பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

ஜூலை 05, 2020

ராஜா ராணி


    கல்யாண மண்டபம். விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மணமக்கள் மேடையிலும் மற்ற மக்கள் கீழும் அமர்ந்திருந்தார்கள். நான் தான் நிகழ்ச்சியில் அறிவிப்பாளர். 

   சில பாடகர்களும் நகைச்சுவை நடிகர்களும் இருந்தார்கள். ஒத்திகைக்கு ஏற்றவாறு  விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மணமக்களை வாழ்த்தவும் மொய் கொடுக்கவும் மேடைக்கு வரலாம் என்று அறிவித்தேன். வருசையில் நிற்கலானார்கள். சிலர் ஒரு பக்கம் சாப்பிடச் சென்றார்கள்

   பாடகி பாடிக்கொண்டிருந்தாள். நல்ல வேளையாக அப்போது ஏற்பட்டிருந்த இரைச்சலில் இந்த குயிலின் குரல் சரியாக கேட்கவில்லை. கேட்டிருந்தால், வந்தவர்கள் எல்லாம் கூவியிருப்பார்கள்.

   அப்போதுதான் அந்த முகத்தைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் அந்த முகம் நாசுக்காக தன்னை மறைத்துக் கொள்ள முயன்றது. நான் யோசிக்கலானேன். அட ஆமாம்! அது என் நண்பன் பிரபா. காலேஜ் நண்பன். அப்போது நான் , பிரபா, ராஜன் தான் நல்ல நண்பர்களாக இருந்தோம். எத்தனை சேட்டைகள் எத்தனை திட்டுகள். நாங்கள் மூவரும் தான் எப்போதும் ஒரு கூட்டணியாக இருப்போம். ஒன்றாக இருந்தோம். நன்றாகத்தான் இருந்தோம். 

   காலேஜ் முடிந்து நான் கோலாலும்பூர்க்கு வந்துவிட்டேன். ஒரு கட்டத்தில் எங்கள் தொடர்பு தடைபட்டுவிட்டது. பல வருடங்கள் கழித்து இப்போதுதான் பிரபாவைப் பார்க்கிறேன். இப்போதே ராஜனையும் பார்த்துவிட வேண்டும் என தேடலானேன்.

 பிரபா மணமேடையை நெருங்கிவிட்டான். இன்னமும் முகத்தை மறைப்பதிலேயே மும்முரம் காட்டிக்கொண்டிருந்தான். இப்போதுதான் கவனித்தேன். அவன் ஏதோ பெண்ணுடன் வந்திருக்கிறான். மனைவியோ காதலியோ அப்படித்தான் தெரிந்தது. இருவரும் ராஜா ராணி போல பொருத்தமான உடையணிந்திருந்தார்கள்.

   அந்த பெண்ணும் பார்ப்பதற்கு அழகாகத்தான் இருந்தாள். ஆனால் அவள் ஏன் என்னை இப்படி பார்க்கிறாள். பிரபா என்ன சொல்லியிருப்பான் என யூகிக்க முடியவில்லை. அந்த பார்வையில் ஏதோ ஒன்று இருந்தது. இப்போது நான் என் முகத்தை மறைத்துக் கொள்ள இடம் தேடும்படி ஆனது.

   மணமக்களை வாழ்த்தி இருவரும் கீழே இறங்க வந்தார்கள். நான் அங்கே நின்றுக் கொண்டிருந்தேன். சட்டென "பிரபா.." என அழைக்கவும் செய்தேன். இப்போதுதான் என்னை பார்ப்பது போன்ற பாவனையில் அதிர்ச்சியாகி ஏதேதோ உளறினான். 

   நிலமையை சமாளிப்பதற்காக, "உன்னை பார்த்துட்டேன்.... ராஜனை எப்ப பார்ப்பேன்னு தெரியல...?" என்றேன்.

   சட்டென " டேய் மணி நான் தாண்டா... என்னை தெரியலையா உனக்கு... " என்று கேட்டு பிரபாவுடன் வந்திருந்த பெண் சிரிக்கலானான். அந்த சிரிப்பும் குரலும்  அப்படியே ராஜன் தான்.

