பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

புதன், 20 ஜூன், 2012

அலிபாபாவின் 41-வது திருடன் !

                                         


     நாசமா போச்சி. இப்படியா மாட்டிக்கிறது, இனி யாரு மதிப்பா. இல்லாட்டியும் ரொம்பதான்யா மதிக்கறாங்க. எப்படியும் இவனுங்க என்னை  விடப்போறதில்லை. நானும் இப்படியே இருக்க முடியாது. ஏன்னா, கொஞ்சம் கொஞ்சமா மானம் கப்பைல போய்கிட்டே இருக்கு. என் மானம் மட்டும்ன்னா பரவால போனா போகட்டும்; ஆனா போறது எங்க தாத்தாவோட மானமும் சேந்துன்னு நினைக்கும் போது தப்பிச்சி ஓடியே ஆகனும். வேற வழியே இல்லை.

     எங்க தாத்தா எப்பேர்பட்டவர்னு தெரிஞ்சா நீங்களே இங்க வந்து என்னை காப்பாத்திடுவிங்க. சொன்னா நம்ப மாட்டிங்க. நான் இப்போ செய்ற வேலை கூட எங்க தாத்தா பேரைக் காப்பாத்ததான். இல்லைன்னா, எங்க அப்பாவும் சித்தப்பாவும் ஏன் இதை எனக்கு கத்துக் கொடுத்தாங்க. அப்பாக்கும் ஒரு கதை இருக்கு, சித்தப்பாக்கும் கதை இருக்கு. ஆனா அந்த கதைகளுக்கு  எல்லாம் மூலக் கதை எங்க தாத்தா கதைதான்.
     எங்க தாத்தா யார் தெரியுமா ? பேரைச் சொல்லவா? தாத்தா இருந்த ஊரைச் சொல்லவா? இல்லன்னா அவர் வாழ்ந்த வாழ்க்கையை சொல்லவா? எதை சொன்னா நீங்களும் எங்க தாத்தாவை மதிப்பிங்க?
    வெள்ளை வேட்டி கட்டிகிட்டு, ஒட்டுப்பல்லோ இல்லை, ஓட்டைப்பல்ல வச்சிக்கிட்டு மகன்கிட்ட சுருட்டுக்கு காசு கேட்கற தாத்தா இல்லை எங்க தாத்தா. பாட்டி வச்சிருக்கற வெத்தலையை திருடி தின்னுட்டு வாங்கிக் கட்டிகற தாத்தாக்கெல்லாம் ஏதுங்க மரியாதை. உங்க தாத்தாவாவது காலையிலேயே குளிக்கறவரா இருந்தா எனக்கு சந்தோஷம். சில படிச்ச தாத்தா இருக்காங்க தெரியுமா. உலக மகா நெனப்பு அவங்க்கிட்டத்தான் இருக்கும். என்னமோ நிலவுல கால் வச்ச மாதிரி ஆரம்பிப்பாங்க பாருங்க ‘அந்த காலத்துல நாங்கெல்லாம்’. என்னத்தை கிழிச்சாங்களோ தெரியலை.
    ஆனா எங்க தாத்தா அப்படியில்லை. அவர் ஒரு திருடர்ரு. என்னடா இவன் திருடனை போய் திருடர்னு சொல்லேர்னு யோசிக்கிறிங்களா...
    சோத்துக்கு வழியில்லாம திருடிட்டு போறவனை வேணும்னா திருடன்னு சொல்லலாம். எங்க தாத்தா ஒரு லட்சிய திருடர்ரு. ஆமா நெசமாத்தான் சொல்றேன்.
     திருடனா இருந்தாலும் ஒரு கொள்கை ஒரு கோட்பாடு இருக்கனும்ங்க. அதனாலத்தான் எங்க அப்பா, எங்க சித்தப்பா , இப்போ நானு. நாங்க யாருமே திருடறதுக்கு கூட்டு வச்சிக்கல. ஆமா நானும் திருடர்னு சொல்லிட்டேனா இல்லையா? சொல்லலைன்னா, இப்போ சொல்லிடறேன். நானு, எங்க அப்பா, எங்க சித்தப்பா எல்லாம் திருடருங்க. எல்லாம் காரணமாத்தான். அன்னிக்கு பாருங்க. குரூப்பா மூனு பேரு திருட போயிருக்கானுங்க (இவனுங்களுக்கு என்ன மரியாதை). போயிருக்கானுங்களா.... அப்போ, ஒருத்தனுக்கு காக்கா வழுப்பு வந்துரிச்சாம்.
