பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 29, 2022

ஆஸ்பத்திரி (அனுபவ) கதைகள் 2



மூன்றாவது முறையாகப் பார்க்கிறேன். ஒவ்வொரு முறையும் சரியாக 4.30க்கு அங்கிருப்பார். அவர்தான் முதல் ஆளாக நுழைவார். நாங்கள் எல்லோரும் அவர் பின்னால்தான்.

கையில் எப்போதும் சாப்பாட்டுப் பொருட்கள், தண்ணீர் பாட்டல் என இருக்கும். அன்று நான் பார்க்கவேண்டியவரின் பக்கத்துக் கட்டிலில் அவரது அம்மாவை மாற்றினார்கள். அவர் அம்மாவின் உடல் நிலை குறித்துத் தாதிகளிடம் விசாரித்தார். அம்மாவின் கட்டிலுக்கு அருகில் இருக்கும் குறிப்பேட்டை உன்னிப்பாக வாசித்து அது பற்றியும் யாரிடமோ கைப்பேசியில் அழைத்துப் பேசவும் செய்கிறார்.

இப்படியான மகன்களைப் பார்ப்பது இப்போது அரிதாகி விட்டது என அங்குள்ள சிலர் பேசவும் செய்தார்கள். நானும் என் பங்கிற்குப் பேச நினைத்தேன். அவரின் அம்மாவிடம் பேச்சுக் கொடுத்தேன்.
ஏறக்குறைய ஒரு ஆண்டாக இப்படித்தான் மருத்துவமனையும் வீடும் என வந்து கொண்டிருக்கிறார். சில சமயங்களில் மருத்துவர் கொடுக்கும் மருந்துகள் கூட உடலுக்கு ஒத்துக் கொள்ளாமல் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். என்னதான் அரசாங்க மருத்துவமனை என்றாலும் சில மருந்துகள் வாங்குவதற்கும் வந்து போவதற்குமான செலவுகள் கையைக் கடித்து விடுகிறதாம்.

நல்லவேளையாக இப்படிக் கவனமாகவும் பொறுப்பாகவும் பார்த்துக் கொள்ளும் மகனும் மருமகளும் இருப்பதைச் சொல்லி அவரை ஆறுதல் படுத்த முயன்றேன்.

பிறகு அவர் சொன்னதுதான் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. தினம் வந்து கவனித்துக் கொள்பவர் நாங்கள் நினைப்பது போல மகன் இல்லையாம். மருமகனாம். அதிர்ச்சியைக் காட்டாது, மகன் இல்லாதவருக்கும் மருமகனாக இப்படி ஒரு மனிதர் கிடைத்துள்ளதைச் சொன்னேன். அந்த அம்மா, அதற்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தார்.

அம்மாவிற்கு இரண்டு ஒரு மகனும் இரு மகள்களும் இருக்கிறார்களாம். ஆளுக்கு ஒரு வேலையாக இருக்கிறார்களாம். அம்மாவை வந்து கவனிக்கவோ பொறுப்பை ஏற்றுக்கொள்ளவோ அவர்கள் தயாரில்லை என்றார்.

பிள்ளைகளை நல்லபடியாகத்தான் வளர்க்கிறோம். கல்யாணம் செய்தும் கொடுக்கிறோம். கையில் கிடைக்கும் காசையெல்லாம் கொடுத்து நல்லா இருக்கட்டும் என்கிறோம். ஆனால், அம்மாவிற்கோ அப்பாவிற்கோ உடம்பு முடியவில்லை என்றால் யாரும் கண்டுகொள்வதில்லை. எந்தப் புண்ணியமோ தெரியல, இப்படியொரு மருமகன் கிடைத்ததைச் சொன்னார். அம்மாவின் மருமகன் மீது மரியாதைக் கூடியது.

தங்களின் கடமையைக் கூடக் கண்டுக்கொள்ளாமல் காரணம் சொல்லும் பிள்ளைகளுக்கு மத்தியில் சில பிள்ளைகளாவது இப்படி இருப்பதற்கு யார் மரியாதைக் கொடுக்கிறார்களோ இல்லையோ நாம் கொடுக்கலாம்தானே.
புதிதாக எதையும் செய்ய வேண்டாம். ஆனால் பெற்று வளர்த்ததற்குக் கொஞ்சமாவது நன்றி காட்ட வேண்டாமா எனக் கேட்டவர் கண் கலங்கினார். பார்வையாளருக்கான நேரம் முடிந்துவிட்டதா தாதிகள் அங்குள்ளவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். புறப்பட வேண்டும்.

மின் தூக்கி, கீழே எங்களைக் கொண்டு வந்தது. வாசலுக்கு அருகில் அம்மாவின் மருமகன் நின்றுக்கொண்டிருந்தார். மனதில் வைத்த மரியாதையை அவர் முகத்தின் முன் காட்ட நினைத்தேன்.

அம்மாவின் உடல் நலம் குறித்து விசாரித்து, நல்ல மருமகன் என்றேன். கேட்டது என்னை ஆழ்ந்து பார்த்தவர். “அம்மா.. சொன்னாங்களா..?” எனக் கேட்டார். ஆமாம் என்றேன். “அதற்குத்தான் நல்ல மருமகன்னு சொன்னீங்களா” என்றவரிடம் , தலையசைத்தேன்.

அவர் மேற்கொண்டு பேசலானார், “அம்மா.. என்கிட்டயும் சொல்லிருக்காங்க.. பெத்த பிள்ளைகளை விடப் பெறாத பிள்ளையா நான் இருந்து பார்த்துக்கறேன்னு… ஆனா…” நிறுத்தினார்.

எனக்குப் புருவம் சுருங்கியது. அவர் தொடர்ந்தார்.

“ஆனா… அம்மா என்கிட்ட ஒன்னுதான் கேட்டுகிட்டாங்க.. என்னதான் இருந்தாலும் அவங்களுக்கு ஏதும் ஆச்சுன்னா.. அவங்க மகன் தான் கொள்ளி வைக்கனுமாம்.. அப்பதான் கட்ட வேகுமாம்….” என்றவர் மணியாகிவிட்டதாக, பார்க்கலாம் என்றவாறு கிளம்பினார்.

என்னதான், தான் பெற்ற பிள்ளையால் எதையுமே ஒரு பிள்ளையாகச் செய்ய முடியாவிட்டாலும் தனது இறுதி கடனையாவது செய்யட்டுமே என ஓர் அம்மா நினைக்கிறார் என்பதா, அம்மாவுக்குக் கடைசியா கொள்ளி கூட வைக்கக் கொடுப்பினை இல்லாம தன் மகன் போய்டக்கூடாதுன்னு ஓர் அம்மா நினைப்பதாகப் பார்ப்பதா எனத் தெரியவில்லை.

மகன்களும் மகள்களும் இருக்க வேண்டிய இடத்தில் நின்று அவர்களின் கடமையையும் சேர்த்து செய்யும் மருமகன்களுக்கும் மருமகள்களுக்கும் கிடைக்கும் மரியாதையும் முக்கியத்துவமும் நம் சமூகத்தில் பெரிதாக ஒன்றுமில்லை. குடும்பத்தில் முதலில் இவர்களைத்தான் ஒதுக்கி வைப்பார்கள்.

அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் தெரியுமா எனப் பேசுவார்களே தவிரத் தாங்கள் என்னவெல்லாம் செய்யவில்லை என்பதைக் குறித்துப் பேசவே மாட்டார்கள்.
போதாக்குறைக்கு இவர்களுக்குச் சில இடங்களில் ‘இளிச்சவாய்’ என்கிற பட்டத்தை மட்டும் கொடுத்துவிடுகிறார்கள்.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்
#ஆஸ்பத்திரி_அனுபவக்கதைகள்

ஜூலை 25, 2022

முதற்பார்வையில் 'செந்தோழன் செங்கதிர்வாணன்'


'செந்தோழன் செங்கதிர்வாணன்' நம் நாட்டு புத்தம் புது திரைப்படம். நாடறிந்த கலைஞர் கோவின் சிங் இயக்குனராக களம் இறங்கியுள்ளார். இளைஞர்களின் மனம் கவர்ந்த இசைக்கலைஞர் டாக்டர். கேஷ் வில்லன் நடிக்கும் மூன்றாவது திரைப்படம். வில்லனும் அவர்தான் ஹீரோவும் அவர்தான்.

வழக்கமான கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் மூன்நிலா. வழக்கத்திற்கு மாறான கதைப்போக்கில் தனது நடிப்பாற்றலைக் காட்டி மிளிரவும் செய்கிறார். 

டாக்டர். கேஷ் வில்லன் தனக்கே உரிய இசை பாணியில் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். காதல், தனிமை, இழப்பு, நம்பிக்கை என ஒவ்வொரு பாடல்களுமே கதையின் ஊடாக நமக்கு மேலும் சில கதைகளைச் சொல்லவும் செய்கின்றன.

குரலால் அறியப்பட்ட டாக்டர். கேஷ்வில்லனை யாரும் பேசவே விடவில்லை. பார்வையாலேயே பதில் சொல்ல முயல்கிறார். அதுதான் நாயகன் மீது மர்ம மனிதன் என்ற அடையாளத்தைக் கொடுக்கிறது.

ஷாமினி ரூபாவாக சந்தேகிக்கும் கணவனிடம் மாட்டி நன்றாகவே அவதிப்படுகிறார். கணவராக வரும் 'சேம்' சிரிக்க வைப்பதோடு நம்மையும் அவர் மீது சந்தேகம் கொள்ள வைக்கிறார். ரூபா (ஷாமினி) மீது நமக்கும் சந்தேகம் வருகிறது. ஆனாலும் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நடுத்தர குடும்ப சிக்கலில் சிக்குண்டவராக கணவனின் பொறுப்பற்றத் தன்மையில் மாட்டிக்கொண்டு பாவப்படுகிறார். என்னதான் அடித்து துவைக்கும் குடிகார கணவன் என்றாலும் ஒரு நாள் வீட்டிற்கு வராத கணவனை தேடுவது, வழக்கமான மனைவியின் மனநிலைதான்.

நாயகிக்கும் சேமுக்கும் ஒரே நேரத்தில் உண்மை தெரிய வருகிறது. நம்மையும் இருக்கை நுணிக்கு அழைக்கிறார்கள். ஆனால் இரண்டும் இரண்டு வித உண்மைகள் என தெரிய வரும் போது மனம் சமாதானம் ஆனாலும், நாயகிக்கு தெரிந்த உண்மையில்தான் முழு கதையுமே தன்னை வெளி காட்டுகிறது.

கனிமொழியாக நடித்திருக்கும் மூன்நிலாவின் பெற்றோர் ரொம்பவும் இயல்பாகவே வருகிறார்கள். சிரிக்கவும் வைக்கிறார்கள் சில்மிஷம் செய்யவும் முயல்கிறார்கள். ரசிக்க வைத்து கைத்தட்டல் வாங்குகிறார்கள்.

நாயகனின் கடந்த காலம் நம்மையும் கலங்கடிக்கிறது. இளைமைக்கால நாயகனாக வருபவர்கள் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.

பெற்றோர் சரியாக அமையாவிட்டால், ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்வும் எப்படி சிதைந்து சின்னாபின்னமாக மாறுகிறது என காட்ட நினைத்த இயக்குனர் வெற்றியை நெருங்கியுள்ளார். 
பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு யாரால் இயல்பு வாழ்க்கை கிடைக்கும் என்கிற பதிலையும் கொடுத்து கைத்தட்டல் பெறுகிறார்.

ஜூலை 28, திரைக்கு வரவிருக்கும் 'செந்தோழன் செங்கதிர்வாணன்' திரைப்படத்தையொட்டிய சிறப்பு காட்சிக்கு நேற்று (24/7) அழைக்கப்பட்டிருந்தேன். அதையொட்டிய முதல் பார்வையாக இதனைப் பகிர்ந்து கொள்கிறேன். 

கண்டிப்பாக குடும்பத்துடன் திரையில் பார்க்க வேண்டிய நம் நாட்டு திரைப்படம். திரைக்கு வந்த பின் எனது முழுமையான பார்வையை மீண்டும் எழுதுகிறேன்.

படக்குழுவினர்க்கும் கதாப்பாத்திரங்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் தமிழ்ப்பெயர்களுக்கும் அன்பும் வாழ்த்துகளும்..

#தயாஜி

ஜூலை 23, 2022

ஆஸ்பத்திரி (அனுபவ)கதைகள் - 1

     ஒரு மணி நேர காத்திருப்பு முடிந்தது. அடுத்ததாய் மருத்துவரைப் பார்க்க வேண்டும். வழக்கமான பரிசோதனைதான். அடுத்த மாதம் வரை சாப்பிட வேண்டிய மருந்துகளைக் கொடுத்து அனுப்பினார்கள்.

    மயக்கமாக இருந்ததால் உடனே கார் நிறுத்துமிடத்திற்கு செல்ல முடியவில்லை. இல்லாள்தான் காரை எடுக்க வேண்டும். மருத்துவமனை வாசலில் காத்திருந்தேன். கார் வரும்வரை அமர்ந்து கொண்டு வேடிக்கைப் பார்க்கலானேன். அப்போதுதான் அவரைச் சந்திந்தேன்.

    ஏறக்குறைய என்பது வயதை நெருங்கி கொண்டிருப்பவர். கை நிறைய மருந்துகள் கொண்ட துணிப்பை இருக்கிறது. அவர் முகத்தில் சோகம். நடையில் தயக்கம். தூரத்துலிருந்தே என்னால் அவரை கவனிக்கும்படி இருந்தது. அவரும் என்னை கவனித்திருக்க வேண்டும். மெல்ல என்னை நோக்கி வந்தார்.

    “அப்பறம் தம்பீ… உடம்புக்கு என்ன..?”என்று ஆரம்பித்தார். அருகில் அமர்ந்தார். ரொம்பவும் சுருக்கமாக என்னைப்பற்றியும் என் உடம்பைப் பற்றியும் சொன்னேன். மரியாதைக்காக அவரின் உடம்புக்கு என்னவென்று கேட்டேன். “வயசானாலே இப்படித்தான் தம்பீ ஆயிரம் வியாதி வரும்.. டாக்டருக்கே என்னென்ன வியாதின்னு சரியா சொல்லத் தெரியல..” என்று ரொம்பவும் மரியாதையாக பதில் சொல்லிவிட்டு சிரிக்கலானார்.

    சோகம் ததும்பிய முகத்தில் அவர் சிரிப்பது அழகாக இருந்தது. இளைமை காலத்து ஜெமினி கணேசனாக இருந்திருப்பார் போல.

    சிரித்த முகத்தில் சாட்டென தயக்கம் எட்டிப்பார்த்தது. தரையைப் பார்க்கலானார். அவர் எதையோ கேட்கவும் சொல்லவும் நினைப்பதாகப் பட்டது. நானே கேட்டேன். “என்ன ஆச்சி… மயக்கமா இருக்கா.. நர்ஸை கூப்டவா…?”

    “மயக்கம்தான் தம்பி.. ஆனா நர்ஸைக் கூப்பட வேண்டாம்… ஆமா நீங்க சாப்டிங்கலா…?”

    “காலையிலேயே சாப்டுதான் வருவேன். ஹாஸ்பிட்டல் வந்தா ரொம்ப லேட்டாகிடும்.. அதனால சாப்டுதான் வருவேன்.. ஆமா நீங்க சாப்டிங்களா..”

“ஓ… சாப்டுதான் வருவீங்களா……”

“ஏன் நீங்க சாப்ட மாட்டீங்களா….”

“மனைவி உயிரோட இருக்கற வரைக்கும் சாப்டுதான் வெளிய வருவேன்… பசிக்குது…”

    “பக்கத்துலதான் கடை இருக்கு… நேரா போய்ட்டு வலது பக்கம் திரும்பினா தெரியும்…” என்றேன்.

    அவருக்கு மருத்துவமனை சிற்றுண்டி எங்குள்ளது என தெரியவில்லை என்றுதான் நினைத்திருந்தேன்.

“அது தெரியும் தம்பி பல தடவை வந்திருக்கேன்.. பார்த்திருக்கேன்…”

“கேட்கறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. காசு இல்லையா..”

“…..”

    எனக்கு புரிந்தது. நானாக அவரை சாப்பிட அழைப்பது போல அழைத்தேன் முதலில் தயங்கியவர் பின் என்னுடன் கிளம்பினார். நடந்து கொண்டே பேசலானார். ஒவ்வொரு மாதமும் மருத்துவ பரிசோதனைக்கு இப்படித்தான் வருகிறார். பெயர் பதிவு செய்ய ஐந்து ரிங்கிட் கொடுக்க வேண்டும். அதை மகன் கொடுத்தனுப்புவாராம். காலையில் கிரேப் வண்டியை புக் செய்து அனுப்பிவிடுவார். கையில் ஒரு பழைய கைப்பேசி இருக்கிறது. அதில் மகன் மட்டுமே அழைக்க முடியும். மூன்று மணிக்கு அழைத்து கிரேப் வண்டியை புக் செய்யவா என கேட்டு , புக் செய்து அனுப்புவாராம். ஒரு வேளை இவருக்கு சீக்கிரமே பரிசோதனை முடிந்தாலும் மூன்று மணிக்கு மகன் அழைக்கும் வரை காத்திருக்க வேண்டும். அதன் பிறகு கிரேப் வண்டிக்கு காத்திருந்து பிறகு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றார்.

    நன்றாக சாப்பிட்டார். முடிந்ததும் கலகலப்பாகப் பேசத் தொடங்கினார். மகனுக்கு அழைக்கவா என்றேன் வேண்டாம் என்றார். அழைத்துப்போகவா என்றேன் அதற்கும் வேண்டாம் என்றார்.
கொஞ்ச நேரம் பேசிவிட்டு விடை கொடுத்து கிளம்பினேன்.

    நம்மால் நம் வீட்டில் இருக்கும் வயதானவர்களுடன் எல்லா சமயத்திலும் மருத்துவமனைக்கு செல்ல முடியாதுதான். சென்றுதான் ஆக வேண்டும் என யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. ஒரே குடும்பத்தில் அந்தப் பொறுப்பை ஒருவர் தலையில் கட்டிவிட்டு மற்றவர் ஒதுங்கிக்கொள்வதும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

    நாமே அழைத்து செல்ல முடியாவிட்டாலும் கிரேப் வண்டியின் மூலம் அனுப்பி வைக்கும் வசதி இருக்கிறது. நல்லபடியாகச் சென்று நல்லபடியாக திரும்ப வருவதற்கான வசதியை நாம் பயன்படுத்துகிறோம். ஆனால்,

    வயதானவர்கள் வெளியில் குறிப்பாக மருத்துவ மனைக்கு செல்லும் போது குறைந்தது பத்து ரிங்கிட்டையாவது கொடுக்கக்கூடவா நம்மா முடியாது. வீட்டிலும் சாப்பிடி எதுவும் கொடுக்காமல் மருத்துவமனைக்கு அனுப்புவதும் பசியுடன் வீட்டிற்கு வந்தவருக்கு தாமதமாக உணவு கொடுப்பதும் பாவத்தில் சேராதா?

    பாவ புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும், கொஞ்சமாவது மனிதாபிமானம் வேண்டாமா. கையில் காசில்லாமல் மருத்தவமனை பரிசோதனை முடிந்து பசியுடன் காத்திருக்கும் முகங்களைப் பார்த்தவர்களுக்கு நான் சொல்ல வருவது புரியும்.

ஜூலை 01, 2022

‘மூன்றாம் அதிகாரத்தின்’ முழு கதைதான் என்ன?

‘மூன்றாம் அதிகாரம்’ மலேசிய திரைப்படம். பார்த்துவிட்டீர்களா? இன்னும் இல்லையெனில் இப்போதே நீங்கள் பார்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். 50க்கும் அதிகமான திரையரங்குகளில் இருந்து இப்போது ஏழு திரையரங்குகளில் மட்டுமே இப்படத்தைப் பார்க்கும் நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறோம்.

நம் நாட்டுத் திரைப்படம் நாம் தானே பார்க்கவேண்டும் என மற்றவர் சொல்வது போல நானும் சொல்ல நினைக்கவில்லை. ஆனால் நீங்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் மூன்றாம் அதிகாரம் திரைப்படத்தைத் திரையரங்கில் பார்த்துவிட வேண்டும். இன்னும் கொஞ்சம் நாளில் அல்லது நாளையே கூட நடந்துவிடும் அபாயம் இருக்கிறது. ஆட்களில் ஆதரவு இல்லை என்பதாலும், அடுத்தடுத்த திரைப்படங்கள் வந்துகொண்டிருப்பதாலும் மூன்றாம் அதிகாரம் திரையரங்கில் இருந்து எடுக்கப்படலாம். அதன் பிறகு “ஐயோ நல்ல படம்ப்பா… திரையரங்கில் பார்க்காமல் விட்டுவிட்டோமே..” என நீங்கள் யாரும் புலம்ப வேண்டாமே என நினைக்கிறேன். அதனால்தான் விரைந்து திரையரங்குக்குச் செல்ல சொல்கிறேன். நல்லதொரு முயற்சிக்கு நம் பங்கும் இருக்க வேண்டும் என்ற ரசிகனாக எனது எதிர்ப்பார்ப்பு இதுவே.

திரைத்துறையில் இருப்பவர்களே மூன்றாம் அதிகாரம் திரைப்படத்தைப் பார்க்கும் ‘வாய்ப்பு’ கிடைத்தது; அதனால் பார்த்தேன் எனப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் துறையில் இருக்கும் ஒன்றுக்கு வாய்ப்பு கிடைத்தால்தான் போகவேண்டுமா? அது அவர்களின் கடமையல்லவா. உண்மையில் அது ரசிகர்களாக நாம் சொல்ல வேண்டிய ஒன்று. நல்லதொரு திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு இப்போது நமக்கு வாய்த்திருக்கிறது, தவற விடலாமா ?.

யாரின் அனுதாபத்தின் பெயரிலும் நாம் மூன்றாம் அதிகாரத்தைப் பார்க்க வேண்டாம். ஆனால் நாம் பார்க்க வேண்டும். ஏன்? அதற்கு என்னிடம் சில காரணங்கள் இருக்கின்றன. உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நானும் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுடன்தான் மூன்றாம் அதிகாரத்தைப் பார்த்தேன். தொடக்கத்தில் எனக்கும் இது வழக்கமான படமாக அமைந்திருக்கிறதோ என்கிற ஐயம் எழுந்தது. ஆனால் அடுத்தச் சில நிமிடங்களில் அது அப்படியல்ல எனப் படக்குழு நிருபிக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

இரண்டு விதமான தொடக்கம்; ஒன்று ருத்ரனை கண்டுபிடித்த காவல்துறை அதிகாரி துப்பாக்கியுடன் ருத்ரனின் இருப்பிடத்திற்கு நுழைவது, இன்னொன்று மீன் பிடிக்கச் சென்ற இடத்தில் கதைக்கான தேடுதலை தொடக்கி வைக்கும் அப்பாவி ஒருவர் என இரண்டு விதமான தொடக்கங்களை ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.

மூன்றாம் அதிகாரத்தைப் பார்த்த ஒவ்வொருவரும் அதன் இறுதி முடிவை சொல்ல வேண்டாம் என்கிறார்கள். அவர்கள் யாரும் சொல்லப்போவதும் இல்லை. ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாதே. சொல்லிவிடுவேனே. ஆனால் அதுதான் முடிவா என நீங்கள் திரையரங்கில் சென்றுதான் கண்டுபிடிக்க முடியும். அதனால்தான் வழிந்து இந்தப் விஷப்பரீட்சையை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

குற்றச்செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. செய்திகளில் பார்க்கிறோம். நாளிதழ்களில் வாசிக்கிறோம். பல புரளிகளுடன் சேர்ந்து வட்சப் செய்திகளாகவும் நம் கைகளைச் சுரண்டிக்கொண்டுதான் இருக்கின்றன.

கொலை, வழிப்பறி, வன்பகடி, வன்புணர்வு போன்ற குற்றங்களைச் செய்கிறவர்கள் எங்கோ வேற்றுகிரகத்து ஏலியன்களா? இல்லையே நமக்கிடையில் நம்வீட்டில் நமக்குள்ளே இருப்பவர்கள்தானே. அப்படியிருந்தும் நாம் ஏன் அவர்களைக் கண்டறிய முடியவில்லை. ஏன் களையெடுக்க முடியவில்லை. இதற்கு நம்மால் என்னதான் செய்ய முடியும் என்கிற ஆதார கேள்வியைத்தான் மூன்றாம் அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம். நாம் எங்கே தவறு செய்கிறோம். எப்படித் தவறு நடக்கிறது. யாருக்காகத் தவறு நடக்கிறது என்கிற தேடுதலை பார்வையாளர்களின் பார்வைக்கு விட்டிருக்கிறார்கள் படக்குழுவினர்.

தண்டனைகள் அதிகபட்சமானால் குற்றங்கள் குறையும் என்கிற அடிப்படை விதியை நாம் இன்றும் கூட முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. அதற்குக் காரணம் குற்றவாளிகள் விடுதலை ஆனாலும் நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது என்கிற தார்மீக எண்ணம்தான். ஆனால் விடுதலையான குற்றவாளிகள் குற்றத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கக் காரணிகளாவதை எப்படித் தடுக்கப்போகிறோம்.

மூன்றாம் அதிகாரத்தின் மையக்கதை; மேற்சொன்னதுதான்.

மூன்றாம் அதிகாரத்தின் கதைதான் என்ன? ஒரு கொலை நடக்கிறது. இளம்பெண் கழுத்தறுத்துக் கண்டத்துண்டமாக வெட்டப்படுகிறாள். அவளில் தலை அழுகிய நிலையில் கண்டெடுக்கப்படுகிறது. காவல்துறையினர்க்கே அந்தக் கொலை தீர்க்க முடியாத சிக்கலாக மாறுகிறது. அதனைத் தீர்ப்பதற்கான மேலும் திறமையான அதிகாரி காவல்துறையினருடன் சேர்கிறார். விசாரணை இன்னும் சூடு பிடிக்கிறது. அதே சமயம் அவர்களுக்குச் சவாலும் அதிகரிக்கிறது. குற்றவாளிகள் ஒவ்வொருவராகக் களையெடுக்கப்படுகிறார்கள். யார் அந்தப் புதிய குற்றவாளி எதற்காகப் பலிவாங்கப்படுகிறது என்கிற முடிச்சுகளில் கதை நம்மைக் கலங்கடிக்கிறது. இறுதி முடிவைத் திரையரங்கில் நீங்கள் பார்க்கும் போது உங்கள் மனதில் உங்கள் குழந்தைகளை நினைத்துக் கொள்வீர்கள். அவர்கள் மேலும் இன்னும் கவனத்தை வைப்பீர்கள்.

நம் நாட்டு மார்க்கண்டேயனான கே.எஸ்.மணியம் கண்களால் நம்மையும் அழவைக்கிறார். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன்னை நிறுத்தி தான் கலைத்தாயின் திருமகன் என நிரூபித்துவிடுகிறார். மகளைப் பறிகொடுத்த தந்தையாகத் திக்குதெரியா மனிதனாக வாழ்ந்திருக்கிறார். இன்னும் கொஞ்ச நாளில் திருமணம் செய்யக் காத்திருந்த தன் மகளின் தலை மட்டும் கிடத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அது தன் மகள்தானா இல்லையா என்கிற தெளிவின்மையில் பேச்சற்று நிற்கிறார். தான் கொண்டு வந்திருந்த வளையலை எடுத்து, கிடத்தியிருக்கும் தலைக்குக் கீழ் உடம்பையும் கைகளையும் காணாது அவர் துடிப்பதும் அதனூடாக வரும் பாடலும் நம்மையும் சேர்ந்து அழ வைக்கிறது. அர்த்தம் பொதிந்த பாடல் வரிகளில் சொல்ல வேண்டிய கதைகளைச் சொல்லிவிடுகிறார் பாடலாசிரியர்.

இறுக்கமாகப் போய்க்கொண்டிருக்கும் கதையில் நம்மைச் சிரிக்க வைப்பதில் குபேன் தனியாகத் தெரிகிறார். உடல் மொழியாகட்டும், தான் பார்த்துப் பிரமித்த அதிகாரியுடன் சேர்த்து பணியாற்றுவதாகட்டும் கைத்தட்டல்களையும் சிரிப்புகளை வரவைக்கிறார்.

துடிப்பு மிக்க அதிகாரி அஷோக்காக வருகிறார் ஜிப்ரேல் ; கதையின் முதுகெலும்பு இவர்தான். இவரின் பார்வையிலிருந்துதான் கதை தொடங்குகிறது இவரின் பார்வையிலிருந்துதான் கதை முடிகிறது. கதை இறுதியில் இவர் எடுக்கும் அதிரடி முடிவை சொல்லியும் சொல்லாமலும் தனது புன்னகையாய் காட்டுகிறார். உண்மையில் பார்வையாளர்களாக நாமும் அதைத்தான் எதிர்பார்க்கிறோம் என்பது அவர் வாங்கும் கைத்தட்டல்களில் இருக்கிறது. அவருடன் பணியாற்றும் இதர நான்கு அதிகாரிகளும் அவர்களின் கதாப்பாத்திரத்தை அளவாகவே செய்திருக்கிறார்கள். கதையின் நகர்விற்கு அவர்களின் உதவியுடம் அவசியமாகிறது.

