பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

புதன், 20 ஜூன், 2012

பயணிப்பவனின் பக்கம் 12


விடுபடும் அன்பின் பரிணாமம்
காலை. நடைபாதை ஓரம். சிலர் நடை பயிற்சியில்; சிலர் இடை பயிற்சியில். ஒவ்வொரு சத்தத்திற்கு எதிர் சத்ததுடன் பறந்தன புறாக்கள். அதையே ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு முதியவர்.

கார் சத்தம். அதைவிட சத்தமாய் பறந்தன இறகுகள். இறங்கி வருகிறாள் இளம் பெண். கையில் புறாவுக்கான தீனி. பறந்த புறாக்களின் இடத்தில் தீனியை கொஞ்சம் கொஞ்சமாக வீசுகிறாள். பறந்த புறாக்கள் அதிகரித்தன இரைக்காக.

அதுவரை கவனித்து வந்த முதியவர் எழுந்து நடக்கிறார். அந்த பெண்ணின் அருகில் வந்து நிற்கிறார். தீனி திண்ணும் புறாக்களை கண்கொட்டாமல் பார்த்து சிரிக்கிறார்.

அந்நேரம் அந்த பெண்ணுக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. கையில் இருந்த தீனி பொட்டலத்தை முதியவரிடம் கொடுத்து தன் கைபேசியை எடுக்கிறாள். காதில் கைபேசியுடன் திரும்புகையில் அந்த முதியவரைக் காணவில்லை.

தூரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார் அவர்!.

ஆள் நடமாட்டம் அற்ற ஒரு இடம். கையில் தீனி பொட்டலத்துடன் நிற்கிறார். மூச்சிரைக்க மூச்சிரைக்க பொட்டலத்தில் உள்ள தீனியை சாப்பிடுகிறார்.

அவரின் பசியும் பரிதாம முகமும் அருகில் காட்டப்படுகிறது - உடன் ‘முதியோர்களைக் கைவிடாதீர்கள்’ விளம்பர வாசகம், முகத்தில் அறைகிறது.

வீடியோ காட்சி அத்துடன் முடிகிறது.

வரிசையாய் வீடுகள். ஒவ்வொரு வீட்டின் பின்புறமும் சின்னதாய் பூந்தோட்டம். தாராளம். அந்த பெண்ணுக்கு 30 வயது இருக்கும். திருமணமானவள். ஒரு வயதானவரை வீட்டின் பின்புறம் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறாள். அந்த வயதானவர் உடல் கண்ணைத் தவிர மற்றவையெல்லாம் கறுப்பாக இருந்தது.

தோல் சுருங்கி ஒரு கையும் காலும் அசைவற்று இருந்தார். ஆடை ஏதும் இல்லை. உடல் முழுவதும் சவர்க்கார நுரையுடன், அந்த பெண் அவரைக் குளிப்பாடிக் கொண்டிருக்கிறாள். துளியும் முகச்சுழிப்பின்றி அந்த முதியவரின் ஆண்குறியையும் விதையையும் தன் கையாலே தேய்த்து கழுவிக் கொண்டிருந்தாள்.

கொஞ்சம் அழுத்தி தேய்த்தாலும்; வலிக்கும். வலித்தால் சொல்லும் நிலையிலும் அந்த முதியவர் இருக்கவில்லை. முதியவருக்கு பழகிவிட்டதா அல்லது அந்த பெண்ணுக்கு அதன் தன்மை புரிந்துவிட்டதா..? அந்த முதியவர் அவளது தந்தை.

முன்னது போல இங்கு முகத்தில் அறையும் விளம்பர வாசகம் வரவில்லை. ஏனேனில் இது வீடியோ கட்சி அல்ல. எனது ஒன்பது அல்லது பத்து வயதில் பார்த்துப் பழகிய ‘செல்லும் வழி காட்சி’.

வலிக்காமல், இருக்க ஒன்று மரத்துபோயிருக்க வேண்டும் அல்லது கைக்கு பக்குவம் தெரிந்திருக்க வேண்டும்.

அப்படி பக்குவமென்றால், அதன் மூலம் எங்கே இருக்கிறது?

அன்பில்;
அக்கரையில்;
கடுப்பில்;
வருத்ததில்;
வெறுப்பில்;

தன் மூலம் எங்கே இருந்தாலும், கைக்கும் குறிக்கும் நன்மையைத் செய்திருந்தது.

இன்று;

அப்படி வீட்டு ஓரங்களில் நடக்கும் வசதி தற்போது இல்லை. அந்த மனிதர்களும் இல்லை. தந்தையின் குறியையும் விதையையும் வலிக்காமல் பிடித்துத் சுத்தப்படுத்தத் தெரிந்த பிள்ளைகளும் காணவில்லை.

இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்..?

நான் இருந்த தோட்டத்தில், பிறந்த நாள் என்றால் போதும். யாரையும் அழைக்கவேண்டிய அவசியமே இருக்காது. அப்படித்தான் ஒவ்வொருவரின் திருமணமும். இன்னமும் நினைவில் இருக்கிறது. எனது 10 வயது வரை, ஒவ்வொரு பிறந்த நாள் இரவும். கேக்கு முதல் பிறந்த நாளுக்காக செய்த பலகாரங்கள் வாங்கிய மிட்டாய்கள் எல்லாம் தட்டில் வைப்போம். எங்கள் வீட்டில் வருசையில் இருப்பவர்கள் வீட்டிற்கு சென்று கொடுப்போம். பதிலுக்கு அவர்கள் ஒரு ரிங்கிடேனும் கொடுத்து நல்லா படிக்கனும் என தெரிந்த அறிவுரைகளைக் கூறுவார்கள்.

காசு கிடைக்காது என தெரிந்தும் சிலர்வீட்டில் தட்டுகளைக் கொடுத்து மகிழ்ச்சியைப் பகிர்வோம்.

வயது ஏற ஏற அந்த செயல்கள் மாறவும் மறையவும் தொடங்கின. இன்று ஒவ்வொரு வருட பிறந்த நாளையும் சிலர் முதியோர் இல்லங்களிலும் ஆதரவற்ற இல்லங்களிலும் கொண்டாடுகின்றார்கள். கவனித்துப் பார்த்தால்; அவர்களின் தாய் தந்தையில் ஒருவர் வேறொரு ஆசிரமத்தில் வேறு ஒரு பிரமுகர் கொடுக்கும் பிறந்த நாள் அன்பளிப்புக்கு வரிசையில் நின்றுக் கொண்டிருப்பார்.

சில சமயங்களில் நிகழ்ச்சிகளுக்காக முதியோர் இல்லங்களுக்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் சென்றிருக்கிறேன். தற்போது முதியோர்களின் எண்ணிக்கையும் சுறுவர்களின் எண்ணிக்கையும் சம அளவில் வந்துவிட்டதாய் ஓர் உணர்வு.

சமீபத்தில் அப்படி ஓர் ஆசிரமத்தில் சந்தித்த ஒரு நடுத்தர வயதுடைய பெண்ணுடன் ஏற்பட்ட உரையாடல்;

“நீங்க இங்கதான் இருக்கிங்களா..?”

“இல்லங்க, அப்பப்போ வந்துட்டுப் போவேன். வேலை செய்றேன்.”

“பரவாலையே, வெளிய வேலை செஞ்சாலும். அப்பப்போ ஆசரமத்துக்கு வந்து வேலை செய்றிங்க பாருங்க...”

“இல்லைங்க வேலை செய்றதுக்கு வரமாட்டேன். என்னோட பிள்ளைங்க நாலும் இங்கதான் இருக்குங்க, அதான் வந்து பாத்துட்டு போவேன்.”

“உங்க பிள்ளைங்களுமா..?”

“ஆமாங்க, புருசன் விட்டு போய் ரொம்ப வருசம் ஆச்சி... பிள்ளைங்களை வளர்க்கனுமே... அதான் இங்க இருக்குங்க..”

“பிள்ளைங்க படிக்கறாங்களா...?”

“என்னங்க நீங்க, சாப்பாட்டுக்கே இல்லாமதான் இங்க விட்டுருக்கேன்... இதுல படிக்கறது வேறயா...”

என்னால் அந்த உரையாடலை மேற்கொண்டு தொடர முடியவில்லை.

உரையாடலுக்கு பிறகு; தனது நான்கு பிள்ளைகளையும் அறிமுகம் செய்தார். அவருக்கு வேண்டுமானால் அது பெருமையாக இருக்கலாம். ஆனால் அந்த நான்கு பிள்ளைகளின் மனம்?

நன்றி
இதழ் 36
டிசம்பர் 2011

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

Blogger templates

Categories

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்