பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 30, 2020

நானும் என் குறுங்கதைகளும் 1


தொடர்ந்து #குறுங்கதை கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். அறிந்திருப்பீர்கள். ஒவ்வொரு முறை எழுதும் போதும் புதிதான ஒன்றை முயல்வதாகவே நினைத்து எழுதுகிறேன். 

குறுங்கதைகளை வாசித்து பலரும் அவர்களின் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். இன்னும் சிலர் அவர்கள் வாழ்வில் நடந்தவற்றை பகிர்ந்துக் கொள்கிறார்கள். 

"இதிலிருந்து உங்களுக்கு கதை கிடைக்குதான்னு பாருங்க..?" என்றுதான் தொடங்குவார்கள். உண்மையில் அப்படி அவர்கள் சொல்லா விட்டாலும் அதிலிந்து எப்படியாவது கதையை உருவி எடுத்து விடுகிறேன். 

சமயங்களில் அவர்களுக்கு தெரியாமல் எடுத்த கதைகளை அவர்கள் குறுங்கதைகளாக வாசிக்கும் போது, அவர்கள் சொல்லாத உண்மை அதில் இருப்பதை கண்டு முழு கதையையும் ந்
சொல்லியிருக்கிறார்கள். சிலர் இப்படி நடந்திருந்தால் நிம்மதியாக இருந்திருப்பேன் என்கிறார்கள். 

எனக்கும் என் எதிரில் இருக்கும் மனிதருக்குமான பகடையாட்டம்தான் இந்த கதைகள். சமயங்கள் அவர்களாகவே என் கதைகளுக்காக காய்களை உருட்டிக் கொடுத்துவிடுகிறார்கள். அவர்கள் நன்றிக்குரியவர்கள்.



சமீபத்தில் நான் எழுதிய #குறுங்கதை களின் ஒன்றான 'ஆவியுடன் பேசுவது எப்படி..?' என்ற குறுங்கதையை, ஆசிரியை ஒருவர் தன் மாணவர்களுக்கு சொல்லி அதிலிருந்து அவர்களுக்கான கதையை எடுத்துச் சொல்லியிள்ளார்.

இது குறித்து அவர் பகிர்ந்திருந்த புலனச்செய்தி எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதனை உங்களிடம் பகிர்வதில் அம்மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். 

அவ்வபோது #குறுங்கதை களுக்கு வாசகர்கள் பகிரும் இது போன்ற கருத்துகளை பகிரலாம் என நினைக்கிறேன்.

தொடர்ந்து வாசித்து கருத்துகளைப் பகிர்ந்துவரும் உங்களுக்கு என் அன்பும் நன்றியும்....

- தயாஜி

அது மட்டும் அல்ல...


     இயல்பாகவே உயரம் என்றால் பயம். ஏணியில் ஏறி நின்றாலும் கூட கொஞ்ச நேரத்தில் கால்கள் கதகளி ஆட ஆரம்பித்து விடும். நான் மட்டும் எப்படி சும்மா இருப்பது என்று இடுப்பும் அது பாட்டுக்கு ஒரு ஆட்டதை ஆடிக்காட்டும்.

   இன்னும் சொல்லப்போனால் தைரியமாக எறிவிடலாம். ஆனால் இறங்குவது என்பது , அதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. எதையாவது அல்லது யாரையாவது பிடித்துக் கொண்டுதான் இறங்க முடியும்.
உயரமாக இருப்பதால் மற்றவரை விட குறைவான ஏணிப்படியையே ஏறி சமாளித்து விடுவேன். ஆனால் உயரமான வேலை என்றால் துயரமான அதனைக் கடந்து ஏற வேண்டி வந்துவிடுகிறது.

   இந்த ஃபேபியா போதாதென்று தலையில் அடிபட்ட பின்பு, முதல் இரண்டு ஏணிப்படிகள் ஏறினாலே மயக்கம் வந்து கண்கள் இருட்டாகிவிடுகின்றன. கொஞ்சம் உயரம் என்றாலும் ஏதோ செய்கிறது.
ஆனாலும் அவ்வபோது அந்த இருண்டுவிடும் கண்களையும் மயக்கம் வரும் மண்டையையும் விளையாட்டாக அனுபவிக்கத் தோன்றும். வலித்த நினைவுகளை வழிந்து நினைத்து அழுவது போலதான். அதில் ஒரு சுவாரஷ்யம் இருக்கிறதே.

    இன்றும் அப்படி பத்தாவது மாடியில் இருந்து எட்டிப் பார்க்கத் தோன்றியது. வீட்டில் யாரும் கவனிக்கவில்லை. மெல்ல பால்கனி கதவை திறந்து வெளியேறினேன்.

    தலை வலிக்கத் தொடங்கியது. கால்கள் நடுங்கி கண்கள் இருண்டன. கையில் கம்பியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன். கண்கள் முழுவதுமாக இருட்டாவதற்குள் வானத்தைப் பார்த்துவிட முயன்றேன்.

   
  கீழே இருந்த பல விளக்கொளிகளைவிட வானில் இருந்த ஒற்றை நிலவொளி அத்தனை நிம்மதியைக் கொடுத்தது. இன்னொரு கையில் படமெடுக்க முயன்றேன். மங்கலாக விழுந்த சில படங்களில் ஒன்று மட்டும் பார்ப்பது ஏற்றதாய் இருந்தது.

     ஆனால் நான் பார்த்தது அந்த நிலவின் ஒளியை மட்டுமல்ல என்பது என் ஒருவனுக்குத்தானே தெரியும்....

#தயாஜி

ஜூலை 28, 2020

அன்புள்ள அக்காவிற்கு...

அக்கா..... 
    நீங்கள் இந்த கடிதத்தை வாசிக்கும் போது நான் இங்கிருக்க மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். உங்களைப் போன்ற சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களைப் பார்ப்பது கடினம். என்னைப் போன்ற பல பெண்களுக்கு நீங்கள் ஓர் உதாரணம். எத்தனையோ பெண்கள் உங்களால் நல்வாழ்வு வாழ ஆரம்பித்துள்ளார்கள்.

   உங்களைச் சந்திக்காமல் இருந்திருந்தால் நான் எப்படி எப்படியோ போயிருப்பேன். திக்கற்று கிடந்த எனக்கு நீங்கள் மறுவாழ்வு கொடுத்தீர்கள். உங்களை என் தெய்வமாகவேப் பார்க்கிறேன். எனக்கு மறுவாழ்வு தந்ததோடு எனக்கு உங்கள் வீட்டிலேயே அடைக்களம் கொடுத்தீர்கள். அங்கு நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.

    ஆனால் உங்கள் முகத்தைப் பார்க்காமல் செல்கிறேன். அதற்காக என்னை மன்னியுங்கள். குழந்தை இல்லாத உங்கள் வீட்டில் நீங்கள் என்னை கவனித்த விதத்தை எப்போதும் நான் மறக்க மாட்டேன். 

    என் இளம் வயதில் நான் தேர்ந்தெடுத்த வழி என் வாழ்நாளை அப்படியே புரட்டிப் போட்டது. தெய்வமே வருவது போலதான் நீங்கள் வந்தீர்கள்.

   உங்கள் குடும்பத்தில் நானும் ஒருத்தியானேன். நீங்கள் என்னை முழுமையாக நம்பினீர்கள். அது எப்படி அக்கா உங்களால் முடிந்தது. அதற்கு நான் தகுதியானவள் தானா.? ஆனால் நீங்கள் வைத்த அந்த நம்பிக்கைதான் என்மீது எனக்கே ஒரு மரியாதையைக் கொடுத்தது.

    என் வாழ்நாள் முழுக்க நான் உங்களுக்கு நன்றியோடு இருப்பேன். அந்த நன்றியை நான்  சுமந்தப்படியேதான் போகிறேன். போகத்தான் வேண்டும். 

   கடைசியாக உங்களிடம் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்; அக்கா உங்கள் கணவரையும் கவனித்துக் கொள்ளுங்கள். 

#தயாஜி

ஜூலை 26, 2020

ராமனும் கிருஷ்ணனும்



   இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. இன்றுதான் பிறந்தகம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. விமான நிலையத்தில் இருந்தே நேராக ராமனைப் பார்ப்பதற்காகத்தான் சென்றுக் கொண்டிருந்தான் கிருஷ்ணன். இவர்கள் இருவருக்கும் எப்படி இந்த பொருத்தமான பெயர் அமைந்தது என வியக்காதவர்கள் இல்லை. 

    இவர்கள் பழகியது என்னவோ ஒரு வருடம்தான். ஆனால் அவர்களின் நட்பு அவர்களின் பெயருக்கு ஏற்றார் போல அத்தனை நெருக்கமாக இருக்கிறது. 

   தற்கொலைக்கு முயன்ற தருணத்தில்தான் கிருஷ்ணன், ராமனைக் காண நேர்ந்தது. அவனது கண்களில் இருந்த தீர்க்கமும் அன்பும் கிருஷ்ணனுக்கு தன் வாழ்க்கையின் மீது  பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. அதன் பிறகு அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். 

    கிருஷ்ணன் தன் மீது கொண்ட தீரா அன்பின் காரணத்தால் அவனை சிலர் தவறாக பேசினார்கள். ராமனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் போல தோன்றியது. உடனே கிருஷ்ணனுக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கிக் கொடுத்தான். இரண்டு மாத பிரிவு என்றாலும் இருவரும் நொடிக்கு நொடி தொலைபேசியில் பேசிக் கொண்டும் முகத்தைப் பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். இருவருக்குள்ளும் எந்த ஒளிவுமறைவும் இல்லை. 

   இன்று, ராமனைக் கண்டதும் கிருஷ்ணனுக்கு கண்கள் கலங்கிவிட்டன. தன் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த முகம் அல்லவா அது. ராமனுக்கும் அவ்வாறுதான். இப்படியொரு அப்பழுக்கற்ற நட்பை காண்பது அறிதுதானே.

    அப்போழுதுதான் அவளும் ராமன் அருகில் வந்து நின்றாள். ராமன், தான்  அவளைத்தான் திருமணம் செய்யவிருப்பதாக ஏதோ பெயரைச் சொல்லி அறிமுகம் செய்தான். 

    இருவரையும் வாழ்த்திவிட்டு வேறெதையும் பேசாது கிளம்பினான் கிருஷ்ணன்.

     இரவு. வீடு. கதவு. அறை. அங்கு கிருஷ்ணன் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறான். அவனால் இன்னொரு இழப்பை தாங்க முடியவில்லை போலும்....


#தயாஜி

ஜூலை 25, 2020

ஆவிகளுடன் பேசுவது எப்படி ?



    இது விளையாட்டல்ல. முதலில் உங்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். நம்மை மீறிய ஏதோ ஒன்று இருப்பதை நம்ப வேண்டும். அல்லது இருப்பதாக நம்ப வேண்டும். அதுதான் நாம் செய்யவிருக்கும் காரியத்திற்கான முதல் வேலை.

      நெகட்டிவ் பாசிட்டிவ் போல எல்லா இடத்திலும் இரண்டு தரப்புகள் இருக்கின்றன. ஒன்று தூய சக்தி இன்னொன்று தீய சக்தி. அந்த இரு வித சக்திகளிலும் பல்வேறு நிலைபாடுகள் உள்ளன. ஆனால் நமக்கு அவை தேவையற்றவை.

   ஆவியுடன் பேசுவதற்கான அடிப்படைகளின் மூலத்தை சொல்லி விட்டேன். மேற்கொண்டு செய்ய வேண்டியவைக்கு வரலாம்.

   உங்களுக்கு நன்கு பழக்கமான ஒருவரின் புகைப்படத்தையும் பெயரையும் ஏற்பாடு செய்துக் கொள்ளுங்கள். மறந்துவிட்டேன்! அவர் செத்துப் போயிருக்க வேண்டும். அதற்காகவே ஒரு கொலையை செய்துவிட்டு என்னை போலீஸீல் கோர்த்து விட்டுவிடாதீர்கள். 

   முக்கியமாக செத்துப்போனவர் நல்லவராக இருக்கவேண்டும். அது சிக்கல் இருக்காது. நல்லவர்களைத்தாம் சீக்கிரம் கொன்றுவிடுவார்களே..

