பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 05, 2012

‘அந்திம காலம்’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன்


     

அந்திம காலம்’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன்


 (6.6.2012)
    இன்றுதான், ரெ.கார்த்திகேசு எழுதிய அந்திம காலம்நாவலை படித்து முடித்தேன். 1998-ல் எழுதப்பட்ட இந்நாவல் 2007 இல் மறுபதிப்பு வந்தது.  ரெ.கா-வின் மூன்றாவது நாவல் இது.

      மனைவி ஆசிரியர் பயிற்சி கழகத்தில் படித்த சமயம், திறனாய்வு செய்த நாவல் இதுவென அறிமுகம் செய்தார். இந்நாவலை படிக்கும் முன்  ரெ.கா-வின் சில சிறுகதைகள் தவிர (அதுவும் இப்போது நினைவில் இல்லை)எந்த எழுத்துகளும் எனக்கு பரிச்சயம் இல்லை.

    சுஜாதாவின் தொடர்கள், பின்னாளில் புத்தகமாக வெளிவந்தது. அதை தீவிரமாக வாங்கி படித்தேன். அவ்வாறே இந்திரா சௌந்தரராஜன், ஆர்னிகா நாசர் உடன் ராஜேஷ்குமார் அதில் அடங்குவர். ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் ஒரு எதிர்பார்ப்பும் முடிச்சுகளும் இருக்கும். பரப்ப்புக்கு கொஞ்சமூம் பஞ்சம் இருக்காது.  நாவலின் வடிவமைப்பு இப்படித்தான் இருக்குமனெ எனக்குள் நானே முடிவெடுத்துக் கொண்டேன். தன்னையே தனக்கு குருவாக நினைப்பவன் முட்டாள்என விவேகானந்தர் சொன்னதை படித்திருந்தாலும் அதன் உள் அர்த்தம் புரிந்திருக்கவில்லை.

     கால போக்கில் எழுத்துகளில் இருக்கக் கூடிய வித்தியாசங்கள் வாசிப்பின் வழி தானாகவே புரியத் தொடங்கியது. அதன் காரணமாகவே சில காலம் வரை உடன் சுற்றிவந்த பலரிடம் இருந்து விலகும்படி ஆனது. முரண் படுவதால் மட்டுமே என்னை முட்டாளாக்கி வேடிக்கை காட்டியவர்களும் உண்டு. வெறும் பெண் என்ற அமைப்புகளால் மட்டுமே கொண்டாடப்பட்டவரும் உண்டு. ஜால்ராக்களின் சத்தம் சந்தமாய் ஒலிப்பதால் கூட்டம் கூடியவர்களும் உண்டு.

     கடந்த சில மாதங்களாக ஜெயமோகன் எழுத்துகளை படித்து வந்ததில் இருந்து அவர் அறிமுகம் செய்த கதைகளையும் முன்மொழிந்த எழுத்தாளர்களையும் தேட ஆரம்பித்தேன். ஜெ.மோ தன் புத்தகத்தில் நாவல்கள் குறித்து எழுதியதை/ படிக்கும் போது எனக்கும் நாவல் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதற்கு அடித்தளமாக அமைந்தது, ஒருமுறை வல்லினம் கலை இலக்கிய விழாவில் கலந்து கொண்டு நாவல்கள் குறித்து அமைந்த ஜே.மோ-வின் பேச்சுதான் எனலாம்.
 
   பின்னாளில் வல்லினம் அகப்பக்கத்தின் ஆசிரியர் நவினுடன் நட்பு கிடைத்த பிறகு பலவற்றைப் பகிரும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒன்றுதான் அன்று பேசிய ஜெ.மோவின் பேச்சு
.
   சிற்றிதழ்கள் குறித்து பேசும் பொருட்டு , மலேசியாவிற்கு வருவதற்கு முன்பே தலைப்பும் கொடுக்கப்பட்டிருந்ததாம். திடீரெனத்தான் நாவல்கள் குறித்து பேசும்வடி ஆனது. அந்த பேச்சினை இப்போதுகூட நீங்கள்   ‘யுடியூப்’-ப்பில் கேட்கலாம். அதிகம் பேரால் கேட்கப்படும் ஜெ.மோவின் பேச்சுகளில் அதுவும் ஒன்று.