#தயாஜி

ஜூலை 04, 2020

ஆகாயம் தொட்ட மரம்


    தங்களின் மூதாதையர்கள் அதில் வாழ்வதாக நம்புகிறார்கள். தினமும் அந்த மரத்தை வணங்குவதுதான் முதல் வேலை. தேவைக்கு ஏற்ற மழையும் தேவையான உணவும் அவர்களுக்கு கிடைத்துக் கொண்டே இருந்தன. அந்த மரம் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

   வியாதிகள் அவர்களை ஒன்றும் செய்வதில்லை. அந்த இலைகளைத் தொட்டு வீசும் காற்று அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. அந்த மரத்தைச் சுற்றிலும் வந்திருக்கும் செம்மண் வளையத்தில் வந்துவிட்ட எந்த மிருகத்தையும் அவர்கள் வேட்டையாடுவதில்லை. 

   அதைவிட அதிசயம் அங்கு நுழைந்து நிற்கும் எந்த மிருகமும் அங்கு நடமாடும் யாவரையும் சீண்டுவதில்லை. ஒரு முறை அங்கு நுழைந்துவிட்ட காண்டா மிருகம், ஒரு முயல் போல தன்னை நினைத்து சில மணி நேரம் அந்த செம்மண் வளையத்தில் உள்ள குழந்தைகளிடம் விளையாடிவிட்டுச் சென்றது.

   வான் தொடும் அந்த மரத்துடன் வாழ்வதை அவர்களின் வரமாக நினைத்தார்கள். அவர்களின் வாழ்வும் அதுதான். அவர்கள் வணங்கும் கடவுளும் அதுதான். 

    நாகரீகமும் சுகாதாரமும் இல்லாத அவர்கள் மீது அரசாங்கள் ஒரு நாள் அக்கறை காட்டியது. அவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டது. அவர்கள் வாழ்வில் முன்னேற பல திட்டங்களை வகுத்தது. 

இன்று,

    அந்த மரம் முளைத்திருந்த இடத்தில் ஒரு ரசாயண தொழிற்சாலை வந்திருக்கிறது. இதற்கு முன் அங்கு மனிதர்கள் வாழ்ந்த எந்த அடையாளத்தையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

#தயாஜிஜூலை 03, 2020

வினோத ஜாலக்கண்ணாடி


   பழைய புத்தகக்கடையில் வாங்கியது. சாக்லெட் நிற கெட்டி அட்டை. மஞ்சள் படிந்த பக்கங்கள். 'வினோத ஜாலக்கண்ணாடி' என்னும் தலைப்பே அவனை வசீகரித்தது. வேறேதும் காரணம் சரியாக தெரிந்திருக்கவில்லை. ஏதோ ஈர்ப்பு இருந்திருக்க வேண்டும்.

   கட்டிலில் படுத்திருக்கிறான். பக்கத்தில் அந்த புத்தகம். அதனையே பார்த்துக் கொண்டிருக்கிறான். கடைக்காரருக்கே இந்த புத்தகம் பற்றி தெரியவில்லை. எப்போதோ யாரோ வந்து பழைய நாளிதழ்களுடன் எடைக்கு போட்டிருக்கிறார்கள். சமயங்களில் அங்கு சில அரிய வகை புத்தகங்கள் புகைப்படங்கள் கிடைக்கும் என்பதால் அவ்வழியே செல்லும் சமயத்தில் அக்கடைக்கு சென்று பார்வையிடுவது அவனுக்கு வழக்கம்.

   புத்தககத்தை எடுத்தான். முதல் பக்கத்தைத் திறந்தான். காலி. இரண்டாம் பக்கத்தைத் திறக்கிறான். காலி. இடையிடையே சில பக்கங்களைத் திறக்கிறான். காலி. காலி. காலி. மூடிவிட்டான். 

   அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது. கடையில் புத்தகத்தை வாங்கும் போது , பக்கங்களைப் புரட்டினான். அதில் ஓவியங்களும் சில சமஸ்கிருத எழுத்துகளும் ஆங்காங்கு கையெழுத்தில் என குறிப்புகளும் தமிழில் எழுதப்பட்டிருந்தன.

  மீண்டும் புத்தகத்தைத் திறக்கிறான். ஆச்சர்யம். கடையில் பார்த்தது போல எழுத்துகள் இருந்தன. 

   அவன் திருந்திருந்த பக்கத்தில் உள்ள கையெழுத்து குறிப்புகளைப் படிக்க ஆரம்பித்தான். முன்னுக்கு பின் வாக்கியங்கள் முரணாக குழப்பம் கொடுப்பவையாக இருந்தன.

   கையில் சொடுக்கு போட்டுக்கொண்டே அந்த புரியாத வார்த்தைகளை வாசிக்கிறான். ஒரு சொடுக்கில் நிறுத்தினான். அவனால் நம்ப முடியவில்லை. அவன் கைக்கு நேராக இருந்த மீன் தொட்டியில் உள்ள மீன் அப்படியே சிலையாக நிற்கிறது. தண்ணீரில் அசைவில்லை. தொட்டியில் உள்ள நீர்க்குமிழிகளும் அப்படியே ஸ்தம்பித்துவிட்டன.

   தன் கையைப் பார்க்கிறான். மீண்டும் சொடுக்கு போட்டான். எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன. மேலே சுற்றிக்கொண்டிருக்கும் காற்றாடியைப் பார்க்கிறான். சொடுக்கு போட நிற்கிறது. அடுத்த சொடுக்கில் சுற்றுகிறது.

   முழுதும் படிக்காமல் புத்தகத்தை மூடி வைத்தான். 

   கட்டிலில் இருந்து துள்ளி குதிக்கிறான். எதிரே இருந்த ஆள் உயர கண்ணாடியில் நிற்கிறான். அவன் கைகள் பரபரத்தன. எவ்வளவு பெரிய விடயம் இது. இனி தான் செய்யப்போகும் காரியங்கள் அவன் கண் முன்னே நின்றும் நடந்தும் காட்டின.

  சொடுக்கு போட்ட கைக்கு முத்தம் கொடுக்கிறான். உணர்ச்சிவசப்பட்டு கண்ணாடி முன் சொடுக்கு போட்டான்.

  அவ்வுருவம் அப்படியே நின்றுவிட்டது. இப்போது அவனால் அவன் கையை மட்டுமல்ல அவன் கண் விழியைக் கூட அசைக்க முடியவில்லை. மூடியப் போவதுமில்லை.

#தயாஜி

ஜூலை 02, 2020

போர் வீரனின் பரிசு


     இன்று பொம்மிக்கு பிறந்தநாள். ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதுதான் வாய்ப்பு கிடைத்தது. பிரிவு என்பது எத்தனை சிறிய சொல். ஆனால் எத்தனை அடர்த்தி நிறைந்தது. பொம்மிக்கு இன்றோடு பத்து வயது பூர்த்தியாகிறது.

     இப்போது அவளுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என எனக்கு தெரியவில்லை. அவள் முகம் எப்படி மாறியிருக்கும்? அவ்வபோது அவள் எப்படித்தான் இருப்பாள் என யோசித்துக் கொள்வேன்.

    குண்டு கண்கள். குழிவிழும் கன்னங்கள். சிவந்த உதடு. சீவக்கலையும் தலை முடி. மெலிதான அழுகை. ரசிக்க வைக்கும் சிரிப்பு. இன்னும் எத்தனையோ கற்பனைத் திரையில் பார்த்துக் கொண்டேன்.

     அன்றும் இதே நாளில்தான் அவளுக்கு பிறந்த நாள் பரிசு வாங்க சென்றிருந்தேன்.   பள்ளிக்கு போவதில் ஆர்வம் காட்டியதால், பள்ளிப்பை ஒன்றை வாங்கிக் கொண்டேன். சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் போது, சட்டென ஆளுக்கு ஆள் பரபரப்பாக ஓடத்தொடங்கினார்கள்.

    யுத்தம் வரலாம் என்கிற தகவல் கொடுக்கப்பட்டது. தகவலை இன்னொருவருக்குச் சொல்லிக் கொள்ளக் கூட நேரம் வாய்க்கவில்லை. சாலையில் பெரிய லாரிகள் வந்தன. கண்ணில் படுகின்ற ஆண்கள் எல்லாரையும் பிடித்துக் கொண்டார்கள். லாரி மூழுக்க எங்களை நிரப்பினார்கள். ஒரே நாள் எங்கள் இயல்பு வாழ்வு இல்லாமல் போனது.

   தொடர்ந்து ஐந்து ஆண்டுகள். வெளியுலக தொடர்பே இல்லை. அறிமுகம் இல்லாத இடத்தில் இருந்தோம். எங்களை,  யுத்தங்களுக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். புதுப்புது பயிற்சிகள் கொடுத்தார்கள். நவீன இயந்திர துப்பாக்கிகளைப் பயன்படுத்தக் கொடுத்தார்கள். வெடிகுண்டுகள், கன்னிவெடிகள் போன்றவற்றை  பரிசோதிக்கச் சொன்னார்கள்.

    யுத்தத்திற்கான தயார் நிலையிலேயே நாங்கள் நிலைகுத்திப் போனோம். எங்களில் சிலர் பயிற்சியின் கடினம் தாங்காது இறந்தும் போனார்கள். கடைசிவரை யுத்தம் வரவேயில்லை. யுத்தம் வரலாம் என சந்தேகித்த எதிரி நாட்டு அதிபரின் நட்பு கிடைத்து விட்டதால் நாங்கள் தப்பித்தோம். அப்போது புதிதாக பதவி ஏற்றவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எங்களில் சிலருக்கு சில நாட்களுக்கு விடுப்பு கொடுத்தார். 

    அவர்களே எங்களை லாரியில் அனுப்பி வைத்தார்கள். பணமும் கொடுத்தார்கள். 
ஐந்து ஆண்டுகளாக பாதுகாத்து வைத்த பொம்மிக்கு வாங்கியிருந்த பள்ளிப்பையுடன் சாலையில் நடந்துக் கொண்டிருந்தேன். என் தோளில் மாட்டியிருந்த புத்தகப்பை , பொம்மியை சுமந்திருப்பது போல இருந்தது. என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. 

    அதோ என் வீடு தெரிகிறது. ஐயோ என்ன இது இப்படி சிதைந்துப் போயிருக்கிறதே. இப்போதுதான் என்னால் சூழலை கவனிக்க முடிந்தது. எங்கும் மரண ஓலத்தின் எதிரொலி. வீடுகளே இல்லை. எல்லாம் வெறும் சுவர்களாகக் கிடக்கின்றன. எல்லாமோ அலங்கோலமாக இருந்தன. நான் ஸ்தம்பித்தேன். 

    எதிரே சில கார்கள் வரிசையாய் வருகின்றன. அதற்கு முன் ஒரு லாரி செல்கிறது. அதிலிருந்த ஒலி பெருக்கியில் எதையோ சொல்கிறார்கள்.
'யுத்தம் நடந்த இடத்தை இரு நாட்டு அதிபர்களும் பார்வையிட வருகிறார்கள். இனி யுத்தம் பற்றிய பயம் நமக்கு இல்லை..'

     கடைசி காரில் இரு நபர்கள் வெள்ளைக் கொடியைக் காட்டிக் கொண்டு சிரிக்கிறார்கள்.


#தயாஜி

ஜூலை 01, 2020

எதற்கும் ஒரு விலை உண்டு...

   தூக்குவதில் சிரமம் இருபின்னால்னாலும் பாதியில் விட முடியாதே. எடுத்துவிட்டான். பிடித்துக்கொண்டான். ஓடுகிறான். நிற்க கூடாத ஓட்டம். இந்த வேகத்தில் ஓடினால் மட்டுமே தன் முகம் அவ்வளவாக பிறர்க்கு அடையாளம் தெரியாது.

    சில நாட்களாக அந்த கருப்பு அங்கி மனிதனை இவன் கவனித்துக் கொண்டு வருகிறான். தினம் மாலை நான்கு மணிக்கு வருவார். அங்கிருக்கும் நாற்காலியில் அமர்ந்துக்கொள்வார். போவோர் வருவோர் முகத்தில் எதையோ தேடுவார். தலை அங்குட்டும் இங்குட்டும் ஆடினாலும், கைப்பிடி மட்டும் அந்த பெட்டியில் இருக்கும். இரவு ஏழு மணிவரை அங்கிருப்பார். சட்டென அவனது கண்களில் இருந்து காணாமல் போய்விடுவார். தொடர்ந்து மூன்று நாட்களாக கவனிக்கிறான். எங்கிருந்து வருகிறார் எப்படி போகிறார் என அவனுக்குத் தெரிவதில்லை. நான்கு மணிக்கு இருப்பார். ஏழு மணிக்கு இருக்கமாட்டார்.

    அவனுக்கு அந்த மனிதன் மீது சந்தேகம் எழுந்தது. யாரை தேடுகிறார். எதற்கு தேடுகிறார். பெட்டியில் என்ன வைத்திருக்கிறார். ஏன் பெட்டியை இத்தனை ஜாக்கிரதையாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

    ஆக அந்த பெட்டியில் யாருக்கோ கொடுக்கவேண்டிய ஏதோ ஒன்று இருக்கிறது. அது பாதுகாக்கப் படுகிறது. அப்படியானால் நிச்சயம் அதற்கு ஒரு விலை உண்டு.

   மாலை மணி 4.01. அந்த மனிதர் இருக்கிறார். பழையடி அவரின் காத்திருப்பும் கைப்பிடியும் தொடர்கிறது. அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனிக்கிறான்.

   மாலை மணி 6.55. பெட்டியுடன் ஓடிக் கொண்டிருக்கிறான். அவன் இடம் வந்து விட்டது. இத்தனை வேகமாய் உசேன் போல்ட் கூட ஓடி வந்திருக்க முடியாது. மூச்சு வாங்கியது. அதுவா முக்கியம். இந்த பெட்டிதான் முக்கியம். அதிலுள்ள ஏதோ ஒன்றுதான் முக்கியம்.

   பாரத்தை வைத்தே, ஒரு வேளை தங்க கட்டிகளாக இருக்கலாம் என யூகித்திருந்தான். மேஜை மீது பெட்டியை வைத்தான். நன்றாக துடைத்துக் கொண்டான். வழக்கம் போல பூட்டுகளைத் திறக்கும் கம்பிகளைக் கொண்டு தன் வித்தையைக் காட்டுகிறான். ஆச்சரியம். ஒரே அழுத்தத்தில் பெட்டி திறந்துக் கொண்டது. அவசரத்தில் திறக்க, பலமான காற்று முகத்தில் அடித்தது. கண்களில் தூசு விழுந்துவிட்டது.

   முடியபடி நன்றாகவும் வேகமாகவும் கண்களைக் கசக்கிக்கொள்கிறான். திறக்கிறான். பெட்டி காலியாக இருக்கிறது. எப்படி சாத்தியம்.!! காலி பெட்டியாக இருக்க வாய்ப்பே இல்லை. பெட்டியை துக்கிப் பார்த்தான். பாரமே இல்லை. பெட்டியை மேலும் கீழும் குலுக்கிக் கொண்டிருக்கிறான்.

   பெட்டியில் ஏதோ இருக்கிறது. அது எங்கிருக்கிறது என அவனுக்கு பிடிபடவில்லை. பதட்டமாகிறான்.

    அவன் தன் பின்னால் திரும்பாதவரை அங்கு  நின்றுக் கொண்டுக்கும் உருவத்தை அவன் தெரிந்துக் கொள்ளப் போவதில்லை...


#தயாஜி

ஜூன் 30, 2020

சர்க்கஸ் துப்பாக்கி


    உண்மையில் சாகசம்தான். நூறு மீட்டர் தூரத்தில் இருந்தாலும் குறி தப்பவில்லை. நின்றிருக்கும் வட்ட மேஜையில் அவள் சுழன்றுக் கொண்டிருந்தாள். மிகச் சரியாக  கைக்கு அருகில், காலுக்கு அருகில், கழுத்திற்கு அருகில் என, சுடும் துப்பாகி குண்டு சரியாகப் பட்டது.

   அந்த துப்பாக்கி சுடும் சாகச விளையாட்டைப் பார்த்து பலர் மெய் மறந்தார்கள். ஆரவாரம் செய்தார்கள். ஆனால் ஒருவன் மட்டும் அந்த துப்பாக்கியையே ஒரு சாகசமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இருந்த இடத்திலிருந்து துப்பாக்கி ஓரளவிற்கு தெரிந்தது. ஏனெனில் அதில்தான் அவனது எதிர்காலம் இருக்கிறது.

    அவன் புதிய கொள்ளைக்காரன். அப்படித்தான் அவன் தன்னைச் சொல்லிக் கொள்கிறான்.  திருடுகள் முடிந்து அடுத்த படிநிலைக்கான சமயம். ஆனால்  அதற்கு ஒரு துப்பாக்கி வேண்டும். அது சுடவும் வேண்டும். இப்போதைய பொருளாதார சூழலில் துப்பாக்கிக்கான குண்டைக்கூட வாங்க முடியாது. எங்கிருந்து துப்பாக்கி!! திருடர்கள் அதிகமாகிவிட்டதால் தொழில் போட்டியை சமாளிக்க வேண்டிய கட்டாயம்.

    அப்போதுதான் அந்த சர்க்கசின் சாகச விளையாட்டு பற்றி தெரிந்தது. பாதி கிழிந்திருந்த சுவர் விளம்பரத்தில் 'நூறு மீட்டர் தூரத்திலும் குறி தவறாமல் சுடும் சாகசம்!!!' என இருந்தது. இந்த விளம்பரம் தான் அவனுக்கு அந்த துப்பாக்கி மீது ஆர்வத்தைத் தூண்டியது. தனது கொள்ளையடிக்கும் திட்டத்திற்கு இந்த துப்பாக்கி போதுமானது. அதோடு, சிக்கல் இன்றி திருடிவிடலாம். அன்றே தயாரானான்.

    திட்டம் வெற்றி. திருடி விட்டான். தனது அடுத்த கொள்ளையடிக்கும் திட்டத்திற்கு ஏற்ற 'உ-சிவமயம்' போடப்பட்டது.

   சர்க்கஸ் கூடாரத்தில் இருந்து வெளியேறும் சமயம். கோமாளி ஒருவன் பார்த்து சத்தம் போட, பாதி கலைத்த ஒப்பனை முகங்களுடன் அவன் முன் கலைஞர்கள் வந்துவிட்டார்கள். தப்பிக்க வேண்டும். நல்லவேளையாக இவன் முகத்திலும் ஒப்பனை இருந்ததால் சரியாக அடையாளம் தெரியவில்லை. அவனுக்கு இப்போது சுடுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை. 

   யாரும் அவனுக்கு பயப்படவில்லை. ஒரிஜினல் முகத்தில் வந்திருந்தாலாவது கொஞ்சம் பயம் காட்டியிருக்கலாம். கோவம் வந்துவிட்டது . கொஞ்சமும் யோசிக்காமல் துப்பாக்கியை எடுத்து எதிரில் நிற்பவரை சுட்டான். 

    வெடி சத்தம் பெரிதாகக் கேட்டது. எதிரில் நின்றவருக்கு சிறிதாகக்கூட காயம் ஏற்படவில்லை. ஆனால் சுட்டவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுகிறான்.

    அங்கு, 'பின்னால் சுடும் துப்பாக்கி' என்று அந்த விளம்பரத்தில் இருப்பது இப்போதுதான் அவன் கண்களுக்கு முழுவதுமாகத் தெரிகிறது...


