- கண்களைத் தேடும் கவிதைகள் -
அந்தக் கவிதையை
வாசித்து
விடுமுறை இரவு முழுக்க
தேம்பித்தேம்பி அழுதேன்
என்றேன்
கண்களில் நீர் ததும்ப ததும்ப
அவர்களுக்கு
அது கிச்சுகிச்சு மூட்டியிருக்கவேண்டும்
சட்டென அவர்களுமே
கண்களில் நீர் ததும்ப ததும்ப
சிரிக்கிறார்கள்
கவிதை
ஒருவனை சிரிக்க வைக்கும்
என நம்பும் அறிவிற்கு
கவிதை
ஒருவனை அழவும் வைக்கும்
என ஏன் அறிந்திருக்கவில்லை
கவிதை வாசித்தல்
என்பது
தானும் அக்கவிதை வரியின்
ஏதோவொரு சொல்லென
வாசித்து
தேடி
கண்டறிந்து
நம்புவது தானே
தாயின் அரவணைப்பையும்
தந்தையின் அறிவுரையையும்
காதலியின் அணைப்பையும்
நண்பனின் ஆறுதலையையும்
கடவுளின் ஆசியையும்
கன்னிவெடியென தன்னுள்
மறைத்திருக்கும் கவிதைகளை
மிகச்சரியாக அழுத்த வேண்டியது
நாம்தானே
அந்த வெடிப்பின்
பிரகாசத்துளிதான் எத்துணை
ஒளி பொருந்தியது
மறை பொருளை கண்டறிந்த
யாருமே இதுவரையில்
மறைந்தும் போனதில்லை
நம்மால் மறந்தும் போனதில்லை
கவிதை வாசிக்கும்
நண்பர்களே
குறுக்குவழி கேளுங்கள்
யாருமற்ற அறையில்
உங்கள் கண்ணீர்த்துளிகளைக்
கவிதைகள் மீது
பரவும்படி அழுங்கள்
கண்ணீர் நனைத்த
காகிதத்தில் இருந்து
சட்டென ஒரு கை
பொத்துக்கொண்டு வரும்
அதுதான்
கவிதை உங்களைக்
கண்டறிந்ததின் முதல்
அடையாளம்
அதுதான் தொடக்கம்
வாழ்நாள் முழுக்க
அது உங்களையே
பின் தொடரும்
கைவிட்டு விடாதீர்கள்....
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக