பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 10, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 10/20

பெருமாள்முருகன் சிறுகதை 10/20

முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.

***************************************

எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருவதை முன்னிட்டு இருபது நாட்கள் இருபது சிறுகதைகள் என இந்தக் கட்டுரையை எழுதி வருகின்றேன். இன்று பத்தாவது சிறுகதையைக் குறித்து எழுதவுள்ளேன். தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. இந்தக் கட்டுரைக்கும் பின் இன்னும் 10 சிறுகதைகள் இருக்கின்றன. அதில் எந்தெந்த சிறுகதைகள் வருமென எனக்கும் கூட தெரியவில்லைதான்.

இன்றைய பத்தாவது சிறுகதை ‘தொழில்’. இந்தக் கதையும் அப்பா மகனுக்கு இடையில் வரக்கூடிய சிக்கலைச் சொல்லும் சிறுகதைதான். இந்தத் தொடர் கட்டுரையின் முதன் கதையாக ‘ஆட்டம்’ என்னும் சிறுகதையும் அப்பா மகனின் சிக்கலைச் சொன்ன கதைதான். இரு சிறுகதைகளின் கதைக்கருவும் ஒன்றுதான் என்றாலும் ஒவ்வொன்றையும் தனித்து தெரியும்படி எழுத்தாளர் எழுதியிருக்கின்றார்.

தொழில் சிறுகதையில் அப்பாவின் முடிவெட்டும் தொழிலை மகனும் இணைந்து செய்யும்படி ஆகிறது. மகன் இளம் தலைமுறை என்பதால் அந்தத் தொழிலில் ஈடுபட்ட சில மாதங்களிலேயே பல புதிய கஷ்டமர்களைக் கவர்ந்துவிட்டார். இன்னொரு கடையையும் திறக்கலாம் என்று மகன் சொல்கிறான். அப்பா வேண்டாம் என்கிறார். இப்போது வரும் கஸ்டமர்களை நம்பி இன்னொரு கடையைத் திறப்பது நல்லதல்ல என்கிறார். சில நாட்களில் அப்பாவே மகனுக்கு தொழில் நன்றாக வருகிறது இனி அவனுக்கு தனியாக ஒரு கடையை வைத்துகொடுக்கலாம் என தன் மனைவியிடம் பேசுகின்றார். எழுத்தாளர் அங்கு ‘தொழில்’ சிறுகதையை முடிக்கின்றார்.

இன்னொரு கடை வேண்டாம் என்று சொன்ன அப்பா; சில நாட்களிலேயே மகன் தொழிலைக் கற்றுக்கொண்டான்; இனி தனியாக கடை நடத்தட்டும் என சொல்வதற்கான காரணத்தை எழுத்தாளர் வைத்திருக்கும் இடம்தான் கவனிக்கத்தக்கது.

தன் அப்பாவிடம் முடிவெட்டிக்கொண்டவர், இத்தனை ஆண்டுகளாக   தன்னிடம் முடிவெட்டிக்கொண்டவர் இன்று தன் மகனிடம் முடிவெட்ட விரும்புகிறார். அப்பா எவ்வளவு சொல்லியும் அவர் அப்பாவிடம் முடிவெட்ட விரும்பவில்லை. மகனின் தொழில் நேர்த்தியை ஊரில் உள்ளவர்கள் புகழ்வதையும் சொல்லிவிட்டு மகன் வந்ததும் வருவதாகச் சொல்லி புறப்படுகின்றார். அப்பாவிற்கு இப்போதுதான் சுருக்கென்கிறது.

தன் தொழிலுக்கு தன் மகனே போட்டி என நினைத்துவிட்டாரா? தன் மகனுக்கு தொழில் கைவந்துவிட்டது இனி அவன் தனியாக பிழைத்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வந்துவிட்டதா? என்ற இருவேறு கேள்விகளில்  ஒன்றை வாசகர்கள் தேர்வு செய்யலாம்.

என்னதான் தன் மகனாக இருந்தாலுமே; தொழில் என்பது ஒவ்வொரு மனிதனுக்குமே அந்தரங்கமானது. மகனை மட்டுமல்ல எவனையும் தன் தொழிலில் தன்னை ஜெயிக்க எந்த மனிதனும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்தான் போல.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்