- மௌன நாற்காலிகள் -
ஏதோ
ஒரு குழந்தைதான்
கடைசியாய் அமர்ந்திருக்க
வேண்டும்
அதன் பின்
யாருமே சீண்டாத
ஒரு நாற்காலியின் கதை
என்னிடம் உண்டு
மஞ்சளாய்க்
கரை படிந்து
கைப்பிடிகளின் நிறம் மங்கி
அமர்ந்து அமர்ந்து
வழுக்கிய இருக்கை
கொஞ்சமாய் உள்வாங்கி
பள்ளமாய்விட்டது
சாப்பாட்டு மேஜையின்
கால்களுக்கு இணையாக
வளர்ந்து நிற்கும் கால்கள்
அதற்குண்டு
அதிலேயே உணவுக்கான
தட்டை வைக்கலாம்
தண்ணீர்க்குவளை வைக்கலாம்
பால் போத்தலை வைக்கலாம்
சத்தமிட்டு
நின்றபடி
வெளிச்சமடிக்கும்
விளையாட்டுக்கூட்டாளியையும்
அங்கே ஒட்டி வைக்கலாம்
அப்போதும் கூட
அமர்ந்திருக்கும் குழந்தை
ஒருபோதும் திருப்தி
கொள்ளாது
அருகிலுள்ள
மேஜைக்கே தாவ முயலும்
எத்தனை பெரிய அவமானமது
ஆனாலும் அந்த நாற்காலி
அதனை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை
அமர்ந்திருக்கும் வரை
அதுதான் எந்தக் குழந்தைக்கும்
தாய்
கவனித்தது உண்டா
இதுவரை
எந்தக் குழந்தையும்
அந்த நாற்காலியில் இருந்து
தவறி
விழுந்து காயப்பட்டதேயில்லை
கடைசியில் அதனை
வெறும் ஜடமாக
நாம் தூக்கி வீசினாலும்
அது தன்னை
ஏதோ ஒரு குழந்தையைத்
தூக்கி சுமந்த
நினைவுகளோடே
நிரந்தர நித்திரை கொள்ளுமே
தவிர
ஒரு போதும்
குழந்தைகளை துன்புறுத்தாது....
0 comments:
கருத்துரையிடுக