- பரிதாப பரிசுகள் -
ரொம்பவும் பழைய
புத்தக அலமாரியில்
பழைய புத்தகத்தில்
அதைவிட பழையதாய்
ஒரு மயிலிறகு இருக்கிறது
அது மட்டும்
இன்னமும் புதியதாகவே சிரிக்கிறது
பிடித்தவர்கள் கொடுக்கும்
எந்தப் பொருளும்
பழசாவதில்லை
அது சுமக்கும்
நினைவுகளுக்கும் வயசாவதில்லை
பார்க்கும் போதும்
கையில் எடுக்கும் போதும்
நினைக்கும் போதும்
நெஞ்சோடு அணைக்கும் போதும்
தன்னைத்தானே
புதுப்பித்துக்கொள்ளும்
சூட்சுமம் தெரிந்தவை
அவை
அமர்ந்தபடி ஆகாயம் தொடவும்
நடந்தபடி காற்றாடி போலவும்
நம்மையும் அவை
மாற்றிவிடுகின்றன
பிடித்தவர்கள் கொடுக்கும்
பரிசுகள் போல
பிடித்தவர்கள் எப்பவும்
அப்படியே இருப்பதில்லை
சிலர் கொடுத்ததை
திரும்ப கேட்கிறார்கள்
சிலர் கொடுத்ததை
பிடுங்கி கொள்கிறார்கள்
சிலர் கொடுத்ததை
கண்முன்னே சிதைத்து வைக்கிறார்கள்
சிலர் நம்முடனே
அதனையும் வெறுத்துவிடுகிறார்கள்
ஆழக்குழியில்
நம்மை
புதைத்து விடுகிறார்கள்
அதன் மேல் அமர்ந்தபடி
கண்ணீர் சிந்துகிறார்கள்
சிந்தியக் கண்ணீரில் நாமும்
ஈரமாகிறோம்
நமக்கே நாம் பாரமாகிறோம்
உடைந்துகிடக்கும்
பரிசுகள் கொடுக்கும்
ஆறுதல்கூட அருகில்
இருந்தும் அவர்கள்
தருவதில்லை
அன்றொருநாள்
யாரோ
யாருக்கோ
கொடுத்த கரடி பொம்மையை
யாரோ கொளுத்திவிட்டார்கள்
அது எரிந்த போது
அழுத குரல்
இன்னமும் எனக்கு கேட்கத்தான் செய்கிறது
0 comments:
கருத்துரையிடுக