    நள்ளிரவு 12.00க்கு சரியாக இருட்டறையில் அமர வேண்டும். மெழுகுவர்த்தி இருக்க வேண்டும். பிடித்தமான வாசனையுள்ள ஊதுபத்தி இருக்க வேண்டும். எடுத்து வைத்திருந்த இறந்தவரின் புகைப்படம் இருக்க வேண்டும். அதன் கீழ் வெள்ளைக் காகிதத்தில் சிவப்பு வண்ணத்தில் அவரின் பெயரை எழுதிக் கொள்ளுங்கள். இப்பொழுது கண்களை மூடிக் கொள்ளுங்கள் (உடனே அல்ல.!! முழுக்க வாசித்து முடித்த பின்). ஆழ்ந்து மூச்சை இழுத்து விடவும். மெல்ல விட வேண்டும். அவசரப்பட்டு முழுக்கவும் விட்டுவிடாதீர்கள். அப்பறம் உங்கள் புகைப்படம் இன்னொருவருக்கு தேவைப்பட்டுவிடும்.

      எழுதி வைத்த பெயரை மெல்ல மெல்ல சொல்ல வேண்டும். அப்படியே கண்களை மூடிக்கொள்ள வேண்டும். விடாது அந்த பெயரைச் சொல்ல வேண்டும். அறை முழுக்க அந்த பெயர் நிறைய வேண்டும். உங்கள் உடல் தானாக சிலிர்க்கத் தொடங்கும். மெல்ல உங்கள் கைகளில் அதிர்வு ஏற்படும். நீங்கள் கூப்பிட்ட ஆவி உங்கள் முன் வந்துவிட்டதற்கான அறிகுறி இதுதான்.

   கண்களைத் திறக்க வேண்டும். இப்போது உங்கள் முன் ஒரு வெண்மேகம் வடிவில் ஓர் உருவம் தெரியும். அதன் ஒளி உங்கள் கண்களைக் கலங்கச் செய்யும். அதுதான் நாம் பேச அழைத்த ஆவி என அறிக. அதன் பிறகு நீங்கள் ஆவியுடன் பேச ஆரம்பிக்கலாம்.

   ஒரு வேளை அப்படி ஏதும் நடக்கவில்லை என்றாலோ ஆவி வரவில்லை என்றாலோ கவலை வேண்டாம். எனக்கும் வரவில்லைதான். இருவரும் சேர்ந்து இன்னொரு முறை முயற்சிக்கலாம்.


#தயாஜி

ஜூலை 21, 2020

நானே இன்னும்...


   "இவன் பண்ணிருக்கற காரியத்துக்கு இவனை அடிக்காம என்ன செய்ய சொல்றீங்க...?"

 "..."

 "நீங்க ஒன்னு.. இவன் பண்ண காரியத்துக்கு இவனை...."

"..."

   "என்ன பேசறீங்க நீங்க....??என்ன பேசறீங்க...? எப்படி விட முடியும்..? இன்னிக்கு இவனை அடிக்கற அடில....."

"..."

   "நானா இருக்கிறதால அடிச்சிகிட்டு இருக்கேன்.. வேற யாரும் இருந்தா இந்நேரத்துக்கு இவனை கொலையே செய்திருப்பாங்க...."

"..."

   "விடுங்க.... என்னைய தடுக்காதீங்க.. இவனோட கை காலை ஒடிச்சாதா எனக்கு நிம்மதி... இவன் பண்ணிருக்கற காரியத்துக்கு...."

"..."

  "பின்ன என்னங்க பின்ன... மொளைச்சி மூனு இல கூட வரல.. இவனை..."

"..."

 "என்னைய தடுக்காதீங்க... இன்னையோட இவன் கண்ணை நோண்டிடறேன்..."

"..."

   "என்ன காரியம் பார்த்திருக்கான் தெரியுமா இவ...."

"..."

   "அட இருங்க நாலு அடி அடிச்சிக்கிறேன்..."

"..."

