- வண்ணமிழக்கும் பகல்கள் -
அது ஒரு
வித்தியாசமான கனவு
என்னைச் சுற்றிலும்
எத்தனையோ பேர்
வருகிறார்கள் போகிறார்கள்
நன்கு கொழுத்த தேகத்தில்
அவர்கள் பக்கத்தில் நான்
துரும்பிலும் துரும்பென
சுருங்கி கிடக்கிறேன்
என் முன்
நீண்டதொரு சாப்பாட்டு மேசை
முழுக்க முழுக்க
உணவுகளால் மூழ்கடிக்கப்பட்டிருந்தது
உலகின் ஒட்டுமொத்த
உணவு வெள்ளத்தின் முன்னே
நானும் நீந்தி போக
வேண்டும்
கடலில் விழுந்தவன்
ஆக கடைசியாய்க்
கைகளை மட்டுமே
தூக்கி காட்ட முடிந்தவன் போல
ஏதோ ஒரு பெயர் தெரியாத
தின்னத்தகுந்த தாவர இலைகளின்
தலைகள் மேஜையெங்கும்
ஆங்காங்கு துடித்தபடி தெரிகின்றன
இத்தனை இருந்தும்
எனக்கு பசியில்லை
வண்ணமடித்த
இரவுகளில் மட்டுமல்ல
வண்ணமிழந்த
என் பகல்களிலும்
கைக்கு கிடைத்த மிச்சமீதிகளைப் பார்க்கையில்
இப்போதுமே பசிப்பதில்லை
கனவில் கூட
காலத்தோடு வயிறை
நிறைக்க தெரியாத
ஏமாளிகளில் நானுமே ஒருவன்
0 comments:
கருத்துரையிடுக