பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 24, 2023

'தலைவர்' - புத்தகவாசிப்பு 3 (2023)



‘தலைவர்’– புத்தகவாசிப்பு 3 (2023)

தலைப்பு – தலைவர்
எழுத்து – எம்.பிரபு
வகை – சிறுகதைகள்

சொல்லித்தான் ஆகவேண்டுமா? என எனக்கு நானே சிலசமயங்களில் கேட்டுக்கொள்வது உண்டு. ஏனெனில் நாம் ஆசைப்பட்டு எதிர்ப்பார்த்து சொல்லுவதும் எழுதுவதும் நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்திவிடும். இருந்தும் ஏன் சொல்லத் தோன்றுகிறது, ஏன் எழுதத் தோன்றுகிறது என்றால் நாம் நம் சொல்லின் மீதும் எழுத்தின் மீதும் வைத்திருக்கும் நேர்மையும் அதன் விளைவுகள் கொடுக்கும் பலன்கள் மீதான நம்பிக்கையும்தான் காரணம்.

கடந்த ஆண்டு வாசித்த புத்தகப்பட்டியலை மீண்டும் ஒரு கண்ணோட்டமிடுகையில் என் சொந்த மண்ணின் (மலேசியா) எழுத்தாக்கங்களை (புத்தகங்களை) வாசித்தது குறைவாக இருந்தது தெரிந்தது. இவ்வருடம் தொடங்கி மாதம் ஒரு மலேசிய புத்தகத்தைக் குறித்து புத்தகவாசிப்பு பகுதியில் எழுதலாம் என்று இருக்கிறேன்.
அந்த வகையில் தொடக்கமாக மலேசிய எழுத்தாளர் எம்.பிரபுவின் தலைவர் சிறுகதைத் தொகுப்பு குறித்து என் வாசிப்பனுபவத்தை எழுதுகிறேன்.

மலாய் மொழியில் குறிப்பிடும்படியான சிறுகதைகளை எழுதி அறியப்பட்ட எழுத்தாளர். ‘கருப்பைய்யா’ என்ற தலைப்பில் மலாய்ச் சிறுகதைத் தொகுப்பினையும் வெளியிட்டுள்ளார். ‘தலைவர்’ இவரது முதல் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பு.

இத்தொகுப்பில் மொத்தம் 14 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் நான் ஏழு சிறுகதைகளை மட்டுமே வாசித்துள்ளேன். பாதிக்குப்பாதி சிறுகதைகளை மட்டுமே வாசித்து இதனை எழுதுவதற்கு நான் மட்டும் பொறுப்பல்ல. அந்த எழுத்தாளரும்தான்.

பதிப்பகங்களை அணுகாமல் நாமே சொந்தமாக புத்தகங்களை பதிப்பிப்பதற்கான வாய்ப்புகள் இப்போது எங்கும் உண்டு. நாமே கதையை எழுதி நாமே அதனைத் திருத்தி நாமே அதனை நேர்படுத்தி நாமே அதற்கு பக்கங்களை அடுக்கி நாமே அதனை அச்சகத்துக்கு அனுப்பி நாமே அங்கும் பிழைத்திருத்தம் பார்த்து புத்தகத்தை அச்சடித்து கையில் பெற்றுக்கொள்ளலாம். கொஞ்சமாய் உழைப்பும் கூடுதலாய் பணமும் இதற்கு போதுமானது. ஆனால் இதன் வழி கையில் கிடைத்திருக்கும் புத்தகத்தின் தரம் கேள்விக்குறியாகிறது. புத்தகத்தின் தரமே கேள்விக்குறிக்குள்ளாகிறது என்றால் புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து யோசிக்கத்தானே வேண்டும்.

ஒருபக்கம் பதிப்பகங்களால் உண்டாகும் நம்பிக்கை ராயல்டி போன்ற சிக்கல், இன்னொரு பக்கம் நானே செய்துக்கொள்கிறேன் என்பதில் ஏற்படும் குளறுபடி. கடைசியில் புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கி வாசிக்கும் வாசகனை யார் கவனிக்கிறார்கள்.  வாசகனுக்காகத்தான் செய்கிறோம் என்கிறார்கள் ஆனால் அவனை கொஞ்சமும் பொருட்படுத்துவதில்லை.

