பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

புதன், 20 ஜூன், 2012

பயணிப்பவனின் பக்கம் 14

கலீல் ஜிப்ரான் : வார்த்தைகளின் மாயச்சேர்ப்பு
‘படித்த ஆசிரியர்களிடம் உங்கள் பிள்ளைகளை ஒப்படைக்காதீர்கள்; படித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களிடம் உங்கள் பிள்ளைகளை ஒப்படையுங்கள்’ - கலீல் ஜிப்ரான்.’

சமீபத்தில் படித்த கலீல் ஜிப்ரானின் மொழிபெயர்ப்பு புத்தகத்தில் இருந்து படித்தேன். கலீல் ஜிப்ரானுக்கு எனக்கும் ஏற்பட்ட தொடர்பு எப்படியென்று இப்போதுவரை என்னால் முழுமையாக சொல்லமுடியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றும் என கேட்க கிடைத்த பெயர். அவரின் எழுத்துகளில் எந்த ஒரு அறிமுகமும் இல்லாமல் தெரிந்துக் கொண்டேன். வழக்கம் போல புத்தகக் கடையில் இருந்த சமயம் கலீல் ஜிப்ரானின் மொழிபெயர்ப்பு கிடைக்க வாங்கினேன்.

கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளைப் படிக்க படிக்க ; வார்த்தைகளின் உள்ளேயேப் பயணிக்கலானேன். சில வார்த்தைகளின் சேர்க்கை கன்னத்தில் அறைந்தது போல வலி. சில வார்த்தைகளின் கூட்டு, என்னை அரவணைத்தது போல இன்பம். இருக்கும் இடத்தில் இருந்து எண்ணங்கள் என் பால்ய வயதிற்குள் சென்றதை விடவும் எதிர்கால கணக்குகளில் நான் சஞ்சாரம் செய்துக் கொண்டிருந்தேன். எனக்கு இன்பமாக இருந்த இந்த கலீல் ஜிப்ரானின் வார்த்தைகள், என் மனைவிக்கும் என் குடும்பத்திற்கும் பெரிய தொல்லையைக் கொடுத்தது.

தொழில் இடத்திலும் அது தொடர்ந்தது. யாரும் என்னுடைய பேசிய வார்த்தையை விடவும் அவர்கள் எண்ணங்களின் உண்மையான வார்த்தைகளே என் காதில் கேட்டது. இதனால் பல பிரச்னைகள். எந்த ஒரு படைப்பையும் படித்தாலும்; சினிமா படத்தினைப் பார்த்தாலும் எனக்கும் மற்றவர்க்கும் வேறுவேறான புரிந்துணர்வு கிடைத்தை சொன்னதால் எனக்கும் மிகவும் ‘நல்ல பெயர்’.

கலீல் ஜிப்ரான் - னின் வார்த்தைகளில் இருக்கும் மாய கற்பனை ஊற்று படிக்கப்படும் போது எனக்கு முளைத்த சிறகுகளில் சில மின்னல் முகங்கள் எனக்கு தோன்றின. மீண்டும் நான் எனது அரைக் கால் சட்டையுடனும் வெள்ளை நிற சட்டையுடன் என் பால்ய வயதில் நுழைந்தேன். அப்போதுதான் ஆரம்ப பள்ளிக்கூடம் நுழைகிறோம். யாரும் யாரையும் அறிந்திருக்கவில்லை. யாவர்க்கும் ஒரே நிற ஆடைகள்.

எங்களுக்கே எங்களை சரியாக அடையாளம் தெரியாத அந்த பொழுதில் சில ஆசிரியர்களால் நாங்கள் இருப்பிடங்கள் பெற்றோம்.

கறுப்பாய் உள்ள மாணவர்கள் ஒரு வரிசையிலும், சிகப்பாகவும் பற்கள் அழகாகவும் உள்ள மாணவர்கள் ஒரு வரிசையிலும் நாற்காலி பெற்றோம். அப்போது அது வெறும் நாற்காலிகளாகவும் இருப்பிடங்களாகவும்தான் தெரிந்தது. கலீல் ஜிப்ரானின் மாய வார்த்தைகளை நான் உள்வாங்கிய போதுதான் என் கடந்தகால இடங்கள் கொடுக்கப்பட்டதின் சூட்சுமம் புரிந்தது.

மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். இருந்த தோட்டத்தில் பள்ளி விடுமுறைகளில் கூட்டமாய் சேர்ந்து விளையாடும் போதுதான் எதார்த்தமாக ஏதோ பேச நடிகர் நம்பியார் குரல் வந்தது. உடன் இருந்தவர்களுக்கு ஒரே ஆச்சிரியம்.

மறுநாள் பள்ளிக்கூடத்தில் ஓர் ஆசிரியரிடம் என் நண்பன் இதனை சொல்ல; ஆசிர்யர்க்கும் எனக்கும் ஏற்பட்ட உரையாடல் மீண்டும் என் கண்முன் படமாக ஓடத்தொடங்கியது.

“ஓ, அய்யாவுக்கு அதெல்லாம் வருதா..? படிப்புல ஒன்னையும் காணோம்... இங்க வாயேன்”

“சார்”

“எங்க பேசு கேட்கறேன்.”

“சார்.. (சிரிக்கிறேன்)”

“வெளங்கலையா... பேசு, நம்பியாரை நானும் கேட்கறேன்.”

என் காதை அந்த ஆசிரியர் திருக; இப்போதும் வலிக்கிறது.

“பேசுடான்னா...”

நம்பியார் மாதிரி பேச ஆரம்பித்தேன்;

“எல்லாருக்கும் வணக்கம். நான் தான் நம்பியார் பேசறேன்.. எல்லாரும் எப்படி இருக்கிங்க”

“எண்டா இது நம்பியாரா.... யார் சொன்னா உன்கிட்ட இது நம்பியாருன்னு”

“படத்துல பார்த்திருக்கேன் சார்; இப்படித்தான் நம்பியார் பேசுவாரு..”

அறை இப்போதும் வலிக்கிறது.

“ஒழுங்க படிப்பு ஏறலை, ஆனா படம் கேக்குதா உனக்கு; நீயெல்லாம் எதுக்குடா லாய்க்கு, இந்த நம்பியார் மாதிரி பேசறேன், எம்.ஜிஆர் மாதிரி பேசறேன் சொன்னா அடுத்த கன்னமும் வீங்கிடும். அதை பேசதான் அவங்க இருக்காங்களே...”

ஆசிரியரின் அந்த கடைசி நகைச்சுவைக்கு என் வகுப்பில் இருந்த அனைவரும் சிரித்தார்கள். என்னை அடையாளப் படுத்திய நண்பனும் சிரித்தான். அப்போது அவன் மீது கோவம் வந்தது. இன்று புரிகிறது. அவனுக்கு அப்போது சிரிப்பதை விட வேறு வழி இருந்திருக்கவில்லை.

சமீப மேடை நிகழ்ச்சி வரை பலகுரலில் என்னதான் சிறப்பாய் பேசினாலும்; சட்டென அந்த ஆசிரியரின் முகம் வந்து சில வினாடிகள் என்னை மௌனப்படுத்தும்.

நல்லவேளையாக புஸ்பா என்கிற பெண் ஆசிரியர் கண்ணுக்கு நான் தெரிய ஆரம்பித்தேன். அவர் என்னை அடையாளம் கண்டார். நான் அடையப்போவதையும் கண்டார் என்றே சொல்ல நினைக்கிறேன். வகுப்புக்கு வந்ததும் அவர் கேட்கும் கேள்விகளுக்கு என்னால் தைரியமாக பதில் சொல்ல முடிந்தது. பதில் தவறாக இருந்தாலும் நான் அதனை பொருட்படுத்தவில்லை. அந்த ஆசிரியரும் அதனை பொருட்படுத்தவில்லை. அவருக்கு தேவை தைரியமாக பேசும் மாணவர்கள். சரியான பதிலோ மிகச்சரியான பதிலோ அல்ல.

இந்த ஆசிரியரின், என் அடையாளப் படலத்திற்கு பிறகு; பள்ளி இறுதி ஆண்டு நிகழ்ச்சி ஒன்றிற்கு முதன் முறையாக என் பெயர் முன்மொழியப்பட்டது. அதுவரை கவனிக்கப்படாத பெயரை பலரும் வகுப்பில் தேட ஆரம்பித்தார்கள். ஆசிரியர் புஸ்பாவின் பொறுப்பில் ஒரு நாடகம் ஏற்பாடு செய்யவேண்டும். எங்கள் வகுப்பு சார்பாக அதனை அந்த ஆசிரியர் செய்தார். நான் அதில் முக்கிய கதாப்பாத்திரம். தொடக்கத்தில் நவின திருவிளையாடலாக யோசித்து எழுதுக் கொடுத்தார் அவர். சக நண்பர்களுடன் - இந்த சக நண்பர்கள் என்னைவிட வயதில் மூத்தவர்கள். என்னால் அவர்களுடன் எந்த ஒரு பய உணர்வும் இன்றி பேச முடிந்தது எனக்கே ஆச்சரியம்.

எங்கள் நடிப்பைப் பார்த்து ஆசிரியர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. நகைச்சுவையாக ஒரு நாடகத்தை எழுதும் பொறுப்பை எங்களுக்கு கொடுத்தார். அதுவும் இரண்டே நாள் இடைவேளையில். எழுதினோம். ஒத்திகையிட்டோம். நடித்தோம்.

நான் நடித்த முதல் நாடகம் அதுதான். அதைப் பார்த்த பலரும் எனக்கு நல்ல நடிப்பாற்றல் இருப்பதாக பாராட்டியது இன்னமும் என் நினைவில் இருக்கிறது. இதில் நான் பேசிய பெரும்பாலான வசனங்களை நானே எழுதியிருந்தேன்.

