- சிலுவை பூக்கும் முகங்கள் -
தற்கொலைக்கு
முந்தைய
சில மணிநேர மனிதர்களில்
ஒருவனை
சந்தித்தேன்
ரொம்ப நேரம்
சிரித்தபடி அமர்ந்திருந்தான்
வாடிக்கையாளர்கள்
அவனைத்தான் வேடிக்கை
பார்த்தார்கள்
அவன் கண்களில்
தாரைத்தாரையாக
கண்ணீர் வரும்வரை
சிரித்தபடி
கைப்பேசியில் எதையோ
பார்த்து கொண்டிருந்தான்
இப்படியொரு சிரிப்பை
வேறெங்கும் நான் பார்த்ததில்லை
ஒரு மனிதனால்
இத்துணை ஆனந்த சிரிப்பை
சுமக்க முடியுமா என
நான் யோசித்திருக்கவும் இல்லை
சுற்றியுள்ள
எதிலும் அக்கறையற்ற
அந்த மனிதனிடம் ஏதோ
ஓர் ஆரா
மிளிர்ந்து
எங்களுக்கும் தொற்றிற்று
நாங்களுமே சிரிக்கலானோம்
சிரித்தோம்
சிரித்தோம்
சிரித்தோம்
சில மணிநேரத்திற்கு மட்டும்.
பின்னர்தான் புரிந்தது
சிரிப்பென்பது சிரிப்பது மட்டுமல்ல
சிரிக்காமல் இருப்பதும்தான்
சிரிப்பென்பது சிறை
சிரிப்பென்பது சீழ்
சிரிப்பென்பது ஊழ்
சிரிப்பென்பது போலி முகம்
சிரிப்பென்பது மாயை
சிரிப்பென்பது நமக்கு நாமே
அடித்துக்கொள்ளும் ஆணி
சிரிப்பென்பது நம்மை நாமே
சுமந்து திரியும் சிலுவை
0 comments:
கருத்துரையிடுக