பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

வியாழன், 21 ஜூன், 2012

அதே மோதிரம் 1 - மர்மத் தொடர்

மலேசியாவில் மாத இதழாக வெளிவந்துக் கொண்டிருக்கும் 'அன்பு இதயம்' இதழில் வெளிவரும் எனது மர்ம அமானுஷ்ய தொடர். - நன்றி 'அன்பு இதயம்'. 

     ‘எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ; கடவுளுக்கு என் மீது அதிகம் நம்பிக்கை இருக்கிறது . இந்த வாசகம் ஒட்டியிருப்பது நம் நாயகனின் மேஜை மீதுதான். அதன் காரணம் சுவாரஸ்யமானதாக இருப்பதால் இங்கு சொல்வதில் தவறில்லை. கடந்த ஆண்டு நடந்த சம்பவம் அது. வேலைக்கு செல்லும் சமயம் வழக்கம் போல அம்மாவிடம் சொல்லியவனை அம்மா; ‘ஐயா, இன்னிக்காவது வெளியில் இருக்கும் சாமியைக் கூம்பிட்டிட்டு போப்பா...என்றார். வீட்டிலிருந்து வெளிவந்தால் இடது புறத்தில் சின்னதாய் ஒரு கோவில் இருக்கும். வாசலில் இருந்து சில அடி தூரம் போதும். கழுத்துயரம் வரை கோபுரம், கறுப்பு அருவாள் மண்ணின் நடபட்டிருக்கு , அருகிள் செங்கல்லுக்கு பாவாடை கட்டியிருக்கும். அதுதான் அவர்களின் குலசாமி போலும். வீட்டுக்கு ஒரு கணினியும் பட்டதாரியும் இருக்கின்றார்களோ இல்லையோ, வீட்டுக்கொரு குட்டி கோவில் இருக்கின்றது. இந்த வீடும் அதற்கு விதிவிலக்கல்லவே.
    வழக்கம் போல வெளியேறும் போது; வழக்கத்திற்கு மாறாக கோவிலை நோக்கி சென்றான். அருகில் செல்லச்செல்ல கோவில் சிறியதாக மாறியது. நிமிர்ந்து வந்தவன், அருகில் வந்தது, வேறு வழியின்றி கோவில் உயரத்துக்கு தன்னை வளைத்தான். கைகளால் வணங்கியவன் விபூதியை எடுக்கும் போது மின்னல் எண்ணம். எப்படியும் அழிக்கத்தான் போகிறேன் பின் ஏன் நெற்றியில் பூச வேண்டும். அதோடு அம்மா பார்க்காததும் ஒரு காரணம்.
    மோட்டாரில் பயணிக்கலானான். வீடுகள், நடப்பவர்கள், மரங்கள் என அனைத்தும் பின்னோக்கி ஓட வைக்கும் வேகம் அவனது இயல்பு. இன்று மட்டும் குறையவாப் போகிறது. வேகம் அதிவேகம் ஆனது. அதுதானே ஆபத்திற்கு அழைப்பு மணி. கூப்பிட்டக் குரலுக்கு வருவது ஆண்டவன் என்றால் கூப்பிடாத குரலுக்கு வருவது ஆபத்து. கனரகவாகனம் வடிவில் அன்று ஆபத்து தன்னை தயார் செய்திருக்க வேண்டும். அது ஏனோ தெரியவில்லை இங்கே விபத்துகளுக்கு கனரகவாகங்களே முதன்மைக் காரணமாக இருக்கின்றன. அது ஏன்.....? எதுக்கு வம்பு நாம் கதைக்கு வருவோம்.
     தனக்கு முன்னே சென்றுக் கொண்டிருந்த கனரகவாகனம் வளைவதற்கான விளக்கை மினுக்கிக் கொண்டது. தானும் வளைய வேண்டியிருந்ததால் காரணம் இன்றி கனரகவாகனத்தை முந்திச்சென்று வளைந்தான். வேகமாக வந்தாலே வளைவு ஆபத்து நிறைந்தது. இங்கேயோ அதிவேகமான வரவு. வேறு என்ன செய்யும் வளைவு, மோட்டாரையும் சேர்த்து வளைத்தது. மோட்டாரும் அவனும் கீழே சாய்ந்தார்கள். வளைவில் விழுந்ததால், பின்னால் வந்துக் கொண்டிருக்கும் வாகனம் ஏதாக இருந்தாலும் வளைந்தவுடன் இங்கே விழுந்து கிடக்கின்றவனை மோதத்தான் செய்யும். என்ன ஆச்சிரியம்...!  இவனுக்கு பின்னால் வேகமாக வந்துக் கொண்டிருந்த கனரகவாகனம் ; ஆம் வளையவேண்டிய வாகனம் வளையாமல் நேரே சென்றது. வெறுமனே சாலையில் சென்றாலும் மோதித் தள்ளும் கொல்லும் அந்தவகை வாகனம். ஆனால் இந்த முறை வளையவேண்டி விளக்கை மினுக்கியும் வினாடி வித்தியாசத்தில் எப்படி வளையாமல் போனது. ஏன்...? ஆச்சர்யமா அல்லது ஆபத்தில் அறிகுறியா..?

      கீழே விழுந்து கிடக்கிறவனின் உயிரின் தேவை இதுவல்ல போலும். வீட்டில்  இருந்து வெளியேரும் நேரம் தெய்வத்தை வணங்கியதின் பலனா..? இல்லை தலையே போகும் வேளைக்கு தலைப்பாகை இப்போது வேண்டாம் என்ற எண்ணமா..?; என்ன எண்ணம் யாருக்கு..?
   அடடே; தவறு நிகழ்ந்துவிட்டது. இப்போது  கீழே விழுந்து உயிர் பிழைத்திருக்கும் இவருக்கும் நம் கதைக்கும் தற்போது துளியும் தொடர்பு இல்லை. நம் கதையின் நாயகன் மணியின் பக்கத்து வீட்டுக்காரர் இவர். அவ்வளவுதான். அவரது அறையில் ஏன் நுழைந்தோம் என தெரியவில்லை. அவர் விழும்வரை நாம் ஏன் பின்தொடர்ந்தோம் எனவும் தெரியவில்லை. ஒருவேளை இது அந்த.. அதே மோதிரம்செய்யும் வேலையாகவும் இருக்கலாம். ஆனாலும் விழுந்திருப்பவனின் கையில் எந்த மோதிரமும் இருக்கவில்லையே.? எதற்கும் நாம் எச்சரிக்கையாக இருப்போம். வேலையைத் தொடங்கிவிட்டது அதே மோதிரம்’.
   இனி மோதிரம் சம்பந்தப்பட்ட நாயகனை சந்திப்போம். அதற்கு முன்பு தான் அணிந்திருந்த மோதிரம் அவனுக்கு ஏற்படுத்திய முதல் அதிர்ச்சியில் நாமும் பங்குகொள்வொம்.
    அவன் மணி. காதலிக்கிறான். வருட இறுதியில் திருமணம். வருங்கால துணை ஓர் ஆசிரியை. இருவருக்கும் காதல் வந்த கதையெல்லம் நேரம் இருப்பின் பிறகு சொல்கிறேன். இருவருக்கும் நான்கு மணிநேர பயண இடைவேளி என்பதால் இவர்களின் உரையாடல் தொலைபேசியிலேயே நடந்துக் கொண்டிருந்தது.
    மணி இயற்கையிலேயே முன்கோபம் கொள்பவன். அவனைப் பொருத்தவரை அது கோவம் அல்ல; ரௌத்திரம். ரௌத்திரம் பழகு. நியாயத்திற்கு எதிரானவை மீது ஏற்படும் ஆவேச நிலை. பாரதியில் கவிதைகளில் ஒன்றையாவது பின்பற்றுவது அவனுக்கு பெருமையாக இருந்தது. மற்றவர்களை போல மேடைப் பேச்சிற்கு மட்டும் பாரதியில் சில கவிதைகளை மனப்பாடம் செய்து, பேசி, கைத்தட்டல் வாங்குவதில் மணிக்கு உடன்பாடு இல்லை.
     வருங்கால வாழ்க்கையுடன் தொலைபேசியில் மட்டுமே தற்போது பேசி வருவதால் சில சமயம் சண்டையில் முடிந்துவிடும். முகம் பார்த்து பேசும் போது எதிரில் உள்ளவர்களின் முகத்தை கவனிப்போம். அவர்களின் புருவத்தின் அசைவுகளை வைத்தும் நாம் அவரது உணர்வினைத் தெரிந்துக் கொள்ளலாம். அதனால் அடுத்து நாம் சொல்லவருவதை மாற்றிச் சொல்லியும் சொல்லாமல் விட்டும் இருப்போம். அந்த வசதி இல்லாததாலும் மணியின் கைபேசி பேசமட்டும் பயன்படக்கூடியது என்பதாலும் குரல் மட்டுமே இடம்பெற்றது. முகநூலில் இருந்து வந்த காதலுக்கு முகத்தின் அவசியம் இருக்கவில்லை எழுத்துக்களாலும் உரையாடல்களாலும் இருவர் உள்ளத்திலும் காதல் பூத்தது. இது விஜய் நடித்த காவலன் கதையோ மணி பற்றிய காதல் கதையோ இல்லை. ஆக காதல் வளர்ந்த கதை பற்றியெல்லாம் நமக்கு வீண். மோதிரம் குறித்து தெரிந்துகொள்ள இந்த  முன்கதை அவசியம் என்பதால் கொஞ்சம் பொறுமை கொள்ளுங்கள்.
     அலுவலக வேலை கொடுத்த மன அழுத்தம் மணியின் பேச்சில் வெளிபட்டது. இருந்தும் காதலியின் பேச்சு, வழக்கத்திற்கு மாறாக எங்கெங்கோ சென்றது. எதிர்ப்பார்க்காத, எல்லை மீறிய கோவத்தின் விளைவு இருவரையும் அதிகம்தான் பேச வைத்தது. அதன் எல்லை என உச்சகட்டமாய், பேசிக்கொண்டிருந்த கைபேசியை தூக்கி வீசி எறிந்து சுவரை நான்கு முறை பலம் கொண்ட மட்டும் குத்தினான் மணி. இது அவனது பால்ய வயது பழக்கத்திலிருந்து வந்த ஒன்று. சுவரை குத்திய பிறகுதான் மணிக்கு யோசிக்க நேரம் கிடைக்கும். இதே வழக்கம் இப்போதும் தொடர்ந்தது. யோசிக்க யோசிக்க கோவம் தனிந்தது. கோவம் தனியத்தனிய நான்கு விரல்களிலும் வலி எடுக்கத் தொடங்கியது. வலியுடன் தூக்கி வீசிய கைபேசியைத் தேடலானான்.
    கைபேசி கிடைத்தது. அதில் இனி பேச வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை. எண்களும் பெயர்களும் இருந்து அந்த சிறிய கண்ணாடியில் இப்போது வெள்ளை நிற விளக்கு மட்டும் தெரிந்தது. காதில் வைக்க சட்டென கைபேசி அதிர்ந்தது. வீசுவதற்கு முன்பு வரை பாடிய என்னோட ராசி நல்ல ராசிஇனி ராசியில்லை. அதிர்ந்த கைபேசியை ஏதேதோ பட்டன்களை அழுத்தி காதில் வைத்துவைத்துப் பார்த்தான். முடிவில் எதை அழுத்தினான் என்றே தெரியாத நிலையில் கைபேசியைக் காதில் வைத்தான். அழுகுரல். கண்டிப்பாக காதலியாகத்தான் இருக்கும். ஆனால் இன்னொரு அழுகுரலும் கேட்டது....அது...


(தோடரும்...)
நன்றி, பிப்ரவரி 2012 'அன்பு இதயம்'  


0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

Blogger templates

Categories

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்