பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 26, 2026

அடிக்கடி சந்திக்கலாம்...


இன்று இலக்கிய நண்பர்களான பெரிய அண்ணன் பில்மோர் பாலசேனாவையும் சின்ன அண்ணன் ஏடம் அசுவினியையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வழக்கமாய் நண்பர்களைச் சந்திக்கும் உணவகத்தில் சந்தித்து பேசினோம்.

பில்மோர் பாலசேனாவை எனக்கு முன்னமே தெரியும். இப்படி சொல்கிறேன்; என்னை சின்ன வயதில் இருந்து அவருக்கு தெரியும். அட இப்போதும் கூட எனக்கு சின்ன வயதுதானே.

ஏடம் அசுவினியை அவ்வப்போது இலக்கிய நிகழ்ச்சிகளில் சந்தித்து "உள்ளேன் ஐயா வணக்கம் ஐயா..." என்பது போல பேசியிருந்தேன். முகநூலில் இருப்பது அவர்தான் என தெரிந்த பின் கூடுதலாக சில வார்த்தைகள் பேச தொடங்கி கேலி கிண்டல் வரை பழகினோம்.

அவரது குறுங்கதைகளை இதழ்களிலும் முகநூலிலும் வாசித்திருக்கிறேன். எழுதுவதோடு மலேசியத் தமிழ் ஆர்வலர் நற்பணி களத்தையும் நண்பர்களுடன் இணைத்து நடத்தி வருகின்றார். அடுத்த முறை அவர்களின் நற்பணி களகத்தை குறித்து எழுதுகிறேன்.

எங்களின் உரையாடல் எங்கெங்கோ சென்று பின்னர் இலக்கியத்திற்கு வந்தது. நாங்கள் வாசித்ததைப் பேசினோம். இன்றைய சூழலில் வாசிப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பேசினோம். மலேசிய மூத்த எழுத்தாளர்கள், மறந்த புத்தகங்கள் என எனது அடுத்தடுத்த கட்டுரைகளுக்கானத் தகவல்களையும் அவர்களிடமிருந்து பெற்று கொண்டேன்.

பல ஆண்டுகளாக தேடி கிடைக்காத புத்தகம் ஒன்றை அண்ணன் பில்மோர் பாலசேனா வைத்திருப்பதாகச் சொன்னார். எனக்கு உள்ளம் பூரித்து விட்டது. இந்தச் சந்திப்பைச் சாத்தியப்படித்திய அண்ணன் ஏடம் அசுவினியின் கையைப் பிடித்து நன்றியைத் தெரிவித்து கொண்டேன். அப்படியென்ன புத்தகன் அதுவென அதற்கான வாசிப்பனுபவத்தை எழுதும் போது சொல்கிறேன்.


இன்றைய சந்திப்பில் எனது வேலை, புத்தக விற்பனையோடு மருத்துவமனை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டேன். அண்ணன் பில்மோர் பாலசேனாவும் அவரது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதை அவர் சிறுகதையாக எழுதியிருந்ததையும் சொன்னார். அதோடு அவர் வெளியிட்ட அவரது புத்தகத்தோடு அடுத்த சந்திப்பை ஏற்பாடு செய்யலாம் என்றபடி இன்றைய சந்திப்பை நிறைவு செய்தோம்.

இனி அடிக்கடி சந்திக்கலாம்..... 

ஜூலை 23, 2026

புத்தகச்சிறகுகள் - தொடர் 20


நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 20' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் தொடரில்  எழுத்தாளர் மனோகரன் கிருஷ்ணனின் 'நாகம்மாளின் மனக்குறிப்புகள்' சிறுகதைத் தொகுப்பு குறித்து எழுதியுள்ளேன். எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. 

கட்டுரையின்  இரண்டாம் இந்த வாரத் தொடரில் இடம்பெற்றுள்ளது.

மேலும் ஒரு புத்தகத்தோடு அடுத்த வாரம் வருகிறேன்.

எனது இந்த வாராந்திர தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும். 

அடுத்த வாரம் மேலும் ஒரு மலேசிய புத்தகத்தோடு வருகிறேன்.

