பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 23, 2023

உரையாடுவோம்


நண்பர்களும் தம்பிகளுமான ஆதித்தன் மகாமுனி, இளமாறன் ஆகிய இரண்டு இளம் படைப்பாளிகளுடன் நேற்றிரவு ஒரு அசத்தலான சந்திப்பு நடந்தது.

கவிதைகள் கதைகள் எழுத்தாளர்கள் என பலவற்றைப் பேசிப்பேசி நேரம் போனதே தெரியவில்லை.

இளம் கவிஞர் இளமாறன், அவர் எழுதிய கவிதைகளில் சிலவற்றை கொண்டு வந்திருந்தார். கவிதை வாசிப்பு கவிதையுள் வாசிப்பு என கிடைத்த நேரத்தைச் சரியாக பயன்படுத்திக் கொண்டோம். இளம் படைப்பாளியாக அவர்களிடமிருந்து வந்த கேள்விகள் முக்கியமானவை. என் பார்வையில் இருந்து சிலவற்றை பேசினேன். உண்மையில் பேசினோம். பயனாக இருக்கும் என நம்புகிறேன்.

மீண்டும் பேசுவோம். வாய்ப்புள்ளவர்கள் நீங்களும் கூட வரலாம். உங்கள் கவிதைகளையோ கதைகளையோ அல்லது நீங்கள் ரசித் படைப்புகளையோ கொண்டு வாருங்கள். நாம் உரையாடுவோம்......

இளமாறனின் கவிதைகளில் ஒன்றை மட்டும் அவர் அனுமதியின்றி இங்கு பகிர்கிறேன். எனக்கு பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று..

'ஊமைச்சொல்'

வேண்டாத பார்வையாக
இறுக்கமாய் வந்து
விழுகிறது
மனதை பெயர்த்தெறியும்
உன்
வார்த்தை

- கவிஞர் இளமாறன்.

ஏப்ரல் 13, 2023

தீண்டாமை


"என்னப்பா உங்க ஆளுங்களை கோவிலுக்குள்ளயே விட மாட்டறாங்க.. நீ என்னடான்னா சாமி.. சாமின்னு நம்பிகிட்டு இருக்க...?"

"என்ன செய்றது... உங்க யாராலயும் தலைவராக முடியாதுன்னு முடிவு பண்ணி.... நாலாவது தலைவராகவும் உங்க தலைவரின் வாரிசையே தலைவராக்க கோஷம் போட்டுக்கறாங்க.. ஆனாலும் நீங்க அதே கட்சிக்கு ஓட்டு போடறது இல்லையா..."

"நான் சொல்றது தீண்டாமை.."

"அங்கிருந்து பார்த்தா இது உங்களுக்கு தீண்டாமை... இங்கிருந்து பார்த்தா அது எங்களுக்கு அது தீண்டாமை...."

#தயாஜி
#குறுங்கதை
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

பெயர் தெரியாத பறவை


'பெயர் தெரியாத பறவை'

கொஞ்ச வருசத்துக்கு  முன்ன நடந்த சம்பவம். நம்ம குமாரு இருக்கானே குமாரு.. அவனுக்குத்தான் நடந்தது.  காட்டுக்கு போய்ருக்கான். அங்க நரி ஒரு பறவகிட்ட சண்டை பிடிச்சிகிட்டு இருந்ததாம். இவனைப் பார்த்ததும் அந்த நரி ஓடிப்போச்சாம். அந்த பறவயும் நரிகிட்ட அடியும் கடியும் வாங்கி பறக்க முடியாம கிடந்துச்சாம்.

பாவம் பார்த்து நம்ம குமாருதான் அந்தப் பறவயை எடுத்து வந்தான். வீட்டுல வச்சி கைவைத்தியம்லாம் செஞ்சான். அதும் கொஞ்ச நாள்ல குணமாச்சி.

எது என்ன நினைச்சதோ தெரியல அதோட குமாரு கூடவே இருந்துச்சி. அந்தப் பறவக்கு என்ன பேருன்னும் தெரியல என்னதா தீனின்னும் தெரியல. குமாரு எதை சாப்டறானோ அதையே அந்தப் பறவயும் சாப்டுக்கும்.

எங்ககூடயும் நல்லா விளையாடும். ஆனா யாராச்சும் குமாரு மேல கை வைச்சாங்கன்னு வைங்க பயங்கரமா கத்தி பயம்காட்டும். நல்ல பறவதான் எங்க யாரையும் கொத்தாது. அப்படியே நாலஞ்சி வருசமா குமாரு கூடவே ஒன்னுமன்னா இருந்தது.

போனவாரம் பாருங்க. திடீர்னு யார் என்ன சொன்னாங்கன்னு தெரியல. சில அதிகாரிங்க வந்தாங்க. இது ஆபத்தான பறவையாம். வீட்டுல வச்சிருக்க கூடாதாம். பெரிய குத்தமாம். கைது செய்து தண்டம் போடவும் முடியுமாம்.

குமாரும் நாங்களும் அந்தப் பறவயைப் பத்தி நல்லவிதமாத்தான் சொன்னோம். அதிகாரிங்க கேட்கவேயில்ல.

பாவம் குமாரும் அந்தப் பறவையும்தான். கடைசியா குமாரு அழறான், அந்தப் பறவயும் கத்திகிட்டே ஆளுக்கு ஒரு திசைல நிக்கறாங்க.

அந்த ஆபத்தானப் பறவயை அதிகாரிங்க அவங்க பாதுகாப்புல வைக்க போறாங்களாம். தேவைப்பட்டா குமாரும் நாங்களும் கடிதம் போட்டு அனுமதி வாங்கிட்டு எப்ப வேணும்னாலும் அந்தப் பறவயைப் பாக்கலாம்னு சொன்னாங்க.

குமாரு சரியா சாப்டு ரெண்டு நாளாச்சி. அவனால அந்தப் பறவ இல்லாம இருக்க முடியல. அந்தப் பறவைக்கும் அப்படித்தானே இருக்கும். எத்தினி வருஷம் ஒன்னா இருந்தாங்க.

எங்களால குமாரை அப்படி பாக்க முடியல. சரி அதிகாரிங்க சொன்னது போல கடிதம் போட்டு ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடலாம்னா, யாரைப் பாக்கனும் எப்படி எழுதனும் யார்கிட்ட கொடுக்கனும்னு எதுவுமே தெரியல.

நல்ல வேளையா ஒரே வாரத்துல அதிகாரிங்க எங்களைப் பாக்க வந்தாங்க. அந்த பறவ ரொம்ப ஏங்கியிருக்கும் போல.

வந்தவங்க நம்ம குமாரை கைது செய்துட்டாங்க. என்னடா இதுன்னு எங்களுக்கும் ஒன்னும் புரியல.  விசாரிச்சாதான் தெரியிது அந்தப் பறவ செத்துப்போச்சாம். குமாருதான் காரணமாம்.

ஏங்க இத்தினி வருசமா குமாருதான பார்த்துகிட்டான். இப்படி ஒரு வாரத்துல கூட்டிட்டு போய் சாகடிச்சிட்டு குமார் மேல குத்தம் சொன்னா நியாயமான்னு கேட்டா...

ஆபத்தான பறவையை வைச்சிருந்தது முதல் குத்தம்.
அதுக்கு சோறு போட்டது ரெண்டாவது குத்தம்.
அதை வீட்டுல வச்சது அடுத்த குத்தம்னு அடுக்கிட்டே போறாங்க.

இதையெல்லாம் பார்த்த குமாருக்கு மூளை கலங்கிடுச்சி போல. அதிகாரிங்கட்ட போய்ட்டு அந்தப் பறவக்கு என்ன பேருன்னு கேட்கறான்.

அதுக்கு ஒர் அதிகாரி சொல்றாரு, "அது ஆபத்தான பறவை...." 

ஏங்க நீங்களே சொல்லுங்க அந்தப் பறவயா ஆபத்தானது?

#தயாஜி
#குறுங்கதை
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

ஏப்ரல் 01, 2023

தீக்‌ஷா - புத்தக வெளியீடு

சமீபத்தில் திரு ஏ.கே.ரமேஷ் அவர்களின் தீக்ஷா புத்தக வெளியீட்டுக்கு சென்றிருந்தேன். (அவர் குறித்தும் அவரது புத்தகம் குறித்து முன்னமே எழுதியுள்ளேன்) வழக்கமான புத்தக வெளியீடு போல அல்லாமல், சமய நிகழ்ச்சியாகத் தொடங்கியது. கடவுள் வாழ்த்து, பெரிய புராணப்பாடல்கள் என ரம்மியமான சூழல் நிகழ்ச்சி முழுக்க நிறைந்திருந்தது.

திரு.சுப்பிரமணி சோணையா நூலாய்வை சிறப்பாக வழங்கினார். இன்னும் கூட அவர் பேசியிருக்கலாம் என தோன்றினாலும் தனக்கு கொடுத்த பணியைப் பலரும் கவரும் வண்ணம் செய்திருந்தார். ஒவ்வொரு கதைகளைக் குறித்து ஒரு தீர்க்கமானப் பார்வை அவரிடம் இருந்தது. குறிப்பாக பலருக்கு பிடித்த கதை அவருக்கு உவப்பாக இருக்கவில்லை. சிலரால் கவனிக்காத கதை மீது அவருக்கு நெருக்கமும் இருந்தது.

