பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 11, 2025

_ மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 11/20



பெருமாள்முருகன் சிறுகதை 11/20
முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.
***************************************

    கதையை சுவாரஸ்யமாக எழுதலாம். அதேபோல சுவாரஸ்யத்தையே ஒரு கதையாக்கி எழுத முடியுமா? அப்படி எழுதுவதில் ஒரு சிக்கல் உண்டு. இது கதையே இல்லை என்று ஒதுக்கிவிடுவார்கள். அல்லது இது கதைதான் என ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

    அப்படியொரு சுவாரஸ்யத்தைதான் எழுத்தாளர் இங்கு கதையாக்கியிருக்கிறார். அதனை ரொம்பவும் இயல்பாக கொடுத்திருக்கின்றார். இது கதையா இல்லையா என்கிற குழப்பத்துடனேயே இக்கதையை நாம் வாசித்தும் முடித்துவிடுவோம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இக்கதையை வாசித்து முடித்த பின் நம்மால் இக்கதையை ஒதுக்கிட முடியாது. அதுதான் இக்கதையின் சுவாரஸ்யம்.

இன்றைய 11வது சிறுகதை ‘சிரிப்பு’.

    நாயகனுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. அதற்கு முன் பேச்சலர் பார்ட்டி போல நண்பர்களுக்கு விருந்து கொடுக்கவேண்டும். முடியாது என்றாலும் விடமாட்டார்கள்; மானப்பிரச்சனை ஆக்கிவிடுவார்கள் என நாயகனுக்கு தெரிகிறது. எப்படியோ நண்பர்களின் விருப்பப்படி தேவையான டாஸ்மார்க் பாட்டில்களை வாங்குகிறார்கள். அங்கேயே சாப்பிட முடியாததால் இன்னொரு நண்பனின் அறைக்கு செல்கிறார்கள்.

    அங்கு குடித்துக்கொண்டே இவர்கள் அடிக்கும் லூட்டி நம்மை சிரிக்க வைக்கும். இளைஞர்களின் வழக்கமான ‘18 ப்ளஸ்’ ஜோக்குகளும் வருகின்றன. திருமணம் செய்யவிருக்கும் நண்பனை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: அங்கு நடக்கும் கலாட்டாவின் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். கதையும் அங்கு முடிகிறது.

        இந்த முடிவிற்கு நம்மை அழைத்துச் செல்வதற்கு முன்பாக நாயகன் குறித்து எழுத்தாளர் எழுதியிருப்பது ஒரு சாமன்ய இளைஞனின் இயல்பான வாழ்க்கையை. தன் வாழ்க்கையையும் தன் முன்னேற்றத்தை தானே உருவாக்க வேண்டும் என புரிந்து கொண்ட இளைஞனாக எழுத்தாளர் நாயகனைக் காட்டியிருப்பார். பாதியில் விட்ட அவனது கல்லூரி படிப்பு, காரவேலையில் அவனுக்கு இருந்து திறமை, அவன் சந்திக்கும் மனிதர்கள் என இக்கதையை வாசிக்கும் நாம் நாயகனுடன் நடப்பது போன்ற உணர்வைக் கொடுக்கின்றார்.
    நாம் என்ன தொழில் செய்கிறவர்களாக இருந்தாலும் நாம் நம்மை எப்படியாக நினைத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம். இந்தக் கதையின் நாயகன் தன்னை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டும் விதம்தான் அவனுக்கு பெண் கிடைக்கவும் திருமணம் நடக்கவும் முக்கியமான காரணம்.

    அப்படியென்ன செய்துவிட்டான் என நீங்கள் தெரிந்து கொள்ள சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாத சிரிப்பு சிறுகதையை வாசித்துவிடுங்கள். சுவாரஸ்யத்தையே ஒரு கதைபோல எழுதினாலும் அங்கும் ஒரு கதையை மறைத்து வைப்பதுதான் எழுத்தாளர்கள் நமக்கு கொடுக்கும் சுவாரஸ்யம் என்பதையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்