     பாதி வழியிலேயே அவன் இழுத்துகிட்டு விழுந்திருக்கான். கூட போன ரெண்டு பேராவது ஓடியிருக்கலாம். ஆனா பாருங்க, இவனைக் காப்பாத்த நின்னு இவனுங்களும் மாட்டிகிட்டானுங்களாம். உட்டுட்டு ஓடியிருந்தாலும் மாட்டிகிட்டவன் இவங்களையும் காட்டிக் கொடுத்துடுவான். அப்பறம் அங்க நடந்த எல்லா திருட்டு கேஸுங்களையும் இவங்க மேல போட்டுடுவாங்க. அதோட இருந்தா பரவாலை.
    அப்பறம் ஜெயில்லயே ஒருத்தனோ இன்னொருத்தனோ தற்கொலை செய்துக்குவான். அதுக்கு ஒரு கூட்டம் கூடும். அறிக்கைல்லாம் விடுவாங்க. கேஸும் நடக்கும். போட்டோலாம் பேப்பர்ல வரும். இப்படியே ஆறு மாசத்துக்கு ஒருமுறை பொதைச்சி, பொதைச்சி தோண்டுவாங்க. கேஸும் போய்கிட்டே இருக்கும். இதெல்லாம் தேவையா சொல்லுங்க.
    அதிலயும் இப்போ இந்த நிக்ரோக்காரனுங்க தொல்லை தாங்கலை. எங்க அப்பா, சித்தப்பா காலத்துல இந்தோனிசியாக்காரனுங்களும் பங்களாக்காரனுங்களும்தான் இங்க ரொம்ப இருந்தாங்களாம். இங்கயே வேலை செஞ்சி இங்க உள்ள பொண்ணுங்களையே கூட்டிட்டு ஓடிப்போனவனுங்கத்தான் எத்தனை பேரு. உங்களுக்கு தெரியாதா சொல்லுங்க.
    அவனுங்களும் பாக்கறதுக்கு ஹிந்தி பட ஹீரோ மாதிரி இருந்து தொலைச்சிடறானுங்களா , நாம ஒன்னும் சொல்ற மாதிரி இல்லை. இதெல்லாம் உங்களுக்கு தெரியாமலா இருக்கும். இப்பவும் அவனுங்கல்ல சில பேரு இருக்காங்க. நீல அடையாள அட்டையிலும், அப்பன் பேரு தெரியாத புள்ளைங்களாவும்.
      இங்க உள்ளதுங்களை கல்யாணம் செய்துகிட்டா, இங்கயே ஷோக்கா தங்கித் தொலைக்கலாம்னு யாருய்யா அவனுங்களுக்கு சொல்லித் தொலைச்சது. ஆமா, இங்கதான் மலாய் மொழி பேசினாதான் நீல அட்டை கொடுப்பாங்களாம். நெசமாவா..? அதைவுடுங்க நமக்கு எதுக்கு அரசியல் சொல்லுங்க. முதல்ல கூப்டுவாங்க அப்பறம் தாக்கிடுவாங்க. சொல்ல மறந்துட்டேன்.  இப்போ பாக்கற எடமெல்லாமே நிக்ரோதான் இருக்கானுங்க. பார்க்கவே பயங்கரமாதான் இருக்கு. எனக்குத் தெரிஞ்சி கடிகாரங்களையும் காசு பேக்குகளையுதான் வித்துட்டு இருந்தானுங்க. இப்போ பார்த்தா, என்னா மாதிரி கார்ல போறானுங்க தெரியுமா? தனியா போனா ஆகாதாம். ஆளுக்கு ஒரு பொண்ணுங்களை வச்சிக்கிறானுங்க.
     இதையெல்லாம் பாக்க பாக்க வயிறுதான் எரியுது. அப்பறம் என்னங்க. இங்கயே பொறந்து இங்கயே வளர்ந்து இங்கயே வேலை செஞ்சுக்கிட்டு இருக்கர நம்மாலயே முடியலையாம். நேத்து வந்தவனுங்க , அதுவும் கடிகாரம் வித்தவனுங்க நல்லா வாழறானுங்க. ஒருவேளை கஞ்சா கிஞ்சா விக்கறானுங்களோ ? ஆள் கடத்தி பணம் பண்றாங்களோ ? ஒருவேளை பொண்ணுங்களை வச்சி அப்படியிப்படின்னு?
     வாழ்வுதான் போங்க. ஒருவேளை வெளி நாட்டுல பொறந்து இங்க வந்தாதான் நல்லா வாழமுடியுமோ. இல்லையே, நல்லா வாழறவங்களும் இருக்காங்களே. விடுங்க.
