பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

சனி, 27 பிப்ரவரி, 2016

அ.முத்துலிங்கத்தின் அமெரிக்கக்காரி

வாசித்து முடித்த அ.முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ சிறுகதை தொகுப்பையொட்டி;

கதை 1.  புவியீர்ப்புக் கட்டணம்
 
நல்ல கதை. தலைப்பு கதையை சொல்லிவிட்டாலும் ,தொடக்கம் முதல் கடைசிவரை அதன் சுவாரஷ்யம் குறையவில்லை. சமகால வரி கட்டண விபரங்களை நாசுக்காக பகடி செய்யும் கதை. இப்படி ஒரு கதையை இதற்கு முன் படித்த நினைவு இல்லை.

கதை 2 - வேட்டை நாய்

சிலாகித்துச்சொல்ல ஒன்றுமில்லை. யூகிக்க முடியாத சுவாரஷ் யமே கதையை காப்பாற்றுகிறது. யார் வேண்டுமானாலும் எழுதியிருக்கவேண்டிய கதை, ஆனால் அதன் நகைச்சுவை அ.முத்துலிங்கத்தால் மட்டுமே கூடியதாக இருக்கிறது.

கதை 3 - உடனே திரும்ப வேண்டும்

தலைப்பில் இருந்தே கதை தொடங்குகின்றது. நன்றியை நினைத்துப்பார்க்கும் பாணியிலான கதை. அ.முத்துலிங்கத்தின் முத்திரையில் எழுதப்பட்டுள்ளது. யார்க்கும் அத்தனை எளிதில் கிடைத்திடாத அனுபவத்தை வாசகர்களும் உணரும்படி எழுதியுள்ளார். கதையின் கடைசி இரண்டு வரிகள் சிரிக்க வேண்டுமென்பதற்காகவே சேர்க்கப்பட்டுள்ளதாகப்படுகிறது. அவ்விரு வரிகள் இல்லாமலும் இக்கதை நிற்கும். ரசிக்கவும் வைக்கும். தன் அனுபவத்தை எப்படி சிறுகதையாக புனையலாம் என புதியவர்கள் கண்டுக்கொள்ள உதவும் கதை.

கதை 4 - வெள்ளிக்கரண்டி

பேய்கள் இல்லாமலேயே பேய்கதை சொல்லியிருக்கிறார்.புதிய தீவு குறித்து பேசுகையில் அத்தகையதொரு தீவு உண்டா என எண்ணிப்பார்த்து தேட வைக்கிறது . முன் யூகங்களை அவராகவே தகர்த்து தகர்த்து அடுத்த எதிர்ப்பார்ப்புக்கு அழைத்துச்செல்கிறார். புதிய கணவன் மனைவி, பழைய ! கணவன் மனைவிக்கு இடையெயான உரையாடல்களும் காட்சிகளும் சிரிக்க வைக்கின்றன . வெள்ளிக் கரண்டியை குறித்து தெரியும்வரை பேய் நமக்காக காத்திருக்கிறது.

கதை 5 - பத்து நாட்கள்

பணக்காரர்கள் வாழும் குடியிருப்பில் உழைப்பை மட்டுமே நம்பிக்கொண்டிருப்பவனின் கதை. காலை முதல் மாலை வரை அந்த இளைஞனின் கடைக்கு வராதவர்கள் இல்லை . ஆனால் பத்து நாட்கள் அவனுக்கு என்னமோ ஆகிறது . யாரும் அதனை பொருட்படுத்துவதாக தெரியவில்லை. இன்னமும் கூட தங்களில் அதிகாரத்தை சாமானிய மக்கள் மீது பயன்படுத்துகின்றவர்களும் இருக்கிறார்கள் , தாங்கள் அதிகார கால்களால் மிதிபடுவதை விரும்புகின்றவர்களும் இருப்பதை இக்கதை காட்டுகிறது.

கதை 6 - சுவருடன் பேசும் மனிதர்

இரண்டாவது பக்கம் படிக்கையில் தலைப்பை அவதானிக்க முடிகிறது. முடி திருத்தும் நபரின் மொழி நேசமும் அது அழியும் அபாயமும்தான் கதை. ஏசுநாதர் பேசிய மொழி என்றாலும் தனித்த நாடு இல்லாத எம்மொழியும் தத்தம் தன்மையை அருங்காட்சியகத்திலேயே வைக்க நேரிடும். அழிந்து வரும் மொழிகளில் முக்கியமாக கருதப்படும், மொழிக்கான நாடு இல்லாமை , அம்மொழியில் தேசிய கீதம் தமிழில் இல்லாமை போன்றவை, நம் மொழி குறித்த ஐயமாக கதையில் வைக்கிறார்.

