- அகவரி தேடும் கதைவரி -
நான்
எழுதுகிறவன்
கதைகள் எழுதுகிறவன்
என் இன்பத்தையும்
துன்பத்தையும்
என் வலியையும்
மருந்தையும்
என் ஏமாற்றத்தையும்
நான் ஏமாற்றியதை உட்பட
இருமுனைகளையும்
இரு முரண்களையும்
சொற்கள் மேல் சொற்களென
கோர்த்து இணைத்து
அழுத்தி உருட்டி
தட்டித் தடவி
நீவி
இன்னொரு அருவாய்
இன்னொரு உருவாய்
இன்னொரு உளதாய்
இன்னொரு இலதாய்
நான் கதைகள் எழுதுகிறவன்
விரல்களில் சேர்ந்து
விரலாகும் எழுதுகோலோ
விரல்களால் இசைக்கும்
தட்டச்சு பலகையோ
எதுவொன்றும் எனக்கு
சிக்கலின்றி
பிரபஞ்சத்துளியை என் மேல்
தூவுகின்றன
முகவரி தெரியாத
மனிதனின்
அகவரியைத் தேடி
கதைகளை அனுப்பிவைக்கும்
பணியாள்
நான்
கதையாள்
எல்லா கதைகளையும்
நான் எழுதிவிடுவதில்லை
சில கதைகள்
நடக்கட்டும் என்று எழுதுகிறேன்
சில கதைகள்
நடக்கக்கூடாது என்று எழுதுகிறேன்
இன்னும் சில கதைகளை நான் எழுதவே கூடாது
என்பதற்காக
நானே எழுதி வைக்கிறேன்
பிரபஞ்சத்தின் தபால்காரர்களுக்கு
உங்கள் முகவரி வேண்டாம்
வேண்டவே வேண்டாம்
உங்கள் அகவரியே
எங்களுக்கான
வழிகாட்டி
எங்கள் கதைகளே
உங்களுக்கான
ஒளி கூட்டி....
0 comments:
கருத்துரையிடுக