- தலை தப்பிய கடவுள் -
தற்கொலை செய்துகொண்டவளின்
கடிதம் ஒன்று
கைக்கு கிடைத்தது
ரொம்பவும் நிதானமாக
அவளதை
எழுதியிருக்கக்கூடும்
ரோஸ் காகிதத்தில்
ஒவ்வொரு மூலையிலும்
ரோஜா பூத்திருக்குமே
அந்தக் காகிதத்தை
எடுத்திருந்தாள்
அதையும் அவள்
பிள்ளையார் சுழியில்தான்
தொடங்கியிருந்தாள்
தன்னைக்
காப்பாற்றாத கடவுளுக்கு
எந்த கூந்தலுக்காக!
வணக்கம் வைத்து
தொலைக்கிறாள் என
கோவம்கோவமாக வந்தது
என்னென்ன நினைத்தாலோ
அதையெல்லாம்
எதையெல்லாம் மறைத்தாலோ
அதையெல்லாம்
எப்போதெல்லாம் அழுதாலோ
அதையெல்லாம்
வரிசை கட்டி எழுதியிருந்தாள்
கொலைகாரியாகாமல்
தற்கொலையாளி ஆவது
மேலென நினைத்தவள்
எதையோ குடித்திருந்து
உயிரை முடித்திருந்தாள்
கடவுள் மீது ஒட்டியிருந்த
கொஞ்சநஞ்ச கடைசி பக்தியால் என்னவோ
அவளது நான்கு வயது குழந்தையை
அப்படியே விட்டுவிட்டுதான் போயிருக்கிறாள்
அதுவரையாவது
தன் நம்பிக்கையைக்
காப்பாற்றி கொண்ட கடவுளுக்கு
இன்னொரு பிள்ளையார் சுழியையும் போட்டுத்தொலைக்கலாம்...
0 comments:
கருத்துரையிடுக