    அதனாலத்தான் நாங்க மூணு நாலு தலைமுறையா தனியாவே தொழில் செய்யறோம். நாங்களும் வாழனும்ங்க இல்லையா.
    எங்க தாத்தா பத்தி இப்போ சொல்லறேன். நீங்களும் எவ்வளவு நேரம்தான் பொறுமையா இருப்பிங்க. சொல்றேன். உங்களுக்கு அலிபாபாவின் கதை தெரியுமா?
     தெரியாமலா இருக்கும். அதான் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படம் பார்த்திருப்பிங்களே. ஆனா இது எம்.ஜி.ஆரும் பானுமதியும் நடிச்ச படம் இல்ல, நம் நாட்டு பி.ரம்லி நடிச்ச அலிபாபா படம். நாமதான் அப்போ இருந்து இப்போ வரை வெளிநாட்டு படத்தையே தூக்கி தலையில் வச்சிக்கறோமே. இங்க ரசிகர் மன்றமெல்லாம் இருக்கே. நானும்கூட அப்படி ஒரு மன்றத்துல இருக்கேனே ஹிஹிஹிஹிஹிஹ். இப்படியே போனா, நம்ம ஊரு படங்க எப்போங்க பேரு வாங்கும்.
     பி.ரம்லியோட அலிபாபா படத்துல, ஞாபகம் வந்திருக்குமே. ஆமாம் அதே கறுப்பு வெள்ளை அலிபாபா படம்தான். ரம்லி சைக்கல்ல  வருவாரு. குகைக்கு பக்கத்துல வந்து  என்னமோ மந்தரம் மாதிரி சொல்லுவாரு. அந்த குகையும் தொறக்கும்.
     அந்த படத்துல இருக்கற நாற்பது திருடன்களை உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அந்த படத்துல நடிச்ச திருடன்களுக்கு, திருடன்னா எப்படி இருக்கனும்னு கத்துக் கொடுத்ததே எங்க தாத்தாதான்.
     இவ்வளவு ஏங்க, பி.ரம்லியோட கதாப்பாத்திரமே எங்க தாத்தாவோடத்தான். இல்லைன்னா அவரு ஏங்க சம்பந்தம் இல்லாம ஒத்தைக் கண்ணோட வாராரு.
     ஒரு முறை எங்க தாத்தா திருடப் போகும் போது, அவரோட அப்பா (அவரோட பேரு தெரியலை; மறந்துட்டேன்) யாரும் வராங்களான்னு ஒரு கண்ணு வச்சிக்கோன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள திருட போனாறாம். திருடி முடிச்சி வீட்டுக்கு வந்ததும்தான் அவரு கவனிச்சாராம். எங்க தாத்தாவோட ஒரு கண்ணைக் காணோமாம். அப்பறம்தான் தெரிஞ்சது. ‘ஒரு கண்ணை வச்சிக்கோ’-ன்னு அப்பா சொன்னதை எங்க தாத்தா வேறமாதிரி புரிஞ்சிக்கிட்டாறாம். வலிச்சதா இல்லையான்னு தெரியலை.
     அன்னியோட தாத்தா நல்ல திருடரா வருவாருன்னு அவரோட அப்பாவுக்கு நம்பிக்கையே இல்லாம போச்சாம். வுடுவாறா எங்க தாத்தா, அடுத்தடுத்த கொஞ்ச வருசத்துல அப்பாவைவிட தாத்தா அதிகமா திருடி, பேரு வாங்கிட்டாறாம்.   
    அந்த சமயத்துலதான் பி.ரம்லி எங்க வீட்டுக்கு பக்கத்துல பட சூட்டிங்கு வந்தாராம். அவரும் எங்க தாத்தா பத்தி பெருசா கேள்விப்பட்டு, கூப்டு அனுப்பினாராம். சைக்கல்ல தாத்தா வந்த அழகையும் ஒரே கண்ணை வச்சிகிட்டு தாத்தா செய்ற சேட்டைகளையும் பார்த்து , அதே போல தன்னோட கதாப்பாத்திரத்தை அமைச்சிக்கிட்டாறாம் பி.ரம்லி.
