- என் வீட்டில் ஒரு டைனோசர் இருந்தது -
என் வயது
நண்பர்களை பார்ப்பதில்
எனக்கொரு பயம் இருக்கிறது
குறிப்பாக
அவர்கள் என்னுடன் படித்த
நண்பர்கள் என்றால்
ஒரு பீதியும் உடன்
வந்துவிடுகிறது
அவர்கள் பேச வேண்டிய
அவசியம் கூட தேவையில்லை
அவர்களைப் பார்த்தாலே
நான் நடுங்குகின்றேன்
நேற்று காலை
யாரோ யாரையோ
பெயர்ச் சொல்லி அழைத்தார்கள்
நான் ஆடிப்போய்விட்டேன்
அந்தப் பெயரின் ஆள்
அங்கில்லை
அது வேறு ஆள்
ஆனால் அந்தப் பெயர்
என் பால்ய நண்பனின்
பெயர்
என் அருகில் அமர்ந்திருந்தவன்
என் உணவில் பங்கு எடுத்தவன்
அவன் தண்ணீரில் என் தாகம் தீர்த்தவன்
ஒவ்வொரு முறை
பரிட்சையின் போதும்
மாற்றி மாற்றி காப்பியடித்து
மாட்டிக்கொள்வோம்
ஒருபோதும் பாஸ் ஆகியதில்லை
அவனும் நானும் சேர்ந்து
செய்த சாகசங்கள் அதிகம்
அவன் அதிகம் நம்பியது
என்னைத்தான்
நான் அதிகம் ஏமாற்றியது
அவனைத்தான்
அவனை மட்டுமல்ல
என் வகுப்பு நண்பர்கள்
எல்லோரையுமே நான்
ஏமாற்றியுள்ளேன்
என் வீட்டில் ஒரு
டைனோசர் இருப்பதாக
சொன்னதை அவர்கள்
நம்பாமல் இருந்திருக்கலாம்
தினம் என்னிடம்
டைனோசர் பற்றி இரகசியமாக
விசாரித்தார்கள்
அதன் குறும்புகளைச் சொல்ல
அவர்கள் இரசித்தார்கள்
தொல்லை தாங்காது
ஒருநாள்
டைனோசர் இறந்துவிட்டதாகச் சொல்லிவிட்டேன்
என்னைவிட அவர்கள்தான்
அதிகம் அழுதார்கள்
அதன் சமாதிக்கு அழைத்துப்போவதாய்ச்
சொல்லிச்சொல்லியே
வருடங்கள் நகர்ந்து
நாங்களும் நகர்ந்து
வளர்ந்தும் விட்டோம்
இன்றுவரை அந்தப் பொய்
என்னைத் துரத்திக்கொண்டே இருக்கிறது
என்றாவது ஒருநாள்
நாங்கள் சந்திப்போம்
அவர்கள் விசாரிப்பார்கள்
நான் மாட்டிக்கொள்வேன்
டைனோசர் அளவிற்கு
ஒரு சமாதியை நான்
இதுவரையில் கண்டதில்லை
நிச்சயம் நான்
மாட்டிக்கொள்ளத்தான் போகிறேன
0 comments:
கருத்துரையிடுக