அன்புடன் 
#தயாஜி  
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

- நண்பர்களுக்கு இன்று விடுமுறை -

 

            முதல் நாள் வேலை அதிகமாக இருந்ததால், மீண்டும் இடுப்பில் வலி வந்துவிட்டது. இரவு உறக்கமின்றி ரொம்பவும் சிரமப்பட வேண்டியதாய்ப் போயிற்று. பொருட்களை டெலிவரி செய்யும் போது சில சமயங்களில் அந்தந்தப் பொருட்களை நாமே தூக்கி கொண்டு படியேறும்படியும் குறிப்பிட இடம் வரை கையில் தூக்கிக் கொண்டே நடக்கும் படியும் ஆகிவிடும்.

பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு இது தெரியும். பொருட்களை இப்படி தூக்கி  வரும்படி இருந்தாலும் மாடிக்கு கொண்டு வரவேண்டும் என்பதாக இருந்தாலும் கூடுதலாக பணம் செலுத்துவார்கள். ஏறக்குறை இரண்டு வெள்ளியில் இருந்து மூன்று வெள்ளி வரை கூடுதலாக நமக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. சில வாடிக்கையாளர்களுக்கு இது தெரிந்திருந்தாலும் அவர்களின் ஒரு வெள்ளி இரண்டு வெள்ளியை மிச்சப்படுத்தி டெலிவரியில் எதையும் குறிப்பிட மாட்டார்கள். பொருட்களை அவர்கள் தரும் முகவரிக்கு கொண்டு சென்றதும்தான் நம்மிடம் பொருளை தூக்கி கொண்டு வரும் வேலையையோ படியேறுவதையோ சொல்லுவார்கள்.

அப்படி சொல்லும் போது, அதற்கு அவர்கள் டெலிவரி அப்லிகேஷனில் சொல்லியிருக்க வேண்டும். அப்போதுதான் எங்களால் அப்படி கொண்டு வரமுடியும். ஏனெனில் இவர்கள் கொடுக்கும் கட்டணத்தில் இப்படி பொருட்களை தூக்கி கொண்டு மாடிக்கு ஏறி வருவதெல்லாம் சேர்க்கவில்லை என குறிப்பிடுவோம்.

சிலர் தங்களின் தவறுகளை புரிந்து கொள்வார்கள் இன்னும்  சிலர் அப்போது கையில் இரண்டு வெள்ளியைத் திணிப்பார்கள். இன்னும் இலர் இருக்கின்றார்கள், தங்களின் தவறை மறைக்கவோ தங்களின் சாமார்த்தியத்தை காட்டுவதாகவோ நாங்கள் வழங்கிய சேவைக்கு கொடுக்க வேண்டிய 5 ஸ்டார்களுக்கு பதிலாக ஒரு ஸ்டாரையும் கொடுத்து எங்களின் வேலை சரியாக இல்லை என்கிற குறையையும் அப்லிகேஷனின் எழுதிவிடுவார்கள். அப்படி எழுதிவிட்டால் எங்களுக்கு அடுத்தடுத்த வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அதனால் எங்களுக்கு பாதிநாள் வரை வாடிக்கையாளர்கள் கிடைக்காமல் அள்ளாடுவோம்.

எதற்கு இந்த வம்பு என்று, சொன்னதை செய்துவிடுவோம். வேறேன்ன செய்ய முடியும் எங்களால். வாடிக்கையாளர்களாக நீங்கள்  வரும்போது உங்களால் முடிந்த எதையாவது எங்களுக்கு செய்யுங்கள்.

நேற்றைய டெலிவரியிலும் அப்படியான அனுபவம் எனக்கு கிடைத்தது. அதுபற்றி இன்னொரு நாள் சொல்கிறேன்.

சில பாரமான பெட்டிகளை டெலிவரி செய்யும் வேலை வந்தது. தூக்கியும் இறக்கியும் செய்த வேலை போதாதென்று  மழையும் வந்திருந்தது. ஈரமான தரையில் பாரமான பெட்டியுடன் நடக்கும் போது வலது கால் முன்னே இழுத்து தடுமாற்றம் ஏற்பட்டது. சட்டென என்னையறியாமலேயே என் உடல் இயந்திரத்தனாம பாதுகாப்பு கவசமாக ஏதேதோ அசைவுகளைச் செய்தது. என்னைப் பாதுகாப்பதாக நினைத்து ஏற்கனவே கொஞ்சமாய் இருந்த இடுப்பு வலியை இரட்டிப்பாக்கிவிட்டது.

