பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 05, 2025

- அரசியல் தெரிந்தவர்கள் -


 பாலாடை

பால் பாட்டில்

நம்கின்

பூத்தின்

பௌடர்

கிலுகிலுப்பை

கரடி பொம்மை

இவற்றுடன்

மிச்சமிருக்கும் தாய்ப்பால் சொட்டுகள்

என எல்லாவற்றையும்

சிதைந்த

அந்தக் குழந்தைகளின்

கூடவே புதைத்துவிட்டார்கள்


ஒன்றின் மேல்

ஒன்றென

காலம்காலமாக புதைக்கப்பட்ட

குழந்தைகளில் இருந்து

எந்தவித குற்தவுணர்ச்சியும்

யாருக்குமே இதுவரை முளைக்கவில்லை...


சென்ற குழந்தைகள் 

ஒருபோதும் 

திரும்புவதில்லை


உலகம் ஒருநாள்

குழந்தைகளே பிறக்காத

நாளாகி விடிந்தாலும்


பழகிவிட்ட பதவி

பைத்தியங்களும்

அதிகார அரக்கர்களும்

புதைத்த குழந்தைகளையே 

மீண்டும்  மீண்டும் தோண்டி

எடுத்து

மீண்டும் மீண்டும்  புதைத்து

விட்டுதான்

நிம்மதியாவார்கள்..


செத்தபின் தான்

சொர்க்கமும் நரகமும்

என்பதை முழுதாய்ப்

புரிந்தால் மட்டுமே 

அரசியல் செய்ய முடியும் போலும்


பிப்ரவரி 04, 2025

- பரிதாப பரிசுகள் -

 

ரொம்பவும் பழைய

புத்தக அலமாரியில்

பழைய புத்தகத்தில்

அதைவிட பழையதாய்

ஒரு மயிலிறகு இருக்கிறது

அது மட்டும்

இன்னமும் புதியதாகவே சிரிக்கிறது


பிடித்தவர்கள் கொடுக்கும்

எந்தப் பொருளும்

பழசாவதில்லை

அது சுமக்கும் 

நினைவுகளுக்கும் வயசாவதில்லை


பார்க்கும் போதும்

கையில் எடுக்கும் போதும்

நினைக்கும் போதும்

நெஞ்சோடு அணைக்கும் போதும்

தன்னைத்தானே

புதுப்பித்துக்கொள்ளும்

சூட்சுமம் தெரிந்தவை

அவை


அமர்ந்தபடி ஆகாயம் தொடவும்

நடந்தபடி காற்றாடி போலவும்

நம்மையும் அவை

மாற்றிவிடுகின்றன


பிடித்தவர்கள் கொடுக்கும்

பரிசுகள் போல

பிடித்தவர்கள் எப்பவும்

அப்படியே இருப்பதில்லை


சிலர் கொடுத்ததை

திரும்ப கேட்கிறார்கள்

சிலர் கொடுத்ததை

பிடுங்கி கொள்கிறார்கள்

சிலர் கொடுத்ததை

கண்முன்னே சிதைத்து வைக்கிறார்கள்


சிலர் நம்முடனே

அதனையும் வெறுத்துவிடுகிறார்கள்

ஆழக்குழியில்

நம்மை 

புதைத்து விடுகிறார்கள்

அதன் மேல் அமர்ந்தபடி 

கண்ணீர் சிந்துகிறார்கள்


சிந்தியக் கண்ணீரில் நாமும் 

ஈரமாகிறோம்

நமக்கே நாம் பாரமாகிறோம்


உடைந்துகிடக்கும்

பரிசுகள் கொடுக்கும் 

ஆறுதல்கூட அருகில்

இருந்தும் அவர்கள்

தருவதில்லை


அன்றொருநாள்

யாரோ 

யாருக்கோ

கொடுத்த கரடி பொம்மையை

யாரோ கொளுத்திவிட்டார்கள்


அது எரிந்த போது

அழுத குரல் 

இன்னமும் எனக்கு கேட்கத்தான் செய்கிறது



பிப்ரவரி 03, 2025

- நினைவுக்குமிழி -


 நினைவுகளின் குழி

சிலருக்கு செதுக்கப்படுகிறது

சிலருக்கு புதைமண்ணாய் ஆழம் போகிறது


கையளவு தண்ணீராய்ச் சிலர்

முகம் கழுவுகிறார்கள்

கடலளவு தண்ணீராய்ச் சிலர்

தத்தளித்து சாகிறார்கள்


நினைவுகளை அழிப்பதற்கு

அறிவியலில் இடமுண்டா


மீண்டும் ஒருநாள்

ஆசைக்காய் அதை

நினைத்துப்பார்க்க வழியுண்டா


நினைவுகள் இல்லாமல்

நீயும் நானும்

என்ன செய்யப்போகிறோம்


நினைத்து நினைத்து

அழுவதற்கும்

நினைத்த நேரத்தில்

சிரிப்பதற்கும்

தனித்தனியாய் நினைவுகளை

சேகரிக்க முடியுமென்றால்

எவ்வளவு வசதி


அட்டவணை போட்டு

அழுது கொள்ளலாம்

அலட்டிகொள்ளாமல்

தினமும் சிரிக்கலாம்


நினைவுகளில் சுமை

நம்மை மண்ணில் புதைக்கிறது

நினைவுகளின் சுகம்

நம்மை விண்ணில் செலுத்துகிறது


நினைவுக்குமிழிகள்

வெடிக்கும் போது

காற்றோடு நம்

மூச்சையும்தான் எடுத்துவிடுகின்றன


மறதிக்கென மருந்து

எந்தக் கடையில் கிடைக்கும்

வாங்களேன் நாம்

வாசலிலேயே காத்திருக்கலாம்

பிப்ரவரி 02, 2025

- உங்கள் குட் நைட்டிற்கு என்ன பொருள் ? -

 

குட் நைட்

என்பதை எப்படி

தமிழில் சொல்வீர்கள்


உங்கள் தாய்மொழியில்

எப்படி அதற்கு

பொருள் கொள்வீர்கள்?


