பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

புதன், 20 ஜூன், 2012

பயணிப்பவனின் பக்கம் 16

முகமறியாதோராய் ஆறுதல் சொல்லிகள்

குட்டிகதை.
முதியவர் ஒருவரிடம் தாய் ஒருத்தி குழந்தையுடன் வருகிறாள். அவள் மகனின் அதிகமாய் சீனி சாப்பிடும் பழக்கத்திற்கு தீர்வு கிடைக்கவே அந்தச் சந்திப்பு. செய்தியைக் கேட்டறிகிறார் முதியவர். யோசிக்கிறார். அவர்களை அடுத்த வாரம் வரசொல்லி வழியனுப்புகிறார். மறுவாரம், தாயும் மகனும் வருகிறார்கள். முதியவர் அறிவுரை சொல்கிறார்.

“தம்பி, அதிகம் சீனி சாப்பிடுவது உடம்புக்கு நல்லதல்ல, இனி சீனி சாப்பிடாதே சரியா....”.

தாய்க்கு கொஞ்சம் அதிர்ச்சி.

“ஐயா இதை முதல் நாள் வந்தபோதே சொல்லியிருக்கலாமே.”

“இல்லையம்மா சொல்லியிருக்கலாம்தான். ஆனால். அது நாள் வரை எனக்கும் அதிகமாய் சீனி சாப்பிடும் பழக்கம் இருந்தது. இந்த ஒரு வாரத்தில் சீனி சாப்பிடும் பழக்கத்தை விட்டிருந்தேன்.”

அறிவுரை சொல்வதற்கு முன், நாம் அதை கடைபிடிக்க வேண்டும் எனும் மேலோட்டமான கருத்து மட்டும் இதில் இருப்பதாக எனக்குப் படவில்லை. அதற்கான காரணம் இந்தக் கதை எனக்கு அறிமுகங்கள் ஆனதுதான். ஆம் அறிமுகங்கள்.

இந்தக் கதையே முதன் முதலில் எனக்கு அறிமுமானது. அப்போது, எங்கள் தோட்டப்புரத்தில் ஓவியர் ஒருவருக்கு உதவியாளராக இருந்தேன். உதவியென்றால், அவர் வரைவார் நான் அவருடன் உட்கார்ந்து கதை பேசுவேன். அவ்வபோது வரையவேண்டிய பலகையை சுத்தம் செய்து வெள்ளை சாயம் பூசுவேன். ஆன்மிக ஈடுபாடு கொண்டவர் என்பதால் அது சம்பந்தமான பல புத்தகங்களை வைத்திருப்பார். அப்போது படித்த ஒரு புத்தகத்தில்தான் இந்த முதியவர் எனக்கு, ராமகிருஷ்ண பரமஹம்சராக இருந்தார்.

பின்னர் ஒரு நாளில் வானம்பாடி பத்திரிகை என நினைக்கிறேன். அதில்தான் குட்டிக்கதைகள் வரும். அப்படிப் படித்து கதை ஒன்றில்தான் அந்த முதியவர் புத்தராக என் வாசிப்பில் வந்தார்.

சில ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு, நண்பன் வீட்டிற்கு நானும் என் சில நண்பர்களும் சென்றிருந்த சமயம். வீடு முழுக்க ஏசுவின் படங்களாகவும் தொலைக்காட்சிக்கு அருகில் தோத்திரப் பாடல்கள் சீடியாகவும் இருந்ததன. மதமாற்று வேலையின் நண்பனும் அவனது அண்ணனும் மும்முரமாக இருந்த நொடி அது. அப்போது சொன்ன கதைகள் இந்த கதையும் வந்தது. அதில் இந்த முதியவர் ஏசு என்றே ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

தற்சமயம் வானொலிப் பணியின் போது, இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றில் அந்த முதியவர் நபிகள் நாயமாக என் மனதில் மாற்றப்பட்டார்.

இப்படியாக எனக்குத் தெரிந்த எல்லா மதத்திலும் எல்லா நம்பிக்கைகளிலும் இந்த கதை இருக்கிறது. பாத்திரங்கள் மட்டுமே மாறியிருக்கின்றன.

அறிவுரைகள் எல்லோருக்கும் தேவை, அதை சொல்வர் யாராக இருந்தாலும் பரவாயில்லை என்பதும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். சொல்பவர் கடைபிடிக்க அவசியம் கூட இப்போதெல்லாம் இல்லை. ஏனெனில், சொல்பவரின் முகம் கூட தேவையில்லாமால் போயிற்று.

போக்கெட் நாவல்கள் விற்பதற்கு இதுவும் ஒரு காரண்மதான். யாரோ ஒருவர் யாரோ ஒருவருக்கு சொல்லும் அறிவுரை இவர்களுக்குத் தேவைப்படுகிறது. இவர்களை அடையாளம் காண்பது பெரிய கடினம் அல்ல.

“சார், என்ன கதை எழுதியிருக்கிங்க ஒன்னுமே புரியலை...”

“என்ன கவிதை இது , வார்த்தைகளை அப்படியும் இப்படியும் திருப்பி போட்டது போல இருக்கு”

“அவரா, புரியாத மாதிரிதான் எழுதுவார்.”

இப்படியாக வாசிப்பை முனுமுனுப்பவர்கள் ஏறக்குறைய அந்த ரகம்தான். இவர்கள் படிப்பது கதையாக இருந்தாலும் சரி கவிதையாக இருந்தாலும் சரி, அதில் யாரும் யாருக்கும் அறிவுரை சொல்லாத பட்சத்தில் அந்த எழுத்துகள் புரிவதில்லை. ஒவ்வொரு கதையிலும் நீதி போதனைகளையும் நன்னேறி அறிவுறைகளையுமே தேடிப்பார்க்கிறார்கள்.

இயல்புவாதம் என இருந்தாலும் மிகை கற்பனை ஆக வந்தாலும் சரி, அதன் பண்புக்கூறு அறிவுரையில் இருக்க வேண்டியுள்ளது. எழுத்துகள் மட்டுமல்ல குரலில் மூலம் கூட இவர்கள் அதைத்தான் கேட்கிறார்கள்.

வானொலிப் பணியில் அப்படியாகச் சிலரை சந்தித்திருக்கின்றேன். தொலைக்காட்சி முகத்தால் எற்பட்ட வசிகரமல்ல. குரலால். அதில் இனிமையை விட சொல்லும் பாணிதான் இவர்களை வசீகரிக்கிறது.

ஒவ்வொரு வானொலி நிகழ்ச்சியின் போது, படித்த ஏதாவது பொன்மொழிகளை சொல்வது எங்கள் வழக்கம். அரசாங்க வானொலியில் வேலை என்பதால் கட்டுப்படுத்தப்பட்ட பேச்சு மட்டும் வெளிப்படும். அதில் நையாண்டிகள் இருப்பதில்லை. கருத்துகள், கருத்துகள் ,கருத்துகள்தான். வெளியின் இருந்து கேட்பவர்களின் மனதில் எங்களை குறித்த மேன்மையான பிம்பம் வருவதில் ஆச்சரியமல்ல.

எங்களுக்கு வரும் அழைப்புகள் பாடல்களை கேட்பதற்காக மட்டும் அல்ல. அதில் சராசரி முகங்களோடு பகிரமுடியாத ஆழ்மனக் கேள்விகளும் அடங்கியிருக்கும். அதும் எல்லா அறிவிப்பாளர்களையும் அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை. குறிப்பிட்டவர்களையே அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். கோவம், காமம், ஏக்கம், வருத்தம், ஆசை என அவர்களில் எதிர்ப்பார்ப்பை பட்டியலிடலாம்.

மருத்துவ நிகழ்ச்சியில் மருத்துவரை பேட்டி கண்டு ஒலிரப்பினாலும், நாங்களே மருத்துவர்களாக அவர்களுக்கு தெரிவோம். எங்களுக்கு வரும் அழைப்புகளின் கேள்விகளில் இருந்து அதனை உணரலாம்.

நான் பணியில் இருக்கும் ஒவ்வொரு சமயமும் நடுத்தர வயது பெண் அழைப்பார். படிப்பதில் ஆர்வம் உள்ளவர் என நினைக்கிறேன். எதாவது ஒரு தத்துவத்தை சொல்லி, அதை தான் படித்ததாகவும், அடுத்தமுறை நிகழ்ச்சி தொடக்கத்தில் சொல்ல சொல்வார். ஒருமுறை கூட அவர் சொன்னதை சொன்னதில்லை, அவரும் விடுவதாக இல்லை. சில சமயம் விடுகதை என்று குழப்பிவிட்டு சிரிப்பார்.

ஆரம்பத்தில் எரிச்சலாக இருந்தாலும், இப்போது பழகிவிட்டது. பழக்கம் வேறெப்படி இருக்கும். பகல் வேளையில் மட்டும் அழைப்பவரல்ல அவர். எனக்கு இரவு வேலையென்றாலும், அழைப்பு வந்துவிடும். இப்படியாக ஒருமுறை அவரின் பின்புலம் தெரியவந்தது. தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்காத மருமகள். சாப்பிட்டாரா எனக் கேட்காத பிள்ளை. துணையாய் இருப்பது வானொலியும் தனியறையும். நல்ல வேலையாக கைக்கு எட்டிய தூரத்தில் தொலைபேசி. தொலைபேசி கட்டணம் குறித்து மகன் ஏதும் கேட்காதவரை அழைத்துக் கொண்டேதான் இருப்பாராம்.

தன்னிடம் பேச யாரும் இல்லாத போது, எழுத்துகளையும் வானொலி குரல்களையும் நாடுகின்றார்கள். எழுத்துகளைக்கு உடனடி எதிர்வினை செய்தல் இயலாது. ஆனால் வானொலிக்கு அது சாத்தியம். தொலைபேசி இருந்தால் போதும். அப்படியாக வந்துக் கொண்டிருக்கும் தொலைபேசி அழைப்புகளில் ஒன்றுதான்.

“சார், நான் தான் பேசறேன். எப்போ சந்திக்கலாம். ம். அவரு இருக்கமாட்டாரு. இருந்து மட்டும் என்னத்தை செய்யராரு. அவருக்கு அவரோட சுகம்தான் முக்கியம். ஒரு தடவை, ஒரே ஒரு தடவை உங்களை பார்த்தாலே போதும். உங்க குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதில் இருக்கற காந்ததுக்கு என்னோட பரிசு இது. மறுக்காதிங்க.”

பாவம் அந்த பெண்ணா? அவளது கணவனா? இல்லை, எழுத்தாலும் குரலாலும் இயங்கிக் கொண்டிருப்பவர்களா?


நன்றி
இதழ் 40
ஏப்ரல் 2012

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

Blogger templates

Categories

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்