    நல்ல கதைகள் தன்னைத்தானே எழுதிக் கொள்வது போலத்தான் என்னவோ நல்ல பேச்சுகள் தனக்கான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கின்றன போலும்.

   சமீபத்தில் தொடர்ந்து நாவல்களை படிக்கும் வாய்ப்பைக் காலமும் நேரமும் எனக்கு வழங்கியது. ஆர்வம் என்ற பெயரில் எனக்கு நானேப் பெருமை சேர்க்க   விரும்பவில்லை.

   தொடர்ந்து சுந்தர ராமசாமியின் ஒரு புளிமரத்தின் கதை’, தகழி சிவசங்கர பிள்ளை மலையாளத்தில் எழுதி சுந்தர ராமசாமி தமிழில் மொழிபெயர்த்த தோட்டியின் மகன்’, சாரு நிவேதிதா எழுதிய எக்ஸிடென்சியலிசமும் பேன்ஸி பனியனும்’, எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய உறுபசி’, வைக்கம் முகமத்து பஷீர் எழுதியஆனைவாரியும் பொன்குருசும்’- (நெடுங்கதை) போன்ற நாவல்களில் மூழ்கியிருந்த பல கேள்விகளை எனக்குள் கேட்டுக் கொண்டே அடுத்த நாவலை எடுக்கும் பொழுதுதான் , மனைவி அந்திம காலம்நாவலை அறிமுகம் செய்தாள்.

    தொடர்ந்து படித்த ஐந்து நாவல்களைக் குறித்து எழுத வேண்டும் என எண்ணினாலும் எழுத்துரு இன்னமும் கிடைக்கவில்லை. அதற்கு ஏன் இந்த அவசரம் அந்திம காலம்குறித்து எழுத..?

   தெரியவில்லை. சில முடிவுகளை நானாக எடுப்பது குறைந்து தானாக நடக்கத் தொடங்கியிருக்கும் நேரம் இது.

   இனி அந்திம காலம்’- நோயாளியில் நெடுந்துயரம் என சொல்லலாமா? அல்லது வயோதிகத்தின் பாவப் பரிகாரம் எனப்  பொருள் கொள்ளலாமா?

  கதையில் நாயகன் சுந்தரம் , தன் வயோதிக காலத்தில் தனக்கு மூளைப் புற்று நோய் இருப்பதைக் தெரிந்துக் கொள்கிறார். அங்கிருந்துதான் நாவல் தொடங்குகிறது.

   தொடக்க அத்தியாயம் வியப்பை எற்படுத்தும் வகையில் எழுதியிருக்கின்றார். குறிப்பாக, ‘காரின் கூரையில் விழுந்த மழை நீர் கண்ணாடியில் ஆறாக வழிந்து கொண்டிருந்தது, அகலாமான கண்ணாடியெங்கும்  மழை வரைகின்ற ஓவியங்கள். காரின் வைப்பர் அந்த ஓவியங்களை இடைவிடாது அழித்துக் கொண்டிருந்தன. டடக்.....ட்டக்... டடக்... அழிக்க அழிக்க/ புதிதாக ஓவியங்கள். அழிவது பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத மழை. அழிப்பதைப் பற்றி குற்ற உணர்ச்சியும் தயக்கமும் இல்லாத வைப்பர். ’ .

    நாவலின் தொடக்க அத்தியாயத்தில் வந்திருக்கும், இந்த வரிகள் முழு நாவலின் சாரத்தை ஓரளவேனும் சொல்லியிருக்கிறது எனவே மனதில் பட்டது. அந்த வைப்பர் போலத்தான் வாழ்க்கையும். வாழ்க்கை எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தயக்கமும் இல்லாமல் ஒவ்வொருவரையும் பாடாய்ப்  படுத்துகிறது. மழையால் ஓவியம் போலக் காட்சியளிக்கும் தண்ணீரெல்லாம், எந்த ஒரு பாரபட்சமுமின்றி அழிக்கப்படுவதும். பின் புதிதாக வரையப்படுவதும் இறப்பையும் பிறப்பையும் சொல்கிறதோ ? பிறக்கிறார்கள் இறக்கிறார்கள். இறக்கிறார்கள் பிறக்கிறார்கள். இதுதான் வாழ்க்கையா..?

    பிறப்பையும் இறப்பையும் மிக சுலபமாகச் சொல்லிவிடலாம். ஆனால் இரண்டுக்கும் இடையில் இருக்கும் அனுபவம் எத்தனை வலிகள் நிறைந்தவை. எப்படி அந்த வலியை கணக்கெடுப்பது? வயது மட்டுமே வலியை/ குறித்த பிரக்ஞையை கொடுக்கிறது.

    ‘அந்திம காலம்நாவலில் வயோதிகர் சுந்தரத்திற்கு வந்திருக்கிற அதே புற்றுநோய் அவரது பேரன் பரமாவிற்கும் வந்திருக்கிறது. மரண வாசலில் இருக்கும் இருவரையும் படிக்கும் போதே வயதின் பிரக்ஞை புரிகிறது.

    தலைமையாசிரியராக  இருந்து பதவி ஓய்வு பெற்ற இரண்டாம் ஆண்டில் அவர் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் யாரும் எதிர்பாராதது. சுந்தரத்தின் மனைவி ஜானகி. மகள் ராதா, மருமகன் சிவமணி, மகன் வசந்தன், பேரன் பரமா.

     அவ்வபோது சுந்தரத்தின் பழைய நினைவுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. சுந்தரம் ஜானகி இருவரின் அறிமுகமும்  , திருமணம் நடந்த கதையெல்லாம் சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இவர்களின் அன்பான வாழ்க்கை முறைக்கு முற்றிலும் மாறுபட்டிருந்தாள் மகள் ராதா. ராதாவும் கணவன் சிவமணியும் காதலித்துத்தான் திருமணம் புரிந்திருந்தார்கள் என்றாலும், தன் தாய் தந்தையைப் போல இல்லாமல், மனமுறிவுக்கு செல்கிறார்கள். ராதாவால் சிவமணியின் மிருகக் குணம் பொறுக்க முடியாமல் 3 வயது பரமாவை தன் பெற்றோரான சுந்தரம் ஜானகியிடம் கொடுத்துவிட்டு மறுநாள் வெளிநாடு சென்றுவிடுகிறாள். தனக்கு ஒரு வெள்ளைக்காரனைப் பிடித்திருப்பதாகவும் அவரும் தன்னை விரும்புவதாகாவும் , விரைவில் பரமாவை அங்கே கொண்டு செல்லப்போவதையும் கடிதம் வழி சொல்லியிருந்தாள். மேற்கொண்டு முகவரியோ தொலைபேசி எண்ணோ இருக்கவில்லை. அவளே அடிக்கடி அழைப்பதாக எழுதியிருந்தாள்.

    சுந்தரத்துக்கு நல்ல நண்பனாக இருக்கிறார் ராமச்சந்திரன். நல்ல நட்பிற்கு அடையாளமாக இவர்கள் இருவரையும் சொல்லலாம்.

