- நினைவுக்குமிழி -
நினைவுகளின் குழி
சிலருக்கு செதுக்கப்படுகிறது
சிலருக்கு புதைமண்ணாய் ஆழம் போகிறது
கையளவு தண்ணீராய்ச் சிலர்
முகம் கழுவுகிறார்கள்
கடலளவு தண்ணீராய்ச் சிலர்
தத்தளித்து சாகிறார்கள்
நினைவுகளை அழிப்பதற்கு
அறிவியலில் இடமுண்டா
மீண்டும் ஒருநாள்
ஆசைக்காய் அதை
நினைத்துப்பார்க்க வழியுண்டா
நினைவுகள் இல்லாமல்
நீயும் நானும்
என்ன செய்யப்போகிறோம்
நினைத்து நினைத்து
அழுவதற்கும்
நினைத்த நேரத்தில்
சிரிப்பதற்கும்
தனித்தனியாய் நினைவுகளை
சேகரிக்க முடியுமென்றால்
எவ்வளவு வசதி
அட்டவணை போட்டு
அழுது கொள்ளலாம்
அலட்டிகொள்ளாமல்
தினமும் சிரிக்கலாம்
நினைவுகளில் சுமை
நம்மை மண்ணில் புதைக்கிறது
நினைவுகளின் சுகம்
நம்மை விண்ணில் செலுத்துகிறது
நினைவுக்குமிழிகள்
வெடிக்கும் போது
காற்றோடு நம்
மூச்சையும்தான் எடுத்துவிடுகின்றன
மறதிக்கென மருந்து
எந்தக் கடையில் கிடைக்கும்
வாங்களேன் நாம்
வாசலிலேயே காத்திருக்கலாம்
0 comments:
கருத்துரையிடுக