பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 20, 2012

எஸ். ராமகிருஷ்ணனுடன் கழிந்த நாள்களும் கழியாத நினைவுகளும்


“எஸ்.ராமகிருஷ்ணனை வரவைக்கறோம் தெரியுமா..?”

“அப்படியா! எஸ்.ரா எழுதி எதை படிச்சிருக்கிங்க..?” கேள்விக்கு எதிர்க்கேள்வி கேட்பதில் தவறில்லை. ஆனாலும் திட்டுகிறார்கள்.

   சமீபத்தில் எஸ். ராமகிருஷ்ணனை வரவைத்து சிறுகதை பயிலறங்கு ஒன்றை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு தெய்திருந்தனர். குறிப்பிட்ட சில இடங்களே உள்ளதால்  முந்திக் கொண்டவர்களுக்கு    வாய்ப்பு அமைந்திருந்தது. 19,20,21 என மூன்று நாள்கள் நடைப்பெற்ற பயிலரங்கு அது. இரண்டு நாள்களுக்கு முன்னரே வந்துவிட்டார் எஸ்.ரா. ஏற்கனவே சங்கத்தின் தலைவரிடம் பேசியிருந்ததால் பயிலரங்குக்கு முதல் நாள் எஸ்.ரா வானொலி நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

பாதி வழியில் அவருக்காகக் காத்திருந்து அவர் வந்திருந்த காரிலேயே, அவர் பக்கத்திலேயே அமர்ந்து வானொலி நிலையத்திற்கு வந்தேன். எழுத்தின் ஆளுமையால் ஈர்த்திருந்த எஸ்.ரா-வின் எளிமையும் பழகிய விதமும் கவர்ந்தது. வானொலி அறிவிப்பாளராய் பலரைச் சந்தித்திருக்கிறேன். பலருடன் புகைப்படம் எடுத்திருக்கிறேன். ஆனால் எஸ்.ராவுடன் ஏற்பட்ட சந்திப்பு உணர்வு ரீதியாக மாறுபட்டிருந்தது. ‘ஆசையாசையாய்’ பிரமுகர் ஒருவரை பேட்டி எடுக்க தயாரானேன். முகநூல் நண்பர்களிடமும் விரும்பும் கேள்வியைப் பதியச் சொன்னேன்.

பேட்டி குறித்து வேறொரு நாளில் பதிவு செய்கிறேன். இந்த பதிவு மூன்று நாள் நடைபெற்ற சிறுகதை பயிலரங்கு குறித்து மட்டுமே.

19-ம் தேதி பிற்பகல் ஒரு மணிக்கெல்லாம் நிகழ்ச்சி நடைபெறும் விடுதிக்கு வரவேண்டும் என்றார்கள். பன்னிரெண்டு மணிக்கு முன்பாகவே சென்றுக் காத்திருந்தேன். முதன்முதலாக இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் பேச்சாளருக்குச் சில அடிதூரத்திலேயே எனக்கான இருக்கை அமைந்திருந்தது. அதுவும் இரண்டாவது இருக்கை. முதல் இருக்கை தோழி கி.உதயக்குமாரிக்கும் மூன்றாவது இருக்கை நண்பன் கங்காதுரைக்கும் என ஒவ்வொரு இருக்கைக்கும் பெயர் ஒட்டியிருந்தது. இளைஞர்களுக்கு முன்னிருக்கை வழங்கியச் சிந்தனைக்கு நன்றி.

மூன்று நாள் பயிலரங்கில் எஸ்.ரா மட்டுமின்றி ரெ.கார்த்திகேசு, சபாபதி, கோ.புண்ணியவான் ஆகியோரும் பேச்சாளர்களாக வந்திருந்தார்கள். நேரம் ஆக ஆக வருகையாளர் அதிகரிக்கத் தொடங்கினர். ஒவ்வொருவருக்கான விடுதி அறைக்கு சென்று புத்துணர்ச்சியோடு வந்தார்கள்.

முதல் நாள் முனைவர் முல்லை ராமையாவின் அறிமுகத்துடன் எஸ்.ரா ஒலிபெருக்கி முன் வந்தார். வாசனையால் நுகரப்பட்ட படைப்புகளுக்குச் சொந்தக்காரரின் தொடக்க உரையின் தலைப்பு ‘எப்போதும் இருக்கும் கதை’.

‘நாம் எல்லோரிடமும் நிச்சயம் ஒரு கதை இருக்கத்தான் செய்கிறது. சிலர்தான் அதனை வெளிக்கொணர்கின்றார்கள். கதையைப் படிப்பதோடு அது குறித்து பேசுவதில் இருக்கும் இன்பம் இரட்டிப்பாகின்றது. கதை வாசிக்கும் பழக்கம் குறைய இருக்கக்கூடிய காரணங்களில் முக்கியக் காரணம் அது தொடர்பாக பகிர ஆள் இல்லாமையே.

நமக்கு பாட்டி வடை சுட்ட கதை தெரியும். ஏன் பாட்டி வடை சுடுகிறார்? ஏன் மரத்தடியில் அமர்ந்திருக்கின்றார்? நரி ஏன் நேரடியாக வடையைத் திருடவில்லை? வடை திருடிய காகத்தை பாட்டி ஏன் விரட்டவில்லை...? இந்த கேள்விகள் எதுவும் இல்லாமல் பாட்டியும் வடையும் காகமும் தொடர்ந்துக் கொண்டே வருகிறது. மேற்சொன்ன கேள்விகள் தோன்றிய பிறகு இக்கதையின் மூலத்தை நான் தேடத் தொடங்கினேன்.’

பங்கேற்பாளர்கள் ஆர்வமாக குறிப்பு எடுக்கத்தொடங்கினார்கள். இந்த கதை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கதையாம். கிரேக்க மொழியில் இந்தக் கதை இருக்கிறதாம். அங்கு காலம் காலமாக சொல்லிவரும் ஈசாப் கதைகளில் இந்த கதை இடம்பெறுகின்றதாம். ஆனால் அங்கு வடைக்கு பதில் வெண்ணைத்துண்டும் காகமும் இருந்ததாம். அரபு மொழி கதையில் காகமும் மாமிசத்துண்டும் இருந்ததாம். இந்தியாவில் வடையும் காகமுமாக மாறி வட இந்தியாவில் ஜிலேபியும் காகமும் என உருவெடுத்ததாம்.

இப்படி இடத்திற்கு இடம் மாறி வந்த கதையில் சொல்லப்பட்டிருப்பதையெல்லாம் பட்டியலிட்டார். வயதானாலும் பாட்டி வடை சுட்டு உழைக்கிறார். ஆதரவின்று மரத்தடியில் இருக்கிறார். தற்பெருமையால் காகம் வடையை இழக்கிறது. தந்திரக்காரன் நம்மை ஏமாற்றுவான் என்பதை சொல்கிறது நரி. இப்படியாக சொல்லியப்பின் இந்தக் காகம் வடை கதைக்கு ஒரு முன்கதையும் தொடர்ச்சியும் அதனுள் பல கூறுகளும் இருக்குமென்றால்; மீதம் இருக்கும் கதைகள் குறித்து மனம் யோசிக்கத் தொடங்கியது.

குழந்தைகளிடம் இருக்கும் கதை சொல்லும் கலையை நாம் உதாசினம் செய்கிறோம் என்றவர், தன் அண்டைவீட்டுப் பையன் தினமும் பள்ளி முடிந்து இவரிடம் சொல்லும் கதையினை சொல்லி சிரிக்க வைத்தார்.

‘சிறுகதை என்பது நினைவுப்பதிவு. வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைவதுதான் சிறுகதைகள்’ என்றார். 19-ம் ஆண்டு தோன்றிய சிறுகதை குறித்து விவரித்தார்.

ரஷ்யர்களுக்கு சிறுகதை என்பது 500 பக்கங்கள் கொண்டவை.

அரபு மொழியில் சிறுகதை என்பது 6 பக்கம் கொண்டவை.

அமெரிக்கர்களுக்குச் சிறுகதை என்பது 10 பக்கம் கொண்டவை.

ஆனால் தமிழில் குறிப்பிட்ட பக்கம் இல்லை எனவும்; ஒன்றை பற்றிய முன் - பின் பதிவுதான் சிறுகதையாகிறது என்றார். கதைகளுக்கு இதயம் இருக்கிறதா என கேள்வி கேட்டு நாங்கள் யோசிக்கும் முன்பே, இல்லாமலா உங்களை வருந்தவும் வாழ்க்கையை மாற்றவும் உதவுகிறது என முடித்தார்.

பின், அவரவர் மேஜையில் வைத்திருக்கும் கோப்பை பற்றி பேசலானார். அதில் படைப்பாளர்கள் கவனிக்கத்தக்க முன் உதாரணமாக இருக்கக்கூடிய சிறுகதைகள் இருப்பதாகவும் அதனை படிப்பது பயனானது என்றார்.

கோப்பில் இருந்த கதைகளும் அதனை எழுதியவர்களும்.

• கடவுளும் கந்தசாமி பிள்ளையும் - புதுமைப்பித்தன்

• அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்

• எங்கள் டீச்சர் - சுந்தர ராமசாமி

• பாயாசம் - தி. ஜானகிராமன்

• மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

• புலிக் கலைஞன் - அசோகமித்திரன்

• எஸ்தர் - வண்ணநிலவன்

• அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை

• சோற்றுக்கணக்கு - ஜெயமோகன்

• புத்தனாவது சுலபம் - எஸ்.ராமகிருஷ்ணன்

ஒவ்வொரு கதையின் ஆழத்தையும் மறுநாள் பகிர்ந்து கொண்டார்.

முதல் அமர்வு முடிந்தது. இரண்டாவது அமர்வில் ரெ. கார்த்திகேசு பேசினார். அவரது தலைப்பு ‘சிறுகதையில் திண்மையான காட்சிகளும் கதை மாந்தரும்.’ சிறுகதையை தானாக சொல்லும் வருணனையாகவும் கதைமாந்தர்களின் உரையாடல் மூலமாகமும் அல்லது இரண்டும் சேர்ந்த கலவையாகவும் சொல்லலாம் என்றார். அதற்கென்று பிரித்தியேகமாக சில உதாரணச் சிறுகதைகள் குறித்து பேசினார்.

அடுத்த அமர்வு ‘சிறுகதைகளில் உத்தியின் பயன்பாடு’ என்ற தலைப்பில் முனைவர் சபாபதி பேசினார்.

பேசி முடிந்ததும். முதல் பயிலரங்கு நிறைவடைந்தது. இரவு மணி 11-ன்றைத் தாண்டியது. நான், கங்காதுரை, முனீஸ்வரன் ஆகியோர் ஒரே அறை. சில மணிநேரம் பேசி அன்றைய நிகழ்வு குறித்து மேலும் பகிர்ந்தோம். ஒருவர் பின் ஒருவராக எப்போதோ தூங்கியிருந்தோம்.

அடுத்தநாள், ‘சிறுகதைகளின் சாத்தியங்களும் சவால்களும்’ என்று உரையைத் தொடங்கினார் எஸ்.ரா. சிறுகதை என்பது 100 மீட்டர் ஓட்டம். முடிவு நிச்சயிக்கப்பட்ட ஒர் ஓட்டம் என்றார். தன்னை வெளிபடுத்த சிறந்த கருவி இது என்றவர், சிறுகதையின் கவனிக்கத்தக்க கூறுகளைப் பட்டியலிட்டார்.

- கரு

- களம், சூழல், இடம்

- கதாப்பாத்திரம்

- கதை சொல்லும் முறை

- கதையின் திருப்பம்

- கதையின் ஒருமை (கதாப்பாத்திரத்திற்கும் சூழலுக்குமான ஒற்றுமை)

- கதையின் முதல் வரி

- கதையின் தலைப்பு

- தனித்துவம் (சிந்தனை)

- கதையின் முடிச்சி

பாவைக்கூத்தில் ஒரே ஆள் அனைத்து பொம்மைகளாகவும் இருப்பதை போல்; சிறுகதை படைப்பவர்கள் அனைத்து உணர்ச்சிகளையும் உணர்ந்தவாறு கதையினை நகர்த்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து ‘சிறுகதையின் அழகியல்’ தலைப்பில் பேசினார். பார்த்தான், அவதானித்தான் என இரண்டு வார்த்தைகளுக்கு இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்து கதையில் பயன்படுத்தப்படவேண்டும் என்றார்.

மேலும் கதைகளைப் படிக்க சில அகப்பக்க முகவரிகளைக் கொடுத்தார்.

1. அழியாச்சுடர்

2. எஸ்.ராமகிருஷ்ணன்

3. சொல்வனம்

4. சிக்கி முக்கி

5. உயிர்மை

6. திண்ணை

எஸ்.ராவை அடுத்ததாக இரண்டாம் நாளில் கோ.புண்ணியவான் பேசிவிட்டுச் சென்றார். அவருக்கானத் தலைப்பு ‘வாசிப்போரைக் கவரும் சிறுகதையின் தொடக்கம்’. இவரின் பேச்சில் சிறுகதை தொடக்கம் என்பது ‘show me don’t tell’ என்பதனை புரிந்து கொண்டோம்.

- முதல் வரியிலேயே கதை தொடங்க வேண்டும்

- தொடக்கம் ஆர்வ நிலை, எதிர்ப்பார்ப்பு, நெருக்கடிகளை உண்டாக்க வேண்டும்

- வடிவ நேர்த்தி அவசியம்

- மையக்கருவுடன் கதை தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

நிறைவாகப் பேசி சிறுகதை தொடக்கத்திற்கு உதாரணங்கள் கொடுத்தார்.

உதாரணங்கள்

# புதிரோடு தொடக்கம்

# தர்க்கத்தோடு தொடக்கம்

# உரையாடலுடன் தொடக்கம்

# நனவோடையுடன் தொடக்கம் (தானே சொல்லித் தொடங்குதல்)

# அழகியல்

# கதாப்பாத்திரத் தன்மை

அமர்வு முடிந்தது. முதல் நாள் போல் மூவரும் பேசிப் பகிர்ந்து வெளியில் சென்று சாப்பிட்டோம். விவாதித்தோம். உறங்கினோம்.

பயிலரங்கில் மூன்றாம் நிறைவு நாளில் எஸ்.ரா உலக இலக்கியம் குறித்து பேசினார். உலக இலக்கியம் என்பது ஆங்கில இலக்கியம் மட்டுமல்ல மலையாள இலக்கியம் தொடங்கி நம்மவர்களின் படைப்புவரை என பேச்சில் இருந்து புரிந்தது. மொழிபெயர்ப்பு கதைகளின் அவசியத்தை புரியவைத்தது அவரது பேச்சு. அதில் ரஷ்ய எழுத்தாளர்கள் டாஸ்டாய், தாஸ்தோஸ்கி, அண்டன் செக்காவ் போன்றோர் இடம் பெற்றனர். மேற்கொண்டு அவர் சொல்லியதெல்லாம் அவரது அகப்பக்கத்தில் படித்த நினைவில் இருக்கிறது. அங்கு சென்று விரிவாகப் படிக்கலாம். அதில மலையாள எழுத்தாளர் பக்ஷிர் எழுதிய ‘மாய பூனை’ கதையில் செய்யப்பட்டிருக்கும் பகடியும் சமூக விமர்சனமும் அந்த கதையைத் தேட வைத்திருக்கிறது. மக்களின் வழிகாட்டியாக எல்லா சமயத்திலும் எழுத்தாளர்கள் இருந்து வந்திருக்கிறார்கள் என சொன்னதும் ஒரு கனம் நான் எழுதியதெல்லாம் கண்முன் படமாக வந்து போனது.

பயிலரங்கின் நிறைவாக ஆறு. நாகப்பன் ‘கருப்பொருளில் இருந்து கதைப் பின்னல்’ என்ற தலைப்பில் பேசினார்.

எஸ்.ரா, ரெ.கார்த்திகேசு, கோ.புண்ணியவான், ஆறு. நாகப்பன் ஆகியோரின் உரைக்கு இடையில் அரை மணி நேரம் கொடுக்கப்பட்டது. வந்திருந்தவர்கள் குழுவாக பிரிக்கப்பட்டனர். பேசியவர்கள் கொடுத்த உரைக்கு ஏற்ற பயிற்சியாக நாங்கள் கதையின் தொடக்கமாக ஒரு பக்கம் எழுதினோம்.

எஸ்.ரா விடம் ‘கேசவன்-என் முதல் நண்பன்’ என்ற தலைப்பில் ஒரு பக்கத்தில் கதையை எழுதிக் கொடுத்தேன். ரெ.கார்த்திகேசு கொடுத்த கருவைக் கொண்டு உரையாடலைக் குழுவாக எழுதினோம். கோ.புண்ணியவானிடம் ‘நான் கடவுள்’ என்ற கதையின் தொடக்கத்தை எழுதிக் கொடுத்தேன். ஆறு.நாகப்பனிடம் அவர் கொடுத்திருந்த கதையின் தொடக்கத்தை வைத்து ஒரு பத்தி வைத்து குழுவில் கலந்து பேசி எழுதிக் கொடுத்தோம்.

எஸ்.ரா விடம் வந்த 70 கதைகளில் 6 கதைகளை அவர் தெர்ந்தெடுத்து மேடையில் படிக்க வைத்தார். படித்து அதனை எழுதியவர்களிடம் இருக்கும் எழுத்தினை பேசினார். அதில் ஐந்தாவது கதையாக நான் எழுதிய ‘கேசவன்-என் முதல் நண்பன்’ என்ற கதையைத் தேர்தெடுத்து வாசிக்கச் சொன்னார்.

கதைக் கேட்டவர் “நல்ல தொடக்கம். சொல்ல வந்ததை சொல்லி முடித்திருக்கறிங்க, கதையின் பயன்படுத்தப் பட்டிருக்கும் மொழி நல்லா வந்திருக்கு. தொடர்ந்து எழுதினிங்கனா நல்ல படைப்புகளைக் கொடுக்க முடியும். வாழ்த்துகள்” என்றார்.

எழுத்தும் தானும் வேறு அல்லாத ஓரு எழுத்தாளரின் வாக்கு பலிக்கும் என ஆழ்மனம் நம்புகிறது. இன்னொன்றை சொல்ல மறந்துவிட்டேன். தான் பேசி முடித்து இரவு வரை எங்களுடன் அமர்ந்திருந்தார் எஸ்.ரா. முதலில் வருவார் கடைசியாய் செல்வார். எல்லா நேரத்திலும் அவரிடம் சொல்வதற்குக் கதைகள் இருந்தன. எல்லோரும் கதைகளினூடே வாழ்வதை அதன் மூலம் நாசுக்காக உணர்த்துகிறார் என்றே நினைக்கிறேன்.



நன்றி
இதழ் 33
செப்டம்பர் 2011


3 comments:

சித்திரவீதிக்காரன் சொன்னது…

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடன் தங்கள் சந்திப்பையும், சிறுகதைப் பயிலரங்க நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. எஸ்.ராமகிருஷ்ணன் பேசினால் கேட்டுக்கொண்டேயிருக்கலாம். அவருடன் உரையாடிய நிகழ்வுகள் எல்லோரது நினைவிலும் என்றும் நிற்கும். பகிர்விற்கு நன்றி.

தயாஜி சொன்னது…

நன்றி....

தயாஜி சொன்னது…

இன்றுதான் தெரிகிறது ஐயா நீங்களென்று... மகிழ்ச்சி... 2012லியே பேசியுள்ளோம்....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்