    சுந்தரத்தின் மறுமகனான நேசமணி மிருகக் குணத்தில் இருந்து, தன் குழந்தை பராமுக்கு எற்பட்டிருந்த நோயால் மனிதனாகின்றான். தன் மாமனாரிடம் அவன் மன்னிப்பு கேட்கும் நேரம் படிக்கும் போதே மனதைக் கனக்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் பரமா இறந்துவிடுகிறார். குழந்தையின் மரணத்திற்குக்  காரணம் தங்களின் ஓயாத சண்டைதான் என உணர்கிறார்கள் நேசமணியும் ராதாவும். சண்டைபோட்டு ஆளுக்கு ஒரு புறம் இருந்த நேரங்களுக்கு பதிலாக குழந்தையை கவனித்திருந்தால் , நோயின் அறிகுறி தொடக்கத்தில் இருந்தே கண்டு கொண்டு சிகிச்சை கொடுத்திருக்கலாம்.

    சுந்தரத்தின் குடும்பத்தில் இருக்கும் மற்ற இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை/ சொல்லவேண்டும். ஒருவர் சுந்தரத்தின் அக்கா அன்னபூரணி,  மற்றொருவர் சுந்தரத்தின் அத்தை.

    எல்லா சமயமும்  சூழ்நிலைக் கைதி ஆகாமல் பதட்டமில்லாமல் ஒவ்வொன்றையும் செய்துவருகின்றார் அக்காள் அன்னபூரணி.

    இளம் விதவையான சுந்தரத்தின் அத்தை, கணவன் நீரில் மூழ்கி இறப்பதைப் பார்த்து பீதிக்குள்ளாகி, மனப்பாதிப்பை அடைகிறார். தன் வாழ்நாளில் கடைசி வரை, ‘தண்ணி பக்கம் போகாதேஎன இதையே சொல்லி வருகிறார். துணிகளை துவைப்பது முதல் சமைப்பது வீட்டைச் சுத்தம் செய்வது என எதைச் செய்தாலும் அதற்கான பலனைத் தேவையில்லாமல் போனது அத்தைக்கு. ஒரு தேர்ந்த ஞானியைப் போலவே இவர் எனக்கு தெரிகிறார். வீட்டில் இறப்பு நடந்த சமயம் , சுந்தரத்துக்குப் புற்றுநோய் எனத் தெரிந்த பொழுதும் என எல்லா காலகட்டமும்  மந்திர உபதேசம் போல  ‘தண்ணி பக்கம் போதான்னு சொன்னே கேட்டியாஎன்பதையே கேட்கிறார்.  ஞானிகள் இப்படித்தானோ  

    தனக்கு கடமையாக்கப்பட்டதை  செய்த பிறகும் செய்யும் பொழுதும் மனம் ஒன்றையேதானே நினைத்திருக்கும்..!

   நோயின் பிடியில் ஒவ்வொரு மாறுதல்களியும் சுந்தரத்தின் மூலம் நாமும் தெரிந்து கொள்ள முடிகிறது. படிப்பவர்களுக்கு ஓரளவேனும் புற்று நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்பலாம்.

    என்னை/ கவர்ந்த கதாபாத்திரம்  என மதர் மேகியை/ சொல்லலாம். நோயாளிகளுடன் உரையாடவும் தொண்டூழியம் செய்யவும் இருக்கிறார் இவர். அவ்வ/போது நோயாளியான சுந்தரத்துக்கு இவர் சொல்லும் அறிவுரைகள் அனைவருக்கும் பொருந்தும் படி இருக்கிறது.

    சுந்தரம் சொல்லும் கதையில், அவ்வபோது கதை சொல்லியும் கதை சொல்கிறார். சில இடங்களில் விளைவுகளைச் சொல்லிவிட்டு அடுத்த பத்தியில் அதன் சம்பவங்களைச் சொல்வது ரசிக்கும்படி இருந்தது. இடையிடையில், சுந்தரம் படிக்கும் நூல்களில் இருந்த மேற்கோள்களைப்  
 படிப்பது, சுவாரஸ்யமாக இருக்கிறது.

    புற்றுநோய் ஆராய்ச்சியாளராக வரும் மருத்துவர் ராம்லியின் கதாபாத்திரம் திருப்பத்தைக் கொடுக்கும் என எதிர்ப்பார்க்க/பட்டு இயல்பாகவே இறுதிவரை செல்கிறது. சுந்தரத்தின் பழைய மாணவர்தான் இந்த ராம்லி. அப்போது, கட்டொழுங்கு ஆசிரியரான சுந்தரத்திற்கும் பிரச்சனை கொண்ட மாணவனான ராம்லிக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனை நேர்மைக்கு அதிகாரத்திற்கும் ஏற்படும் போராகச் சொல்லலாம். அதனை நல்ல சிறுகதையாக கணக்கெடுக்கலாம். நல்ல கதை சொல்லல், திருப்பம், சரளமான நடை.

     மேற்கொண்டு சொல்ல பல இருந்தாலும், நீங்களே இந்நாவலைப் படிக்கும் போது கிடைக்கவிருக்கும் அனுபவத்தை நான் கெடுக்க விரும்பவில்லை.

    இந்நாவலை எழுதி ரெ.கா-விற்கு, இந்நாவலை வாசித்தவன் என முறையில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆனால் அவரிடம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். இதுதான் உங்கள் எழுத்துகளின் முதல் நாவலாக நான் படித்தது என்பதால் உங்கள் எழுத்துகளும் கதை சொல்லும் முறைகளும் எனக்கு  பரிச்சயமில்லை. அதனால் இந்த/ கேள்விகள் என நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அல்லது வாசித்தவன் முன் வைக்கும் சந்தேகங்கள் எனவும் நீங்கள் பொருள் கொள்ளலாம்.


1.   சுந்தரத்தின் மகனாக சில இடங்களில் மட்டும் சொல்லப்படும் வசந்தன்  என்ன ஆனான்.? தொடக்கத்தில் அவன் குறித்து/ சொல்கிறீர்கள் அதன் பின் இடையில் ஒரு முறை, அடுத்து கடைசி அத்தியாயத்தில்  வருகிறான். தந்தைக்குப் புற்று நோய் என எல்லாருக்கும் தெரிந்த பிறகும் கூட வெளிநாட்டில் இருக்கும் மகனுக்கு தெரியாதா என்ன..?2.    300 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை நான் 8 நாள்களில் படித்து முடித்துவிட்டேன். ஆர்வம் மட்டும் காரணமல்ல, உங்கள் கதை சொல்லும் முறையிலும்தான். இப்படி விரைவாகப் படிக்கும் படி இயல்பாக கதை கொண்டு சென்ற நீங்கள் ஏன் கடைசி அத்தியாயத்தில் அப்படி ஒரு காரியத்தைச் செய்தீர்கள்? கடைசி பத்தொன்பதாவது அத்தியாத்தில் நீங்கள் ஐந்து பக்கங்களில் எழுதியிருந்ததை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தீர்களா..? ஏன் அப்படி ஒரு நாடகத்தன்மை (இவ்வார்த்தை புண்படுத்தினால் மன்னியுங்கள் எனக்கு வேறு வார்த்தை கிடைக்கவில்லை). நீண்ட கதையின் சுருக்கம் போல ஏன் அப்படி அவசரத்தில் முடித்துவிட்டீர்கள்.? யாரோ கதையை முடிக்கும் படி ஒரு மணிநேரம் கொடுத்தது போல அல்லவா  நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்?

3.    ஒருவேளை நாவலில் முடிவு உங்கள் எழுத்தின் பாணியோ..?4.  சீதை பதிப்பகம் வெளியீடு செய்த நாவலைத்தான் நான் வாசித்தேன். இதில் உள்ள சில மலாய் வார்த்தைகளுக்கு தமிழிலும் அதன் அர்த்தத்தை கீழ் எழுதியிருக்கலாமே..?


வாசகன் என்ற முறையின் படித்த நாவல் குறித்து பதிவு இது.
இப்படிக்கு, தயாஜி.

2 comments:

Ram சொன்னது…

பகிர்வு மிகவும் அருமை

தயாஜி சொன்னது…

நன்றி.... அவ்வபோது உங்கள் கருத்தினை பகிருங்கள்....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்