  "என்ன காரியம் தெரியுமா செஞ்சிருக்கான்...? என் மச்சினிச்சி குளிக்கறத வேடிக்கை பார்த்திருக்காங்க..."

"..."

 "ஏது..! சின்னப்பையன் மன்னிச்சிடனுமா..?"

"..."

  "எப்படிங்க இவனையெல்லாம் மன்னிக்கிறது... அவள நானே இன்னும் பாக்கல தெரியுமா......?"

"!!!"


#தயாஜி

ஜூலை 14, 2020

WWW.செய்வினை.COM


    மார்க்கெட் சென்று வந்தவன் தூங்குகிறான்.  அதிகாலை நான்கு மணிக்கே எழுப்பி விட்டிருந்தாள். இதோடு பத்து மணி வரை தூங்கலாம். தொந்தரவு செய்ய மாட்டாள். சமைப்பதற்கு முன் வாசலை கூட்டிப் பெருக்கும் பழக்கம் அவளுக்கு உண்டு. பிறகு சமைத்துவிட்டு கணவனை எழுப்புவாள். அதன் பிறகு மத்தியானம் வரை அவள் தூங்குவாள்.

    வாசல் விளக்கை போட்டாள். கதவைத் திறந்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. என்னமோ ஒன்று ரத்தத்தில் நனைந்து கிடக்கிறது. எலியோ? இல்லை ! வேறு என்னவாக இருக்கும். மெல்ல அதன் அருகில் வருகிறாள்.

     கோழியின் தலை. அதிலிருந்து ரத்தம் வழிந்திருந்தது. அதன் கண்கள் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தன. ஐயய்யோ!!
எவளோ செய்வினை வச்சிட்டா... !அப்படியே மனதார மாரியாத்தாவையும் காளியாத்தாவையும் கூம்பிட்டாள். 

    உடனடியாக அந்த கும்பகர்ணனை எழுப்பி எதாவது செய்ய வேண்டும். உள்ளே ஓடத்தொடங்கினாள். அவசரத்தில் கால், வாசல் படியில் இடித்து விட்டது. உயிர் வலி போனது. குழம்பியிருக்கிறாள். அவள் சொல்ல நினைத்தது, வலி உயிர் போனது. அந்த உயிரை அதிக தூரம் போகாதவாறு பிடித்து இழுத்துக் கொண்டாள். கால் சுண்டு விரலில் ரத்தம் வழியத் தொடங்கியது.  உலகத்திலேயே வைத்த செய்வினை  உடனே வேலை செய்தது இதுவாகத்தான் இருக்கும். 

     கணவனின் முகத்தைப் பார்ப்பதற்கு முன் பல முகங்கள் அவள் முன் வந்துச் சென்றன. 

ராசாத்தி - போன வாரம் சண்டை போட்டிருந்தாள்..

கல்யாணி - ரெண்டு நாள் முன்னாடி சண்டை போட்டிருந்தாள்.

காயத்ரி - நேற்று சண்டை போட்டாள்

பங்கஜம் - நாளைக்கான சண்டையை இனிமேல்தான் யோசிப்பாள்.

    இதில் யாராவதுதான் செய்வினை வைத்திருக்க வேண்டும். அந்த செய்வினைக்கு இன்றோடு ஒரு செயல்பாட்டு வினையை வைத்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டாள். 

    அடித்து எழுப்ப, கணவனும் அடி வாங்கி எழுந்து உட்கார்ந்தான். விபரத்தைச் சொன்னாள். அரை தூக்கத்தில் கணவன் தலையில் அடித்துக் கொண்டான். காலையில் மார்க்கேட்டில், தான் வாங்கி வந்திருந்த வெட்டப்பட்ட கோழியில் இருந்து தலை தவறி வாசலில்  விழுந்திருக்கும் என்று சொன்னான்.

    இப்போதுதான் அவளுக்கு நிம்மதி. கணவனை தூங்கச் சொன்னாள். இயல்பு நிலைக்கு திரும்புகிறாள்.

   ஆனால் இன்று அவளது கணவன் கோழி இறைச்சியை வாங்கவே இல்லை என்ற தகவல் எனக்கும் இப்பொழுது உங்களுக்கும் மட்டும் தெரியும்.

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்