மலேசிய கல்வி அமைச்சிலிருந்து கவிஞர் சிவா வாழ்த்துரை வழங்கினார். மனதிலிருந்து பேசி பார்வையாளரைக் கவர்ந்தார் என்றே சொல்லலாம்.

இயல் பதிப்பக தோற்றுனர் திருமதி. பொன் கோகிலமும் பேசினார். ஒரு தேர்ந்த பேச்சாளர்க்குரிய பாணியில் பேசியவர், சமயம் சார்ந்தும் இன்றைய தலைமுறைகள் தொலைத்தும் தொலைந்தும் கொண்டிருப்பதைக் குறித்தும் பேசினார். 

நிறைவு உரையாக எழுத்தாளர் திரு. ஏ.கே.ரமேஷ் அவர்கள் நன்றியுரையாற்றினார். நன்றியென்னும் சொல்லைக் குறைவாகவும் நன்றிக்குரியவர்களின் பட்டியலை அதிகமாகவும் பேச்சில் சேர்த்திருந்தார்.

நிகழ்ச்சி முடிந்து புறப்படும் சமயம், திருமதி பிருந்தாவுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு அவரை நேரில் சந்திக்கின்றேன். என் கதைகளைத் தொடர்ந்து வாசிப்பதாகச் சொன்னார். மகிழ்ச்சி. எங்களது உரையாடலில் அவர் சமயம் சார்ந்து எடுக்கும் முன்னெடுப்புகளைப் பகிர்ந்தார். உண்மையில் பாராட்டத்தக்கவையாக அவை இருந்தன. குறிப்பாக ஏழு வயது மாணவர்கள் முதல் ஒவ்வொருவரை கதைகளை எழுதச் சொல்லியிருக்கிறார். அவர்களின் கதைகளையும் ஆவலோடு பகிர்ந்து கொண்டார். இளம் வயதிலேயே எழுத்தின் மீது மாணவர்களுக்கு ஆசை வரவைக்கும் யுக்தியல்லவா இது.

 இந்நிகழ்ச்சியில் அடிக்கடி ‘தமிழும் சமயமும் ஒன்றுதான்’ என்ற பேச்சு ஆங்காங்கே எழுந்த வண்ணம் இருந்தது. நாம் சொல்லிக்கொள்வது போல தமிழும் சமயமும் ஒன்றுதான் எனவும் ஒரு கோட்டுக்கு கீழ்தான் உள்ளன எனவும் இலகுவாக எடுத்துக்கொள்ளவோ அதனை எதிர்கொள்ளவோ முடியாது.

அதில் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிவரும். வெளியில் இருந்து வரும் சிக்கல்களைச் சொல்லவில்லை. உள்ளுக்குள்ளேயே ஏற்படும் சிக்கல்களை முதலில் நாம் கலைய வேண்டும். இதனையொட்டி அதிகமாக பேசலாம். ஆனால் இப்போது சின்ன உதாரணம் மட்டுமே கொடுக்கிறேன். ஒரு முருகா..! என்பார் இன்னொருவர் ஷண்முகா..! என்பார். இருவரும் ஒரு முடிவை எடுக்க வேண்டும். இரண்டையுமே வைத்துக் கொண்டு தமிழும் சமயமும் ஒன்றுதான் என சொல்ல முடியாது. பொங்கலா? புத்தாண்டா? என்ற குழப்பத்தை நான் சொல்லவேண்டுமா என்ன? 

நிறைவாக; நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலும் சமயப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் என தெரிந்து கொண்டேன். சமய நிகழ்ச்சிகளைத் தவிர்ந்து இவர்களை பிற இடங்களில் பார்ப்பது அரிது. இவர்களில் இருந்தும் எழுத்தாளர்கள் வெளிவர வேண்டும். இலக்கியத்தை வாசிக்கவும் எழுதவும் இவர்களும் தயாராகவேண்டும். மற்றவர்களையும் தயார்ப்படுத்த வேண்டும். ஏனெனில் அதுவும் அவர்களின் சமயம் சார்ந்த பங்களிப்பிற்கு அவசியம். 

தமிழுக்குச் சேர்ந்திருக்கும் சிறப்புகளில் ஒன்றுதான் நமக்கு கிடைக்கும் பல இலக்கியங்களில் அதிகம் இருப்பது கடவுவளை பாடியதும் கடவுளின் காதலுக்காக ஏங்கியதுமே. ஆனால் இன்று கடவுளை நோக்கிய புதிய குரல்கள் எழுவதில்லை. ஏனெனில் முன்னமே பாடிய பழைய குரல்களை யாரும் கண்டுக்கொள்வதில்லை. 

இது போன்ற நிகழ்ச்சிகள் வழி அக்குறை நீங்கும் என்ற அக்கறையில் இதனை எழுதுகிறேன்.

அன்புடன் தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்