    படத்துல அவரு ஓட்டி வர்ரதுகூட எங்க தாத்தாவோட சைக்கில்தான். வேணும்னா பாருங்க, சைக்கல்ல கால் மிதிக்கற இடத்துல பாதி ஒடிஞ்சிருக்கும். ஒருமுறை திருடிட்டு வரும்போது இது ஒடிஞ்சதா சொல்லியிருக்காங்க.
    அந்த வழியா வந்த நான் எப்படிங்க இருக்கனும். சொல்லுங்க.. இப்படி மாட்டிக்களாமா..?
    பாருங்க உங்களுக்கு இன்னும் நான் திருடர்னு நம்பிக்கை வரலைதானே. சரி, உங்ககிட்ட என்னோட தொழில் ரகசியத்தை சொல்லவா...
     இந்த வீடு புகுந்து நகைகளை கொள்ளையடிக்கறவங்களையும், தாலி கொடியை அறுத்துட்டு ஓடுறவங்களையும் ரொம்ப சுலபத்துல புடிச்சிடலாம்.  இது  தொழில் ரகசியம். இதை சொல்லித்தான் நீங்க என்னை நம்புவிங்கன்னா நான் சொல்றேன்.
    பணத்தை திருடனா, எங்க வேணும்னாலும் நாம் மாத்திக்கலாம். யாராலும் அவ்வளவா இதை கண்டுபிடிச்சிட முடியாது. ஆனா நகை அப்படியில்லை.
   ஒருத்தன் தாலியை அறுத்துட்டான்னு வச்சிக்குவோம். அதை அவன் காசாக்கா எங்கெல்லாம் போவான். பாசார் மாலாமிற்கா, கே.எப்.சி-க்கா இல்லையே. நகை செய்யற கடைக்குத்தானே.
    நல்லா யோசிங்க, அந்த தாலியை மத்த நகைகளோட தங்கமா உருக்கிட்டா யாருக்கு அடையாளம் தெரியும். இங்க இருக்கற நகைக் கடைக்காரங்களோட ஒத்துழைப்பு இல்லாம எப்படிங்க ஒரு திருடன் நகைகளை காசாக்க முடியும். அடகுக்கடைக்கு போனா நம்மலோட அடையாள அட்டையெல்லாம் கேட்கறானுங்க. ரோட்டுலயும் நகைகளை விக்க முடியாது. அப்புறம் எப்படி?
      ஆனா இன்னமும் நகையை திருடறவங்க இருக்காங்களே எப்படி. இப்படித்தான்னு நான் சொன்னா நீங்க நம்பித்தான் ஆகனும். ஏன்னா நானும் ஒரு திருடர்ரு. முதல்ல நகைக் கடைக்காரங்களையும், நகையை உருக்க தெரிஞ்சவங்களையும் விசாரிச்சா, இனிமேல் எவந்தாங்க நகையை தைரியமா திருடி வித்து காசாக்குவான்.
   ஐயோ, சொந்த கதையையும் சோகக் கதையையும் சொல்லி, நான் இங்க மாட்டிகிட்டதை மறந்தே போய்ட்டேன். நீங்களாவது சொல்லக்கூடாது.
   நீங்க யாரும் என்னை இங்கிருந்து காப்பாத்தனிங்கன்னா, நான் உங்களக்கு திருட கத்துக் கொடுப்பேன். இல்லைன்னா எனக்கு தெரிஞ்ச திருடனுங்களை காட்டிக் கொடுப்பேன். எங்களுக்கு தெரிஞ்சது இது ரெண்டுதானே. என்ன சொல்றிங்க, யாரும் வரிங்களா..?
   நான் இருக்கற இடம் இதுதான். ஆளுயர பெட்டி. திறக்க முடியாத அளவுக்கு பெட்டியில் மேல் பரப்பில் வருசையாய் ஆணி. ஏனோ தெரியலை என்னோட ஒடம்பை வெள்ளைத் துணியால் சுத்தியிருக்காங்க. சொல்ல மறந்துட்டேன். நெஞ்சில் ரெண்டு குண்டு பட்டிருக்கும். அவ்வளவுதான். ஏன் புதைச்சாங்கன்னுதான் தெரியலை. அதுவா முக்கியம்.
யாராவது வரிங்களா....?


                                                       - தயாஜி -


0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

Blogger templates

Categories

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்