- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 16/20
மலேசியா வருகிறார் பெருமாள்முருகன்
பெருமாள்முருகன் சிறுகதை, ‘வீராப்பு’ 16/20
முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.
***************************************
‘குடி குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்’ என்று சொல்லிச்சொல்லி அலுத்துவிட்டோம். விற்கிறவர்களும் கேட்பதில்லை வாங்குகிறவர்களும் கேட்கதில்லை. அதற்கு லைசன்ஸ் கொடுக்கிறவர்களும் கேட்பதில்லை.
அதனால்தான் என்னவோ குடிப்பழக்கம் குறித்தும் அதன் விளைவுகளைக் குறித்தும் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அதைவிட குடியின் கொண்டாட்டத்தை எழுதுகிறவர்களும் பாடுகிறவர்களும் அதிகரிக்கவே செய்கிறார்கள்.
பல ஆண்டுகளாக குடிப்பவர்கள் கூட அத்தனை மோசமான நிலையை அடைவதில்லை. ஆனால் புதிய குடிகாரர்கள்; குடிக்க ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே குடிக்கு அடிமையாகி குடும்பத்தை இழந்து உடலை இழந்து உயிரையும் இழந்துவிடுகிறார்கள். அது என்னமோ நமக்கு புரியாத புதிர்தான்.
பெருமாள்முருகனின் இந்தச் சிறுகதையும் அப்படியொரு குடியின் விளைவைச் சொல்லும் கதைதான். ஆனால் வெறுமனே அப்படியொரு முத்திரையைக் குத்த முடியாத கதை. அதில்தான் எழுத்தாளர் தனித்து நிற்கிறார்.
மனித இயல்பில் தன்னை அடுத்தவரிடம் நிரூபிக்க படும்பாட்டை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றாம். நாம் அழகாய் இருக்கிறோம் என யாரோ நமக்கு சொல்ல வேண்டியுள்ளது. நாம் திறமையாய் இருக்கிறோம் என்பதை யாரோ நமக்கு சொல்ல வேண்டியுள்ளது. நாம் தைரியமாய் இருக்கிறோம் என்பதை யாரோ நமக்கு சொல்ல வேண்டியுள்ளது. அதனால் நமக்கு எந்த இலாபமும் இல்லாவிட்டாலும் யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்கவும், சொல்ல வைக்கவும் நாம் எந்த எல்லைக்கும் போகின்றோம்.
அப்படியொரு எல்லையைத் தொட்டு நம்மை பீதிக்கு ஆளாக்குகின்றான் இக்கதையின் நாயகன்.
இன்றைய பெருமாள்முருகன் சிறுகதை ‘வீராப்பு’ 16/20
தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தால் தன் இயல்பில் இருந்தே நாயகன் மாறி யாரிடமும் பழக விரும்பாதவனாக ஒதுங்கி வாழ ஆரம்பித்துவிட்டான்.
திருமணத்திற்கு பின்னும் தான் பழையமாதிரிதான் இருக்கிறேன் எந்த மாற்றமும் இல்லை என்று நண்பர்களுக்கு காட்ட நினைத்ததின் விளைவு.
அப்படி காட்ட நினைத்த வீராப்பு நாயகனுக்கு எதைக் காட்டியது என்பதை நாம் வாசிக்க உள்ளுக்குள் நமக்கு பீதி ஏற்படுகிறது. தெளிந்த நீரோடை போல சென்று கொண்டிருக்கும் கதையில் வரும் முடிவு நம்மைத் தூக்கியடிக்கச்செய்கிறது.
நீங்கள் உங்களை மற்றவர்களிடம் எப்போதும் நிரூபிக்க நினைக்கும் நபராக இருந்தால் இந்தக் கதையை வாசித்துவிடுங்கள். அதனால்தான் இந்தக் கதையைக் குறித்து நான் அதிகம் எழுதவில்லை.
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக