பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 28, 2019

நாங்கள் என்பதற்காக.....



 'நாங்கள் என்பதற்காக'


என் நினைவுகளில்
அழிந்த கோப்புகளை
எப்போதும்
திறக்க கூடாத
பக்கங்களை வைத்திருந்தார்கள்

திறக்க எத்தனிக்கும்
எந்த சமயத்திலும்
முன்னெச்சரிக்கையாக
எங்கள்
முதுகில் சில கோடுகள்
கிழிப்பார்கள்

மருந்தும் தடவிவிட்டு
கட்டண தொகையை
எங்கள் கடன் பெட்டியில்
சேர்த்து வைப்பார்கள்

என் தாத்தாவில் இருந்து தொடங்கிய கடன் இத
அப்போது அவர்
வாழ்ந்துக்கொண்டு இருந்தாராம்
வாழ்தல் என்பதுதான்
எத்தனையொரு வரமென
அவரின் கதைகளில் இருந்து கண்டுகொண்டேன்
அன்றொரு தினம்

எங்கள் காட்டுக்குள்
ஜீப் ஒன்று வந்தது
எங்களை போல அல்லாமல்
முகத்தை மட்டும் காட்டிக்கொண்டிருந்தார்கள்

எங்கள் மொழி அவர்களுக்கு விளங்கவில்லை
எங்கள் பழக்கம் அவர்களுக்கு புரியவில்லை
வழி மாறி வந்துவிட்டவர்களுக்கு

உணவு கொடுத்தோம்
உடன் இரவை கழிக்கவிட்டோம்
வழிகாட்டியுடன் அனுப்பிவைத்தோம்
நன்றியை சுமந்துக்கொண்டு

மறுநாள் சரியாக
வந்து சேர்ந்தார்கள்
எங்கள் கைகளுக்கு
விலங்கிட்டார்கள்
எங்கள் மரங்களை வெட்டிக்கொண்டார்கள்
எங்கள் குழந்தைகளை
சிதைத்துப் பார்த்தார்கள்
எங்கள் கூரைகளை
எரித்து விளையாடினார்கள்
எங்கள் ஊதிரத்தின் நிறத்தை பரிசோதித்தார்கள்
உடல் முழுக்க கத்தியால்
கோடுகள் போட்டார்கள்

எங்கள் ஒவ்வொருவருக்கும்
எண்கள் கொடுத்தார்கள்
ஒவ்வொரு எண்களிலும்
எப்போதும் கொடுத்துத்தீராத
கடனை காட்டினார்கள்
எங்களிடமிருந்து பிடிங்கியதையே எங்களிடம்
விற்பனை செய்தார்கள்

மூன்று தலைமுறை வந்துவிட்டோம்                                                                                        மரங்களின் நிழல்கள் கூட அதிஷ்டத்தின்                                                                              பெயரிலேயே காணக்கிடைக்கிறது
இதோ எங்கள் பெண்களில்
பாதிக்குப் பாதி காணவில்லை
இதோ எங்கள் ஆண்களில்
பாதிக்கு பாதி கை கால் இல்லை

எங்களின்
கடைசி ஒரு பிடி மண்ணையும்
அவர்கள்
தோண்டி எடுக்கும் வரை
எங்களின் கடைசி மரத்தை
அவர்கள் பிய்த்துப்போடும் வரை
எங்களால் அவர்களுக்கு
லாபம் வருவது
முற்றாகும் வரையில்
எங்கள் உயிர் அவர்களின் உரிமை
எங்கள் மரணமே கூட அவர்கள் 

முடிவெடுக்கையில் முடிகிறது
எல்லாவற்றுக்கும் மேலாக
நாங்கள் வைத்திருக்கும்
வேட்டை கம்பு ஈட்டியைவிட
அவர்கள் வைத்திருக்கும்
வேட்டுத் துப்பாக்கி
பலசாலியாக உள்ளது
நாங்கள் உண்பதற்காக கொல்கிறோம்

அவர்கள்
நாங்கள் என்பதற்காக கொல்கிறார்கள்.....


-தயாஜி

நன்றி - வளரி மலேசியக் கவிதைச் சிறப்பிதழ்
கார்த்திகை 2019

டிசம்பர் 25, 2019

உயிர்நேசியின் உன்னத நாளில்...

'உயிர்நேசியின் உன்னத நாளில்..'

நம்பிக்கையுள்ளங்களை
நன்மக்களென 
ஆட்கொண்ட எங்கள்
பிரபுவே எங்கள்
பிதாவே
அன்பின் வழியில்
எங்கள்  கரம் பிடித்து 
புறக்கண்கள் மறைத்து
அகக்கண்கள் திறக்கருளி 
கரை காண் செய்பவரே 
இவ்வுலக இன்னல்கள்
யாவையும்
ஒவ்வொன்றாய் எக்கேள்விக்கும்
இடம் மறுத்து
உங்கள் சொல்லால் சுமப்பவரே
எங்கள் கண்ணீர்த்துளிகளுக்கு
உம் உதிரத்துளிகளால்
விடை கொடுக்கும் 
எல்லைகடந்த அன்பின் ஜீவனே
ஏதேதோ பாவங்களை
யார்யாரோ செய்த குற்றங்களை
சிலுவை சுமந்து
சுத்தப்படுத்திய பரிசுத்த பரமபிதாவே
முட்களைச்சூடி கிரீடமாக்கி
அதனையும்
மகிழ்வித்த ரட்சகனே
உங்கள் நாளில்
உங்கள் பெயரில்
புத்துயிர் பெற்று
புதுவாழ்வு கற்று வாழ
வகைசெய்யும் எங்கள்
பரலோக வாசியே
என்றைக்குமான 
எங்கள் உயிர் வாசியே
ஆண்டவரே
ஆமேன் 

#தயாஜி

அக்டோபர் 04, 2019

பொம்மி



பொம்மி
ஒரு நாள் நேரமெடுத்து
என் புத்தக அறையில் நுழைகிறாள்
காரணமின்றி என் புத்தகங்கள் ஒவ்வொன்றிலும் அவள் விரல்கள் சில
உரசும்படி கடக்கிறாள்
அவள் ஸ்பரிசம் பட்டுவிட்டதும்
தான் வந்த காரணத்தை
கவிதைகள் கண்டுகொண்டன
ஆளுக்கு ஆள் அவள் படிக்கவேண்டி விழுந்தும் குதித்தும்
தங்களை முன்மொழிந்துக் கொள்கின்றன
பொம்மி உன்னிடமும்
இந்த உலகத்திடமும்
நான் விட்டுச்செல்ல வேறொன்றும் இருக்கவில்லை

கதை_வாசிப்பு_2019 – 3 'காலத்தின் மறுபக்கம்'




கதை_வாசிப்பு_2019 – 3
கதைகாலத்தின் மறுபக்கம்
எழுத்துவைதீஸ்வரன்
இதழ்தீராநதி

திகதிஆகஸ்ட் 2019*

ஆகஸ்ட் மாத தீராநதியில் ‘காலத்தின் மறுபக்கம்..’ சிறுகதையை வாசித்தேன். வைதீஸ்வரன் எழுதியிருந்தார்.
கதைகளின் ஆண்பால் பெண்பால் இருக்கிறதா என்கிற ஐயத்தை இச்சிறுகதை தூண்டிவிட்டது. சிறுகதையை வாசிக்கையில் ஆண்பாலுக்கு நடப்பது போலவே தோன்றியது. இடையில் ஏற்படும் உரையாடல்வழி கதைமாந்தர் தாத்தா அல்ல பாட்டி என தெரிய வந்தது.
சொல்லபோனால் இருவிடங்களில் வந்துப்போகும் உரையாடலைத் தவிர கதை முழுவதும் தாத்தாவின் கதை சொல்லலாகவே நகர்ந்துச் செல்கிறது.
ஒருவரின் எழுபது வயது பிறந்தநாளில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் தனிமையை குறித்த மனவோட்டம்தான் கதை. பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இன்றுகூட தன்னிடம் இல்லையே என்கிற வருத்தம் இருக்கிறது. தன் பிறந்த நாள் குறித்த ஞாபகம் கூட இல்லாத உறவுகள் குறித்து மேலும் அவரது மனம் சங்கப்பட்டுகிறது.
‘எல்லோரும் எங்கோ தூரத்து மூலையில் ஒளிந்துக்கொண்டு நான் உயிரோடிருப்பதை வேடிக்கைப்பார்க்கிறார்கள். இல்லை இன்னும் உயிரோடு இருக்கிறேனா என்று கவலையுடன் பார்க்கிறார்கள். பார்க்காமலும் இருக்க பழைகிக்கொண்டுவிட்டார்கள்.’ என கதாப்பாத்திரம் நினைத்துக்கொள்ளும் போது, வாசிப்பவர் மனதிலும் ஒரு நெருடல் தோன்றத்தான் செய்கிறது. நமக்கு தெரிந்த வயோதிகர்ளை கடைசியாக எப்போது சந்தித்திருக்கிறோம். எந்த விழாக்காலத்திலாவது அவர்களுடன் சென்றதுண்டா..? குறைந்தது அவர்களின் பிறந்தநாளாவது தெரிந்துக் வைத்திருக்கிறோமா? போன்ற பல கேள்விகள் மனதில் தோன்றவே செய்கிறது.
அன்றைய தினம் எப்போதும் போலத்தான் அவருக்கான கடமைகளுடன் தொடர்கிறது. ஆனால், காலை உணவிற்கு வீட்டிற்கு வந்துச்சுற்றும் குருவிகள் கிளிகள் மைனாக்கள் அவர் கண்களுக்கு தன் பேரப்பிள்ளைகளாகவே தெரிகிறார்கள். திடீரென வந்து காலகளை உரசும் பூனைக்குட்டியும் அவருக்கு ஒருவகையில் நிறைவை தருகின்றது. சற்று முன் தான் உணர்ந்த தனிமையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறார்.
அப்போது பக்கத்துவீட்டுச்சுவர் தாண்டி பந்து வந்து விழுகிறது. அவருக்கு பழக்கமான பந்துதான் அது என்கிறார். சுவருக்கு அந்த பக்கத்தில் இருந்து சிறுவன் ஒருவனின் குரல், பந்தை எடுத்துப்போடும் படி கேட்டு அவரை விளையாட அழைக்கிறது. வயதான காலத்தில் அதெல்லாம் முடியாது என இவர் சொல்லவும், மீண்டும் சுவருக்கு அப்பாலிருந்து குரல் கேட்கிறது.
இன்றுதானே பிறந்திருக்கிறாய் எப்படி வயதாகும் என்கிறது அந்த குரல்.
சிறுவனிடம் எப்போதோ தனது பிறந்த நாளை சொன்னது நினைவுக்கு வருகிறது. குழந்தைகள் எதையும் மறப்பதில்லை யாரையும் வெறுப்பதில்லை. என நினைக்கிறார்.
அத்தோடு சிறுகதையும் நிறைவடைந்திருக்கவேண்டும். கதையில் அவர் சொல்லவந்ததும் அதுவாகத்தான் இருக்கிறது. குழந்தைகள் பெரியவர்களாகும் போது விட்டுப்போவது என்னவெல்லாம் என வாசகர்களை மீள்பரிசோதனை செய்வதற்கு இவ்விடம் போதுமானது ஆனால் அவர் அப்படி கதையை முடிக்கவில்லை.
தேவையில்லாமல் அடுத்து நகர்கிறார். சுவருக்கு பின்னால் இருந்த சிறுவனை போல யாரும் யாரையும் மறப்பதும் இல்லை வெறுப்பதும் இல்லை . தன் பிம்பத்தின் மீதுதான் குறை. மறைப்பது தன் மனச்சுவர்தானா என கேள்வியோடு முடிக்கிறார். நன்றாய் முடிந்திருக்கவேண்டிய கதையில் ஏதோ திணிக்க நினைத்து தவறவிட்டுள்ளார். கடைசி பத்தி கதை நமக்கு சொல்லிவந்த எல்லாவற்றையும் இல்லாமல் ஆக்கிவிட்டது. அதோடு நிற்காமல் வேறு ஒன்றை சொல்ல நினைத்து நம்மை குழப்பிவிட்டது.
இன்னொன்று கதை முழுக்க ஆணுக்கு நடப்பது போலவே இருக்கிறது. உண்மையில் தாத்தாவிற்கான கதையில் தேவையில்லாமல் பாட்டையை புகுத்திவிட்டார். அப்படி இக்கதைக்கு பாட்டிதான் அவசியம் என்றிருந்தால் கதைப்போக்கை இன்னும் அதிக நுணுக்கத்துடன் நகர்த்தியிருக்கவேண்டும்.
வெறுமே அவள் பெண் என சொல்வது கதைகளுக்கு அழகல்ல, கதைப்போக்கில் வாசகர்களுக்கு அது பெண் என தெரியும்படி அதிக சிரத்தை எடுத்து எழுத வேண்டும். சொல்லப்போனால், சிறுவர்கள் பாட்டியை பந்துவிளையாட அழைப்பைவிட தாத்தாக்களைத்தான் பந்து விளையாட அழைக்க விரும்புவார்கள்.
- தயாஜி

பித்து



மூலக்கடவுள் என்போம்
மூளையின் வடிவம் என்போம்
ஏடுகளில் எழுதுமுன்னே
என்றைக்கும் நினைக்கச் வைப்போம்

மோதகம் செய்து வந்து
கொழுகட்டை கொடுத்து வருவோம்
மஞ்சளில் பிடித்து வைத்து
மனதார வேண்ட வைப்போம்

கல்யாணம் ஆச்சி என
சித்தி புத்தி சேர்த்து சொல்வோம்
சுத்தபத்த சன்யாசி
என்று காட்டி
புராணங்கள் புரட்டி வைப்போம்

உலகுக்கு பாரதம்
படைக்கவே
தந்தம் உடைக்கவே
எழுதி முடிக்கவே
புழந்து வைப்போம்

வட்டார கோவில்களில்
வருடாந்திர நிகழ்ச்சியாக
லாரி ஏற
கூம்பிட்டு வைப்போம்

கூடாத குறைக்கு
கொஞ்சம்
கூட சைஸ்
ஆடை போட்டு
கம்ப்யூட்டர் ஜாலம் காட்டி
சினிமாவில் ஆட வைப்போம்

சீக்கிரமே குழந்தை பெற
சிக்கலின்றி மரம் சுற்ற
உன் பின்னே வந்து நிற்போம்

வருமான லாபம் பெற
வரைந்து உன்னை
எடுத்து வைப்போம்

பாரதியின் மரணம் கூட
நீ அடித்ததாய் புரளி வைப்போம்

சதுர்த்தி என்ற நாளை சொல்லி
சாக்கடையில் முடித்து வைப்போம்

வண்ணங்களில் சிலைகள் செய்து
வடிவங்களில் புதுமை செய்வோம்

கோயிலியே நிற்க வைத்து
பிச்சைகளுக்கு பயிற்சி வைப்போம்

நீ வாழும்
காடழிப்போம்
நீ வாழா
தந்தம் அறுப்போம்

கயிற்றாலே காலைக் கட்டி
துப்பாக்கியில் சுட்டு பார்ப்போம்

வாயில்லா ஜீவன் உன்னை வதைப்பதில் இன்பம் காண்போம்

மனிதன் என்ற போர்வைக்குள்ளே.....

#தயாஜி
ஓவியம் திரு.ராஜேஸ்

செப்டம்பர் 28, 2019

மர்லின் 5




மர்லின்

நீதான் எத்தனை விதமானவள்
எத்தனை இதமானவள்...

எட்டி எடுக்க முடியாவிட்டாலும்
எக்கி எடுக்க முடிந்ததால்

புத்தகங்கள் கூட
இறகின்றி
உயரத்தில் உட்கார்ந்துக் கொள்கின்றன
உன்னை எதிர்ப்பார்த்து விழிக்கின்றன

மனிதன்
நான் என்ன செய்ய

மர்லின்...

கொஞ்சம்
இதழ் கொடேன்
இறுக்கிக்கொள்கிறேன்

இருக்கும் புத்தகங்கள்
பொறாமையில் பொசுங்கட்டும்

இனிமேல் புத்தகங்கள்
நம்மால் பிறக்கட்டும்

வரிகள் ஒவ்வொன்றிலும்
வாசனை தெளித்திடலாம்

படிப்பதில் போதை
கொடுத்திடலாம்

இன்னும் இன்னும்
உயரத்தில் அடுக்கிடலாம்
காதலை உதிரத்தில் கலந்திடலாம்...

வார்த்தைகளிலாவது
நாம்
வாழ்க்கை கொள்வோம்

வாசிக்கின்றவர்களின் வயதினை
கொல்வோம்


-தயாஜி-

Break me! Smash me!



Here i am...


Standing in front of this mirror....

Deep inside me I feel so weak and shattered....

The mirror reflects 'me'...


The 'me' with full of weaknesses...

The mirror said

"You are defeated"

The mirror said

"You are illiterate"

The mirror said

"You are a loser"

The mirror said

"You are lethargic"

The mirror said

"You are fearful"

The mirror said

"You are impecunious"

The mirror said

"You have no value"

The mirror said

"You are in pain"

The mirror said

"You are unattractive"

The mirror said

"You are empty"

The mirror said

"You are dispirited"

I hate what I'm seeing!!!

I closed my eyes & open it again...

Here I am...

Standing in front this mirror and looking at it sedulously...

Finally,

The mirror said

"Go ahead man... Break me! Smash me!"


By taya.G

மர்லின் 4




என்ன மர்லின்
என் கதையில்
எதனைத் தேடுகிறாய்

எப்போதோ தொலைந்த உன்னையா
எப்போதும் தொலையும் என்னையா

கவனமாக பார் மர்லின்
வார்த்தைகளின் இடுக்கில் கூட
நீ இருக்கக்கூடும்

எந்த பக்கம்
திறந்ததும்
உன் வாசனை கொடுக்கிறதோ
அதுதான் உனக்கான
துருப்புச் சீட்டு

வார்த்தைகளை நோக்கி
வாசனையோடு பின் தொடர்

உன்னை முன் தொடர்ந்த
என் கதையில்
எந்த பக்கத்தில் நீ
இருக்கிறாய் என்று
என்னாலும் நினைக்க முடியவில்லை

என்
எந்த பக்கமும் நீ
இருப்பதால் இந்த
குழப்பம்

முயற்சியை கைவிடாதே

இன்னும் கூட உன் தொடுதலுக்கு
ஏங்கி
வீங்கி
வரும் வார்த்தைகளைப் பாரேன்

பாவமில்லையா

#தயாஜி

ஊதா கண் தேவதை 2





நீ தந்துவிட்டவற்றில்
முத்தாய்ப்பானது
உன் முத்தத்தின் முதல் ஸ்பரிசம்
என்
உதடுகளை கடந்து
எச்சிலை தாண்டி
பல்லிடுக்கில் நுழைந்து
நாக்கினை நகர்த்தி
தொண்டைக்குழியில் குதித்து
நுரையீரல் காற்றை ஊதாவாக்கி
என் இதயத்தை உரசியதுதான்

உரசிவிட்டதில்
உள்ளிரிந்து ஒழிந்திருந்த நான்
ஒளிவிட்டது அப்போதுதான்

அப்போதிருந்த நொடியின்
நகர்முதல் நானாயிருந்த
எவனோ ஒருவனில் இருந்து அந்நியமானேன்
உன் கைப்பிடியில் அன்னியோன்யமானேன்.....

#தயாஜி
#ஊதா_கண்_தேவதை

ஊதா கண் தேவதை 1



எந்த ஒரு மாய எதார்த்தத்தாலும்
காட்டிவிட முடியாத தேவதை நீ
ஒற்றைவிழி பார்வையில் ஓராயிரம் வாசல்களை திறந்துவிடுகிறாய்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு யுகங்களில் வாழ்வை காட்டி நிற்கிறது
சிங்கங்களிடம் சிரித்து
விளையாடுகிறாய்
முதலைகள் முதுகில்
படுத்துறங்குகிறாய்
மரங்களின் நுனியில்
நாட்டியம் செய்கிறாய்
பூச்சி புழுக்களுடன்
விருந்துண்ணுகிறாய்
காளான் செடி குடைகளில்
மழை தடுக்கிறாய்
புகைப்படங்களுள் புகுந்து
பேசுகிறாய்
இத்தனைக்குன் மேலாய்
மனிதன் என்மீது மனதார காதல் கொள்கிறாய்....

#தயாஜி
#ஊதா_கண்_தேவதை

தயாராய் இரு



வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு மோசமானதல்ல. 
ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பை 
அது கொடுத்தே வைத்திருக்கின்றது.
எத்தனை வயதாகியிருந்தாலும்,
எத்தனை இழந்திருந்தாலும்,
எத்தனை நொடித்திருந்தாலும்,
எத்தனை ஏமாந்திருந்தாலும்,
எத்தனை சிதைந்திருந்தாலும்,
எத்தனை அழுதிருந்தாலும்,
எத்தனை அவமானப்பட்டிருந்தாலும்,
எத்தனை துரோகம் கடந்திருந்தாலும்,
எத்தனை ஏமாளியாயிருந்தாலும்,
இப்படி பலப்பல எத்தனைகளுக்கு பின்னரும்
வாழ்க்கை நமக்கான இன்னொரு வாய்ப்பை கொடுக்கவும் தயாராய் இருக்கிறது....

கண்டுகொள்வோம். கரம் பற்றுவோம். அடித்து பட்டையை கிளப்புவோம்.

#second_chance
#தயாஜி

மர்லின் 3



தியானிக்க முயல்கிறேன்
தீயென பற்றிக்கொள்கிறாள்

மர்லின் 

அழைப்பேதுன்றி
அத்துமீறி
பிரவேசிக்கிறாள்

மர்லின் 

தேகமெல்லாம் வியர்க்க
விரல் வழி வழிகிறாள்

மர்லின் 

போதாதென காதில்
காற்றூதி கரைக்கிறாள்

மர்லின் 

இனியென்ன தியானம்
நீயே போதுமென
எழுந்தேன் தீயென
எதிரே
கண்மூடி
கால் மடக்கி
புத்தகம் ஒன்றில்
மூழ்கி
தியானிக்கிறாள்
சஞ்சலமின்றி

மர்லின் 2



மர்லின்
அப்படியே தூங்கிடு
இவ்வுலகு
நாம் வாழ்ந்த உலகல்ல

கிடைக்கும் நேரமே போதுமென்றுணர்
உறங்கும் தருணமே
உன்னால் மூச்சினை உணர முடியும்
இதர நேரமெல்லாம்
மேல் மூச்சு கீழ் மூச்சென
ஓடி ஓடியே உன்னை மறைத்திட வேண்டும்

பேச்சுகொடுக்க மரங்கள் இங்கில்லை
கடித்து காட்ட அணில்கள் இங்கில்லை
ஆற்றை கடக்க முதலைகள் இங்கில்லை
சக்கரை கொடுக்க எறும்புகள் இங்கில்லை
காலை கூப்பிட சேவல்கள் இங்கில்லை
சிரித்து பேசா பூக்கள் இங்கில்லை
வானில் அழைத்திட பறவைகள் இங்கில்லை
படித்து முடித்திட புத்தகங்கள் இங்கில்லை
ஒளியால் நடத்த விளக்குகள் இங்கில்லை

இங்கிருப்பதெல்லாம் ஒன்றுதான்
மனிதர்கள்
ஊர் கொன்று தான் தின்று
வளரும் மனிதர்கள்

நம் உலகு செல்ல
வழித்தடங்கள் இல்லை
எல்லோரும் சேர்த்து
அங்கு
பிணங்களை அடுக்கிட்டார்கள்
நீயோ நானோ
நாமோ அங்கு
போனால்
பிணமாவோம்
பிணவாடையில் ஒன்றாவோம்

உறங்கும் நேரம்தான் இங்கு
உனக்கான நேரம்

எப்போது விழிக்கிறாயோ
இருளை நீ சந்திப்பாய்

மர்லின்




மர்லின்
எந்த நூற்றாண்டிலோ
ஒருவருக்காக ஒருவர் வாழ்ந்திருக்கிறோம்

அதன் காரணமாய்
இன்னமும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்
வெறும் நினைவுகள் சுமந்த பிரேதங்களாய்
சிரித்துக்கொண்டிருக்கிறோம்

சதையினை கிழித்து
இதயத்தை பிழிகையில்
சொட்டென சிதறும் ரத்தம்
உன் பெயரையையே சொல்லி மரிக்கும்

மர்லின்

கோடான கோடியில் நீ
உன் கண் செய்யும் மாயையில் நான்

என் செய்வேன் சொல்
நீயாகவே வந்தென்னை கொல்

தேவதையென தெரிகிறாய் மர்லின்
தேவைநீ சொல்கிறேன் மர்லின்

எழுத முடியா எழுத்துகளால்
கூற முடியா சொற்களால்
காண முடியா காட்சிகளால்

உன்னை எழுதி
உன்னில் சொல்லி
உன்னையே காண்கிறேன்
மர்லின்...

'ச்சீ சிட்டுக்குருவி'



அன்று
என் வாழ்நாள் துயரம்
தன்னை தொடங்கியது

ஏதேதோ பாவங்களின்
வட்டி கணக்குகள் கண்முன்னே
கொட்டிக்கொண்டிருக்கின்றன

எத்தனையோ ஏமாற்றங்கள்
எத்தனையோ துரோகங்கள்
எத்தனையோ பொய்கள்
எத்தனையோ வெறுப்புகள்
எத்தனையோ பழிவாங்கள்கள்
எத்தனையோ ஒழிவுமறைவுகள்

எந்த உணர்வுமின்றி
பார்த்துக்கொண்டிருந்தேன்
சமயங்கள் சிரிக்கவும் செய்தேன்

ஒரு முறை மெல்லமாய் சிரித்தேன்
ஒரு முறை வாயோரத்தில் சிரித்தேன்
ஒரு முறை கண்மூடி சிரித்தேன்
ஒரு முறை கண்கலங்க சிரித்தேன்
ஒரு முறை சத்தமிட்டு சிரித்தேன்
ஒரு முறை வேண்டாவெறுப்பாக சிரித்தேன்

அப்போதுதான் தொடங்கியது
ஆரம்பப்புள்ளி அடையாளம் சொல்லிக்கொண்டது

சிட்டுக்குருவி
ஒரு சிட்டுக்குருவி
கேவலம் ஒரு சிட்டுக்குருவி
ச்சீ கேவலம் ஒரு சிட்டுகுருவி

மிகவும் சோர்ந்திருந்தது அதன் முகம்
எவ்வளவோ தூரம் பறக்க நினைத்த சிறகுகள் சுருங்கிக்கிடத்தன
கன்னங்கள் யாருக்காகவோ காத்திருந்த கருவளையம் சுழன்றுக்கொண்டிருந்தது

இத்தனைக்கும் மேலாக அதன் கண்களின் ஒளி
என் மீது பாய்கிறது
அதன் மென்மை இறகுகள் என் தலையை தடவுகின்றன
அதன் கன்னங்கள் என் கன்னத்தில் உரசுகிறது
அதன் சிரிப்பு என் காதுகளைக் கடந்து
இதய ஒட்டடைகளில் வாளர்ந்திருக்கும் சிலந்திகளை அணைத்து
நட்பு பாராட்டுகின்றன

அதன் ஒரு சொல்
ஒரே ஒரு 
ஒரு சொல்
என்னை மன்னித்தேன் என மறைகிறது

மன்னிப்பை எதிர்க்கொள்வதைவிடவா
இன்னொரு துயர் தொடக்கம் வேண்டும் மனிதனுக்கு...

#தயாஜி

தேடிக்காணும் நான்



இன்னும் தேடிக்கொண்டிருக்கிறாயா?
நேரம் உண்டு
தாராளம் கொண்டு
தேடு
எப்போது என் ஸ்பரிசத்தை உணர்வாயோ
கவனி
என் இரக்கமற்ற காதல்
உன்னை விழுங்கிவிட எத்தணிக்கும்
எட்டி நில்
காணாமல் போவேன்
மீண்டும் தேடி வா
உன் விளக்கின் சுடரொளி
என் இதய விட்டில்பூச்சியின் சிறகை
கருக்கிவிடட்டும்
நான் பறத்தலை மறந்து கோவம் கொள்கிறேன்
நீ காதல் திரவத்தில் என்னை முக்கி எடு
அப்போதும் காணாமல் போகிறேன்
வா
எல்லைகள் கடந்து
கண்டங்கள் தாண்டி
இந்த அரக்கனை ஆட்கொள்ள தேடு
இம்முறை என் முறை
உன் காதுகளில் காதலோசை கொட்டி
உன் மூளை நரம்பை வெடிக்க வைக்கிறேன்
உனக்கும் வாய்ப்பு உண்டு
உன் பற்களால் என் மேனி முழுக்க
கடித்து
சதையை பிய்த்து
நரம்பை அறுத்து
குடலை வெளியில் எடுக்கலாம்
அப்போதும் நான் காணாமல் போவேன்
நான் தான் நீ என
நீதான் நானென
இருவர் புரிந்து சிரிக்க தெரியாமல்
மீண்டும் மீண்டும்
நான் தொலைகிறேன்
நானே தேடி அலைகிறேன்
காதல் பெயரில்
எத்தனை முறையும்
செத்து செத்து விளையாடலாம்தான்..

#தயாஜி

அ-கவிதை




1.
என்னை முழுதாய்
தின்று செரிக்க முடிந்தவள்
நீயெனில்
அருகில் வா
மிச்சம் வைக்காதே

2.
என் உடல் சதைகளை நீக்கி
நரம்புகளைக் கோர்த்து
எலும்புகளைப் பிடுங்கி
உன்னால் இசைக்கவும்
துளையின்றி என்னை
வாசிக்கவும் முடியுமெனில்
உனக்கான இசைக்கருவி நான்

3.
கூரிய நகங்கள் கொண்டு
என் முதுகை ரணப்படுத்து
அதன் ரத்த வெள்ளத்தில்
நீச்சலடிக்க முடிந்தவள்
நீயெனில்
என்னை கட்டிப்பிடி

4
என்
இதழில் தொடங்கி
கொஞ்சம் கொஞ்சமாக
என்னை கடித்துத்தின்ன
தைரியமானவள் நீயெனில்
முத்தமிடு

5.
என் இரு காதுகளையும்
நாவால் கிழித்துத்தெடுக்க
முடிந்தவள் நீயெனில்
ஏதாவது ரகசியம் சொல்
உன் மடியில் படுக்கிறேன்

6.
உன் கொதிக்கும் பார்வையில்
என்னை அவித்து எடுக்கும்
சமையல்காரி நீயெனின்
என்னைச் சமைத்துக்கொடு

7.
என் கழுத்தை
தன் கருங்கூந்தலால்
இறுக்கி
அந்தரத்தில் தொங்கவிட்டு
ஊஞ்சலாட முடிந்தவள்
நீயெனில்
உனக்கான ஊஞ்சல் நானாகிறேன்

8.
பூஜாடிகள் அத்தனையும்
கொண்டு என் தலையில்
உடை
நீ விரும்பும்
ரத்த ரோஜாவாக
நான் மாறுகிறேன்

9.
ஆப்பிள்களை அழகாய் நறுக்க
என் கையில் இருந்து தொடங்க எண்ணுகிறாயா
சுண்டு விரலிலிருந்து நறுக்க ஆரம்பி

10.
என் முகம் முழுக்க
கண்ணாடித்துண்டுகளை சொருகு
பல கோணங்களின் தெரியும்
உன் முகத்தை உன் கண்களின் வழி
காட்டத்துணிந்தவள் நீயெனில்
உடைக்கவேண்டிய நிலைக்கண்ணாடி இதோ

11.
அழுக்கடைந்த என் நகங்களைச்
சுத்தம் செய்ய
ஒவ்வொன்றாகப் பிடிங்கி
அதன் அடிவேரை நீரில் கழுவும்
வேலைக்காரி நீயெனில்
விரல்கள்
இருபதோடு நின்றுவிட்டது
என் துரதிஷ்டம்

12.
உன் தோட்டத்து மண்ணை
தின்றுப்பார்த்து
அதன் வருங்கால பூக்களின் வண்ணங்களையுனக்கு
சொல்லவைக்கும் திட்டமுண்டெனில்
பசியோடு வருகிறேன்
மண் போடு

13.
பறவையைப் போல
என் பறத்தலையும் ரசிக்க
தூக்கி வீசும் முன் யோசி
பத்தாவது மாடியைவிட
நூறாவது மாடிதான்
உன் ரசனைக்கு ஏற்றது

14.
என் முகப்பருக்களை
இல்லாமலாக்க
அவ்விடங்கள்தோரும்
ஊதுபத்தி தீயினால்
ஒத்தடம் கொடுக்க
தயாரானவள் நீயெனில்
ஜவ்வாது ஊதுபத்தியை
பயன்படுத்து
மற்றது
உனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திடும்

15.
என்னை
கட்டியணைத்திடு
வெட்டி எறிந்திடு
பிய்த்து தின்றிடு
மிச்சமின்றி
உதிரம் குடி
அதற்கு முன்
கொஞ்சமேனும்
என்மீது
காமம் தெளி

16.
உன் பட்டாடை
மடிப்புகளற்று வடிவு பெற
இஸ்திரிச்சூட்டை
அதிகம் வைக்கவேண்டும்
நினைத்தது போலவே
என் முதுகில் முயற்சி செய்
எங்கேனும் தோல் கருகினால்
கொஞ்சம் தண்ணீர் மட்டும்
தெளிக்க மறக்காதே

17.
என் கண்ணில் கருவிழியில் ஊசியினை குத்திக்குத்தி
கற்றுக்கொள்ளலாம்
ஊசியில் நூல் கோர்க்கும் வித்தையை
என முடிவெடுக்கும்
தையல்க்காரி நீயெனில்
அரைகுறை வேண்டாம்
என் இருவிழிகளையும் எடுத்துக்கொள்

18.
தொண்டைக்குழியைக் கிழித்து
அமிலம் ஊற்றுவதுதான்
என் இருமலுக்கான
மருத்தெனக் கண்டறியும் மருத்துவச்சி நீயெனில்
முதலில் உன் சிங்கப்பல்லால் கடித்துத்துளையிட்டு
அதனிலிருந்து கிழிக்கத்தொடங்கு

19.
என் உதட்டினை
பிளேடு கொண்டு
சின்னச் சின்னதாய்க்
கோடு கிழி
இரத்தத் துளிகளோடு
உன்னிதழைப் பதித்து
முத்தச் சுவையைப்
பருகிட நினைப்புள்ளவள் நீயென்பதில் தவறில்லை
புதிய பிளேடுகளைக் கையிலெடு

20.
என் முதுகுத்தண்டில்
மெழுகுவர்த்தியைக் கவிழ்த்துச்
சொட்டுச்சொட்டாக
நீ விரும்பும் ஓவியத்தை உண்டாக்க
விரும்புகிறவள் நீயெனில்
கழுத்துக்கும் முதுகிற்கும் இடைப்பட்ட இடத்திலிருந்து ஓவியம் தொடங்கு

#

-தயாஜி

தனிமை



தனிமையின் கொடுமை
அத்தனை சுமையானது அல்ல
மருத்துவமனையின்
அடுத்த அழைப்பிற்கு
காத்திருக்கும் வரை

காத்திருத்தலின் நேரம் சுமையாவது காதலில் சாத்தியமாகலாம்
மருத்துவமனை முன்பதிவுக்கு தாமதமாகிவிடுவதை காட்டிலும்
பெரிதாக முடியாது

உறவுகள் கொடுக்கும் வலி
கொஞ்ச நேர உரையாடலில் தெளிந்துவிடலாம்
மருத்துவர் ஒருவர்
தன் நோய் குறித்து சொல்ல
" கூட வேற யாரும் வரலையா?"
என கேட்டு புருவம்
சுருக்கி கொடுக்கும் வலி
இதயத்தில் சிற்சில குண்டூசிகளை குத்திக்குத்தி பார்ப்பதை
அத்தனை எளிதில்
தெளிவுப்படுத்த முடியாது

அவளின் எலும்புகள்
கொடுக்கும் வேதனையை
புரிந்துக்கொள்ள
உட்கார்ந்து  அறிவியல் பேசுவதை விட
உடன் வந்து அவளை
தாங்கிப்பிடிப்பதுதான்
உத்தமமானது
உணர்வுப்பூர்வமானது

அவை எலும்புகள் அல்ல
யாரோ செய்துவிட்ட
பாவத்தில் பிரம்படியாகக்கூட
இருக்கலாம்
ஆனால்
ஏனே தானே சுமக்கும்படி சபிக்கப்பட்டிருக்கிறாள்

அடுத்தடுத்த தடுப்புகளில்
வந்து நிற்பவர்களில்
அவரவர்க்கான அன்பின்
பறிமாற்ற மொழிகள்
இவளின்
தனிமை தடுப்பில் மட்டும்
கூரம்புகளாய் புகுந்து
சிறிய காதுகளை
துளைக்காமல் விடுவதில்லை

அகல திறந்து கிடக்கும்
வார்டின் வாசல் கதவிற்கு வாயிருந்தால் சொல்லியிருக்கலாம்,
"நீ கொஞ்ச நேரமாச்சும் தூங்கு..
யாரும் வந்தா எழுப்பி விடறேன்"

உடல் பாரத்தைத் தாங்கும்
நவீன பட்டன் கட்டில் கூட
அவளின் மன பாரத்தை தாங்காது தவிக்கின்ற போது
அந்த வயது வந்த குழந்தை எப்படி தாங்கிக்கொள்ளும்

ஆயிரம் வேளைகளில்
அடுத்தவர் மீது அன்பு காட்ட
கொஞ்ச நேர இடைவெளி கிடைக்காதது
பணத்திற்கான தேடலென்றால்
இதுவரையில்
அப்படியொன்றும் சம்பாதிக்கவில்லை
வேலைக்கான தேடலென்றால்
இதுவரையில்
அப்படியொன்றும் செய்துவிடவில்லை
இயலாமைதான் காரணம் என்றால்
சரி ஒப்புக்கொள்ளலாம்
இது அன்பின் இயலாமை

அன்பிற்கே இயலாமையெனின்  உறவுகளின் ஆணிவேர் எங்கணம் சென்று நீர் தின்று உயிர் பிழைக்கும்

கொஞ்சமாய் புன்னகை
அதைவிட கொஞ்சமான விசாரிப்பு
அதைவிடவும் கொஞ்சமான அக்கறை
அதைவிடவும் கொஞ்சத்தின் கொஞ்சமான அன்பு

மருத்துவமனை தனிமைச் சோகங்களை மெல்ல மெல்ல துடைத்துவிடட்டும்
ஏனெனில்
நாளை
நம் நாக்கு மறுத்துப்போகலாம்
நம் கண்கள் பார்க்க மறக்கலாம்
காதுகள் ஏனோ வலிக்கலாம்
கால்களின் எலுப்பு
முறிந்துக்கொள்ளலாம்
கொஞ்சமாக இதயம் தன் இசையை நிறுத்திச்சிரிக்கலாம்

#தயாஜி

கதை_வாசிப்பு_2019 – 2 'கதிர்ச்சிதைவு'




கதை_வாசிப்பு_2019 – 2
கதை – கதிர்ச்சிதைவு
எழுத்து – அனோஜன் பாலகிருஷ்ணன்
இதழ் – காலச்சுவடு
திகதி – செப்டம்பர் 2019


கதிர்ச்சிதைவு. தலைப்பு ஒரு முறைக்கு இருமுறை சரியான சொல்லா அல்லது கதையில் வேறு பொருள் கொண்ட சொல்லா என நினைக்க வைத்தது. கதையின் நாயகன் ஒருமுறை தனது உரையாடலில் இவ்வாறு சொல்கிறான் “வானவில் என்பதே கதிர்ச்சிதைவின் மூலம் தென்படும் கானல் நீர்தான்.” முதலி வெறுமனே தலைப்பை சொல்லிக்காட்ட காரணம் என அவ்விடத்தை விட்டு நகர்ந்து கதைக்குள் செல்லலானேன்.

கதையினை வாசித்து முடித்ததும் ஏதோ ஒன்று மீண்டும் கதையை வாசிக்க அழைத்தது. ஏனெனின் உபயோகப்பட்டிர்ருகும் மொழி சட்டென எனக்கு நெருக்கமாகவும் அந்நியமாகவும் பூச்சி காட்டியது. சில இடங்களில் எங்கள் வட்டார வழக்கில் இருந்து இன்று மறந்து போயிருந்த சில வார்த்தைகள் இருந்தன. மீண்டும் கதிர்ச்சிதைவுக்கு கதாப்பாத்திரம் சொன்ன காரணம் மனதில் அலை மோதியது.

தனது பால்ய வயதில் நண்பனுக்கு செய்துவிட்ட துரோகத்தின் நிழல் மீண்டும் தன் மீது விழ அதிலிருந்து மீழ முடியாமல் திணறுகிறான் கதாநாயகன். அந்த சம்பவத்தை காதலியிடம் சொல்லும் போது நம்மாலும் அவ்விடத்தை ஜீரணிக்க முடியவில்லை.

மூன்று பிரிவுகளாக கதாநாயகன் தன் கதையைச் சொல்லிச்செல்கிறான். கடைசிவரை அவனது பெயர் நமக்கு தெரியவில்லை. அது ஒரு வகையில் நமக்து குற்றவுணர்ச்சியை துசி தட்டிவிடுகிறது.

‘வெற்றுத்தோட்டாக்களை சேமித்து விளையாடும் சிறுவர்களாக’ இருந்த தனது பால்யத்தையும் இராணுவ அதிகாரிகளீடம் சிக்கிக்கொண்டதும் சொல்லப்படும் போது மனதில் பாரம் தொற்றிக்கொள்கிறது.

போரைக்காட்டியும் போர்முடிந்த மௌனம் எத்தனை கொடூரமானது.
எல்லோரும் படிக்க வேண்டும் என மொழியில் சமரசம் வைக்காமல், தன்மொழியில் கதையினை நகர்த்தி வாசகனுக்குள்ளாக புதிய தேடலை இக்கதை தொடங்குகிறது.

தேக்கி வைத்திருக்கும் குற்றவுணர்ச்சி தன்னை வெளிகாட்டும் நேரம் நிச்சயம் பெரிய மனபாதிப்பை விட்டுச்செல்லும்.
கதையின் முடிவு முடிவற்று தொடர்கிறது. இங்கு யாருக்கும் யாரும் சமாதனம் சொல்லி எதனையும் தீர்த்து வைக்க முடியாது என்பதை இக்கதை நம்பவைக்கிறது.



- தயாஜி

கதை_வாசிப்பு_2019 – 1 'மழையின் சங்கீதம்'

கதை_வாசிப்பு_2019 – 1
சிறுகதை – மழையின் சங்கீதம்
எழுத்து – ந.பச்சைபாலன்

 ப.சிங்காரத்தின் கடலுக்கு  அப்பால் நாவலை படித்திருந்தேன். அது ஒரு துயர நாடகம் போல மனதை அலைக்கழித்தது. வரலாற்றில் ஆர்வமும் வரலாற்று அறிவும் அவ்வளாக இல்லாத எனக்கு, நாவலில் தொடக்க வாசிப்பு ஏனோ ஈர்க்கவில்லை. முதலில் என்னை பாதித்தது அதன் மொழிதான். பின்னர் நாவலில் பயணத்தில் நானும் ஒருவனாக மாறிவிட்டேன். நாயகனின்  தொல்வியிலும் அவனது கண்டடைதலிலும் நானும் கொஞ்ச நாட்களை கடத்தலாம் என்று நினைக்கிறேன். ஆக இனி வருவது  அந்நாவல் குறித்த பகிர்வு அல்ல.

அந்நாவலில் சிக்குண்டு கிடந்த மனதிற்கு மாற்றாய் கிடைத்த சிறுகதையைப்பற்றியது.

   சிலரின் கதைகளை என்னால் தைரியமாகப்  படித்து அது குறித்து பேசவோ எழுதுவோ முடியும். அவர்களால் என்னை புரிந்துக் கொள்ளவும் என் கருத்துக்கு மதிப்பளிக்கும் முடியும். அவ்வாறானவரின் ஒருவர்தான் ந.பச்சைபாலன். அதிகமாய் பாசம் பகிர்ந்துக் கொண்டு பழகி இல்லாவிட்டாலும், இருவருக்கும் இடையே மரியாதையும் அன்பும் இருக்கிறது.

   நாவலின் தாக்கத்தை தற்காலிகமாக மாற்றுவதற்கு ஏதும் தென்படுகிறதா எனத் தேடிக்கொண்டிருந்த சமயம் ந.பச்சைபாலனின் சிறுகதை கைபேசியில் பட்டு கண்ணுக்கு எட்டியது. இயல்பாகவே கவிஞர்களிடமிருந்து கதைகள் வருகிறதென்றால் அதில் எனக்கு தனித்த ஆர்வம் உண்டு. அதிலும் தற்சமயம் நான் இருக்கும் மழைச்சாரல் புலனக்குழுவில் ந.பச்சைபாலனின் கவிதைகளை குழுவின் நிர்வாகி வாணிஜெயம் தொடர்ந்து பகிர்ந்துக் கொண்டிருந்தார். ஆக சிறுகதை படிக்கும் ஆர்வம் மேலும் அதிகரித்தது.

‘மழையின் சங்கீதம்’ சிறுகதை.

   ந.பச்சைபாலனே அதில் நாயகனாக பாலன் என்ற பெயரில் வருவதாகவே வாசிக்கையில் தெரிந்தது. ஆனால் அந்த பல்கலைக்கழக காதல் காட்சிகளில் இன்றைய அவரின் தோற்றத்தையே என்னால் நினைத்துப்பார்க்க முடிந்தது என்னமோ துயரம்தான். இதனை போக்குவதற்காகவே அவரது இளமை ததுப்பும் பழைய படம் எதையாவது பார்த்து அந்த காதல் காட்சிகளில் இன்றைய பாலனை எடுத்துவிட்டு இளைய பாலனை புகுத்த வேண்டும். (இந்த வரிகளுக்கு ந.பச்சைபால் சிரிப்பார் மற்ற சிலர் எனக்கு ‘என்ன கொழுப்பு பார்’ என்பார். ரைட்டு விடுவோம்.)

கதை.

   ஞாயிறு பதிப்பில் துணை ஆசிரியராக இருக்கும் பாலன். எழுதிய பேய் கதைக்கு வாசகர்களிடம் இருந்து பாராட்டுகள் கிடைக்கின்றன. அதில் ஒரு வாசகர் கடிதம் இவரை காதல் கதை எழுதச் சொல்லி கேட்கிறது. ஆசிரியர் பாலனை அழைத்து அது குறித்து பேசுகிறார். காதலே நமக்கு ஆகாது இதில் காதல் கதை வேறயா என்பது போல பாலன் தயங்கி இன்னொரு பேய்கதை எழுதுவதற்கு தயார் என்கிறார். அதனை மறுத்து ஆசிரியர் காதல் கதை எழுதுவது அவருக்கு விடப்பட்ட சவால் என தூண்டி விடுகிறார். பாலனும் வேண்டாம் வெறுப்பாக ஒப்புக்கொள்கிறார்.

  அப்போது மழை. மழையில் பாலனுக்கு பல்கலைக்கழக காதல் அனுபவம் நினைவுக்கு வருகிறது. அவரின் பால்யமும் அந்த பருவமும் நேர்த்தியாக சொல்லப்படுகிறது. நாயகி  பூரணி. ந.பார்த்தசாரதியில் குறிஞ்சி மலர் நாவலின் நாயகி. பாலனுக்கு அப்படித்தான் தோன்றுகிறது.  இருவருக்குமான நெருக்கம் தொடங்குகிறது . அங்கிருந்து காதலை நோக்கி நாம் பயணிக்கிறோம். அடடே நல்லதொரு காதல் கதைக்கு வாசகர்கள் தயாராகும் சமயத்தில் ஒரு திருப்பம். வழக்கமான காரணங்களின் பொருட்டு அது நடக்கிறது.

   மழை மனிதற்கு முதல் காதலை மட்டுமல்ல மறுகாதலையும்தான் நினைக்க வைத்துவிடுகிறது ! அப்படி இரண்டோடு நின்றுவிட்ட துர்பாக்கியசாலிகளில் பாலனும் சேர்ந்துக் கொள்கிறார். எனக்கெல்லாம் பெய்துக் கொண்டிருக்கும் மழை மட்டுமல்ல, மழைன்னு யாரும் சொன்னாலே காதலிகள் வரிசையா நின்றுக் கொள்வார்கள். யாரைத்தான் நினைக்காமல் இருக்க முடியும் சொல்லுங்கள் ?

   கதையில் அடுத்த பரிணாமம். பத்திரிகை துறையில் சேர்கிறார் பாலன். அங்கு வேலை சேர்வதற்கு வீட்டில் ஆதரவு இல்லை. தாத்தாவை போல பேரனும் இப்படி பத்திரிகை கதை கட்டுரை என வீணாய் போவதை அம்மா விரும்பவில்லை. இதனை படிக்கையில் இதே போன்ற வசனம் அம்மா சொல்வதாக ந.பச்சைபாலனின் இன்னொரு கதையில் படித்ததாய் தோன்றுகிறது. யார் சார் உங்க தாத்தா… எனக்கே அவரை பாக்கனும் போல இருக்கு…?

வேலை நிமித்தம் வெளியில் செல்லுகையில் நந்தினியை சந்திக்கின்றார். ஆமாம் அங்கொரு காதல் கதை ஆரம்பமாகிறது. ஆனால் பாவம் பாலனால் நந்தினியில் இன்னொரு உலகத்துக்கு நுழைய முடியவில்லை. நவீன உலகத்தை பொறுத்தவரை ஒவ்வொருவரும் இவ்வாறான இரண்டு உலகங்களில் வாழ தங்களை பழக்கிக்கொள்கிறார்கள். வேறு வழி இல்லை என்பது மாதிரியான சூழல் இங்கு அமைந்துவிடுகிறது. சரி தவறு என்பதை தாண்டி மக்கள் பயணித்து நாளாகிவிட்ட நிலையில் பாலன் போன்றவர்களும் இருக்கிறார்கள். நாம் எதிர்ப்பார்த்த காதல் கதையில் இன்னொரு திருப்பத்தை நமக்கு பாலன் தருகிறார்.

   தனது ஏமாற்றங்களை மிள் உருவாக்கம் செய்து அதனை காதல் கதையாக்கி அதிலாவது வெற்றி அடைவார் என வாசகர்கள் எதிர்ப்பார்க்கும்  சமயத்தில்;

   ‘ஆதலினால் கொலை செய்வீர்’ (இந்த தலைப்பில் சுஜாதாவின் நாவல் இருக்கிறதே !) இன்னொரு திகில் கதையை எழுதிக் கொடுக்கிறார். ஏமாற்றத்துடன் ஞாயிறு ஆசிரியர் காதல் கதை குறித்துக் கேட்கவும்.  அடுத்த கதை காதல் கதைதான் என சொல்லிவிட்டு செல்கிறார். நாமும் அந்த ஞாயிறு ஆசிரியர் போல  நம்பிகொண்டு இருக்கும் போது; தன் இடத்தில் வந்து அமர்கிறார். ஜன்னல் வழி வானம் பார்க்கிறார். அவருக்கு வானம் தெளிவாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல மழை வராது என்றும் கூட அவருக்கு தோன்றிவிடுகிறது. வராமல் போவது மழை மட்டுமல்ல அவரிடம் இருந்து காதல் கதையும்தான் என நாம் நினைத்துக் கொள்ளலாம். ஆனாலும் அவர் சொல்லாமல் செல்வது போல போக்கு காட்டிய இரண்டு இடங்களிலும் காதல் உண்டு அங்கு கதையும் உண்டு.

   படிப்பதற்கு சுவாரஷ்யமான கதை. நம்மை கொஞ்ச நேரம் பழைய காதலில் இளைப்பார வைக்கிறது. தங்குதடையின்றி கதைக்குள்ளே செல்ல முடிகிறது.

  ஓர் ரகசியம்; பாலனுக்கு முன்றாவது காதல் வரலாம். ஏனெனில் அவ்வபோது அவரது அலுவலகத்தில் தேநீர்  கொடுக்கும் பெண்ணின் பெயர் மாலினி.

மாலினி பெயர் நல்லாருக்குல்ல…

https://patchaibalan.blogspot.com/2019/05/blog-post_21.html?m=1
(சிறுகதையை வாசிக்க )

- தயாஜி

ஜூன் 16, 2019

அப்பா கண்டிப்பானவர்தான் ஆனாலும்…

இன்னும் அந்த சாலையில் பரபரப்பு ஆரம்பமாகவில்லை. தனக்கே உரித்தான இயல்பில் அது  அழகாகத் தெரிந்தது. காலை பனியில் அரைகுறை குளியல் போட்ட புற்களில் சில மட்டும்தான் தலையைத் துவட்டி நிமிர்ந்து நின்றன . சில ஏனோ பனித்துளி சுமந்த தலைகணத்தில் நிமிர்ந்துப்பார்க்க முடியாமல் தலைகுனிந்துக் கிடந்தன. தலைக்கணம் பனியால் சேர்ந்திருந்தாலும் அது பாராங்கல்லால் சேர்ந்திருந்தாலும் அதனை சுமந்துக் கொண்டு எப்படி நிமிர்ந்து நிற்க முடியும்.
சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக விடியலை கொண்டுவந்துக் கொண்டிருந்தது. சாலையின் இரு பக்கத்திலும் மனிதர்கள் நடை பயிற்சியும் மெது ஓட்டப்பயிற்சியும் செய்துக் கொண்டிருந்தார்கள். இவர்களை மனிதர்கள் என்றால் மனிதர்கள் என சொல்ல முடியாவதவர்களும் இருக்கிறார்களா என்ன?. இருக்கிறார்கள்தான். வாரத்தில் ஆறு நாட்களிலும் பொருளாதார சுழற்சியில் சூழ்ச்சியில் சிக்கிக்கொண்டு இயந்தரங்களாக மாறிப்போயிருப்பவர்களை எப்படி மனிதர்கள் என்பது. சாவி கொடுத்த இயந்திரம் போல காலை அலாரத்தில் எழுந்து, அடுத்தடுத்த கடமைகளை குறிப்பிட்ட நேரத்தில் செய்து சாலை நெரிசலில் மற்றவரை திட்டியும் மற்றவர்களிடம் இருந்து திட்டு வாங்கியும் அலுவலகம் சென்றுச் சேர்ந்து சிரிப்பதற்குக்குக் கூட அச்சம் கொண்டு கொடுக்கப்பட்ட வேலையையும் கொடுத்துவிட்ட வேலையையும் சரிப்பார்த்து மீண்டும் மீண்டும் அதனைச் செய்து, மாலை மணி ஐந்திற்கு வேலை முடிந்தாலும் அதற்கு அடுத்ததாய் இன்னும் சில மணி நேரங்களில் முயற்சித்து ஓவர் டைமை வாங்கியோ அல்லது அலுவலக வேலை முடிந்து பகுதி நேர வேலையையோ செய்து வீட்டிற்கு செல்லும் வழியில் மீண்டும் ஒரு வாகன நெரிசலில் சிக்கி காலையில் பார்த்த அரைகுறை சூரியனைக் கூட மீண்டும் அரைகுறையாக பார்த்துவிட்டு  வீட்டிற்கு வரவும் அசதியில் கொஞ்ச நேரம் அமர்ந்து பின்னர் காலை அலாரம் வைத்து தூங்கிவிடும் இயந்திர செயல்பாடுகளில் நாம் மனிதர்கள் என்பதை மறந்துவிட்டோம் சில தோலைத்து விட்டோம்.
என் குடும்பம் நன்றாக இருக்கா நான் இப்படியாக இருக்க வேண்டியுள்ளது என சொல்லிக்கொண்டு முகம் பார்க்கக்கூட நேரமில்லாமலும் அமர்ந்து பேசக்கூட வாய்ப்பு இல்லாமலும் அன்பு என்னும் பதம் நமது மூளை முழுக்கவும் பொருளியல் சிந்தனையாகவே மாறிவிட்டிருக்கிறது. விளையாட்டு பொம்மைகள் குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தும் என நம்புகிறொம். தொலைக்காட்சி நாடகங்கள் பெரியவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் என நம்புகிறோம். கைச்செலவுக்கு பணம் கொடுப்பது இளைஞர்களை மகிழ்ச்சிப்படுத்தும் என சொல்கிறோம். ஆனால் அதுவெல்லாம் மாயை என்பது கொடுக்கும் நமக்கும் தெரியும் பெற்றுக்கொள்ளும் நபர்க்கும் தெரியும்.
எல்லோருக்கும் இப்படி யோசிப்பதற்கான வாய்ப்புகளைக்கூட பொருளாதார பந்தைய ஓட்டத்தில் கிடைப்பதில்லை. ஆனால் மணிக்கு அது கிடைத்தது.
துரித உணவுகளால துருத்திக் கொண்டு வெளி வந்திருக்கும் இளந்தொந்தியைக் குறைப்பதற்கு வாரத்தில் ஒரு நாள் மட்டும் இந்த சாலையில் மெது ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கிறார். வாரத்தின் ஆறு நாட்களில் சேமித்து வைத்த செரிமாணம் ஆகாத கொழுப்புகள் ஞாயிறுகளின் சில மணி நேர மெது ஓட்டத்திலா குறைந்துவிடப்போகிறது.  குறையலாம குறையாமலும் போகாலாம். ஆனால் மணி இப்படி ஞாயிறுகளில் ஓடுவது தொந்தியைக் குறைக்க மட்டுமல்ல, தனக்குள்ளே கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வியில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள. சிந்திக்க முடியாத இயந்திரம் போலவே இருந்துவிடுவதில் நமக்கு லாபம் உண்டுதான். யாருக்கும் உதவிட வேண்டாம் அதில் நமக்கு லாபம் இல்லை, உறவுகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டாம் அதில் நமக்கு சம்பளம் கிடைப்பதில்லை . இப்படியாக பொருள் ஈட்ட முடியாத எதனையுமே செய்யவோ யோசிக்கவோ வேண்டாம்.
மெது ஓட்டத்தில் இருந்த மணி சற்று ஓய்வெடுக்க அங்குதான் அந்த குழந்தையைக் கண்டான். ஏதேதோ சித்தனையில் ஓடி ஓய்வெடுக்க அமர்ந்தவன் பக்கத்தில் யாரும் இருக்ககிறார்களா என கவனிக்கவில்லை. இன்றாவது வயிறு குறைந்திருக்கிறதா என வயிற்றை தடவிக்கொண்டிந்தான். “என்ன அங்கிள் வயித்துல பேபி இருக்கா..?” எனும் குரல் மணியைத் திடுக்கிட வைத்தது. 
கடுப்புடன்  யாரென திரும்பினான். அங்கு ஒரு அழகான குழந்தை அமர்ந்திருந்தாள். பக்கத்தில் பள்ளிப்பை, கையில் புத்தகம் , அருகில் வண்ண பென்சில்கள். குழந்தை இன்னும் மணியின் முகத்தை பார்க்கவில்லை. ஏனெனில் இன்னமும் மணியில் வயிற்றை தடவுவதை நிறுத்தவில்லை. சட்டென கைகளை அசைத்து எதையோ விரட்டுவது போல பாவணை செய்தான்.
“ஹாய் பாப்பா.. இங்க என்ன செய்றிங்க… ஆமா இங்க யார் கூட வந்திருக்கிங்க…?”
என மணி கேட்கவும் மணியின் வயிற்றில் இருந்த தனது பார்வை அவனது முகத்தில் சில வினாடிகள் வைத்து பின்னர் எதையும் பேசாமல் மீண்டும் தனது வண்ணம் தீட்டும் வேலையில் அக்குழந்தை ஈடுபட்டது. மணிக்கு இப்போது ஒரு சந்தேகம் எழுந்தது , உண்மையில் வயிற்றைக் குறித்து பேசியது இந்த குழந்தைதானா இல்லை மனப்பிரம்மையா? கேட்டது என்னவோ குழந்தையின் குரல்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த குழந்தையோ எதுவுமே நடக்காதது போல அதன் வன்ணம் தீட்டும் வேலையைச் செய்கிறது  சுற்றி முற்றிப் பார்த்தான்.  கண்களுக்கு தெரிந்த தூரத்தில் அந்த குரலுக்கு ஏற்ற எந்த முகமும் தெரியவில்லை. ஆனால் மணிக்கு கோவம் வராமல் சிர்ப்புத்தான் வந்துக் கொண்டிருக்கிறது.
அந்நேரம் பார்த்து காற்று சற்றே பலம் கொண்டு வீசுகிறது. அக்குழந்தை கையில் இருந்த புத்தகம் தவறி கீழே விழுகிறது. அதனுள் இருந்த ஏதோ தாள் காற்றில் பறக்கத்தொடங்கியது. பதற்றமடைந்த குழந்தை அழ ஆரம்பித்தது. மணி கீழே விழுந்த புத்தகத்தை எழுத்து குழந்தையிடம் கொடுத்துவிட்டு அவள் அருகில் இருந்த வண்ண பென்சில்களை எடுத்து அதற்கேற்ற பெட்டியில் வைத்துவிட்டு ,
“அழாத பாப்பா.. அங்கிள் போய் அந்த தாளை கொண்டு  வரேன்… இங்கயே இருக்கனும் சரியா…”
என சொல்லிவிட்டு, இன்னமும் காற்றில் வலதும் இடதும் என ஏறி இறங்கி பறந்துக் கொண்டிருக்கும் தாளை பிடிக்க ஓடினான். ஆச்சர்யம்தான் சில மீட்டர் தூரம் வரை அந்த தாள் காற்றில் மிதந்துக் கொண்டே போகிறது. ஒரு வழியாக எம்பி குதித்து அந்த தாளைக் கைப்பற்றினான். பெரிதாக எதையோ சாதித்துவிட்ட மகிழ்ச்சியில் மீண்டும் நாற்காலிக்கு வந்துச்சேர்ந்தான். அங்கு அந்த குழந்தை இல்லை.
அதற்குள் அக்குழந்தை எங்கு சென்றிருக்கும் என முடிந்த தூரம் வரை எட்டிப்பார்த்தான். கையில் அக்குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய தாளை சுருட்டிக் கொண்டு வேகமாக நடக்கலானான். இங்குதான் எங்காகினும் சென்றிருக்கும் அல்லது மெது ஓட்டம் சென்றிருந்த பொற்றோர் திரும்ப வந்து அழைத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால் ஏன் இத்தனை அவசரம். பறந்த நாளை பிடித்து வர ஐந்து நிமிடங்கள் கூட ஆகியிருக்கவில்லை. பாவம் அந்த குழந்தை அழுதுக் கொண்டே சென்றிருக்குமே என தனக்குத்தானே பேசிக்கொண்டு பார்வையை மேலும் அகலப்படுத்தினான்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த குழந்தையும் படவில்லை. மீண்டும் முன்பு அமர்ந்திருந்த நாற்காலிக்கே வந்து அமர்ந்தான். கொஞ்ச நேரம் இங்கு அமர்ந்திருக்கலாம். ஒருவேளை குழந்தை இங்கு வந்தாலும் வரலாம்.
அமர்ந்தவன் கைகளில் சுருட்டிப் பிடித்திருந்த தாளை திறக்கலானான். சுருட்டிய தாளை கொஞ்சம் கொஞ்சமாக திறக்கலானான். அப்படி திறக்கையில் முதலில் அவன் கண்களில் பட்ட வாக்கியம் அவனை ஸ்தம்பிக்க வைத்தது.
‘அப்பா கண்டிப்பானவர்…’
வாக்கியத்தைப் படித்ததும் மேற்கொண்டு திறந்துப்படிக்க மனம் வரவில்லை. அந்த குழந்தையின் மனம் எப்படி பாதிக்கப்பட்டிருக்கும் என யோசிக்கலானான். ஆமாம், ஏன் எல்லா அப்பாக்களும் கண்டிப்பானவர்களாக இருக்கிறார்கள் என தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். அவனும் அந்த அனுபவம் இருந்தது. இன்னும் அந்த வலியை அவனது மனம் சுமந்துக் கொண்டுதான் இருக்கிறது. மணியின் தந்தைக்கும் ஏனோ மணியை பிடிக்கவில்லையோ என அப்போதெல்லாம் நினைத்து அழுததும் உண்டு. மற்ற நண்பர்களுக்கு கிடைத்திருக்கும் அப்பா போல தனக்கு இல்லாததது அவனது பால்ய காலத்து ஏக்கம் இன்னமும் அதற்கு ஒரு பதில் கிடைக்கவில்லை.
ஒரு முறை பள்ளிக்கு தேர்வு முடிவுகளை வாங்குவதற்கு பெற்றோர்கள் வந்திருந்தார்கள். மணியின் வகுப்பில் பெற்றோர்க்கான நாற்காலிகள் வரிசையாகப் போடப்பட்டிருந்தன. வகுப்பு ஆசிரியர் அமர்ந்து வரும் பெற்றோர்களுக்கு அவர்களின் பிள்ளைகளின் தேர்ச்சி குறித்தும் மேற்கொண்டு எடுக்கவேண்டிய முயற்சிகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு மாணவனின் பொற்றோரும் மிடுக்கா உடையணிந்தும் அதில் சிலர் நுணி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர்களாகவும் இருந்தார்கள். சமயங்களில் வகுப்பு ஆசிரியர்கூட ஆங்கிலத்தில் திக்கி திணறுவது போல தெரிந்ததும் மாணவர்கள் தங்களுக்குள்ளாக ஏதேதோ பேசிக்கொண்டார்கள்.
கொஞ்ச நேரத்தில் வகுப்பில் சலசலப்பு. யாரோ சாயம் போன சட்டையுடன் த்லையில் தலைக்கவசத்துடன் அரைகுறை தாடியுடன் வாசலில் வந்து நிற்கிறார். வகுப்பு மாணவர்கள் ஆளுக்கு ஆள் ஏதேதோ பேசி சிரிக்கலானார்கள். மணி செய்வதறியாது அப்படியே முன்னால் இருந்த மாணவனின் முதுகில் தன்னை  மறைத்துக் கொண்டான்.
ஆசிரியரும் அமர்ந்த இடத்தில் இருந்து யார் நீங்க என பார்வையில் கேட்க, “வணக்கம் டீச்சர் நான் மணியோட அப்பா.. ரிப்போட் கார் எடுக்க வந்திருக்கேன்” என்றார். அவரது உடையினை மீண்டும் ஒரு முறை முழுதாகப் பார்த்துவிட்டு உள்ளே வரும்படி அழைத்து, மணியை கவனித்தார். மணி தன்னை மறைத்துக் கொண்டது ஆசிரியர்க்கு தெரிந்தது. தெரியாமல் இருக்குமா ? இந்த நான்கு ஆண்டுகளில் அவர்தான் இந்த வகுப்பிற்கு வகுப்பாசிரியராக இருக்கிறார்.
மற்ற பெற்றோர்களை சந்திக்கும் பொழுது அந்தந்த மாணவனையும் ஒன்றாக அமரவைத்து பேசிய ஆசிரியர் இம்முறை அப்படி செய்யவில்லை. மணியின் அப்பா பேசுகையில் ஒரு வகை பதற்றம் தெரிந்தது. இத்தனைக்கும் அவருக்கு தெரிந்த ஒரே மொழி தமிழ் மொழி அதிலும் அவர் உளறிக்கொண்டிருந்தார். ஆசிரியரும் கொஞ்சம் நேரம் எடுத்துத்தான் அவரிடம் பேசினார். கடைசியில் புறப்படும் போது,
“டீச்சர் என் பிள்ளையை நீங்க கண்ணைத்தவிர வேற எங்க வேணும்னாலும் அடிங்க.. அவன் படிச்சி நல்லா வந்தா அதுவே எனக்கு போதும்”
என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்லிவிட்டார். வகுப்பு மாணவர்கள் அனைவர் காதிலும் அது விழுந்தது. மணியை பரிதாபமாக அவர்கள் பார்க்கலானார்கள். மணிக்கு அது இன்னும் அவமானத்தைக் கொடுத்தது. அப்பாவை ஏன் பள்ளியில் கூப்பிடுகிறார்கள் நம்மை அவமானம் படுத்தத்தானோ என பள்ளியை நொந்துக் கொண்டான். பக்கத்தில் இருந்த நண்பன் மணியின் காதருகில் வந்து,
“என்னடா உங்கப்பா இவ்வளோ கண்டிப்பாக இருக்காரு… ஏற்கனவே இந்த டீச்சருக்கு அடிக்கவே தெரியாது இதுல இதுவேறயா… எங்க அப்பால்லாம் என் மேல அடி விழுந்ததுன்னு சொன்னாலே ஸ்கூலு ரெண்டாக்கிடுவாரு தெரியுமா..?” என்றான்
மணியின் அப்பா வகுப்பை விட்டு வெளியேறினார். வகுப்பு ஆசிரியர்  மணியை அவரிடம் அழைத்தார் . மணியும் வகுப்பில் அனைவரும் அவனை கேலி செய்வதாக கற்பனை செய்துக் கொண்டு மெல்ல மெல்ல ஆசிரியரிடம் வந்து நின்றான்.
“மணி உங்க அப்பாவை உனக்கு பிடிக்காதா..?”
என கேட்டதும் மணிக்கு அதிர்ச்சியானது . இதெப்படி ஆசிரியைக்கு தெரியும் என குழப்பமானான். அப்பாதான் எதையாவது சொல்லியிருக்கவேண்டும் என கண்கள் பிதுங்க ஆசிரியையே பார்த்தான்.
“மணி, எந்த அப்பா அம்மாவும் பிள்ளைகள் மீது வெறுப்பு காட்டமாட்டாங்க… அக்கறையாக இருப்பாங்க.. ஆனா அந்த அக்கறை ஆரம்பத்துல கண்டிப்பாகவும் கோவமாகவும் வெறுப்பாகவும் நமக்கு தோனும்… நாளாக நாளாக அது நமக்கு புரியும்… நீ நல்லா படிக்கனும்னுதான் அப்பா எதிர்ப்பார்க்கறாரு..”
ஆனால் மணியின் காதுகளில் எதுவும் கேட்கவில்லை. அவனுக்கு அழுகை மட்டுமே  வந்துக் கொண்டிருந்தது.
சமயங்களில் வயதும் ஒரு காரணமாக இருக்கும் என புரிந்துக் கொண்ட ஆசிரியை மணிக்கு தனது கைப்பையில் இருந்து மிட்டாய் ஒன்றை எடுத்துக் கொடுத்தார். அழுகையைத் துடைத்துக் கொண்ட மணி
“நன்றி டீச்சர்”
எனச் சொல்லிக்கொண்டு மிட்டாயை அப்போதே பிரித்து வாயில் போட்டுக்கொண்டு அதனை மென்றுக்கொண்டே மிடுக்காக நடந்து தனது நாற்காலியில் அமர்ந்தான்.
தனது குழந்தை அப்படி இல்லையே இப்படி இல்லையே என குறைபடும் பெற்றோர் போல, சில பிள்ளைகளும் தனது பெற்றோர் அப்படி இல்லையே இப்படி இல்லையே என மனதில் அவமானத்தை விதைத்துக் கொள்கிறார்கள். அடுத்த வாரம் இதையொட்டிய ஒரு தலைப்பில் மாணவர்களுக்கு பாடம் போதிக்க வேண்டும் என முடிவெடுத்த ஆசிரியை அதனை தனது குறிப்பு புத்தகத்தில் குறித்துக் கொண்டார். அந்த குறிப்பு புத்தகத்தில் இவ்வாறு பேச வேண்டிய பல தலைப்புகளை எழுதி வைத்திருக்கிறார். ஆனால் பாடதிட்டத்தை போதிக்கவே நேரம் சரியாக இருக்கும் பட்சத்தில் மேற்கொண்டு பேசுவதற்கு என்றாவது நேரம் கிடைக்காமலா போய்விடும் என்ற நம்பிக்கையில் அந்த குறிப்பு புத்தகத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறார்.
மணிக்கு அவனது அப்பா மற்றவர் போல நேர்த்தியாக தலை சீவி, விலை அதிகம் உள்ள காலணியை அணிந்துக் கொண்டு கோர்ட் சூட் போட்டுக்கொண்டு தன்னுடன் வரவேண்டும் என்ற ஆசை இருந்தது.  தனது சுற்றத்தையும் பள்ளியில் இதர சில மாணவர்களின் பெற்றோரையும் பார்த்ததாலோ அல்லது அப்படியானவர்கள்தான் நல்லவர்கள் என்கிற சினிமா ஏற்படுத்திய பிம்பத்தாலோ இப்படியான ஆசை மணியின் மணதின் வேரூன்றியிருக்கலாம். தினமும் இரவு வரை வேலை செய்து வியர்த்துப்போய் வீடு வரும் அப்பாவை நெருங்கவும் அவன் விரும்பவில்லை.
ஒரு முறை பள்ளியில் கட்டுரை எழுத வேண்டியிருந்தது. பல மாணவர்களுக்கு அந்த தலைப்பு சுவாரஷ்யத்தைக் கொடுத்தது. மணிக்கு அது எரிச்சலைக் கொடுத்தது. ‘என் தந்தை’ என்ற தலைப்பில் தந்தையைக் குறித்தும் அவரது வேலையைக் குறித்தும் அவரது குணநலன் குறித்து எழுத வேண்டும்.
இது நாள் வரை தன் தந்தை குறித்தும் அவரது வேலையைக் குறித்தும் யேர் கேட்டாலும் பல வித பொய்களைச் சொல்லி வந்தவன் இப்போது எந்த பொய்யில் எழுதலாம் என குழம்பினான்.  இந்த கட்டுரையை மாணவர்கள் வகுப்பின் முன் நின்று வாசிக்க வேண்டும். அப்படி மணி வாசிக்கும் பொழுது, என்ன தொழிலை அப்பா செய்வதகாச் சொன்னாலும் அது ஆளுக்கு ஆள் குழப்பத்தை கொடுத்து , இது நாள் வரை சொல்லி வந்த பொய் உடைந்துவிடும். 
துப்புரவு வேலை செய்யும் தன் அப்பாவைப்பற்றி எப்படி எழுதுவது என பென்சிலை கையில் பிடித்து யோசித்துக் கொண்டே இருந்த மணியை கவனித்த வகுப்பு ஆசிரியர், இந்த சமயத்தை பயன்படுத்த நினைத்தார். மணியை வகுப்பின் முன் வரச்சொல்லி அழைத்தார். கட்டுரை எழுதுவதற்கு முன்னதாக சில மாணவர்கள் வகுப்பின் முன் வந்து நின்று அவரரவர் தந்தையைக் குறித்து பேசச்சொன்னார். இருந்தும் முதல் பெயரே மணியின் பெயர் அழைக்கப்பட்டதால் கூனிக்குறுகி வகுப்பின் முன் நின்று தந்தையைக் குறித்து பேச ஆரம்பித்தான், வகுப்பு யாரோ “உங்கப்பா என்ன வேலை செய்யராரு..?” என கேட்டதுதான் தாமதம்.
மணி தேம்பித்தேம்பி  அழ ஆரம்பித்தான். இருந்தும் ஆசிரியரும் அதே கேள்வியைக் கேட்கலானார், இப்போது மணிக்கு வேறு வழி இல்லை.
“எங்கப்பா… எங்கப்பா… ம்ம்ம்ம்… அள்ளூர் கூட்டற வேலை செய்யராரு”
என சொல்லிவிட்டு மீண்டும் அழ ஆரம்பித்தான். வகுப்பு மாணவர்களில் சிலர்  முகம் சுழித்து பக்கத்து நண்பர்களிடம் எதையோ பேசி வாயை மூடிக்கொண்டு சிரிக்கலானார்கள். ஆசிரியை எழுந்தார். மணியின் அருகில் வந்து நின்றார். மணியை தலை முடியைக் கோதிவிட்டு. மணியை சமாதானம் செய்தார்.
“பசங்களா.... மணியோட அப்பா செய்யற வேலை அள்ளூர் கூட்டர வேலை இல்லை. அது துப்புரவு பணி. ஆசிரியர்கள் எப்படி உங்களுக்கு பாடம் போதிக்கிறாங்களோ… காவல் துறையினர் எப்படி கெட்டவங்க கிட்ட இருந்து நம்மை காப்பாத்தறாங்களோ அந்த மாதிரிதான்… துப்புரவு பணி செய்யறவங்க.. நமக்கு நோய் ஏற்படாம இருக்க நம்மோட சுற்றுச்சூழலை சுத்தமா வச்சிக்கறாங்க.. எந்த தொழிலும் குறைந்தது அல்ல… பொய் சொல்லாத , அடுத்தவர் சொத்தை அபகரிக்காத , மற்றவரை ஏமாற்றாத எந்த உழைப்பும் நல்ல உழைப்புதான்… பசங்களா நாம செய் தொழில் பழிக்கக்கூடாது…. எங்க சொல்லுங்க…”
என்றதும் வகுப்பு மாணவர்கள் ஒன்றாக முழங்கினர்,
“செய் தொழில் பழிக்கக்கூடாது”
அன்று பள்ளி  முடிந்ததும் தந்தையைக் குறித்து மணி அவனுக்குள்ளாக ஏற்படுத்தி இருந்த மன பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக உடைய ஆரம்பித்தது. யோசிக்கலானான். இது நாள் வரை ஒருமுறை கூட மணியின் தேர்வு காலங்களில் அப்பாதான் அவனை பள்ளிக்கூடத்திற்கு கூட்டிக் கொண்டு வருவார். பல மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை. பள்ளிக்கூட தேவைக்காகவும் படிப்பின் தேவைக்காகவும் மணி அம்மாவிடம் என்ன கேட்டாலும் மறுநாளே அப்பா அதனை ஏற்பாடு செய்து கொடுப்பார். தன்னிடம் இருக்கும் ஆடைகள் நைந்திப்போயிருந்தாலும் , அம்மா என்னதான் சொன்னாலும் மணிக்காக செலவு செய்திருக்கிறாரே தவிர அவரின் சொந்த செலவுக்கு அவர் செலவு செய்ததில்லை. அன்று அவருக்கு உடல் நலமில்லை. அம்மாவும் வேலைக்கு விடுமுறை எடுக்க சொல்லிக் கேட்டார். அதற்கு அப்பா சொன்னார்,
“ஒரு நாள் உடம்பு சொல்ற பேச்சை நாம கேட்டுட்டு வீட்டுல இருந்தா அப்பறம் அது அடிக்கடி நம்ம கிட்ட லீவு போட சொல்லிடும்… இன்னும் கொஞ்ச நாள்தானே மணி படிச்சி பெரிய ஆளா ஆனப்பிறகு ஓய்வு எடுத்தக்கறேன்.”
ஆமாம், அப்பா கண்டிப்பாக நடந்துக்கொண்டவராக இருந்தாலும், அப்பா என்கிற பொறுப்பில் இருந்து அவர் விலகியதே கிடையாது. தான் என்ன வேலை செய்தாலும் தன் மகன் நாளை நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருந்த அப்பாவை தவறாக புரிந்துக் கொண்டோமே என மணி வருந்தினான். அதன் பிறகு மணியின் அப்பாதான் மணியின் உலகமானார்.
நினைவுகளில் மணி மிதந்துக் கொண்டிருந்த சமயத்தில் அந்த குழந்தை அங்கு வந்து நின்றது.
“அங்கிள் என்னோட தாள் கிடைச்சதா…?”
“ஹை… பாப்பா வந்துட்டிங்களா.. இந்தாங்க.. உங்க தாளு ஆமா அதில் என்ன எழுதிருக்குன்னு கொஞ்சம் பாக்கவா…”
என மணி கேட்கவும், அந்த குழந்தை மணியிடம் இருந்து வாங்கிய தாளில் சுருக்கத்தை திறந்தது, அதில் ‘என் அப்பா கண்டிப்பானவர் ஆனால் அவர் என்னோட சூப்பர் மேன் என இருந்தது’
மணி சிரித்துக் கொண்டே “ஆமா பாப்பா… அப்பாக்கள் எல்லோரும் நமக்கு கிடைச்சிருக்கற சூப்பர்மேன்கள் தான்…”
என சிரித்துக்கொண்டே அழைப்பு வந்த கைபேசியை எடுத்தான்,
மறுமுனையில் “ ஐயா மணியாகுது இன்னும் நீ வீட்டுக்கு வரலை… எங்கய்யா இருக்கா… ” என்று அப்பா கேட்கவும்.
“தோ வந்துகிட்டே இருக்கேன் பா…” என்றான். பிறகு அப்பாவின் பெயரை கைபேசியில் சூப்பர் மேன் என மாற்றிக்கொண்டான் அந்த குழந்தைப் பார்க்க, அக்குழந்தை அங்கில்லை. தனது பழைய நினைவுகளை மீட்டுணர வாய்ப்புக்கொடுத்த அந்த குழந்தைக்கு ஒரு நன்றி சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது. இந்த கதை தனது சூப்பர் மேனிடம் சொல்லவேண்டும் என்று யோசித்தவாரே வீட்டிற்கு நடக்கலானான்.
-தயாஜி
(2018-ல் மின்னல் பண்பலைக்கு எழுதிய தந்தையர் தின சிறப்புச் சிறுகதை)

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்