என்னால் அதன்

நேரடி பொருளை 

என் மொழியில்

புரிந்து கொள்ள முடிவதில்லை

அது எனக்கு

பொருந்தவில்லை

அதன் அடக்க பொருள்

எனக்கு நிலைப்பதில்லை


குட் நைட் என்பது

அதனைச்

சொல்லும் நபரிடமிருந்து

கேட்கும் நபரிடம் வருவதற்குள்

பரிணாமம் அடைந்துவிடுகிறது


இனிமேல் அவ்வளவுதான்

என்பதையா?

உன் நினைவோடு நான்

என்பதையா?

இனி வராதே

என்பதையா?

உனக்கு அறிவே இல்லை

என்பதையா?

இன்னும் கொஞ்ச நேரம் பேசு

என்பதையா?

ஒரு முத்தம் கொடு

என்பதையா?

என்னை அணைத்துக்கொள்

என்பதையா?

என்னோடு இரு

என்பதையா?

என்னை விட்டு போகாதே

என்பதையா?

ப்ளீஸ்

என்பதையா?

நான்சென்ஸ் 

என்பதையா?


குட் நைட் என்பதை

உங்கள் மொழியில் 

நீங்கள் எப்படிதான்

புரிந்து கொள்கிறீர்கள்

நீங்கள் எப்படிதான்

புரிய வைக்கிறீர்கள்


என்னிடம்

ஒரு குட் நைட் உண்டு

அதைச் சொல்லும்போதெல்லாம்

எனக்குள் நான் சிரித்து

கொள்கிறேன்

கொஞ்ச நேரத்தில்

அழுதபடியே

உறங்குவது போல்

நடிக்கவும் செய்கிறேன்


பிப்ரவரி 01, 2025

பிப்ரவரி மாத நாவல் வாசிப்பு


 பிப்ரவரி மாதத்திற்கான நாவல் வாசிப்பு.

இர்விங் கர்ஷ்மார் எழுதிய 'ஜின்களின் ஆசான்'

Tamil translation of 'Master of the Jinn'

நான் வாசிக்கும் இரண்டாவது சூஃபி நாவல். ரமீஸ் பிலாலியின் தமிழாக்கம். 

சீர்மை வெளியீடு.


நான் இந்நாவலை  தேர்ந்தெடுக்க ஜனவரி மாத நாவல் வாசிப்பே முக்கிய காரணம்.


'ஆனால் மனிதன் தனக்கே சாட்சியாக இருக்கிறான்.' - திருக்குர்ஆன்(75:14)

என்ற இறைவசனத்தில், இந்நாவலை வாசிக்க தொடங்குகிறேன். 


அன்புடன் 

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

- துளி பாரம் -

 

எல்லோருமே
ஏனோ எதற்கோ
கண்ணீரைச் சேமித்திருக்கிறோம்
அதிக வட்டியை அதுவே
தனக்கென கூட்டிக்கொள்கிறது

அதில் சில
சிரிக்கும் போது
சிந்திவிடுகிறது
அதில் சில
அழும் போது
வந்துவிடுகிறது

இன்னும் சில
கண்களின் வழி
வெளியேற விருப்பமற்று பின்னொக்கிச் சென்று
இதயத்தை ஈரமாக்கிவிடுகின்றன

காற்றை
உறிஞ்சி ஊத
உதிரத்தை
ஏற்றி இரக்க
பழகிய இதயத்திற்கு
கண்ணீரை
என்ன செய்வதென
தெரியவில்லை

தான் தப்பிப்பிழைக்க
புத்திக்கு புலப்படாத
நினைவுகளைச் சுமக்கும்
அரூப பெட்டிக்கு
கண்ணீரின் பாரத்தை
அனுப்பிவிட்டு
அதிகமாய்த் துடிக்கிறது
இதயம்

உடல் எடையைவிட
நினைவின் எடையை
எந்த மனிதனாலும்
தாங்கி
தள்ளாடாமல் நடக்கமுடிவதில்லை
அவன்
அதனை சுமந்து கொண்டுதான்
வாழ்க்கையைக் கடக்கவேண்டியுள்ளது

கருணை கொண்ட
சில
கண்ணீர்த்துளிகள் மட்டும்
கண்களில் இருந்து
கண்கள் மூட
கண்ணிமையில்  ஏறி நின்று
குதித்து
தற்கொலை செய்கின்றன

கண்ணுக்கும் கண்ணீருக்கும்
எந்த
குற்றவுணர்ச்சியும் இன்றி
ஓர் ஒப்பந்தம்
நிறைவடையும் போது
மனம் கொஞ்சம்
லேசாகிறது...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்