பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 28, 2019

அ-கவிதை




1.
என்னை முழுதாய்
தின்று செரிக்க முடிந்தவள்
நீயெனில்
அருகில் வா
மிச்சம் வைக்காதே

2.
என் உடல் சதைகளை நீக்கி
நரம்புகளைக் கோர்த்து
எலும்புகளைப் பிடுங்கி
உன்னால் இசைக்கவும்
துளையின்றி என்னை
வாசிக்கவும் முடியுமெனில்
உனக்கான இசைக்கருவி நான்

3.
கூரிய நகங்கள் கொண்டு
என் முதுகை ரணப்படுத்து
அதன் ரத்த வெள்ளத்தில்
நீச்சலடிக்க முடிந்தவள்
நீயெனில்
என்னை கட்டிப்பிடி

4
என்
இதழில் தொடங்கி
கொஞ்சம் கொஞ்சமாக
என்னை கடித்துத்தின்ன
தைரியமானவள் நீயெனில்
முத்தமிடு

5.
என் இரு காதுகளையும்
நாவால் கிழித்துத்தெடுக்க
முடிந்தவள் நீயெனில்
ஏதாவது ரகசியம் சொல்
உன் மடியில் படுக்கிறேன்

6.
உன் கொதிக்கும் பார்வையில்
என்னை அவித்து எடுக்கும்
சமையல்காரி நீயெனின்
என்னைச் சமைத்துக்கொடு

7.
என் கழுத்தை
தன் கருங்கூந்தலால்
இறுக்கி
அந்தரத்தில் தொங்கவிட்டு
ஊஞ்சலாட முடிந்தவள்
நீயெனில்
உனக்கான ஊஞ்சல் நானாகிறேன்

8.
பூஜாடிகள் அத்தனையும்
கொண்டு என் தலையில்
உடை
நீ விரும்பும்
ரத்த ரோஜாவாக
நான் மாறுகிறேன்

9.
ஆப்பிள்களை அழகாய் நறுக்க
என் கையில் இருந்து தொடங்க எண்ணுகிறாயா
சுண்டு விரலிலிருந்து நறுக்க ஆரம்பி

10.
என் முகம் முழுக்க
கண்ணாடித்துண்டுகளை சொருகு
பல கோணங்களின் தெரியும்
உன் முகத்தை உன் கண்களின் வழி
காட்டத்துணிந்தவள் நீயெனில்
உடைக்கவேண்டிய நிலைக்கண்ணாடி இதோ

11.
அழுக்கடைந்த என் நகங்களைச்
சுத்தம் செய்ய
ஒவ்வொன்றாகப் பிடிங்கி
அதன் அடிவேரை நீரில் கழுவும்
வேலைக்காரி நீயெனில்
விரல்கள்
இருபதோடு நின்றுவிட்டது
என் துரதிஷ்டம்

12.
உன் தோட்டத்து மண்ணை
தின்றுப்பார்த்து
அதன் வருங்கால பூக்களின் வண்ணங்களையுனக்கு
சொல்லவைக்கும் திட்டமுண்டெனில்
பசியோடு வருகிறேன்
மண் போடு

13.
பறவையைப் போல
என் பறத்தலையும் ரசிக்க
தூக்கி வீசும் முன் யோசி
பத்தாவது மாடியைவிட
நூறாவது மாடிதான்
உன் ரசனைக்கு ஏற்றது

14.
என் முகப்பருக்களை
இல்லாமலாக்க
அவ்விடங்கள்தோரும்
ஊதுபத்தி தீயினால்
ஒத்தடம் கொடுக்க
தயாரானவள் நீயெனில்
ஜவ்வாது ஊதுபத்தியை
பயன்படுத்து
மற்றது
உனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திடும்

15.
என்னை
கட்டியணைத்திடு
வெட்டி எறிந்திடு
பிய்த்து தின்றிடு
மிச்சமின்றி
உதிரம் குடி
அதற்கு முன்
கொஞ்சமேனும்
என்மீது
காமம் தெளி

16.
உன் பட்டாடை
மடிப்புகளற்று வடிவு பெற
இஸ்திரிச்சூட்டை
அதிகம் வைக்கவேண்டும்
நினைத்தது போலவே
என் முதுகில் முயற்சி செய்
எங்கேனும் தோல் கருகினால்
கொஞ்சம் தண்ணீர் மட்டும்
தெளிக்க மறக்காதே

17.
என் கண்ணில் கருவிழியில் ஊசியினை குத்திக்குத்தி
கற்றுக்கொள்ளலாம்
ஊசியில் நூல் கோர்க்கும் வித்தையை
என முடிவெடுக்கும்
தையல்க்காரி நீயெனில்
அரைகுறை வேண்டாம்
என் இருவிழிகளையும் எடுத்துக்கொள்

18.
தொண்டைக்குழியைக் கிழித்து
அமிலம் ஊற்றுவதுதான்
என் இருமலுக்கான
மருத்தெனக் கண்டறியும் மருத்துவச்சி நீயெனில்
முதலில் உன் சிங்கப்பல்லால் கடித்துத்துளையிட்டு
அதனிலிருந்து கிழிக்கத்தொடங்கு

19.
என் உதட்டினை
பிளேடு கொண்டு
சின்னச் சின்னதாய்க்
கோடு கிழி
இரத்தத் துளிகளோடு
உன்னிதழைப் பதித்து
முத்தச் சுவையைப்
பருகிட நினைப்புள்ளவள் நீயென்பதில் தவறில்லை
புதிய பிளேடுகளைக் கையிலெடு

20.
என் முதுகுத்தண்டில்
மெழுகுவர்த்தியைக் கவிழ்த்துச்
சொட்டுச்சொட்டாக
நீ விரும்பும் ஓவியத்தை உண்டாக்க
விரும்புகிறவள் நீயெனில்
கழுத்துக்கும் முதுகிற்கும் இடைப்பட்ட இடத்திலிருந்து ஓவியம் தொடங்கு

#

-தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்