- எழுத முடிந்தவனுக்கு -
இன்னும் எவ்வளவு
எழுதலாம்
இன்னும் எத்தனை
எழுதலாம்
இன்னும் எதுவரை
எழுதலாம்
தொடங்கிய எதையும்
முடிக்கத்தான் வேண்டும்
முடிவை நோக்கியதுததானே
நம் பயணம்
எது முடிவென்பதை
எவரால் கணிக்க இயலும்
நூற்றாண்டு கனவுகளும்
நூலிழையில் கரைந்திடுகின்றன
தோன்றாத கனவொன்றோ
உச்சத்தில் ஒருவனை
சேர்க்கிறது
யார் கனவை
யாரின் கண்ணீரை
எவரொருவர் அறிவார்
ஆடிய கால்களும்
பாடிய வாய்களும்
தங்களுக்கென ஓர்
ஆயுளை
எங்கோ ஓரிடத்தில்
அடைகாத்து வருகின்றன
எந்த உஷ்ணம்
அதை வெடிக்கச்செய்யுமென
யாரால் அறிவிக்க முடியும்
இன்னும் எவ்வளவு
எழுதலாம்
இன்னும் எத்தனை
எழுதலாம்
இன்னும் எதுவரை
எழுதலாம்
எல்லாவற்றுக்கும் எல்லை
என்பதொன்று இருக்கும்தான்
நாம் எழுதுவதற்கு
எது எல்லை
நம்மால் எழுத முடிந்தவரை
எப்போதுமில்லை அவ்வெல்லை
0 comments:
கருத்துரையிடுக