முக்கியப் பொறுப்பிலும் எல்லோருக்கும் பதில் சொல்லும் இடத்தில் இருக்கும் அதிகாரியாக வருகிறார் கவிதா தியாகராஜன். இதுவரை அவரிடம் இருந்து நாம் பார்க்காத ஒரு முகம். பார்க்க நினைத்திருக்காத கதாபாத்திரம். பார்க்கின்றவர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தின் தேவையும் அதுதான் என்பதால் அதற்கு அவர் நன்றாகவே தயாராகியுள்ளார். அதிகாரி அஷோக்கிடம் ‘பிரியாணி வாங்கச் சென்ற நாய்க்கதை’யை சொல்லும் இடத்தில் திரையரங்கே அமைதியாகிவிட்டது. ஏறக்குறைய மூன்று நான்கு பக்கங்களுக்கான வசனத்தை ஒரே டேக்கில் அவர் செய்திருப்பது பாராட்டுக்குரியது. உண்மையில் அதுதான் அஷோக்கை மேலும் கோபப்படுத்தி விசாரணையில் மறைந்திருந்த கறுப்பு ஆடு யார் என்பதைத் தேட வைக்கிறது.

குற்ற தடயவியல் நிபுணர் (ஃபோரென்சிக்) கல்கியாக வருகிறார் ஹரி தாஸ். தகுந்த உடல்மொழி அறிவார்ந்த உரையாடல் , எதனையும் சகஜமாகக் கண்டறியும் திறமைசாலியாக மிளிர்கிறார். அவர் கதைக்குள் வந்த பிறகு திரைக்கதை இன்னும் பரபரப்பாகிறது. புத்திசாலியான ஹீரோவுக்கும் அதிபுத்திசாலியான குற்றவாளிக்கும் இடையில் ஏற்படும் ஆடு புலி ஆட்டமாக மூன்றாம் அதிகாரத்தில் களம் கண்டிருக்கிறது.

இம்மாதிரியான திரில்லர் கதைகளுக்கு ஈடுகொடுக்கும் படி இருக்கும் இசையே பார்வையாளர்களை இன்னும் கவர்ந்து இழுக்கும். அந்த வகையில் மூன்றாம் அதிகாரம் இசையிலும் நன்றாக வந்துள்ளது.

குற்றத்தடவியலில் எப்படி வேலை நடக்கிறது, குற்றப்பின்னணியை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதை நுணுக்கமாகக் காட்டியுள்ளார் இயக்குனர். ஹீரோவிற்கு மட்டுமல்ல வில்லனாக வரும் ருத்ரனின் அறிவுத்திறனையும் தர்க்கப்பூர்வமாக (லோஜிக்) காட்டியுள்ளார்.

ருத்ரன். யார் இது. நல்லவனா கெட்டவனா? அவனுக்கென்று இருக்கும் நியாயங்கள் உண்மையில் நியாம்தானா? என்ற கேள்விகள் நிச்சயம் நம்மை பின் தொடரும். ருத்ரனின் முகமூடி மற்று உடையலங்காரமும் அந்தக் கதாப்பாத்திரத்தின் தோரணையும் நமக்கு பயம் காட்டத் தவறவில்லை. நாங்கள் மூன்றாம் அதிகாரம் பார்த்துக்கொண்டிருக்கும் போது ருத்ரன் அதே உடையலங்காரத்துடன் திரையரங்கில் நுழைந்துவிட்டார். நாங்கள் நிஜமாகவே பயந்துவிட்டோம்.

நிறைகள் எவ்வளவு இருந்தாலும் கண்ணில் தட்டுப்படும் சிறுசிறு குறைகளைச் சொல்வதால் அது அடுத்தடுத்த ஆக்கங்களில் தீர்க்கப்படும் என்பதால் அவற்றையும் சொல்ல வேண்டியுள்ளது. ஆனால் இப்போது அதனைச் சொல்வதைக் காட்டிலும், நீங்கள் திரையரங்குக்குச் சென்று மூன்றாம் அதிகாரத்தைப் பார்ப்பதே முக்கியமானது. அதன் பிறகு நாம் இன்னும் அதிகமாய் உரையாடலாம்.

இன்றைய சூழலுக்கு ஏற்ற திரைப்படத்தை ஒரு பாடமாகவும் மூன்றாம் அதிகாரம் எனக் கொடுத்திருக்கும் படக்குழுவினர்க்கும், கல்கி தயாரிப்பு நிறுவனத்திற்கும், தயாரிப்பாளரும் கதாசிரியருமான அகிலனுக்கும், இயக்குனர் எஸ்.டி.புவனேந்திரனுக்கும் அன்பும் வாழ்த்துகளும்.


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்