பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 06, 2026

என் 'லக்கி பேம்பூக்கள்'

- எனது 'லக்கி பேம்பூக்கள்'
(My lucky bamboo's)

பொம்மிக்கு பிடித்த செடியை அவளே தேர்ந்தெடுக்கலாம் என்றோம். உற்சாகமானவள் அங்கும் இங்கும் ஓடியோடி ஒவ்வொரு செடிகளாக மலர்களாகத்  தொட்டுத்தொட்டு, பார்த்து கொண்டிருந்தாள்.

எல்லாவற்றையும் விட, அவளுக்கு அவள் உயர செடிகளையே பிடித்திருந்தது. எங்கெல்லாம் அவள் உயரத்திற்கு செடிகளும் மலர்களும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் எங்களை அழைத்து அவை அழகாக இருப்பதாக சொல்கிறாளே தவிர எதையும் எடுக்க மாட்டேன் என்கிறாள்.

அவற்றைத் தொட்டுப்பார்ப்பதிலேயே மும்முரமாக இருக்கிறாள். மீண்டும் அவளிடம் நம் வீட்டிற்கும் கொண்டு போகலாம், உனக்கு பிடித்ததை எடு என்றோம்.

சிரித்தபடி ஆரம்பத்திலேயே நாங்கள் பிடித்ததை வாங்க சொன்ன இடத்திற்கு துள்ளி குதித்து ஓடினாள். அவள் விரும்பிய செடியை இவ்வளவு நேரமாய் அங்குதான் வைத்துவிட்டு தோட்டம் முழுக்க ஒவ்வொன்றையும் இரசித்தபடி இருந்திருக்கிறாள்.

சட்டென இரு கைகளிலும் சிறு சிறு மூங்கில் குச்சி போல எதையோ எடுத்து வந்தாள். ஆமாம் அதுதான் 'லக்கி பேம்பூ'.

அதற்கு ஏற்ற சிறிய கண்ணாடி குடுவையையும் அங்கேயே வாங்கிவிட்டோம்.

அவளைத் தொடர்ந்து இல்லாளும் அவருக்கு சில செடிகள் வாங்கி கொண்டார். வீட்டின் 'பால்கனியில்' இருக்கும் 'மினி தோட்டத்தில்' எனக்கான தோட்டக்காரன் வேலை அந்த நொடியில் உறுதியானது.

நினைத்தபடியே நடந்தது. பொம்மியும் அவள் மம்மியும் செய்த வேலையால் பால்கனி தோட்டத்து மண் பாதிக்கு பாதி வீடு முழுக்க ஆனது. கடற்கரை  விளையாட்டு போல பூஜாடி மண்களைக் கொட்டி புது மண்ணை ஒவ்வொரு ஜாடியிலும் போட்டு கொடுத்தார்கள்.

இரவு வரை தோட்ட வேலையிலும் மண் விளையாட்டிலும் மூழ்கியிருந்தோம்.  தோட்ட வேலை முடிந்ததும் பொம்மியும் இல்லாளும் அசதி தாங்காது குளித்து தூங்கலாம் என்று பேசி முடிவு செய்தார்கள்.

இன்னும் தோட்டக்காரன் கதாப்பாத்திரத்தில் இருக்கும் நானோ, அடுத்ததாக வீட்டுக்காரன் கதாப்பாத்திரத்திற்கு மாற வேண்டும். அதாவது வீட்டு வேலைகளை முடிக்க வேண்டும்.

அவர்கள் இருவரும் குளித்து முடித்து சமைக்கவே ஆரம்பித்துவிட்டார்கள். அப்போது வரை வீட்டு வேலையையே செய்து கொண்டிருந்தேன்.

இப்போதுதான் வேலை முடிந்தது. சாப்பிட்டு விட்டோம். பொம்மி அவள் வாங்கிய லக்கி பேம்பூவை பார்த்துவிட்டு எங்களையும் பார்த்தாள். அவளுக்கு அவற்றை பிடித்திருக்கிறது.

அவள் எங்களின் லக்கி பேம்பூ என சொன்னேன். புரிந்துவிட்டது போல சிரித்தபடி கொட்டாவி விட்டபடியே அவள் அறைக்கு செல்கிறாள்.

அவள் நடந்து செல்லும் அழகை பார்த்தபடி இருந்தேன். இல்லாள் பார்ப்பதைக் குறித்து கேட்கிறார்.

உண்மையில் பொம்மியும்
இல்லாளுமே எனக்கு கிடைத்த 'லக்கி பேம்பூக்கள்'தானே என்று கட்டியணைக்க போனேன். வெட்கத்தில் என்னை தள்ளிவிட்டு "கிச்சனில் சமைச்ச சாமான்லாம் இருக்கு... கழுவிட்டு வந்து படுங்க... எங்களுக்கு ஒரே அசதியா இருக்கு..." என்றபடி பொம்மியைப் பின் தொடர்ந்தார்.

என் இராஜ தந்திரங்கள் இந்த முறையும் வீணாகிவிட்டதை நினைத்தபடி கிச்சனுக்கு செல்கிறேன்....

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்