- சொல்லாததே சொற்களின் அர்த்தம் -
என் கவிதைகள்
உங்களை
ஆறுதல் படுத்துவதாகச் சொல்லி
எழுதியெழுதி
என்னை நானே
ஆறுதல் படுத்திக்கொள்கிறேன்
எந்தவித
குழப்பமும் இல்லாமல்
கவிதைகள் வந்து நிற்கின்றன
நான் மட்டும்
வார்த்தைகளின் இடைவெளியில்
சிக்கி
வழியறியாது தவிக்கின்றேன்
தண்ணீரில் பிறந்து
தண்ணீரிலே இறக்கும்
உப்பென
கண்ணீரில் கரைந்து
கண்ணீரிலே பிறக்க
கவிதைகள்
உண்டு இங்கு
கவிதைகளின் இடைவெளிக்கு
கடவுளாலும்
ஒரே பொருளை
வைக்க முடியாது
அது கண்ணுக்கு கண்
மாறி
கண்டறியும் பொருளுக்கு
பெயர் வைத்துக்கொள்கிறது
ஒரே பெயரில்
பல முகங்கள்
கவிதைகளுக்கு உண்டு
சொற்களில் மட்டுமல்ல
சொற்களுக்கிடையே சிதறும்
இடைவெளியிலும்
ஆயிரம் அர்த்தங்கள்
குறைந்தபாடில்லை...
0 comments:
கருத்துரையிடுக