அந்த ஆசிரியரின் பிள்ளையார் சுழியால், இன்று வானொலி அறிவிப்பாளர் வரை நான் வந்திருக்கிறேன். இந்த கடந்தகால சாட்சியினை என் முன் மீள்பார்வை காட்சிகளாக வரவைத்த கலீல் ஜிப்ரானின் மாய வார்த்தைகள் இது;

‘நாம் வாழ்ந்தது வெறுமனே இல்லை. நம்முடைய எலும்புகளைச் சேர்த்து வைத்துதானே அவர்கள் கோபுரங்கள் கட்டினார்கள்.!’
.......
வாய்ப்புகள் எப்போதும் வருவதில்லை. வரும் சமயம் தவறவிட்டால், மீண்டும் அந்த வாய்ப்பு நமக்கு வாய்க்காது என எல்லாரும்தான் சொல்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கபெறும் நமக்குத்தான் அந்த வாய்ப்பின் உட்பூசல் தெரிந்திருக்கும். என் சக நண்பர்களைப் போல எனக்கு வெளி நிகழ்ச்சிகளுக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் கட்சி நிகழ்ச்சிகளுக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் என்னால் முகம் காட்ட இயலாது.

அதன் காரணத்தை தேடிக்கொண்டிருந்தேன் கலில் ஜிப்ரானின் மாய வார்த்தை கண்ணில் பட்டது;

‘தன்னுடைய கைவிரல் அழுக்கை உங்களுடைய வேட்டியில் துடைப்பவனுக்கு உங்களின் வேட்டியை அவிழ்த்துக் கொடுங்கள். அது அவனுக்குத் திரும்பவும் தேவைப்படலாம். உங்களுக்கு அதன் தேவை இருக்கப் போவதில்லை.’

இந்த வாய்ப்பு கொடுக்கிறேன் பேர்விழிகள், தாங்கள் செய்யும் ஊழலில் நம்மையும் சேர்க்கவே வாய்ப்பு என்னும் சொல்லில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒருமுறை அந்த அழுக்கு கை என் வேட்டியில் பட்டுவிட்டால் நான் காலாகாலத்துக்கும் அவர்களின் ஆஸ்த்தான அறிவிப்பாளனாக இருந்திடுவேன் ஆனால் என் சுயத்தை இழந்திருப்பேன்.

சமீபகாலமாக என்னால் தொடர்ந்து கலீல் ஜிப்ரானின் மாய வார்த்தைகளுக்குள் மூழ்க முடியவில்லை. வாங்கிய புத்தகங்களை மூடி வைத்து பத்திரப்படுத்தியிருக்கிறேன். இந்த நொடியின் கூட என் மனம் சஞ்சலத்திற்கு திறக்கும் மந்திர புத்தகம் கலீல் ஜிப்ரானின் வார்த்தைகள் அடங்கிய புத்தகங்கள்தான்.

அவரின் மாய வார்த்தைகளால் முன்னோக்கியும் பின்னோக்கியும் நான் பயணிக்கும் போது, வந்த சாட்சியும் வரப்போகும் காட்சியும் மறுபரிசீலனை செய்யப்படுகிறது.

கலீல் ஜிப்ரானின் வார்த்தைகள் எனக்கு காட்டியதில் சிலவற்றை மட்டுமே சொல்லியிருக்கிறேன். அவர் குறித்த குறிப்போ, அவரின் புத்தகங்கள் குறித்தோ என்னால் எழுத முடியவில்லை. இதற்கு கூட கலீல் ஜிப்ரானின் மாய வார்த்தைகள் காரணமாக இருக்கலாம்.

இதனை படித்த பிறகு, உங்கள் யாருக்கும் கலீல் ஜிப்ரான் மீது தேடல் ஏற்பட்டால்; உங்களாலும் முன்னோக்கியும் பின்னோக்கியும் செல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாய் அர்த்தம்.

சில சமயம் என் கதைகளிலும் என் கருத்துகளில் என்/நான் சார்ந்த உண்மைகளை எழுதிவிடுவதும் உண்டு. பலருக்கு அதில் விருப்பம் இருப்பதில்லை. ஆனாலும், அந்த அனுபவம் சார்ந்த வார்த்தைகளையே என்னால் என் எழுத்தில் வெளிக்கொணர முடிகிறது. எனக்கு இது விந்தையாகத் தெரிந்தது. நானே என்னை அவமானப்படுத்துவதுபோலவும், மற்றவர்கள் மத்தியில் என் உத்தம அடையாள அழிந்திடுமோ என பயம் வருவதற்கு முன் கலீல் ஜிப்ரானின் மாய/ விந்தை/ ஆச்சர்ய/ அவசிய/ ஆரோக்கிய வாத்தைகளின் கூட்டு கண்ணில் பட்டது;

‘இரவின் பாதையைப் பாதுகாத்து விடியலை அடைந்துவிட முடியாது’நன்றி
இதழ் 38
பிப்ரவரி 2012

Popular Posts

Blogger templates

Categories

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்