பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 29, 2025

- மனிதரற்ற வீடுகள் -


தன் வாழும்நாள்  முழுக்க 

சொந்தமாய் 

வீடொன்று இல்லாத ஒருவனின்

இறுதி ஊர்வலம் அது


வாடகை கட்டியே வாழ்க்கையைத்

தொலைத்தவன் அவன்

வாடகை கட்டாமல் வசைகளைச்

சுமந்தவன் அவன்


வீடே இல்லாமல்

சாலையோரத்தில் 

சாய்ந்திருந்தவன் அவன்

இரவு நேரம் மட்டும் 

கூரையுள்ள பேருந்து நிலையத்தில்

அவனைப் பார்க்கலாம்


பனியோ மழையோ புயலோ பூகம்பமோ

அவன் எங்கிருப்பான் என

அவனுக்கும் தெரியாது


இருந்தால்

மறுநாள் அவனைப் பார்க்கலாம்


இன்னமும் வாடகை வீடுதானா

என்ற கேள்விகளால்

அவமானப்பட்டவன் அவன்

வீடீல்லாத ஆண்களை நம்பி

எப்படி பெண் கொடுப்பதென

எல்லோரும் கேட்பதால்

பிரம்மச்சாரியானவன் அவன்


வீடே இல்லாததால்

வீட்டில் வளர்க்க எதையுமே

வாங்கவில்லை

அவனுக்கு அவன்தான் செல்லப்பிராணி

அவனுக்கு அவனே

கொல்லும் பிராணி


வீடற்றவனின் பிணத்தை

எடுத்துச்செல்லும்

இரண்டாவது வரிசை வீடுகள்

முழுக்க

காலியாக 

புதர்கள் மண்டி

கண்ணாடிகள் உடைந்து

சுவர்களெல்லாம் பாசி படர்ந்து

வாசல் கதவுகள் இத்துப்போய்க்

கிடக்கின்றன


இறுதி ஊர்வல பயணி

இதன் பிறகும்

நிம்மாதியாய் விடைபெறுவானா


வாழும் போது மட்டுமல்ல

வாழ்ந்து முடித்த பின்னும்

பதில் கிடைக்காத 

கேள்விகளுக்காகத்தான்

மீண்டும் மீண்டும் பிறந்து

மீண்டும் மீண்டும் சாகிறோம்


வீடில்லாத மனிதர்களையும்

மனிதர்கள் இல்லாத வீடுகளையும்

நாணயத்தில்

இருபக்கங்களாக செதுக்கிச் 

சென்றவன் எவன்


மனிதரற்ற வீடுகளின்

மரண ஓலங்கள்

உங்கள் காதுகளில் விழுவதில்லையா..


#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்