பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

புதன், 20 ஜூன், 2012

பயணிப்பவனின் பக்கம் 15


“தீ” சொல்லும் நா சுடும்; சுட வேண்டும்

‘ஒரு கோப்பை தேநீர்’. கே.பாலமுருகன் ஏற்பாடு செய்திருந்த இலக்கியவாதிகளுடனான கலந்துரையாடல். ஒருமுறைதான் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் எதிர்ப்பார்த்திருந்த மாதாந்திர கலந்துரையாடல். தொடர முடியவில்லை.

அதிஷ்டவசமாக நான் கலந்துக்கொண்ட போது டாக்டர்.சண்முகசிவா வந்திருந்தார். அந்த சந்திப்பிற்கு முன்பு வரை அவரைப் பற்றி பெரிதாக புரிதல் இல்லாமல்தான் இருந்தேன். அவ்வப்போது தொலைக்காட்சியிலும் சில சமயம் எனக்கும் என் தந்தைக்குமான உரையாடலிலும் அவர் வெளிப்படுவார். ஓரளவிற்கு அவரைத் தெரிந்துக்கொண்டேன்.

வானொலி அறிவிப்பாளராக மாதாந்திர நிகழ்ச்சி ஒன்றை தயாரித்துக் கொண்டிருந்த சமயம். ‘கண்ணாடித் துண்டுகள்’ எனும் தலைப்பில் சமுதாய அவலங்களை, உண்மை சம்பவங்களை , பாதிக்கப்பட்டவரே நேயர்களுடன் பகிரும் நிகழ்ச்சி. பல தரப்பினரை பேட்டி எடுத்திருக்கிறேன். மிகுந்த யோசனைக்குப் பின் திருநங்கைகளைப் பேட்டி எடுத்தேன். வழக்கம் போல நிகழ்ச்சியின் நிறைவில் உளவியல் அடிப்படையிலும் சமுதாயக் கண்ணோட்டத்திலும் ஒருவர் பேசவேண்டும்.

டாக்டரின் சமுகப் பார்வை எதார்த்தமாகவும் நடைமுறை சாத்தியமாகவும் இருக்குமென்பதால் டாக்டரை பேட்டி காணும் வாய்ப்பு கிடைத்தது. அதுவரையில் தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்த முகத்தையும் கேட்ட குரலையும் அருகில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தரிசனம் என்பது மிகையான வார்த்தையாக இருக்கலாம். ஆனால் எனக்கிருந்த எதிர்ப்பார்ப்பு அத்தகைய ஒரு மனநிலையைத்தான் வழங்கியது.

எதிர்ப்பார்த்தததற்கு ஏற்றார்போலவே டாக்டரின் பேச்சும் அமைந்திருந்தது. பேட்டி முடிந்தது. கிளம்பினோம். பேட்டியும் எடிட்டிங் வேலையெல்லாம் முடிந்து ‘கண்ணாடித் துண்டுகள்’ நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. நல்ல வரவேற்பையும் பெற்றது.

மீண்டும் டாக்டரைச் சந்திக்கும் வாய்ப்பை எதிர்ப்பார்த்திருந்த சமயம்தான், ‘ஒரு கோப்பை தேநீர்’ கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முறை சண்முகசிவாவுடன் கலந்துரையாடல்.

சந்திப்பில் ஆவலுடன் கலந்துக் கொண்டோம். சதுர மேஜையினை சுற்றி அமர்ந்திருக்க உரையாடல் ஆரம்பமாகியது. பேச்சில் இடையில் டாக்டர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டார்;

“நீங்க ஏன் கவிதை எழுதறிங்க...?”

ஆளுக்கு ஒரு பதிலாய் வந்தவை;

“இலகுவாக சொல்லுவதற்கு இதுதான் வழி”, “இந்த வடிவம் பிடிச்சிருக்கு”, “இதில் சொன்னாதான் நல்லா இருக்கும்னு தோணுது”, “சிக்கனமா சொல்லலாம்”.

எல்லா பதில்களையும் உன்னிப்பாகக் கேட்டதற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாமல், ஆழமாக கவனித்ததை தொடர்ந்த அவரின் பேச்சில் காண முடிந்தது. ஓர் ஆங்கில கவிஞரின் பெயரைக் குறிப்பிட்டு தொடர்ந்தார்,

“அவர் சொல்றாரு, எனக்கு வார்த்தைகளை பிடிக்கும். ஒரு வார்த்தையை முன்னுக்கும் இன்னொரு வார்த்தையை பின்னுக்கும் போட்டு பார்க்கறேன்... அப்பறம் இப்படியும் அப்படியும் மாத்தி மாத்தி போட்டு பார்க்கறேன்... வார்த்தைகள் அவ்வளவு அற்புதமாக இருக்குது”.

சொல்லும் போதே மிகையற்ற ஒரு தன்மையுடன் தனது அனுபவத்தை சொல்வதாய் இருந்தது டாக்டரின் குரல். வார்த்தைக் கொடுக்கும் அனுபவங்கள் எனக்குப் புரியத்தொடங்க புதிது அது.

அன்றைய நாள் முடிந்தது. ஒரு வருடத்திற்கு மேலாகியிருக்கும். சமீபகாலமாக அவர் சொன்ன அந்த வார்த்தைகளை அடிக்கடி சந்திக்கிறேன். சக நண்பர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வார்த்தைகள் எனக்கு விளையாட்டாய் இருக்கிறது. இப்பொதெல்லாம் வார்த்தைகளை வெறும் வார்த்தைகளாக மட்டுமே பார்க்கவோ படிக்கவோ முடியவில்லை.

வார்த்தைகளில் சொற்களையும் தாண்டி எழுதியவருக்கும் நமக்குமான ஒரு தொடர்பு நிலையை உருவாக்கும் அற்புதம் அடங்கியிருக்கிறது. மனதில் வலியுடன் சில வார்த்தைகள் கண்ணில் படும்போது, வலியை குறைக்கிறது.

“'தீ'ன்னு சொன்னா நாக்கு சுடவா போகுதுன்னு, சொல்லிச்சொல்லி வார்த்தைகளுடன் நமக்கு நாம் இடைவேளியை போட்டு தப்பித்ததாய் நினைக்கிறோம். நாம் நம்மை காப்பாற்ற நினைப்பது வார்த்தைகளிடம் இருந்து இல்லை; வாழ்விலிருந்து.

தீ சொல்லி சுடாதா நாக்கும்; ஒருவரின் நடத்தையை குறித்து சொல்லும் வார்த்தையில் ரத்தம் கொதிக்கிறது. ஆக வார்த்தைகளுக்கு உணர்ச்சி கொடுக்கவும், உயிரை எடுக்கவும் தெரிந்திருக்கிறது.

வெறும் வார்த்தைதானே என நாம் ஒதுங்கும் ஒவ்வொரு சமயமும் சுரண்டப்படுகின்றோம். அரசியல் சூட்சுமமும், ஆன்மீக ஜிகினா வலைகளும் வார்த்தைகள் குறித்த பிரக்ஞையின்றியே நடந்தேருகிறது. சல்லாப வீடியோவில் சிக்கிய சாமியார் ஒருவர் சொல்கிறார், “நான் என்னை பிரம்மச்சாரி என்று எப்போதும் சொல்லாத பட்சத்தில் நான் எந்த பெண்ணிடமும் இருக்கலாம் இணையலாம்......”

“நீங்கள் எங்களை நம்புங்கள்; நாங்கள் உங்களை நம்புகிறோம். நாங்கள் உங்களுக்கு நம்பிக்கையை தருகிறோம்” என சொல்லி வணங்கும் ஒரு சாரார்.

“எங்களுக்கு தேவை நம்பிக்கையல்ல; உரிமை, அதை கொடுங்கள்” என மறுசாரார் கை உயர்த்துவதும் வார்த்தைகளின் மாயம்.

நம்பிக்கைக்கும் உரிமைக்கும் உள்ளே மறைந்துக் கிடைக்கும் வாழ்வை நாம் எப்போது புரிந்துக் கொள்ளப்போகிறோம்.

ஒவ்வொருவரின் வார்த்தைகளும் பேச்சிலும் எழுத்திலும் வலையினைப் பின்னி காத்திருக்கின்றன. எச்சரிக்கையாக இருப்போம். மனிதர்களைவிடவும் வார்த்தைகள் வலிமையுள்ளவை. வாழ்வை கொடுப்பவை.


நன்றி
இதழ் 39
மார்ச் 2012

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

Blogger templates

Categories

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்