- முழுக்கவும் கற்பனையான உண்மை -
உண்மைகளை
உரக்க சொல்வது
பலரின்
உறக்கத்தைக் கெடுக்கும்
சமயங்களில்
சொன்னவரின் உயிரையும் குடிக்கும்
உயிர்ப்பிழைக்க
கண்டுவிட்ட உண்மைகளில்
சில சொட்டுகள்
கற்பனைகளைக் கலந்துவிட வேண்டும்
சொட்டு நீலம் போல
சொட்டு கற்பனைகள்
உண்மைகளை பார்ப்பதற்கு கூடுதல் அழகாக்கும்
உண்மைக்கும் கற்பனைக்கும்
இடையில் தோன்றும்
மெல்லிய கோட்டை
ஒருபோதும்
தெளிவுப்படுத்தக் கூடாது
தெளிவின்மைதான்
இங்கு பலரின்
முகங்களுக்கு உத்திரவாதம்
உலகின்
ரொம்பவும் அரியவகை
உயிரினம் கண்டுபிடிக்கப்பட்ட
மறுநாளே
நோய்த்தொற்றில்
அது சாவதும்
அதன் தோலும் நகமும் பல்லும்
வாலும் சதையும்
கள்ளச்சந்தையில் விற்பக்கடுவதும்
பல கோடி கொடுத்து
அது வாங்கப்படுவதும்
உண்மையில் கலந்த
எத்தனை சதவித கற்பனை
என
இங்கு யாருக்குமே அக்கறையில்லை..
0 comments:
கருத்துரையிடுக