- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 15/20
மலேசியா வருகிறார் பெருமாள்முருகன்
பெருமாள்முருகன் சிறுகதை ‘பரிகாரம்’ 15/20
முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.
***************************************
ஏன் கதை எழுதுதப்படுகின்றன? என்று நான் அடிக்கடி கேட்டுக்கொள்வேன். ‘நான் ஏன் எழுதுகிறேன்?’ என்பதற்கும் ‘ஏன் கதைகள் எழுதப்படுகின்றன?’ என்பதற்கும் பதில்கள் ஒரே மாதிரி வருவதில்லை. ஏன் எழுதுகிறேன் என்பதற்கு கொடுக்கும் பதில்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அமைகிறது. அது அவரவர் எதை நம்புகிறார்களோ அதைப் பொறுத்தது. அதற்கு மாறாக; ஏன் எழுதப்படுகின்றன என்ற கேள்விக்கு பெரும்பாலும் ஒரே மாதிரி பதில்கள்தான் கிடைக்கின்றன.
அது, தன் சக மனிதனுக்கு வாழ்க்கையின் மீதான நம்பிக்கையைக் கொடுப்பதற்காக; நிதர்சனத்தை முகத்தில் அறைந்தார்ப்போல சொல்வதற்காக; இதற்கெல்லாமா அழுவாய் என அரவணைப்பதற்காக என வரும் பதில்களைப் பின்தொடரும்போது அந்த பதில்கள் ஒவ்வொன்றும் ஓர் இலக்கை நோக்கி பயணிப்பதை நான் அறிந்து கொள்ளலாம். அதுதான் ‘சக மனிதன்’.
எழுதப்படுவது எல்லாமே சக மனிதனிடம் ‘எழுத்து’ வழி உரையாடுவதற்குதான்.
சிலவற்றை அன்பாகவும் சிலவற்றை அதட்டியும் சொல்லவேண்டியுள்ளது. சிலருக்கு அப்படியும் சிலருக்கு இப்படியும் புரியும். முகத்தில் அறைந்தபடி சொல்லும் வாழ்வின் நிதர்சனம் எல்லோருக்கும் பெரிய மன வெடிப்பிற்கு பின் புரிகிறது.
அப்படியொரு அறைதான் பெருமாள்முருகனின் இந்தக் கதை.
பெருமாள்முருகன் சிறுகதை, ‘ஒளி’ 15/20
ஒரே கதையில் இரு கதைகளுக்கான திறப்புகளைக் கொண்டிருக்கும் கதையாக இதனைப் பார்க்கிறேன். வழக்கமாக கதை எழுதுகிறவர்களிடம் ஒரு சிக்கல் இருக்கும். அவர்கள் எழுதும் கதை ஓரிடத்தில் முடிந்துவிடும். அக்கதையை வாசிக்கும் நமக்கு அது நன்றாகவே தெரியும். ஆனால் அந்த எழுத்தாளரோ, தேவையே இல்லாமல் அந்தக் கதையை மேலும் அரை பக்கம் முதல் ஒரு பக்கம் வரை நீண்டு எழுதுவார். அதாவது அவர் எழுதிய கதை முடிவை வாசகர்கள் புரிந்து கொள்ளாமல் போய்விடுவார்களோ என்று பயந்து அவர் எழுதிய கதையின் முடிவிற்கு அவரே இன்னும் ஒரு பக்கத்திற்கு விளக்கவுரையை எழுதுவார்.
ஆனால் எழுதிப் பழகிய எழுத்தாளர்களிடம் அந்த சிக்கலைப் பார்ப்பது ரொம்பவும் அறிது. அப்படி இருந்தாலும் அதுவும் கதையின் ஒரு காரணத்தைக் கொண்டிருக்கும்.
பெருமாள்முருகன் எழுதியிருக்கும் ‘ஒளி’ சிறுகதை கொஞ்சம் தடுமாறியிருந்தால் அந்தச் சிக்கலை சந்தித்திருக்கக் கூடும். ஆனால் அவர் எழுதிய விதம் இருவேறு முடிவுகள் குறித்து சிந்திக்க வாசகர்களை இழுத்துச் செல்கிறது.
நாயகனின் தந்தை இறந்துவிடுகிறார். அவரின் நினைவுகளால் நாயகனின் மனம் அலைக்கழிக்கிறது. அந்த மரணத்தை குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என எழுத்தாளார் படிப்படியாகச் சொல்கிறார். அப்பா இறந்த மறுநாளே அவர் பயன்படுத்திய வண்டியை சின்னண்ணன் விற்க முற்படுகின்றார். அந்த வாகனத்தில் ஏற்பட்ட விபத்தால்தான் தன் கணவர் இறந்ததால் அதனை வீட்டில் வைக்க வேண்டாம் என அம்மா சொல்கிறார். அந்த வாகனத்தைப் பார்க்கும் போதெல்லாம் அப்பா இறந்தது நினைவிற்கு வரும் எனவே அந்த வாகனம் இனி வேண்டாம் என்கிறார் பெரியண்ணன்.
