- துளி பாரம் -
எல்லோருமே
ஏனோ எதற்கோ
கண்ணீரைச் சேமித்திருக்கிறோம்
அதிக வட்டியை அதுவே
தனக்கென கூட்டிக்கொள்கிறது
அதில் சில
சிரிக்கும் போது
சிந்திவிடுகிறது
அதில் சில
அழும் போது
வந்துவிடுகிறது
இன்னும் சில
கண்களின் வழி
வெளியேற விருப்பமற்று பின்னொக்கிச் சென்று
இதயத்தை ஈரமாக்கிவிடுகின்றன
காற்றை
உறிஞ்சி ஊத
உதிரத்தை
ஏற்றி இரக்க
பழகிய இதயத்திற்கு
கண்ணீரை
என்ன செய்வதென
தெரியவில்லை
தான் தப்பிப்பிழைக்க
புத்திக்கு புலப்படாத
நினைவுகளைச் சுமக்கும்
அரூப பெட்டிக்கு
கண்ணீரின் பாரத்தை
அனுப்பிவிட்டு
அதிகமாய்த் துடிக்கிறது
இதயம்
உடல் எடையைவிட
நினைவின் எடையை
எந்த மனிதனாலும்
தாங்கி
தள்ளாடாமல் நடக்கமுடிவதில்லை
அவன்
அதனை சுமந்து கொண்டுதான்
வாழ்க்கையைக் கடக்கவேண்டியுள்ளது
கருணை கொண்ட
சில
கண்ணீர்த்துளிகள் மட்டும்
கண்களில் இருந்து
கண்கள் மூட
கண்ணிமையில் ஏறி நின்று
குதித்து
தற்கொலை செய்கின்றன
கண்ணுக்கும் கண்ணீருக்கும்
எந்த
குற்றவுணர்ச்சியும் இன்றி
ஓர் ஒப்பந்தம்
நிறைவடையும் போது
மனம் கொஞ்சம்
லேசாகிறது...
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக