- 2025-இன் நான்கிலொன்று -
2025-ஆம் ஆண்டின் சிறுபகுதியைக் கடந்துவிட்டோம். இந்த ஆண்டில் நமக்கு கொடுக்கப்பட்ட நாட்களில் நான்கில் ஒரு பகுதி முடிந்தது.
கடந்த மூன்று மாதங்களில் பல சிக்கல்களுக்கு மத்தியில் வழக்கம் போல வாசிக்கவும் முடிந்தது.
திட்டமிட்டபடி மாதம் ஒரு நாவலென மூன்றாவது நாவலையும் வாசித்து முடித்தேன். அதோடு நடுகல்.காமிற்கு எழுதும் மாதாந்திர தொடரான 'மாதம் ஒரு மலேசிய புத்தகத்திற்காக' மூன்று புத்தகங்களை வாசித்திருந்தேன். தொடர்ந்து இத்தொடருக்காக ஒன்பது புத்தகங்களை வாசிக்கவும் சிலவற்றை மீள்வாசிப்பு செய்யவும் வேண்டியுள்ளது.
இன்றையச் சூழலில் ஒரு வாசகனுக்கும் ஓர் எழுத்தாளனுக்கும் ஊக்கமும் உற்சாகமும் கொடுக்க கூடிய வார்த்தைகள் ரொம்பவும் முக்கியம். அதைவிட முக்கியம் முதற்கட்டமாக அந்த வார்த்தைகள் நம்மிடம் இருந்தே நமக்கு வரவேண்டும்.
என்னை நான் உற்சாகப்படுத்தும் இந்த நேரத்தில் நீங்களும் உற்சாகம் கொள்வீர்கள் என்பதற்காக இந்தப் பதிவில் இதுவரையில் வாசித்த புத்தகங்களைப் பகிர்கின்றேன். நீங்களும் இதுவரையில் வாசித்ததைப் பகிருங்கள். நம் இரு தரப்பிற்குமான உரையாடல் அதன் வழி தொடரட்டும்.
எனது இந்த பகிர்வில் ஒவ்வொரு புத்தகத்திற்கும் என் வாசிப்பையொட்டிய சிறு குறிப்பையும் சிலவரிகளில் எழுதுகிறேன்.
எனக்கு உதவியாகவும் உற்சாகமாகவும் அமைந்த, நான் வாசித்த நண்பர்களின் புத்தக அறிமுகம் போல எனது இச்சிறு குறிப்பும் ஏதாவது ஒரு வகையில் புத்தகங்களை நேசிக்கும் உங்களுக்கும் பயனாய் இருக்கும் என நம்புகின்றேன்.
மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்தில் வாசித்தவை:-
1. காதலின் நாற்பது விதிகள்.
- ரொம்பவும் பிடித்த நாவல்களில் இதுவும் அடங்கியது. நாவல் நகர்ந்த விதமும் நாவலுக்குள் நாவலாக விரிந்து சென்ற கதைகளும் கதாப்பத்திரங்களின் குரல்களும் வாசிப்பில் கவர்ந்தது. ரூமி என்னும் மகாகவி சமய போதகராக இருந்து கவிஞராக மாறும் மாற்றம் கவிதையாகச் சொல்லப்பட்டுள்ளது.
2. ஜின்களின் ஆசான்.
- வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கக்கூடிய கதை. சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட நாவல். துப்பறியும் பாணியில் ஒரு ஆன்மீக பயணம் என இதனைச் சொல்லலாம். ஜின் தேடி மனிதர்கள் போகிறார்கள். ஜின்களின் அரசனை சந்திக்கின்றார்கள். அதன் பின் நடந்தது என்ன என்பதை மீண்டும் நினைவுக்கூர்கிறது இந்நாவல்.
3. விசித்திரங்களின் புத்தகம்.
- காணாமல் போன நூலகரைத் தேடுவதில் தொடங்கிய கதை, மெல்ல மெல்ல அத்தேடல் அகத்தேடலாய் மாறி தனக்கான ஆன்மீக குருவைத் தேடும்படி பரிணமிக்கும் கதை. தன் ஆன்மீக பயணத்திற்கான சரியா குருவை நாயகன் கண்டடைந்தானா இல்லையா என்பது மீதிக்கதை.
இம்மூன்று நாவல்களையும் ரமீஸ் பிலாலி மொழிபெயர்த்துள்ளார். மூன்றுமே சூஃபி நாவல்கள் என்பது இந்த நாவல் வாசிப்பிற்கான என் உந்துதல். அடுத்த வாசிப்பிற்கான சில புத்தகங்களை இதன் அடிப்படையிலேயே தேர்வு செய்துள்ளேன்.