கதை 7 - பொற்கொடியும் பார்ப்பாள்

போருக்காக தன்னை பலி கொடுத்த மகள் குறித்து சிலாகித்து பேசுகிறார் அம்மா . பொற்கொடி என்கிற பெயர் மீதான சுவாரஷ்யமே கதையை தொடங்குகிறது. போரில் மடிந்த ஆயிரமாயிரம் பேர்களில் தன் மகளும் இருந்தாள் என்பதில் அம்மாவிற்கு பெருமை இருப்பதுபோல அவர் தன்னையே ஏமாற்றி வந்தாலும் , எழுத்தாளரின் கடைசி கேள்வி அவரின் போலி பெருமையை உடைத்துவிடுகிறது. பின்னர் அந்த தாயின் கண்ணீரில் இருந்து தன்னை துண்டித்து கொள்கிறார். எங்கோ கதை தன்னை தொடங்கியதாகப் பட்டாலும், அது சரியான வழியிலெயே சென்றடைந்திருக்கிறது.

கதை 8 - பத்தாவது கட்டளை

வயோதிகனின் காதல் கடிதம்.காதலில் நனைத்து எழுதப்பட்ட வரிகள். காட்சிகளாக கதை நகர்ந்து வாசகர்களையும் தனக்குள் இழுத்துக்கொள்கிறது. அவளை சந்திக்கும் நேரங்கள் காட்சிகள் கவிதைகளாக விழுகின்றன . கடைசியில் கதையின் சூட்சுமம் வெளிபடுகிறது. பின்னர் அந்த ரகசியத்தை நாமும் ரகசியமாக வைத்திருக்க விரும்பி விடைபெற்றுக்கொள்ளலாம்.

கதை  9 – 49வது அகலக்கோடு

கதை நேர்த்தியாக நகந்துக்கொண்டே இருக்கிறது. முன் அனுமானிக்க முடியாத சூட்சுமத்தை இதில் கையாண்டிருக்கிறார் அ.முத்துலிங்கம். சொல்லப்படும் தகவல்களை ஆழமாக கவனிக்காதவர்கள் கதை முடிந்தும் மீண்டும் படித்துப்பார்க்க வைக்கிறது. குப்பென்ற சிரிப்பை கதையின் நிறைவாக நாம் பெற்றுக்கொள்கிறோம்.

கதை 10 – புகைக்கண்ணர்களின் தேசம்

தந்தை தன் மகனுக்கு சொல்லிச்செல்லும் ரசியம்தான் கதை. ஆனால் அது
அதே ரகசியமாகவே இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. கதையும் அதற்கான சூழல்களும் அத்தனை அழகாய் அமைந்துள்ளது. ஜாதியை இத்தனை மேலோட்டமாக சொல்லியிருக்க வேண்டாம் என்றே நினைக்கிறேன்.

கதை 9 – மன்மதன்

உண்மையிலேயே மன்மத குணம் கொண்டவனின் கதை. அவனை விவரிப்பதாக  கதை அமையாமல் அவனால் ஈர்க்கப்படும் பெண்களே கதையின் களமாக இருக்கிறது. அவர்கள் ஒரே குடும்ப பெண்கள் என்பதில் தொடங்கும் அதிர்ச்சியை , கதையின் கடைசி வரை கொண்டு சென்றுள்ளார்.

கதை 10 – மயான பராமரிப்பாளர்

தந்தையின் பாசம். ஆனால் எப்படி சொல்கிறார் யாராக இருந்து சொல்கிறார் என்பதுதான் அவருக்கே உரித்தான சிறப்பு அம்சமாக இக்கதையில் வெளிப்படுகிறது.

கதை 11 – அமெரிக்கக்காரி

அமெரிக்க மோகத்தை கிண்டல் செய்யும் கதை கடைசி வரியில் எல்லாவற்றையும் தலைகீழாக்கிவிடுகிறது.

இச்சிறுகதை தொகுப்பில் இன்னும் சில கதைகள் உள்ளன. படித்திருந்த இந்த கதைகள் எனக்கு போதுமென்றே நினைக்கிறேன். எங்கிருந்து சிறுகதை தொடங்கலாம் எங்கு முடிக்கலாம் என்கிற சிக்கல் கொண்ட புதியவர்களுக்கு அ.முத்துலிங்கத்தின் கதைகளை பரிந்துரை செய்கிறேன். கண்டிப்பாக உதவியாக இருக்கும். தன் அனுபவங்களை எவ்வாறு கதைகளாக்கலாம் என்கிற விபரங்கள் தெரிந்துக்கொண்டால் நம்மிடம் சொல்லவேண்டிய கதைகள் ஏராளம் வரும் என்கிற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது இச்சிறுகதை தொகுப்பு.

-தயாஜி-

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

புன்னகை மட்டுமே போதுமானது     இன்று விடுமுறை வேண்டுமென்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். பதில் ஏதும் வரவில்லை. பதட்டம் கொஞ்சம் இருந்தது. ஆனாலும் நம்பிக்கையின் பொருட்டு வெளியில் செல்வதற்கு தயாரானாள். கணவனும் சொன்னது போலவே மிகச்சரியாக பத்து நிமிடத்தில் கிளம்பிவிட்டான். பிசினஸ் மேன்களுக்கே உரிய மிடுக்குடன் வாசனையை கலந்திருந்தான். இன்று குழந்தையை பார்க்க செல்லவேண்டும் என்று ஏற்கனவே சொல்லிவிட்டாள்தான் ஆனாலும் மீண்டும் ஒரு முறை நினைவூட்டுவது அவள் வழக்கமாக செய்தவது. ’ஒன் காலில்’ இருக்கிறாள் (one call என்று வாசிக்கவும் அல்லது ஒரு காலிலா என்று உங்களுக்கும் இப்போதே சிரிப்பு வரலாம்.) எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வரலாம். சிரித்த முகமாக இருப்பவர்களுக்கும் எல்லோருக்கும் நல்லவர்களாக இருக்க விரும்புகின்றவர்களுக்கும் இப்படியான முதலாளிகள் கிடைப்பது அவ்வளவு சிரமமில்லை.

    தாராளமாக விடுமுறை எடுத்துக்கொள்ளலாம், இன்று வேலை செய்ய போதுமான ஆட்கள் இருக்கிறார்கள் என்ற குறுஞ்செய்தியை படித்தவுடந்தான் ஏதோ திருப்தி வந்தது. இல்லாவிட்டாலும் உதவிக்கு சக பணியாளர்கள் இருக்கிறார்கள்தான். முதலாளியை விட கஸ்டமர்களின் கோவத்துக்குத்தான் பதில் கொடுக்க சிரமப்படுவார்கள். எப்போதும் தன்னால் மற்றவர்களுக்கு சிரமமேதும் வந்திடக்கூடாதென்ற மனம்தான் அவளை தனித்துக் காட்டும்.
செல்வி சகாயம் குடும்பத்தினர். கோலாலும்பூரில் இருக்கும் கோண்டோவில் வசிக்கிறார்கள். உள்ளே நுழைவற்கே காரணம் முதல் அடையாள அட்டை போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் உள்ளே நுழைவதற்கான மின்சார தடுப்பை திறப்பார்கள். அல்லது உள்ளே இருந்து ஒரு ஆள் வெளியில் வந்து பேசி அவர்களை கூட்டிச்செல்ல வேண்டும். இருபதாவது மாடியில் இருந்து இதுவரை ஒரு மாடி மேலேயும் சென்றதில்லை. ஒரு மாடி கீழேயும் சென்றதில்லை. மின்தூக்கியில் வேறேந்த பட்டன்களையும் அவள் தட்டியதில்லை. அவ்வபோது வேறு மாடிகளில் மின்தூக்கி நின்று கதவதை திறந்தாலும், எட்டிப்பார்ப்பதுமில்லை. குணிந்த தலை கொண்டவளை அந்த கோண்டோவில் யாருக்கும் சரியாக அடையாளம் தெரியாது.

    இப்படித்தான் ஒரு முறை அவளை சந்திக்க வந்தவரை அவளே அழைத்து செல்ல கீழறிங்கினாள். பாதுகாவலர்கள் அவளை அடையாளம் தெரியவில்லையென ஏதேதோ கேள்விகளைக் கேட்டு குடைந்துவிட்டார்கள். நல்லவேளையாக, கணவன் வீட்டிற்கு வரும் நேரம் என்ற படியால், சில நிமிடங்கள் காத்திருந்து மூவரும் ஒன்றாக வீட்டுக்கு வந்தார்கள். அப்போதுதான் உடன் வந்திருந்த சீனர் இந்த குடியிருப்பு பகுதியை குறித்து தனக்கு தெரிந்ததை சொன்னார். வழக்கமாக இங்கிருக்கும் சிலரை பார்க்க வரும்போது, இப்படி காக்க வைக்க மாட்டார்களாம் அவர்களே காரில் கூட்டிவந்து பின்னர் கூட்டிப்போவார்களாம். அதிலும் இந்த மின் தூக்கியில் நான்காம் எண் இல்லாத்தற்கு சொல்லப்படும் வழக்கமான கதையை சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் அவனுக்கு அதில் இருக்கும் நம்பிக்கையை இதுவரை யாராலும் உடைக்க முடியவில்லையாம்.

    செல்வியும் சகாயமும் குழந்தைக்கு கொடுப்பதற்கான விளையாட்டு சாமான்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். இப்போதிருக்கும் குழந்தைகளுக்கு அவுட்டர்மேன் பொம்மைகள் குறித்து ஒன்றுமே தெரிவதில்லை. அட ஆமாம், இங்கே அவுட்டர்மேன்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. உச்சக்கட்ட சண்டையில் அவுட்டர்மேன் கையில் காட்டும் சிலுவை மாதிரி குறிதான் பிரச்சனை என்று சிலர் சொல்லிகொண்டாலும், வன்முறை அதிகம் இருப்பது குழந்தைகளுக்கு தக்கதல்ல என்று செய்திகளை அரசாங்க ஊடகங்கள் சொல்லிக்கோண்டே இருந்தன. அவுட்டர்மேன்கள் செய்த வன்முறைகளைவிட ஊடகங்கள் காட்டிய படங்களும் பரப்பிய செய்திகளும்தான் குழந்தைகளுக்கு அச்சமூட்டுபவையாக இருந்தன.

   காற்றால் நிரம்பியிருந்த தேவதை பொம்மையை செல்வியும், படுத்துக் கொண்டு துப்பாக்கியில் சுடும் இராணுவ வீரன் பொம்மையை சகாயமும் எடுத்து வந்தார்கள். பின்னர் அவர்களுக்குள்ளாகவே பேசி இரண்டில் குறைந்த விலை கொண்டதை வாங்கிக்கொண்டார்கள்.

    இப்போதைக்கான பரபரப்பு சூழலில் குழந்தை, குழந்தைகள் காப்பகத்தில் இருப்பதுதான் எத்தனை பாதுகாப்பானது. தேவைப்படும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றாலும், மாதத்தில் மூன்று முதல் நான்கு நாட்களில் மட்டுமே கட்டாய விடுமுறை எடுக்க வாய்ப்பு கொண்ட சுமதிக்காக சகாயம் தங்கள் குழந்தையை பார்க்கும் நாளில் மட்டும் விடுமுறை என்று வீட்டில் இருப்பார். மற்ற நாளில் வேலை என்று வீட்டில் இருப்பார். நல்லவேளையாக சொந்த தொழில் செய்துவருவதால் சகாயம் எடுக்கும் ஒரு நாள் விடுமுறைகளுக்கு பாதிப்பு வரவில்லை. இன்னும் எத்தனை தொழில்களை தொடங்கலாம், அத்தனைகளையும் அவரும் அவரது கணினியும் கொண்டிருக்கின்றன, சில தொழில்கள் எப்படி நஷ்டமாகின்றன என்பதற்கு பெரிய பட்டியலே வைத்திருக்கிறார் சகாயம். நல்லவேளையாக அவர் தொடங்கிய ஆறாவதோ ஏழாவதோ தொழிலில் கொஞ்சம் வருமானம் இப்போது வருகிறது.

    காரில் செல்லும் போது பாடல்களை கேட்கும் வழக்கத்தை கொஞ்ச நாள் நிறுத்தியிருந்தார். தனக்கு விடுமுறை சொந்த கதையாக இருந்தாலும் மனைவிக்கு அவ்வாறில்லை. ஓவர் டைம் வேலையால் மட்டுமே கோலாலும்பூர் போன்ற பெருநகரங்களில் வாழ முடியும். இல்லையெனில் இருக்கவே இருக்கிறது பெருநகரங்களின் மறுமுனை பெருநரகம். எப்போதும் இரைச்சல், தூங்கவிடாத மோட்டார் உறுமல்கள், பூனைகளைவிட பெரிய எலிகள், பள்ளிச்சீருடைகளில் பலான காட்சிகள். ஏனப்பா இதுவெல்லாம் பெருநகரங்களில் இல்லையா என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். இருக்கிறதுதான் சில மாற்றங்களுடன். இரைச்சல் சத்தம் அவரவர் வீட்டு கதவுக்கு பின்னாலேயே நின்றுவிடுகிறது.மற்றவர்க்கு அது குறித்த அக்கறை இல்லை. மோட்டார்களை எங்கோ வைத்து எங்கோ இருக்கும் வீட்டுக்கு செல்ல வேண்டும். பூனைகளைவிட பெரிய எலிகளை பொறித்து தின்று செறிக்க பழகிவிட்டார்கள். பிறகு பள்ளிச்சீருடைகளின் பலான காட்சிகள் கண்ட இடங்களில் நடப்பதில்லை, பெரும்பாலும் அவரவர் சொந்த வீட்டு கட்டிலிலோ பள்ளிக்கு என சொல்லி வாங்கும் கட்டணத்திலே ஹோட்டல்களில் நடந்துவிடுகிறது. கிடைக்கும் நேரமெல்லாம் காரில் பயணிக்கும் போதுதான் என்றானபோது அதை செல்வியுடனான உரையாடல்களால் நிரப்பிக் கொள்வார் சகாயம். தன் வாழ்வில் எத்தனை சிக்கல்கள் ஏற்பட்டாலும் அதனையும் கலைவதற்கு செல்வி இருப்பதுதான் எத்தனை பாக்கியம். அவ்வபோது சகாயம் அவளுக்கு நன்றி சொல்ல மறப்பதே இல்லை. இதுவரை அவளுக்காக பெரிதாக ஒன்றும் செய்யவில்லையென்றாலும் அவள் மீதான அன்பு எப்போதும் ஏற்றமடைந்துக் கொண்டேதான் இருந்தது.

    குழந்தைகள் எல்லாம் ஆளுக்கொரு விளையாட்டு பொருள்களுடன் இருந்தார்கள். கீர்த்தரோஷன் மட்டும் கையுடைந்த யாரோ எப்போது விட்டுப்போன பொம்மையுடன் இருந்தான். கீர்த்தா… கீர்த்து கண்ணா, கீர்த்தூ…ரோஷன்… அய்யா ரோஷனு.. என்று ஆளுக்கு ஆள் அழைத்தார்கள். எதற்கும் அசைந்துக் கொடுக்கவில்லை குழந்தை. இதனை கவனித்த சீனக்கிழவி, ’கீத்தாலோசா’ என அழைக்கவும் சட்டென பிரக்ஞ்சை கொண்ட குழந்தை வாசலை பார்க்க அப்பா அம்மா வந்திருப்பது குதூகலப்படுத்தியது. கையுடைந்த பொம்மையை பத்திரமாக படுக்க வைத்து, தன்னுடைய போர்வையை அதற்கு கொடுத்து தூங்கச்சொல்லியப்பின் பெற்றோரிடம் வந்தான்.

    ஆசை தீர கொஞ்சியவர்கள் அவனை தூங்கவைத்து, அவன் தூங்கவைத்த கையுடந்த பொம்மையை எடுத்துவிட்டு தேவதை பொம்மையை படுக்க வைத்தார்கள். வாழ்வில் ஏதாவது பிடிப்பு இருக்கவேண்டியதின் அவசியத்தை குழந்தைகள் காட்டிவிடுகிறார்கள். வாழ்வின் குறிப்பிட்ட எல்லைவரை செல்ல முடிந்த தம்பதியர் குழந்தையென்ற சாவி கொண்டு அடுத்தடுத்த இன்ப கதவுகளை திறந்துச் செல்கிறார்கள். இப்போதெல்லாம் பெற்றுகொள்ளும் குழந்தைகளைவிட பெற்று கொல்லும் குழந்தைகள் எண்ணிக்கைதான் அதிகம். காண்டம் வாங்க வக்கில்லாவனுங்க எல்லாம் எதுக்கு……. சரி வேணாம் விடுங்க.

    புறப்படும் முன் சீனக்கிழவி அவர்களை நோக்கி வந்துக்கொண்டிருந்தாள். தான் காருக்கு செல்வதாக சொல்லிவிட்டு கிழவியிடம் கையசைத்துவிட்டு புறப்பட்டார் சகாயம். குழந்தை குறித்து சொல்லவேண்டியதெல்லாம் சொல்லிய பின், செல்வியின் உடல் நலம் குறித்து விசாரித்தாள். அவ்வபோது மருத்துவ பரிசோதனை செய்யும்படியும் கேட்டுக்கொண்ட சீனக்கிழவி, இன்னும் எத்தனை மாதம் குழந்தை இந்த காப்பகத்தில் இருக்கும் என விசாரித்தாள். அதற்காகவே காத்திருப்பது போல எஞ்சியிருக்கும் இரண்டு மாதங்களை சொன்னாள். ” எல்லாம் சரியாகிவிடும் நான் உன் குழந்தையை பார்த்துக்கறேன். நீயும் வந்துவந்து போ. ஒன்னும் பிரச்சனை இல்லை. இனிமேலாவது உன் புருசனை ஒழுங்கா இருக்க சொல்லு. அப்பறம், அவ்வளோதானே இல்ல.. அடுத்து வேற யெங்கயும் பார்த்துட்டாரா…” என்ற சீனக்கிழவி தன் கைபேசிக்கு அழைப்பு வந்ததும், அடுத்தமுறை பேசலாம் என செய்கை காட்டி திரும்பினாள். காரின் ஹார்ன் சத்தம் கேட்கும்வரை அப்படியே நின்றிருந்தாள் செல்வி.

கார் வீட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.

  ”ஆமா, அந்த கெழவிக்கு என்னாவாம்? எப்ப பார்த்தாலும் உன் கிட்டதான் வந்து பேசுது… ஏன் நான் இருக்கும் போது வந்து பேசாதாமா..?” என்றவன் பதிலை கொஞ்சமும் எதிர்ப்பார்க்காமல், ”ஆமா..ஆமா.. ரெண்டு பொம்பளைங்க.. என்னாத்த பேச போறிங்க.. எங்களை மாதிரி நாட்டு நடப்பையும் பிஸிசஸ் பத்தியுமா பேச போறிங்க..?, வீட்டுல தண்ணி இல்ல, காட்டுல பன்னி இல்லைன்னு எதையாவது ’கோசோங்கா’ பேசுவிங்க”

    கைபேசி ஒலித்தது, “சீக்கிரம் எடுத்து பாரு, சீனன் வேலைக்கு வர சொல்லிட போறான், அந்த வழியாதான் போவோம், இறக்கி விட்டுடறேன். இல்லைன்னா திரும்ப வரனும்.. எதுக்கு ரெண்டு வேல..”

   ‘Besok jgn dtg… polis masuk.. kita punya hal cukup..good luck’(நாளை வரவேண்டாம். போலிஸ். நம்ம கணக்கை இதோடு முடித்துக்கலாம்) என்று இருந்தது.படித்ததும் மெல்லிய புன்னகையில் விபரத்தை சொன்னாள். ஏதோ கணக்கிட்டவர். கைபேசியை எடுத்தார். எம் வரிசையில் ஒவ்வொரு பெயராக கீழக்கிறான். ’MR.லிம் 4’ என்ற எண்ணுக்கு அழைத்தார்.

    சீனத்தில் பேசினான். சகாயத்துக்கு கோவமாக வந்தது.
“பாரேன், இந்த எழவெடுத்தவனுங்கள…. ரெட் லைட் ஏரியாவ மூடிட்டானுங்களாம். இனி பிரிக்பீட்ல இருக்க முடியாதாம்… சீல் வச்சிட்டானுங்களாம்… நாசமா போறவனுங்க…”

செல்வி புன்னகைத்தாள். கார் வழக்கமாக செல்லும் வழியின்றி வேறு பாதைக்கு போகத்தொடங்கியது.

“அப்போ நாம வீட்டுக்கு போகலையா…?”

“இல்ல…”

”எங்க போறோம்?”

”ஏன் உனக்கு தெரியாதா..?”

சகாயம் கைபேசியில் ’மிஸ்டர் லிம் 3’ என்ற எண்ணுக்கு அழைத்தார். செல்வி மீண்டும் புன்னகைத்தாள் கண்கள் மட்டும் கலங்கின.


- தயாஜி -

நன்றி மலைகள்.காம் பிப்ரவரி 2016
http://malaigal.com/?p=7840

Popular Posts

Blogger templates

Categories

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்