ஆனால் நாயகனின் எண்ணமோ வேறாக இருக்கிறது.
அப்பாவின் அந்த வாகனம் வீட்டில் இருந்தால் அப்பாவே வீட்டில் இருப்பது போல இருக்குமே என நாயகன் நினைக்கிறான். இப்படியாக தந்தையின் திடீர் மரணம் அவருடனான பல நினைவுகளை மீண்டெழ வைக்கிறது. என்ன இருந்தாலும் கடந்துதானே போகவேண்டும் என சுற்றி இருப்பவர்கள் சொன்னாலும்கூட நாயகனின் மனம் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
அப்பா இறந்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில், நாயகனை ஆசுவாசப்படுத்த அவனது நண்பன் அவனை திரையரங்கிற்கு அழைக்கின்றன். நாயகனின் அப்பாவிற்கு பிடித்த கதாநாயகன் என்பதையெல்லாம் கூறி நண்பனும் வீட்டில் உள்ளவர்களும் நாயகனை திரைப்படத்திற்கு செல்லச் சொல்கிறார்கள். அது அப்பாவையும் மகிழ்ச்சிப்படுத்தும் என்ற எண்ணத்தில் நாயகன் செல்கிறான்.
சுடுகாட்டை கடந்துதான் திரையரங்கிற்குச் செல்லவேண்டும். செல்லும்போதே படம் பார்த்துவிட்டு திரும்பும்போது அப்பாவின் சமாதியின் முன் அமர்ந்து அந்தப் படத்தின் கதையைச் சொன்னால் அப்பாவின் ஆன்மா சாந்தியடையும் என நினைக்கிறான்.
படம் முடிந்து அதே சுடுகாட்டு வழியில் வருகிறான் நாயகன். அங்கு அந்த இரவு நேரத்தில் நாயகனுக்கு யாரோ அழைப்பது போல கேட்கிறது. அது அவனது அப்பாவின் குரல். “என்னய்யா படம் நல்லாருந்ததா?” என அப்பா கேட்கிறார்.
இதோடு எழுத்தாளர் சிறுகதையை முடித்திருக்கலாம். இறந்தவர் எங்கும் போகவில்லை நம்முடந்தான் இருக்கிறார்கள் என்கிற செய்தியை வாசகர்கள் புரிந்து கொள்ளக்கூடும். வாசிக்கும் நமக்கும் அது ஒரு மனநிறைவைக் கொடுக்கும். ஆனால் அது போலியான மனநிறைவு. மனதளவில் நாம் அதனை முழுவதுமாக ஏற்க மறுக்கின்றோம். இறந்ததும் ‘பிணத்தை’ எப்போது எடுக்கிறார்கள் என கேட்பதும் அதனால்தான்.
எழுத்தாளர் இந்தக் கதையை இங்கேயே முடிக்கவில்லை. தொடர்கிறார். அது வாழ்வின் நிதர்சனத்தை நம் முகத்தில் அறைந்தார்ப்போல சொல்கிறது.
அப்பாவின் குரல் கேட்டதும் பயந்தடித்துக்கொண்டு சைக்கிளை இதுவரை மிதிக்காத வேகத்தில் மிதித்து வீட்டுக்கு போகிறான் மகன்.
வீட்டின் முன் சென்றவன் பின்னால் திரும்பி பார்க்கிறான். இருளில் அப்பாவின் உருவம் அப்படியே தெரிகிறது. அதுவும் மகனை பாசத்தோடு ‘வாய்யா..’ என கூப்பிடவும் செய்கிறது. மகனை கூப்பிட்டுக்கொண்டு அப்பா பின்னாலேயே வந்துவிட்டார்.
நாயகனோ அலறியடித்துக்கொண்டு சைக்கிளை அப்படியே கீழே போட்டுவிட்டு “அம்மா… அம்மா…” என்று கத்திக்கொண்டே வெளிச்சத்திற்குள் ஓடுவதாக கதையை முடிக்கின்றார் எழுத்தாளர்.
மரணம் என்பதை ஒருபோதும் தவிர்க்க முடியாது; யாருமே அதனை எதிர்க்கொண்டுதான் ஆகவேண்டும் என்கிற உண்மையை எல்லோருக்குமே சொல்கிறார். எந்த உறவாக இருந்தாலும் இறந்த பின் பிணமாகவும் அதற்கு பின் பேயாக மாறிப்போவதையும் நாம் எல்லோருமே தெரிந்துதான் வைத்திருக்கிறோம்.
ஆனால் உடனே அந்த உண்மை நமக்கு புலப்படுவதில்லைதானே.
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக