- நெஞ்சின் நஞ்சுகள் -
பழைய சட்டையில்
எப்போதும் போல
உன் நினைவுகள்
அங்கொன்றும் இங்கொன்றும்
நூல்களென பிரிந்து
கிடக்கின்றன
என்னையும் உன்னையும் போலவே x2
எப்படி திணித்தாலும்
உள்நுழையாத
நூல் பஞ்சுகளாய்
எப்படி தள்ளினாலும்
வெளியேறாமல் நிற்கும்
நினைவுகளின் நஞ்சுகளை
என்ன செய்யலாம்
எப்படி சமாளிக்கலாம்
ஆலகால
நஞ்சென்ற போதும்
அது
சென்ற தூரம் போதுமென
தொண்டையில் பதுக்கி
ஊதாவில் வண்ணம் பூசி
மறைத்து நின்று
போஸ்டர்களில் சிரிக்கலாம்
இது
காதல்கால நஞ்சன்றோ
தொண்டை முதல் கெண்டை வரை
நஞ்சுப்பூ
பூத்து குலுங்கியும்
வீழ்ந்து சிதறியும்
உள்ளத்தை வதைக்கிறது
உணர்வுகளால்
உடலையும் சிதைக்கிறது
பார்த்து பழகிய
பழைய சட்டைக்கே என்னை
அடையாளம் தெரியவில்லை
காதல்தான் இல்லை
கொஞ்சம் கூடவா கருணையும் இல்லாமல் போனது
அச்சட்டை இன்று
அளவில் பெரிதாகி என்னை
அப்படியே விழுங்கி விழுங்கி
துப்புகிறது
வெறெந்த ஆடையிலும்
மனம் மட்டும் ஏனோ
நிர்வாணமாய்த் தவிக்கிறது
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக