பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 31, 2025

- பிதாவின் புத்திரன்கள் -

 


எல்லோரும்

அவரவர் உள்ளங்கை

பிடிமானத்திற்கு பொருத்தமான கற்களை 

எடுத்துக்கொண்டார்கள்


எதிரே

பெண்ணொருத்தி 

பாதியுடல் புதைக்கப்பட்டு

பாதியுடல் பதைபதைக்க

பார்த்துக்கொண்டிருந்தாள்


யாராவது ஒருவர்

முதற்கல்லை அவள் மேல்

வீசியெறியவேண்டும்

அந்தவழியைப் பின் தொடர்ந்து

எல்லா கற்களும்

ராக்கெட்டுகளாக பாயும்


முதற்கல்லின் குறி 

ஒருபோதும் தவறக்கூடாது

இதுதான் உலகநியதி


சரியாக

மிகச் சரியாக

மிகமிகச் சரியாக

அந்தப் பெண்ணில் 

நெற்றிப்பொட்டில்

புருவத்தில்

கண்ணில்

காதில்

மூக்கில்

உதட்டில்

தாடையில்

கழுத்தில்

மார்பில்

வயிற்றில்

என ஏதோ 

ஓர் உறுப்பைத் தொட்டேயாக வேண்டும்


அது தவறினால்

இந்த விளையாட்டு சுவாரஸ்யமற்றதாகும்

அப்படியாவதை யாருமே

விரும்பவில்லை

அதற்கு 

காரணமாகவும் ஆகவில்லை


வழக்கம் போல

மக்களுக்கு போதனை நிகழ்த்த

பிதாவின் புத்திரன் 

அங்குமே தோன்றினார்


முதற்கல்லை 

உத்தமன் ஒருவன்

நல்லவன் ஒருவன்

தூயவன் ஒருவன்

நேர்மையானவன் ஒருவன்

ஒழுக்கம் காக்கும் ஒருவன்

வீசுங்களேன் என 

இன்னும் எத்தனை காலம்தான்

சொல்வதென சிந்தித்தவர்


தன் துழை பொருந்திய

உள்ளங்கைக்கு ஏற்ற கல்லைக்

கையில் எடுத்தார்


எல்லோரும் அவரை பார்க்க

சட்டென தன் தலையில் தானே அடித்துக்கொண்டார்


எல்லோருக்கும் உதிரம் ஒன்றுதானே

வலியும் ஒன்றுதானே

இவ்வலியை

இன்னொரு மனிதனுக்கு

கொடுப்பதை எந்தப்

பிதாவும் விரும்புவதில்லை

என்று வான் நோக்கி

சத்தமிட்டார்


கொஞ்ச நேர அமைதிக்கு பின்


கூட்டத்தில் ஒரு குரல்

"ஆஹா முதற்கல்  இரத்தம் பார்த்துவிட்டது....!" 

என் கத்தவும்


கையில் இருந்த

கற்கள் அனைத்தையும்

பிதாவின் புத்திரன் மீது

வீச ஆரம்பித்தார்கள்


அந்தக் குதூகலம்

அவ்வெறுமையைப் போக்கி

சூழலைச்

சுவாரஸ்யமாக்கியது


ஒவ்வொரு கல்லிலும்

இரத்தக்கறை






Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்