பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

புதன், 20 ஜூன், 2012

பயணிப்பவனின் பக்கம் 9

பண இலைநம்மை மீறிய ஏதோ ஒன்று நடக்கிறது. அதுநாள் வரையில் நாம் பிடித்திருந்த கொள்கையை புரட்டிப் போடுகிறது. அப்படி ஒரு நம்பிக்கை எனது பணப்பையிலும் இருந்தது.

இலை வடிவில் ஒரு சின்னப் பளிங்கை நண்பன் ஒருவன் கொடுத்தான். அப்போது பதிமூன்று வயது. இடைநிலைப் பள்ளியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் நாங்கள். தமிழ் பள்ளியிலிருந்து இடைநிலை பள்ளிக்கு சென்றிருந்தோம். தமிழை தவிர்த்து சுமாராக ஆங்கிலம் வருமே தவிர சுட்டு போட்டாலும் வாய் திக்காமல் மலாய் மொழி வந்திடாது. ஆசிரியர்கள் கேள்விக்கு பயந்து வகுப்பில் இந்திய மாணவர்கள் கடைசியில் அமர்ந்தோம்.

வகுப்பில் பாடம் நடந்து கொண்டிருந்தாலும் நாங்கள் பின்னால் எங்கள் வேலையில் கண்ணாய் இருப்போம். நடந்த, பார்த்த, கேள்விபட்ட பலவற்றை பேசி எங்கள் அறிவை வளர்த்தோம். பேச்சு சுவாரஸ்யத்திற்காக நண்பன் ‘பண இலை’ குறித்து பேசினான். அது அதிசய இலையாம். பெரும்பாலும் பணக்கார சீனர்கள் வீட்டில் இருக்கும் ஒருவகை செடி அது. அந்த செடியில் முளைக்கும் இலைக்குத்தான் ‘பண இலை’ என்று பெயர்.

அந்த ‘பண இலை’-யை பறித்து பணப்பையில் வைத்துக் கொண்டால் பணப்பிரச்சனை வராதாம். எப்படிச் செடியில் பளிங்கு இலை வரும் என்ற கேள்விக்கு இடமில்லாத வயது எனக்கு. கெஞ்சி கேட்ட பிறகு ஓர் இலையைக் கொடுத்திருந்தான். பச்சை பளிங்கினாலான கல் அது.

பதிமூன்று வயதில் நண்பன் ஒருவன் ஏற்படுத்திய நம்பிக்கை. ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருந்தது. பல பணப்பைகள் மாறியது. கொடுத்த நண்பனிடம் மனக்கசப்பு வந்தது. பல மாதங்கள் பேசாதிருந்திருக்கின்றோம். ஆனாலும் அவன் கொடுத்த பண இலை மட்டும் எனக்கு பணத்தைக் கொடுத்துக் கொண்டே இருந்தது. நிச்சயம் ஆச்சர்யம்தான். வயது ஏற ஏற அனுபவம் சேர சேர, அந்த பண இலையை நானே சந்தேகித்திருக்கிறேன்.

இப்படி சந்தேகித்த ஒரு நாள் வளைக்க முயன்றேன். இலையாக மட்டும் இருந்திருந்தால் வளைந்திருக்கும். ஆனால் அது பளிங்கு இலை. வளைக்க முயன்றதும் உடைந்தது. உடனே அதனை மீண்டும் ஒட்டி பணப்பையிலேயே வைத்துவிட்டேன். பண இலை கையில் இருக்கும் வரையில் பணத்தட்டுபாடு இருக்கவில்லை. தற்போது அந்த நண்பனும் இல்லை. இறந்து அடக்கம் செய்யும் வரை இறப்பை குறித்து யாருக்கும் சொல்லவில்லை. மிகுந்த பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டான். அவன் வீட்டார் அனைவரையும் இரத்த பரிசோதனை செய்தார்கள். அவன் வியாதி அவர்களுக்கு பரவியிருக்கலாம் என்ற பயம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப் ‘பண இலை’ இல்லாமல் இருந்தாலும் பண பற்றாகுறை வரவில்லை. அறிவிப்பு வேலையை முடித்துக்கொண்டு அதிகாலை 6மணிக்கு அருகில் இருக்கும் உணவகத்திற்குச் சென்றேன். உடன் நண்பன் ஒருவன். ஆளுக்கு ஒரு மோட்டார். வேகமாக சென்றவனைப் பின் தொடர்ந்து சென்றுக்கொண்டிருந்தேன். எதிரில் நான்கு மோட்டர். வலது இடதும் தள்ளாடியபடி சிலர் சென்றுக் கொண்டிருந்தார்கள். நண்பன் அவர்களைக் கடந்துவிட்டதால்; அவன் போல் ஒதுங்கிப்போகாமல் அவர்களை வழிவிடக்கோறி ‘ஹோர்ன்’-ஐ அழுத்தினேன்.

தள்ளாடிய நான்கு மோட்டர்களும் ஒதுங்கின. அப்போதே நான் யோசித்திருக்கலாம். வழிவிட்ட மகிழ்ச்சியில் அவர்களுக்கு இடையில் சென்றேன். கண் இமைக்கும் நேரத்தில் என் மோட்டாரை வழிமறைத்து நின்றார்கள். தமிழில்தான் பேசினார்கள்; போதையின் வாடை நன்றாகவே தெரிந்தது. என்னை முந்திச்சென்ற நண்பன் வருவதற்குள். என்னை சுற்றி வளைத்தவர்கள், தலைக்கவசத்தால் ஓங்கி அடித்ததில் விழுந்தேன். எழுவதற்குள் எல்லார் கால்களும் என்னை பதம்பார்த்தது.

பெரிய மூக்கு உடைபட்டு ரத்தம் கசிய, மேலும் வீங்கியது. பெயர் பதித்த சங்கிலி, கைபேசி, பணப்பை எல்லாம் அவர்கள் கையில். நல்லவேலையாக போலிஸ்காரர்கள் வந்தார். ரத்தம் வழியப் பேசினேன். உன்னை எப்படி நம்புவது என கேட்டார்களே பார்க்கலாம்.

அதெல்லாம் இப்போது வேண்டாம். பணப்பை. அதில்தான் பண இலை இருந்தது. இத்தனை ஆண்டுகளாக எனக்கு பணத்தைக் கொடுத்ததாய் நம்பிய பண இலை இனி இல்லை. ஆனால் இன்றுவரை பணத்தில் குறைபாடு இல்லை. அதே சமயம் பெரிய அளவில் நிறைபாடும் இல்லை.

நாம் நம்பும் ஒன்றை; நம்மை மீறிய ஏதாவது ஒன்றுதான் மாற்றியமைக்கும். பண இலை மட்டுமல்ல, இலக்கிய உலகில் இருக்கும் வணிக மற்றும் தீவிர இலக்கியத்திற்கும் இது பொருந்தும்.

“என்னப்பா வணிக இலக்கியம் தீவிரம்னு பேசர... இப்படி பேசிப்பேசித்தானெ எழுத்தாளர்கள் எல்லாம் காசுக்கு கையேந்தும் படி ஆகியிருக்கோம். வணிக எழுத்தில் என்ன தப்பு..?”

சில வருடங்களாக இரண்டிற்கும் வித்தியாசம் இல்லாமல்தான் சுற்றியும் புத்தகங்களை வாசித்தும் வந்தேன். படித்த பத்து புத்தகங்களில் ஏற்படாத நெஞ்சடைப்பு ஒரே ஒரு சிறுகதை தொகுப்பில் ஒரே ஒரு சிறுகதையில் வந்ததென்றால் எப்படிச் சாத்தியம். எச்சிலை முழுங்கும் போது தொண்டை வலிக்கிறது. நேற்றுவரை என் தோலில் கைபோட்டவர்களிடம் இருந்து அறுக்க நினைத்தக் கழுத்தைக் காப்பாற்றியுள்ளேன்.

வணிகம் தீவிரம். சிற்றின்பம் பேரின்பம். இதற்குமிடையில் இலக்கியத்தைக் காப்பாற்றுகிறேன் என சுயஇன்பம் காண்பவர்களும் உண்டு. இவர்கள்தான் பெரும்பாலும் வணிக, தீவிர எழுத்தாளர்கள் இடையில் மூட்டிவிடும் மொழிப்பற்றாளர்கள்.

தீவிர எழுத்தில் வணிகமும், வணிக எழுத்தில் தீவிரமும் வரலாம். வராமலும் போகலாம். ஆனால் மேற்சொன்ன சுயஇன்பம் காண்போரிடம் கவனம் அவசியம்.


நன்றி
இதழ் 33
செப்டம்பர் 2011

Popular Posts

Blogger templates

Categories

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்