அடுத்ததாய்க் கவிதைகள்
4. யாருமற்ற நிழல் - தேவதச்சன்
5. என் ஓவியம் உங்கள் கண்காட்சி - கல்யாண்ஜி
6. வாழ்க்கைக்கு வெளியில் பேசுதல் - இசை
7. கடல் காற்று கங்குல் - மின்ஹா
8. நாங்கூழ் - முன்ஹா
9. தாகங்கொண்ட மீனொன்று - ரூமி (என்.சத்தியமூர்த்தியின் தமிழாக்கம்)
10. ரூமியின் வைரங்கள் - ரமீஸ் பிலாலியின் தமிழாக்கம்
இந்தக் கவிதைத் தொகுப்புகள் ஒவ்வொன்றுமே முக்கியமானவைதான். அதன் மொழிக்கும் அது சொல்ல எடுத்துக்கொண்ட கவிக்கும் அவை முக்கியத்துவம் பெறுகின்றன. தொடர்ந்து கவிதைகளை எழுதுகிறேன். இந்தக் கவிதைத் தொகுப்புகள் தனிப்பட்ட முறையும் எனக்கு உதவின. மூத்த படைப்பாளி இளம் படைப்பாளி மொழிபெயர்ப்பு என்ற மூன்று தரப்புகளில் இருந்து வாசித்த இந்தக் கவிதைகள் வாசிப்பின் இன்பத்தைக் கூட்டின.
அடுத்ததாய்க் கட்டுரைகள்/கதைகள்
11. கவிதை: இன்று முதல் அன்று வரை - வண்ணநிலவன்
- 20 தமிழ்க் கவிஞர்களின் கவிதை உலகைக் குறித்த அறிமுகமும் விமர்சனமும் அடங்கிய தொகுப்பு. சிலரை அறிமுகம் செய்தததோடு பல கவிஞர்களைப் புரிந்து கொள்ளவும் உதவியது.
12. என்றார் சூஃபி - ரமீஸ் பிலாலி
- சூஃபிசத்தைச் சொல்லும் குரு சிஷ்ய உரையாடலாக இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் எழுத்தாளர். ஒவ்வொன்றும் ஓரிரு பக்கங்களில் முடிந்து நம் சிந்தனையில் இன்னொரு பக்கத்தை எழுதிச்செல்கின்றன.
13. பண வாசம் - குரு மித்ரேஷிவா
- எது செல்வம், எப்படி அடைவது, அதனை அடைவதற்கான மனநிலை என்னவாக இருக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை கருத்துகளைச் சொல்லும் புத்தகம்.
அடுத்து 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' தொடருக்காக வாசித்தவை
14. ஆதி.இராஜகுமாரன் சிறுகதைகள்
- ஜனவரியில் இந்தப் புத்தகத்தில்தான் தொடரை தொடங்கினேன்.
15. அகப் பறவை - பூங்குழலி வீரன்
- எனக்கு பிடித்த மலேசிய கவிஞர்களில் ஒருவர்.
16. ஜீவானந்தன் சிறுகதைகள்
- தொடர்பு துறையிலும் எழுத்திலும் நான் என் முன்னோடிகளாக நினைப்பவர்களில் ஒருவர்.
17. பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது - பா.அ.சிவம்
- மொழிபெயர்ப்பு கவிதைகள்
- என்றும் நம் மனதைவிட்டு நீங்கா கவிஞர் பா.அ.சிவத்தின் எழுத்துகளுக்கு என் அன்பு
இந்த நான்கு மலேசிய புத்தகங்கள் குறித்த விரிவான அறிமுகத்தை நடுகல்.காமில் எழுதியுள்ளேன். நண்பர்கள் அங்கு சென்று வாசிக்கலாம்.
மார்ச் மாதம் வரை வாசித்த புத்தகங்கள் இவை. வாசிப்பில் எத்தனை புத்தகங்களை வாசிக்கின்றோம் என்பதை விட 'வாசிக்கிறோமா?' என்கிற கேள்விதான் முக்கியம் என நம்புகின்றவன் நான். தினம் ஒரு பக்கத்தை புரிந்து ரசித்து வாசித்தாலும் கூட நாம் வாசகர்கள்தான்.
இந்த ஆண்டின் முதல் பகுதியை முடித்து இரண்டாம் பகுதிக்குள் நுழைகின்றோம். அடுத்த மூன்று மாதங்களில் வாசிப்பின் ருசி என்னவாக அமைகிறது என பின்னர்தான் தெரியவரும். வாசிப்போம்.
உங்களுக்கு எப்போதும் என் அன்பு...
0 comments:
கருத்துரையிடுக