#தயாஜி

ஜூன் 29, 2020

ஆளுக்கொரு ஆசை


     இன்னும் நான்கு எண்கள் உள்ளன. உள்ளே போனவர்கள் அங்கேயே தூங்கிவிட்டார்களா தெரியவில்லை. மீதமுள்ள நான்கு பேர்களும் உள்ளே சென்று வருவதற்குள் நான் தூங்கிவிடுவேன் போல. என முணுமுணுத்துக் கொண்டே இருந்தான் கேசவன்.

    கைராசியாக மருத்துவர். பலரும் இவரது மருத்துவத்தாலும் ஆலோசனைகளாலும் குழந்தைகளுடன் நடமாடும் சாட்சியாக இருக்கிறார்கள். கோவில் குளம் என மனைவி விரும்பினாலும், விஞ்ஞானமே விடை என நம்பும் கேசவன் இங்கு கூட்டி வந்து விட்டான். இப்போது கூட மனைவி, டாக்டர் நல்ல செய்தியைச் சொல்ல வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறாள். 

    அவர்கள் முறை வந்தது. உள்ளே சென்றார்கள். இருவரையும் பேசவிட்ட மருத்துவர், உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார். அவரிடம் மெல்லிய சிரிப்பும் அவ்வபோது ஆமோதிக்கும் தலையசைப்பும் இருந்தது.

    அரைமணி நேரத்தில் அவர்களின் முறை முடிந்தது. கையில் மருந்துச் சீட்டையும் தலையில் பல ஆலோசனைச் சீட்டுகளையும் எடுத்துக் கொண்டு கேசவனும், நல்ல வழியை கடவுள் காட்டியுள்ளார் என்கிற ஒற்றை பிரார்த்தனையை மனைவியும் சுமந்துக் கொண்டு வெளியேறினார்கள்.

  குழந்தைப்பேறுக்காக தற்காலிய மருத்துவராக மாறியிருந்த கேசவன். தன் அறையில் மினி மருந்தகத்தை உருவாக்கியிருந்தான். 

    இரண்டு நாட்களில் அவன் அந்த அதிர்ச்சியை எதிர்ப்பார்க்கவில்லை. ஏதோ கோவிலில் அந்த கை ராசிக்கார மருத்துவர் விளக்கேற்றி வைத்து நின்றுக் கொண்டிருந்தார். கேசவனுக்கு கோவம் வந்துவிட்டது. இப்படி மருத்துவரே மூட நம்பிக்கையை சுமந்துக் கொண்டிருக்கலாமா? தன் வேலை வெட்டியை மறந்து மருத்துவரிடம் சென்றான்.

     மருத்துவர் அவனை கண்டதும், பழைய புன்னகையுடன் நலம் விசாரித்தார். மருந்து மாத்திரைகள் குறித்துக் கேட்டார். தானும் தன் மனைவிக்காகத்தான் இங்கு வந்திருப்பதாக கூறி, அவரை காட்ட முயன்றார். கேசவனுக்கு பொறுமை இல்லை. தன் மனதில் தோன்றியதை சட்டென போட்டு உடைத்துவிட்டான்.

   புன்னகையில் கொஞ்சமும் மாறுதல் இல்லாமல் மருத்துவர்,
"இதுல என்ன சிக்கல் இருக்கு... என் மருந்தை அவங்க எடுத்துக்கறாங்க.. அவங்க பிரார்த்தனையை நான் எடுத்துக்கறேன்." என்றார்.

"புரியல..டாக்டர்!!!" 

மருத்துவரின் புன்னகை ஆழமாகியது.

   "ம்.... என்னோட அறிவுக்கு மரியாதை கொடுக்கறவங்களோட நம்பிக்கைக்கு மரியாதை கொடுக்கறேன் அவ்வளவு தான்... ஏன்னா இது எங்க ரெண்டு பேரோட வாழ்க்கை... ரெண்டு பேருக்குமே சம பங்கும் இருக்கு, தனித்தனி அனுபவங்களும் இருக்கு.....

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்