்கோ நேற்றைக்கோ வந்ததல்ல. காமமும் பசியும் வேட்டையும் மனிதனின் ஆதி குணமாய் இருப்பது போல, இந்தப் போட்டியும் நமது ஆதிகுணம்தான். அவையெல்லாம் இல்லையென்றால் நாம் இவ்வளவு உற்சாகமாக இவ்வளவு உயரத்திற்கு சென்றிருப்போமா என தெரியாது.

இன்றைய நமது போட்டியைக் கொண்டாடும் மனம் என்னவாக இருக்கிறது என்பதை விமர்சிக்கும் ஒரு சிறுகதையாகத்தான் என்னால் பெருமாள்முருகனின் ‘ஆடு’ சிறுகதையைப் பார்க்க முடிகிறது.

பேருந்தை பிடிக்க நாயகன் ஓடுகிறான்; அவன் எப்படித்தான் ஏறுவான் பார்க்கலாம் என பேருந்தை வேகமாக ஓட்டும் ஓட்டுனர். இந்தக் காட்சியும் அதில் மறைந்திருக்கும் ‘நாயகன் & ஓட்டுனர்’ என்ற இரு தரப்புகளின் உதிக்கும் போட்டியையும் உற்சாகமாய்ப் பார்க்கத் தொடங்கும் சக பயணிகள். ஒருகட்டத்தில் பேருந்தில் ஏற முடியாமல் கீழே விழுகிறான் நாயகன். ஒருவன் கீழே விழுந்ததைவிடவும்; ஓட்டுனரின் வெற்றிதான் பயணிகளை உற்சாகமாக்கி கொண்டாட வைக்கிறது.

மனிதர்கள் போட்டி போடுவதில் ஒருபோதும் பின் வாங்கமாட்டார்கள். அது சக மனிதர்களிடமும் இருக்கலாம் உலநாடுகளிலும் இருக்கலாம்.

சரி இந்தக் கதைக்கு ஏன் ஆடு என பெயர் வைத்திருக்கிறார் எழுத்தாளர் என இந்நேரம் நீங்கள் யோசித்திருப்பீர்கள்.

அதுதான் மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் உள்ள வித்தியாசம் என சொல்லாம் சொல்கிறாரோ என்ற  கேள்வி இக்கதையை வாசித்து முடிக்கையில் நமக்கு தோன்றுவதற்குத்தான்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்