வலி தாங்காமல் வீட்டிற்கு செல்லலாம் என்றால் முடியாது. இன்றைய சம்பாத்தியம் போதவில்லை. குறைந்தது மூன்று டெலிவரிகளையாவது செய்ய வேண்டும் அப்போதுதான் பட்ஜெட் போட்டபடி சமாளிக்க முடியும். அதோடு இரண்டு நாளில் அடகு கடை நகைக்கு பணம் கட்ட வேண்டியுள்ளது.

உடனே ஒரு ஆடர் வந்தது. காருக்கு தேவையான உதிரி பாகங்களைக் கொண்டு போக வேண்டும். 21 கிலோமீட்டர்தான் ஆனால் மழையாக இருப்பதால் நாற்பத்து ஐந்து நிமிடங்கள் வரை காட்டியது கைப்பேசி. அது டோல் இருக்கும் பாதை. இரண்டு வெள்ளி கட்ட வேண்டும். கஸ்டமரை அழைத்து டோல் குறித்து பேசினேன். சரி என்றார்கள். பொருளை எடுத்துக் கொண்டு ஏறக்குறைய ஒரு மணி நேரத்தில் அந்த இடத்தை அடைந்தேன்.

தமிழரின்  கார் பழுது பார்க்கும் கடை. நடுத்தர வயதில் ஒருவர் காரை பழுது பார்த்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று பொருட்களைக் கொடுத்தேன். “வழியில் ரொம்ப மழையா என்றார்..?” ஆமாம் என்று டெலிவரி கட்டணத்தில் டோல் பணத்தையும் சேர்த்து கொள்ளும்படியும் சொன்னேன். ஆம் என்றவர், தூரத்தில் இருக்கும் மகனை அழைத்து எனக்கான பணத்தைக் கொடுக்கச் சொன்னார்.

அங்கிருந்த மகன் வந்தார். நேரடியாக என் வங்கியில் பணம் செலுத்துவதாகச் சொல்லி எவ்வளவு என்றார். நானும் அந்த நடுத்தர வயதுக்காரரிடம் சொன்னது போலவே கட்டணத்தையும் டோல் சாவடிக்கு கட்டிய இரண்டு வெள்ளியையும் கேட்டேன்.

அவரின் முகம் மாறிவிட்டது. “என்னது! என்ன ரெண்டு வெள்ளி கூடுதலா கேட்கறீங்க என் போன்ல அப்படி காட்டலயே..?”

“அதில் இருக்காது…” என சொல்ல வாயெடுத்தேன்.

“அப்லிகேஷன்ல இல்லாம காசு கேட்டா எப்படி கொடுக்கறது. இதுக்கும் சேர்த்துதானே காசு கொடுக்கறோம்.. கூட கேட்ட எப்படி… எல்லாம் புதுசாதான் இருக்கு….”

“அதில் இருக்காது… ஆனா ‘டோல்’ இருந்தா கஷ்டமர்கிட்ட நாம கேட்கலாம். அந்த அண்ணகிட்ட கேட்டுட்டுதான் அந்தப் பாதையில வந்தேன்” என்றேன்.

“அதுக்கு….”

“டொல் காசு கொடுக்கறதும் கொடுக்காததும் கஸ்டமரோட விருப்பம். ஆனால் பொருளை எடுக்கும் போதே நாங்க கஸ்டமரை கூப்டு கேட்போம். டோல் காசு கொடுக்கறதா சொன்னாலும் இல்லைன்னு சொன்னாலும் அதுக்கு ஏத்த மாதிரி பாதையில் வருவோம். அந்த அண்ணகிட்ட கேட்டேன் அவர் கொடுக்கறேன்னு சொன்னாரு அதான் அந்தப் பாதையில் வந்தேன்…”

எங்களது உரையாடல் உள்ளே இருப்பவருக்கு கேட்டிருக்க வேண்டும். “டேய்… நான் தான் கொடுக்கறேன்னு சொன்னேன்.. காசு கொடுத்து அவரை அனுப்பு.. மழையா இருக்குல்ல.. அவரு மத்த இடத்துக்கு போகனும்ல….” என்றார்.