இவ்வளவும் பேசுவதற்கு காரணம் இந்தச் சிறுகதைத் தொகுப்பும் ‘செல்ப் பப்ளிஷிங்’ என்றழைக்கப்படும் எழுத்தாளரே புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறார்.
எழுத்தாளருக்கும் வாசகனுக்கும் இடையில் செறிவாக்கம் செய்வதற்கு ஒருவர் வேண்டும் என்பதை நான் எப்பவும் வழியுறுத்துகிறேன். சில எழுத்தாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் தனது படைப்பு வாசகனிடம் செல்வதற்கு முன்பாக எடிட்டரிடம் செல்வது தனக்கு ஏற்படும் அவமானமாகப் பார்க்கிறார்கள். தனது படைப்பை எடிட்டர்கள் சிதைத்துவிடுவதாகப் பார்க்கிறார்கள். இவர்களின் எழுத்தால் வாசகர்கள் சிதைந்துபோவதை விட அதற்கு முன்னமே அந்தப் படைப்பு சிதைவது ஒன்றும் பெரிய குற்றமில்லைதான். குறைந்த பட்சம் பிழைத்திருத்தக்கூட இவர்கள் யாரையும் அணுகுவதில்லை.

தலைவர் சிறுகதைத் தொகுப்பை முழுமையாக வாசிக்க விடாதது அதிலிருக்கும் எழுத்துப்பிழைகள். என்னதான்  மேய்ப்பு பார்த்தாலும் எப்படியாவது சில எழுத்துப்பிழைகள் புத்தகத்தில் வந்துவிடுகிறதே என்கிற வருத்தம் எல்லா எழுத்தாளர்களுக்கும் உண்டு. ஆனால் வரிக்கு வரி எழுத்துப்பிழைகள் தென்படும் போது தொடர் வாசிப்பை அது தடை செய்கிறது. முதல் வரியில் எழுத்துப்பிழையாய் இருக்கும் சொல் இரண்டாவது வரியிலேயே பிழையின்றி இருக்கிறது. இப்படி பல இடங்களின் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. எழுத்தாளர் கூடுதல் கவனத்தை இதற்குத்தானே கொடுத்திருக்க வேண்டும். அதிலும் எளிய சொற்கள் கூட பிழையாக அச்சேறியிருப்பது வாசகனாய் எனக்கு வேதனையைக் கொடுக்கிறது.

இப்படி சொல்லி எழுத்தாளரை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் எழுத்தாளர் என்கிற பொறுப்பிற்கு அவர் மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

முதல் கதை, ‘இரு உலகம்’. ரொம்பவும் நன்றாக வரவேண்டியக் கதை. நிஜ உலகத்திற்கும் (இன்னொரு) நிழல் உலகத்திற்கும் சென்றுச்சென்று திரும்பி போராடும் பெண் இறுதியாய் மருத்துவமனையில் இருக்கிறாள்; இதுதான் கதை. உளவியலை அழகாய் பயன்படுத்த வேண்டியக் கதை. ஆனால் இரு உலகங்களின் என்ன நடக்கிறது என்று சொல்லுவதிலேயே எழுத்தாளர் ஆர்வத்தைக் காட்டி கதையை முடித்துவிட்டார். யோசிக்கையில் இரு உலகங்களை இடப்பக்கம் ஒரு புள்ளியாகவும் வலப்பக்கம் ஒரு புள்ளியாகவும் மருத்துவ உலகத்தை ஒரு புள்ளியாகவும் வைத்து முக்கோணத்தில் ஒரு உளவியல் கதையை அபாரமாக கையாண்டிருக்கலாம். தவறவிட்டுவிட்டார்.

‘ஆ யீக்கு வந்த ஆசை’ என்ற சிறுகதை தலைப்பில் இருந்த ஈர்ப்பு கதையில் இல்லை. திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ விரும்பும் இளைஞன் காதலியுடன் சேர்ந்து வாழந்து காதலி கர்ப்பமாகிறாள், காதலன் விபத்தில் இறந்து போகிறான். சீன சமூகத்தில் நடக்கும் கதையாக காட்டி எழுத நினைத்து அதனையும் முழுமையாக்கவில்லை. உலகில் ஏதோ ஒரு மூலையில் இருந்து இக்கதையை வாசிக்கும் ஒருவருக்கு சீன சமூகத்தைப்பற்றி நாயகி நாயகனின் பெயரளவில் மட்டுமே தெரிந்து கொள்வார்கள். அதைத்தாண்டி இக்கதையில் அவை பயன்படவில்லை. இதனை ஒரே வரியில் பத்திரிகைச் செய்தியாக்கிடலாம். இளைஞர்களின் இந்த திருமணம் மீதான வெறுப்பிற்கு என்ன காரணம், ஏன் அவர்களால் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று ரொம்பவும் மேலோட்டமாக சொல்லிச்சென்றுவிடுகிறார். அவ்வளவே என கதை முடிந்து விடுகிறது. யாருக்கோ என்னமோ நடந்துவிட்டது என்ற எண்ணமே கதையை வாசித்து முடிக்கையில் தோன்றுகிறதே தவிற அதைத்தாண்டி வாசகனிடம் எதையும் சொல்லவில்லை.

‘புது முதலாளி’  என்னும் கதையும் அப்படித்தான். அப்பா இறந்த பின் அவரது வியாபாரத்தை தொடரும் மகன் பணத்தின் மீது குறியாக இருக்கிறான். அவனுக்கு பணம் மீதும் பெரிய வீடு கார் போன்றவற்றின் மீதும் ஈர்ப்பு இருக்கிறது. பலரிடம் வெறுப்பை சம்பாதித்தாலும் பொருட்களின் விலையைக் குறைக்க விரும்பவில்லை. திடீரென இறந்த அப்பா அவனது கனவில் தோன்றி கண்டிக்கின்றார்; அவன் திருந்திவிடுகிறான். இதனைத்தான் 12 பக்கங்களில் சம்பவங்களாக எழுதியிருக்கிறார். ஆனால் இக்கதையின் தொடக்கம் நன்றாக அமைந்திருந்தது. எடுத்த உடனேயே கதைக்குள் இழுத்துவிட்டது. இருந்தும் என்ன செய்ய.

‘குப்பாய்க்கிழவி’ என்னும் கதையில் கிழவி தன் இயலாமையையும் தன் கடந்த காலத்தையும் சொல்லி புலம்புகிறாள். அதற்கான மொழி முழுமையாக இக்கதையில் கைவரவில்லை. மிகப்பெரிய வரலாற்று பின்னணியைச் சொல்ல இடமுள்ள சிறுகதை.

‘ஒரு கொலைகாரனுக்குப் பின்னால்’. ஒரு சைக்கோ எப்படி உருவாகிறான் என்பதை எந்த களப்பணியும் செய்யாமல் சினிமா இத்தனை நாட்களாய் காட்டியுள்ளதையே திரும்ப கதையாக்க முயன்றுள்ளார். இம்மாதிரியான மனித மனதின் சிக்கல்களைச் சொல்லும் கதைகளுக்கு தேவை இருக்கிறது. ஆனால் அதற்கு எழுத்தாளர் உழைக்க வேண்டும். அத்தேவையை வெறும் சம்பவங்களைக் கொண்டே நகர்த்தியுள்ளார்.

‘நீ நான் மனம்’, காதலில் ஏமாற்றமடைந்த காதலன் தன்னையும் தன் மனதையும் பிரித்து அதனுடன் உரையாடுகிறான்; சுவாரஷ்யமாக இருக்கிறா? ஆனால் கதை அப்படி அமையவில்லை. அப்படி அமைவதாக ஆரம்பித்து கதை வழக்கமான திடீர் திருப்பத்தை நோக்கி நகர்ந்துவிட்டது. இக்கதைக்கு பயன்படுத்தப்பட்ட யுக்தி கவனிக்கத்தக்கது. கூடுதல் கவனம் கொண்டிருந்தால் எழுத்தாளரின் முக்கியமான கதையாக வந்திருக்கும்.

இன்னும் ஒரே கதையை மட்டும் வாசிக்கலாம் என்கிற முடிவில், தலைப்பு சிறுகதையான ‘தலைவர்’ சிறுகதையை வாசித்தேன். சமகால அரசியல் சூழல்களையும் அதன் சூழ்ச்சிகளையும் சொல்ல முயற்சிக்கும் கதை. ரொம்பவும் மேம்போக்காகவே கதையை நகர்ந்தி சென்றுவிட்டார். இதுவும் முக்கியமான கதையாக வரவேண்டிய கதைதான்.

நிறைவாக, எழுத்தாளரிடம் சொல்வதற்கான கதைக்கருக்கள் இருக்கின்றன. ஆனால் அதனை கதையாக்குவதற்கு தேவையான கூடுதல் உழைப்பும் கலந்துரையாடலும் நிகழாமல் போனதே இத்தகைய பலவீனங்களுக்கு காரணமாக இருக்கலாம். 

அது ஒன்றும் கலையவே முடியாத ஒன்றல்ல. நினைத்தால் சீக்கிரமே அடுத்தடுத்து நல்ல கதைகளை எழுத்தாளரால் கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கையை இம்முதல் தொகுப்பு கொடுத்திருக்கிறது. இவரின் பெயர் சொல்லும் வகையான சிறுகதையை இவர் எழுத வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பிலேயே இதனை எழுதியிருக்கிறேன்.

பின்குறிப்பு; எழுத்தாளருக்கு நெருக்கமாக இருப்பதாக நினைப்பவர்கள் யாரும் “என்ன இப்படியெல்லாம் எழுதியிருக்கு?” என்று கோவப்பட்டாலும் எழுத்தாளரிடம் புகார் செய்தாலும் உங்களிடம் சிறு வேண்டுகோல், உங்கள் அக்கறையை இச்சிறுகதைத் தொகுப்பை முழுமையாக வாசித்து ஒரு கட்டுரை மூலமாக காட்டுங்கள். நன்றி.


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்