- கனவுத்தின்னிகள் -
இன்றொருநாள்
ஓய்வெடுக்கலாம் என
உறங்க நினைத்தால்
உள்ளுக்குள்ளிருந்து கனவொன்று
எக்கி குதித்து
வெளியே வருகிறது
சிறுவயதின் கனவது
ரொம்பவும் பிடித்த கனவது
எப்போதெல்லாம் பரீட்சையில்
லட்சியம்
எதிர்கால ஆசை என
எழுதச் சொல்லி கேட்கிறார்களோ
அப்போதெல்லாம்
அச்சு அசலாய்க்
கொஞ்சமும் பிசகாமல்
ஒரே மாதிரி எழுதி எழுதி
புள்ளிகளுக்கு பதிலாய்த்
திட்டுகளை வாங்கியிருக்கிறேன்
இதெல்லாம் ஒரு கட்டுரையா
என
கிழித்தும் எறியப்பட்டேன்
ஆசைகளெல்லாம் நிராசையாய்
மாறிவிட்ட
இன்றைய நாட்களில்
எதிர்காலம் என்பது
இன்றிரவுக்கான சாப்பாடு
என சுருங்கிவிட்ட வாழ்க்கையில்
கனவாவது கண்ணீராவது
எல்லாமே காய்ந்து போவதற்குத்தான்
குழந்தைகளிடம் ஒருபோதும் எதிர்கால ஆசைகளைக்
கேட்டு
ஏளனமாய்ச் சிரிக்காதீர்கள்
உங்கள் பல் பட்டு
பாழாய்ப் போன கனவுகளின்
நகல்களை நாங்கள்
தினம் தினம் பார்த்து
பயப்படுகின்றோம்
சிறுவயதின் கனவை
எங்கள் வாழ்நாளின் சாபமாக
மாற்றிவிடாதீர்கள்
0 comments:
கருத்துரையிடுக