எதிரில் இருந்தவருக்கு கோவம் வந்திருக்க வேண்டும். வங்கியில் பணம் செலுத்துவதாக சொன்னவர். அவரது பாக்கெட்டில் இருந்து டெலிவரிக்கான பணத்தையும் டோல் சாவடிக்கு கட்டிய இரண்டு வெள்ளியையும் கொடுத்துவிட்டு ஏதோ பேசியபடி அவர் வந்த இடத்துக்கே சென்றார்.

எனக்கு அந்த இரண்டு வெள்ளியைப் பார்க்கவும் அவமானமாக இருந்தது. டெலிவரி பணத்தை பாக்கெட்டில் வைத்துவிட்டு, அந்த இரண்டு வெள்ளியை கையில் வைத்து இறுக்கமாக மூடியபடி வெளியேறினேன்.

அவர்களின் கடை வாசலில் மதுரைவீரன் சாமி வைத்திருந்தார்கள். சின்னதாய்ச் சிவப்பு வண்ணத்தில் கூடாரம் போல அமைத்திருந்தார்கள். கையில் இருந்து அந்த இரண்டு வெள்ளியை மதுரை வீரனிடம் கொடுத்துவிட்டு காருக்கு சென்றேன். ஏனோ கைகள் நடுங்கியபடி இருந்தது.

வீட்டுக்கு போகலாமா என்ற் எண்ணமே எழுந்தது. ஆனாலும் இன்னும் இரண்டு டெலிவரிகளைப் பார்க்க வேண்டுமே.

அடுத்ததாய் ஒரு டெலிவரி கிடைத்தது. மோட்டார் வண்டியின் சக்கரத்தை கொண்டு போக வேண்டும். கடைக்கு சென்றேன். கடையில் ஒருவர் கையில் வண்டி சக்கரத்துடன் காத்திருந்தார். அதனை வண்டியில் ஏற்றிவிட்டு கட்டணத்தை எனது வங்கியில் செலுத்துவதாகச் சொல்லி வங்கி எண்ணின் கியூ.ஆரைக் கேட்டார்.

அதனைக் கொடுப்பதற்கு முன் பொருளை கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தை கைப்பேசியில் பார்த்தேன். ஒரே ஒரு டோல் சாவடி இருந்தது. ஒரு வெள்ளி கட்டணத்தை காட்டியது. அவரிடம் சொன்னேன். “ஓ அப்படியா…?” என்றவர் கூடுதலாக ஐந்துவெள்ளியைச் செலுத்தினார். எனக்கு ஆச்சயமாக இருந்தது. நன்றி சொல்லிவிட்டு டெலிவரிக்கு கிளம்பினேன்.

20 நிமிடத்தில் அந்த முகவரியை அடைந்தேன். வீட்டில் இருந்து ஒருவர் வந்தார், அவரேதான் அது. அவர்தான் பொருளைக் கொடுத்து பணத்தையும் கொடுத்து அனுப்பினார். சிரித்தபடி பொருளை வாங்கி கொண்டார். அவரது வீட்டு வாசலில் மூன்று டெலிவரி வேலைகான மோட்டார் சைக்கில்கள் இருந்தது.

இங்கும் எங்களின் நண்பர்கள் இருக்கிறார்களா என்று கெட்டேன். “ஆமாம்.. நாங்களும் பகுதி நேரமா டெலிவரிதான் செய்றோம்… உங்க நண்பர்களுக்கு இன்னிக்கு விடுமுறை…” என்று சிரித்தார்.

எனக்குமே சிரிப்பு வந்தது. மழையும் அதிகமாக சிரிக்க ஆரம்பித்தது. கணக்கு செய்து பார்த்ததில் இன்றைக்கு தேவையான பணம் இருந்தது. அதோடு மணி ஐந்தை நெருங்கியது. வாகன நெரிசலில் சிக்காமல் இருக்க இப்போது கிளம்பினால்தான் சரியாக இருக்கும் என்று நேராக வீட்டிற்கு புறப்பட்டேன்.

மறுநாள் நண்பரும் எழுத்தாளருமான ஶ்ரீகாந்தனைச் சந்தித்தேன். அதைப் பற்றிதான் எழுத தொடங்கினேன். ஆனால் எது எதையோ எழுதிவிட்டேன் பாருங்கள்.  அந்தச் சந்திப்பு பற்றி பிறகு எழுதுகிறேன்….

ஜூலை 12, 2026

புத்தகச்சிறகுகள் - தொடர் 19


நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 19' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் தொடரில் எழுத்தாளர் மனோகரன் கிருஷ்ணனின் 'நாகம்மாளின் மனக்குறிப்புகள்' சிறுகதைத் தொகுப்பு குறித்து எழுதியுள்ளேன். எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. கட்டுரையின் முதல்பகுதி இந்த வாரத் தொடரில் இடம்பெற்றுள்ளது.


எனது இந்த வாராந்திர தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.

அடுத்த வாரம் மேலும் ஒரு மலேசிய புத்தகத்தோடு வருகிறேன்.

அன்புடன்
#தயாஜி

ஜூலை 10, 2026

வாசிப்பில்


கடவுளே
தூண்டிலில் ஏன் உதடுகளை
மாட்டிக்கொள்ள வைக்கிறாய்
நான் மீனவனிடம்
"உதவி உதவி" எனக் கெட்க நினைக்கிறேன்

- பாலைவன லாந்தர்

வாசிப்பில் 'பெருந்தச்சன்'. பாலைவன லாந்தர் கவிதைகள். யாவரும் பப்ளிஷர் வெளியீடு.

அன்புடன்
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜூலை 05, 2026

புத்தகச்சிறகுகள் தொடர் 18


நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 18' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் தொடரில் எழுத்தாளர் அ.பாண்டியனின் இரண்டாவது நாவலான 'கரிப்புத் துளிகள்' நாவலைக் குறித்த கட்டுரையின் இரண்டாம் பகுதி வெளிந்துள்ளது.

என் வாசிப்பில் நான் முன்மொழியும் மலேசிய நாவல்களில் இதுவும் ஒன்று. நீங்கள் இந்நாவலை வாசிப்பது புதிய வாசிப்பனுபவமாக இருக்கும்.

எனது இந்த வாராந்திர தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.

அடுத்த வாரம் மேலும் ஒரு மலேசிய புத்தகத்தோடு வருகிறேன்.

அன்புடன்
#தயாஜி

வரப்புயர - 2

எனது முந்தைய பதிவான 'வரப்புயர' எனும் பத்தியை வாசித்த நண்பர்கள் அ.முத்துலிங்கத்தின் 'ஒரு சாதம்' கதை படிக்க கிடைக்குமா என கேட்டனர்.

உங்களுக்கு கொடுக்காமல் யாருக்கு கொடுப்பேன் என்று தேடி கதை உள்ள லிங்கைக் கண்டுபிடித்து அனுப்பி கொண்டிருக்கிறேன்.

நண்பர்களே, இந்தக் கதையை நீங்களும் வாசியுங்கள்.
குறிப்பாக எப்படிங்க கதையை எழுதறது...? என் அனுபவத்தைக் கதையாக்க முடியுமா..? போன்ற கேள்விகள் உள்ள இளம் எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கத்தை தவறாது வாசியுங்கள். உங்கள் வாசிப்பை 'ஒரு சாதம்' சிறுகதையில் இருந்தும் வாசிக்கலாம்; இப்படி குறிப்பிட்டு சொல்வதற்கான காரணமும் அந்தக் கதையில் உண்டு. அதுவும் ஒரு உத்திதான்.

இந்தக் கதையைக் குறித்து இன்னமும் பேச வேண்டும். அதற்கு முன் நீங்கள் வாசித்து விடுங்களேன்.


சிறுகதை இணைப்பு இதில் உள்ளது....
👉 'ஒரு சாதம்'

https://share.google/5nz0sgeewJxL7rRnf

அன்புடன்
#தயாஜி 
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை





- வரப்புயர .... -


வாசிப்பில்,
'அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்' கட்டுரைத் தொகுப்பு....
*******
இன்று வேலையில் கொஞ்சம் பாரம் அதிகமாகிவிட்டது. பல பெட்டிகளில் உள்ள பொருட்களை ஒரே ஆளாய் வண்டியில் ஏற்ற வேண்டியிருந்தது.

அது போதாதென்று கஸ்டமரின் வீட்டை தேடி கண்டுபிடிக்க படாத பாடு படவேண்டியதாய்ப் போயிற்று.

அவர்கள் சரியான முகவரியைக் கொடுக்கவில்லை. அதோடு அவர்கள் வெளிநாட்டினர். அவர்கள் ஒரு இடத்தில் இருக்க அவகளுக்கு நேர் எதிரான இடத்தின் முகவரியை அனுப்பியிருந்தனர். எப்படியோ பேசி அவர்களையும் அவர்களின் இடத்தையும் கண்டுபிடித்து பொருட்களை ஒப்படைத்துவிட்டேன்.

அடுத்த ஆடருக்கு ஆர்வமாய் காத்திருந்த சமயம்;

"நீ மட்டுமா வேலை செய்கிறாய் இதோ நானும் வந்துவிட்டேன் என் வேலையைச் செய்ய..." என்று வந்து பெய்த மழையில் என் வேலை அப்படியே நின்றது.

இன்றைய 'தார்கெட்' பாதிகூட அதன் இலக்கை அடையவில்லை.
சோர்ந்து போய் வீடு திரும்பினேன்.
மனைவி சூடா தேநீரை கலக்கி கொடுத்தார்.

சாப்பிட்டுவிட்டு, நேநீரைக் குடித்து கொண்டே என் அறைக்குள் நுழைந்தேன்.

மனதில் ஏதோ ஒரு சோகம் தொற்றிக்கொண்டது. அதை உற்சகப்படுத்த வேண்டுமே. உடனே புத்தக அலமாரியில் என் கைக்கு எட்டிய இடத்தில் இருந்த புத்தகங்களில் ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தேன்.

என் உலகத்திற்கு என்ன ஆனது ஏன் இப்படியானது என யோசித்தபடி ஒரு புத்தகத்தை எடுத்தேன்.
'அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்' புத்தகம் கிடைத்தது.

அ.முத்துலிங்கம் படைப்புலகம் குறித்து 14 எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சுப்ரபாரதிமணியன் தொகுத்திருந்தார். நற்றிணை பதிப்பகம் வெளியிட்டிருந்தார்கள்.

என் வாசிப்பின் ஆரம்பத்தில் சுஜாதாவிற்கு பின் அதே சுவாரஸ்யத்தோடு வாசித்த படைப்புகள் அ.முத்துலிங்கத்தின் படைப்புகள்தான். அவரின் எழுத்துகள் அவ்வளவு பிடிக்கும் எனக்கு.

கதைக்கும் கட்டுரைக்கும் இடையில் அவர் எதையும் எடுத்து சொல்லும் விதம் அபாரமாக இருக்கும். வாசித்து முடிக்கும் வரை அது எந்த வடிவத்தில் சொல்லப்பட்டிருக்கும் என யூகிக்க முடியாது.

இத்தனை அனுபங்கள் அவருக்கு கிடைத்திருக்கிறதே என்கிற ஆச்சர்யப்படுவதைவிட, ஒவ்வொன்றையும் எழுத்துகளாக எழுத்து வைக்கின்றாரே என்கிற பிரமிப்பு இருக்கவே செய்கிறது.

நான் என் அன்றாடங்களை பதிவுகளாக எழுதுவதற்கு அவருமே ஒரு காரணம்தான்.

அவரின் கதைகள் எப்போதுமே வாசிக்க ஏற்றவை. அது வாசகனுக்கான செய்தியைச் சொல்லுபவை. அழுவதற்கு முன் நம்மை அறியாமலேயே நம்மை சிரிக்க வைப்பார். அழு கண்ணீர் வெளியில் வந்து விழுவதற்கு முன்னே நம்மை சிரிக்க வைப்பார்.


இன்று வேலையில் எனக்கு கிடைத்த அனுபவத்தில் இருந்து கற்க வேண்டிய பாடத்தை என்றோ ஒருநாள் அவர் கதையில் வாசித்திருந்தேன். அவரின் முழு தொகுப்பில் தேடலானேன்.

ஆரம்பத்தில் வாங்கிய அவரது தனித்தனி சிறுகதைத் தொகுப்புகளை நண்பர்களுக்கு கொடுத்து விட்டு முழு தொகுப்பையும் (சிறுகதைகள்)/வாங்கியிருந்தேன். அதில் நான் வாசித்து எழுதிய குறிப்புகள் இருக்காது. பழைய தனித்தனி தொகுப்புகளில்தான் குறிப்புகள் இருக்கும்.

சரி வாசித்தது மனதில்தானே இருக்கும் என்ற பேராசையில் முழு தொகுப்பில் ஒவ்வொரு கதையாக ஒரு பார்வை பார்த்தேன்.

கிடைத்தது. அந்தச் சிறுகதையின் தலைப்பு 'ஒரு சாதம்'.

இன்று மீண்டும் வாசிக்கையில் முன்னமே வாசித்த அனுபவத்தைத் தள்ளி வைத்தே வாசிக்க முயன்றேன். தலைப்பே வித்தியாசமாக இருப்பதாக உணர்த்திய முதல் வாசிப்பின் மனநிலையை மீண்டும் உருவாக்கி கொண்டேன்.

சிறுகதையில் ஓரிடத்தில் அ.முத்துலிங்கம் சொல்வார், அரசனை வாழ்த்த நினைத்த ஔவை இப்படி சொல்லுவார்;

வரப்புயர, நீர் உயரும்
நீர் உயர, நெல் உயரும்
நெல் உயர, குட் உயரும்
குடி உயர, கோல் உயரும்
கோல் உயர, கோன் உயர்வான்'

'ஒருதுளி காரியம் எப்படிப் பிரமாண்டமான தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதற்கு இது சான்று.

'கேயாஸ் தியரிக்கும்' இதற்குமான தொடர்பையும் எழுத்தாளர் இணைத்து இலகுவாக புரியும்படி கதையில் சொல்லியிருப்பார்.

இப்போது மனதில் பளீர் என படுகிறது. சமீப காலமாக 'கோன் உயரவேண்டும்' என்றே அதிகம் சிந்தித்திருக்கிறேன். அதாவது விளைவுகளைப் பற்றியே சிந்தித்திருக்கிறேன்.

ஆனால் எல்லாவற்றுக்கும் 'வரப்புயர' வேண்டுமே என்கிற பளீர்தான் அது. மனம் இப்போது இன்னொரு கோணத்தில் சிந்திக்கிறது.

'ஒரு சாதம்' என்கிற கதையில் அதன் தலைப்பு தரும் அதிர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் உழைக்க தயாராய் இருக்கும் மனிதனுக்கான இடம் உயர்ந்து கொண்டே போகும் என்கிற நம்பிக்கையையும் கொடுக்கும் சுவாரஸ்யமான கதைதான்.

இந்தச் சனிக்கிழமை இரவை நீளமாக்க கையில் எடுத்த அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள் தொகுப்பை எடுத்திருக்கிறேன். மொத்தம் 14 எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம் குறித்து எழுதிய கட்டுரைத் தொகுப்பு என குறைவாகச் சொல்லிவிட்டேன்.

மொத்தம் 15 கட்டுரைகள் உள்ளது. புத்தகத்தில் இல்லாத அந்தப் பதினைந்தாவது கட்டுரையைத்தான் நீங்கள் இப்போது வாசித்து முடித்தீர்கள். என்னவொன்று இது அவரது படைப்புலகில் இருந்து என்னைப் பார்க்கவில்லை. என்னுலகில் இருந்து அவரைப் பார்த்திருக்கிறது.


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்